பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
அழுத்தத்தில் செயல்படக்கூடிய உயிரி – எரிவாயு ஆலைகளுக்கு நிதியுதவி செய்வது, முன்னுரிமைக் கடன் பட்டியலில் சேர்க்கப்படும் என திரு.தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் நாமக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள அழுத்தத்தில் செயல்படக்கூடிய உயிரி-எரிவாயு ஆலை மற்றும் உயிரி எரிபொருள் நிரப்பும் மையங்களை, தமிழக முதலமைச்சருடன் இணைந்து திரு.பிரதான் தொடங்கிவைத்தார்
இந்த முன்முயற்சி, தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் மூலம்
கிடைக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாயு எரிபொருள்களை
வழங்க உதவிகரமாக இருக்கும்.
Posted On:
23 JUN 2020 1:26PM by PIB Chennai
அழுத்தத்தில் செயல்படக்கூடிய உயிரி-எரிவாயுத் திட்டத்தை, முன்னுரிமைக் கடன் வழங்கும் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் நாமக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள அழுத்தத்தில் செயல்படக்கூடிய உயிரி எரிவாயு ஆலைகள், மற்றும் உயிரி எரிபொருள் நிரப்பும் மையங்களைத் தொடங்கிவைத்துப் பேசிய மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத் துறை அமைச்சர் திரு.தர்மேந்திரபிரதான், அரசின் இந்த நடவடிக்கை, அழுத்தத்தில் செயல்படக் கூடிய உயிரி-எரிவாயு உற்பத்தி ஆலைகளுக்கு கடனுதவி வழங்குவதை எளிதாக்கும் என்றார். புதிய திட்டங்களை ஊக்குவிக்கும் நோக்கில், உயிரி-எரிவாயு ஆலைகளுக்கான மத்திய நிதியுதவி அல்லது மானிய உதவிகள் வழங்குவது, 2020-2021வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். உயிரி-எரிவாயு ஆலைகள், புதிய தொழில்முனைவோருக்கு, குறைந்த செலவில் அதிக லாபம் தரக்கூடியவை என்றும் திரு.பிரதான் தெரிரவித்தார். “குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான புதிய கடன்தொகுப்புத் திட்டங்கள் மூலம், நாடு முழுவதும் உயிரி-எரிவாயு ஆலைகளை அமைக்கவும் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். உயிரி-எரிவாயுத் திட்டங்களுக்கு, சர்வதேச நிதியுதவியைப் பெறுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகவும்” அவர் தெரிவித்தார்.
குறைந்த செலவிலான போக்குவரத்துக்கு வழிவகுக்கும் நீடித்த மாற்றுத் திட்டமாக ‘(SATAT)’ , உயிரி-எரிவாயுத் திட்டம், 1.10.2018 அன்று தொடங்கப்பட்டு, 2023-க்குள் 5,000 உயிரி-எரிவாயு ஆலைகள் மூலம் 15எம்.எம்.டி. எரிவாயு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வெற்றிகரமானதாக்க, மத்திய அரசு, பல்வேறு வழிவகைகளை மேற்கொண்டுள்ளது. இந்தத் திட்டங்களுக்கு வங்கி நிதியுதவி கிடைக்க ஏதுவாக, உயிரி-எரிவாயுக்கு நீண்டகால அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய, எண்ணெய் விற்பனை நிறுவனங்களும் முன்வந்துள்ளன. உயிரி-எரிவாயு ஆலைகளிலிருந்து கிடைக்கும் முக்கியமான உப பொருளான உயிரி உரங்களை, 1985-ஆம் ஆண்டு உரக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம், 5,000 உயிரி-எரிவாயு ஆலைகளிலிருந்து கிடைக்குமென எதிர்பார்க்கப்படும் 50எம்.எம்.டி. உயிரி உரங்களை எளிதாகச் சந்தைப்படுத்தி, நாடு முழுவதும் இயற்கை உரப் பயன்பாட்டை மேம்படுத்த உதவும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தற்போது உற்பத்தியாகும் கழிவுகள் மற்றும் இயற்கைக் கழிவுகள் மூலம், ஆண்டுக்கு 2.4 எம்.எம்.டி உயிரி எரிவாயு உற்பத்தி செய்யக்கூடிய சுமார் 600 ஆலைகளை அமைப்பதன் வாயிலாக, ரூ.21,000 கோடி முதலீடு செய்யப்படுவதுடன், சுமார் 10,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் திரு.தர்மேந்திரபிரதான் தெரிவித்தார். நாமக்கல்லில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள உயிரி-எரிவாயு ஆலை-யில் உற்பத்தியாகும் உயிரி எரிவாயுவை, சேலம் – நாமக்கல் மண்டலத்தில் ஓடும் 1,000 வாகனங்களுக்கு தினசரி வழங்க முடியும் என்றும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், இந்த உயிரி-எரிவாயு ஆலை, இரண்டு தொழிற்சாலைகளுக்குத் தேவையான பசுமை எரிபொருளை வழங்கக் கூடியது. SATAT திட்டத்தின்கீழ், உயிரி-உரிவாயுவை பகுதியாகவோ/முழுமையாகவோ, அழுத்தத்தில் செயல்படக்கூடிய உயிரி-எரிவாயு உற்பத்திக்குப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஐ.ஓ.டி.( IOT) உயிரி-எரிவாயு ஆலையிலிருந்து கொள்முதல் செய்யப்படும் அழுத்தத்தில் உற்பத்தியாகும் உயிரி-எரிவாயு, சில்லரை விற்பனை மையங்கள் மற்றும் நிறுவனம் சார்ந்த வர்த்தகம் மூலம் விற்பனை செய்யப்படும். எண்ணெய் வர்த்தக நிறுவனங்களால், இயற்கை எரிவாயுக்கு மாற்று எரிவாயு விற்பனை செய்யப்படுவது இதுவே முதன்முறை ஆகும். வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் பன்மடங்கு அதிகரிக்கும். இயற்கையாகக் கிடைக்கக் கூடிய வளங்களிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிவாயு எரிபொருள் உற்பத்தி நிறுவனம் தமிழ்நாட்டில் தொடங்கப்படுவது இதுவே முதன்முறை என்று தெரிவித்த மத்திய அமைச்சர், வழக்கமான இயற்கை எரிவாயு நிலையங்கள் தமிழ்நாட்டில் இதுவரை இல்லை என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவில், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திக்கு அபரிமிதமான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறிய மத்திய அமைச்சர், அண்மையில் தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை உறுதிசெய்ய, இன்னும் சில காலம் ஆகும் என்றும் தெரிவித்தார். உயிரி-எரிவாயு உற்பத்தி படிப்படியாக அதிகரித்து வருவதோடு, உயிரி-எரிவாயுவை உற்பத்தி செய்யும் உயிரி-எரிவாயு மையங்களை ஏராளமானோர் அமைத்து வருகின்றனர். உயிரி-எரிவாயு ஒரு புதுப்பிக்கத்தக்க, தூய்மையான எரிசக்தி வளம் ஆகும். உயிரி-சிதைவு முறையில் உற்பத்தியாகும் எரிவாயு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, பசுமைவாயு வெளியேற்றத்தைக் குறைக்கக் கூடியது ஆகும். “அழுத்தத்தில் உற்பத்தியாகும் உயிரி-எரிவாயு, எத்தனால், 2ஜி எத்தனால் மற்றும் உயிரி டீசல் உள்ளிட்ட பல்வேறு வகையான மாற்று எரிசக்தி உற்பத்திக்கான, உயிரி-எரிபொருளை முழு அளவில் பயன்படுத்துவது, எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைத்து, நாட்டின் எதிர்காலத்திற்குத் தேவையான நீடித்த எரிசக்தியை உறுதி செய்வதென்ற பிரதமர் திரு.நரேந்திரமோடியின் தொலைநோக்குடன் கூடிய நிலையை அடைய உதவும்” என்றும் அவர் தெரிவித்தார்.
உயிரி-எரிவாயு உள்ளிட்ட உயிரி-எரிபொருள் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருவதாகக் கூறிய திரு.தர்மேந்திர பிரதான், இதன் மூலம் தூய்மையான எரிசக்திப் பயன்பாட்டை அதிகரித்து, இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலை குறைவதோடு, சிறிய நகரங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்கவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் குறைக்க முடியும் என்றும் தெரிவித்தார். உயிரி-எரிவாயுப் பயன்பாடு, 2015-ம் ஆண்டு பாரீஸ் உடன்படிக்கையின் படி பருவநிலை மாற்றம் தொடர்பான இந்தியாவின் இலக்கை அடையவும் உதவிகரமாக அமையும். தூய்மை இந்தியா, சுயசார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டங்களுக்கும் இது உதவியாக இருக்கும்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி, தூய்மையான எரிசக்தித் திட்டங்களை மாநில அரசு ஆதரிப்பதாகக் கூறினார். நாமக்கல் உயிரி-எரிவாயு ஆலை, மிகக் குறுகிய காலத்தில் செயல்பாட்டிற்கு வந்ததற்கு உதவிகரமாக இருந்ததற்காக, மத்திய அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதானுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தமிழக அமைச்சர்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை செயலாளர், இந்தியன் ஆயில் மற்றும் தமிழக அரசு, பெட்ரோலியத்துறை மற்றும் எண்ணெய் வர்த்தக நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும், தொடக்க விழாவில் கலந்துகொண்டனர்.
*****
(Release ID: 1633672)
Visitor Counter : 501