ஜல்சக்தி அமைச்சகம்

ராஜஸ்தானில் ஜல்ஜீவன் இயக்கத்தைச் செயல்படுத்துவதற்கான செயல்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

Posted On: 27 JUN 2020 3:22PM by PIB Chennai

2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து கிராமங்களிலும் உள்ள வீடுகளுக்கு தினசரி நபர் ஒருவருக்கு 55 லிட்டர் தண்ணீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள, மத்திய அரசின் முக்கிய திட்டமான ஜல்ஜீவன் இயக்கத்தை, நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் மாநிலங்களுடன் சேர்ந்து தயாரித்து வருகிறது. ஜல்ஜீவன் இயக்கம் கிராமப்புற மக்களின் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுமையைக் குறைப்பதன் மூலம், வாழ்வை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

ராஜஸ்தானில் உள்ள 1.1 கோடி ஊரகப்பகுதி வீடுகளில், 12.36 லட்சம் வீடுகளுக்கு ஏற்கனவே குடிநீர்க் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. 2019-20-இல், 1.02 லட்சம் குழாய் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டன. 2020-21-இல், 20.69 லட்சம் வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்க மாநிலம் திட்டமிட்டுள்ளது.

 

2020-21-ஆம் ஆண்டில், ஜல்ஜீவன் இயக்கத்தைச் செயல்படுத்துவதற்காக ராஜஸ்தானுக்கு ரூ.2,522.03 கோடி நிதிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது 2019-20-இல் வழங்கப்பட்ட ரூ.1,051 கோடியை விட கணிசமான அதிகரிப்பாகும். ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ், ஆரம்ப இருப்பான ரூ.605.87 கோடியுடன், தேசிய தண்ணீர் தர துணை இயக்கத்தின் கீழ், மாநிலத்தில் தர பாதிப்புப் பகுதிகளுக்கான கூட்டுத்தொகை ரூ.389.2 கோடியும் அனுமதிக்கப்படுகிறது. இத்துடன், இந்த  மத்திய அரசின் ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு பங்கையும் சேர்த்து, ராஜஸ்தானில் ஜல்ஜீவன் இயக்கத்தை செயல்படுத்த ரூ.7,059 .85 கோடி இருக்கும்.

 

புளோரைடு, உப்பு, நைட்ரேட், இரும்புச் சத்து ஆகியவற்றால் பாதிக்கப்படும்

57.77 லட்சம் மக்கள் வசிக்கும் 5,864 கிராமங்களில் தரமான குடிநீர் வழங்க ராஜஸ்தான் திட்டமிட்டுள்ளது. புளோரைடால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து 3,700 குடியிருப்புகளுக்கு 2020 டிசம்பருக்குள் குடிநீர் வழங்க மாநிலம் திட்டமிட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகள், பின்தங்கிய மாவட்டங்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் அதிகம் வசிக்கும் கிராமங்கள், சன்சத் ஆதர்ஷ் கிராம யோஜனாவின் கீழ் வரும் கிராமங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

 

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு 15-வது நிதிக்குழு வழங்கும் மானியத்தில் 50 சதவீதம் குடிநீர், சுகாதாரப் பணிகளுக்காக செலவிடப்பட வேண்டும். 202-21-இல் ராஜஸ்தான் ரூ.3,862 கோடியை நிதிக்குழு மானியமாகப் பெறும்.



(Release ID: 1634775) Visitor Counter : 207