சுரங்கங்கள் அமைச்சகம்

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்துக்கு நிலக்கரி சுரங்கங்கள் அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் சிறப்பாக உதவி வருகின்றன : ஸ்ரீபிரல்ஹாத் ஜோஷி

Posted On: 20 APR 2020 3:23PM by PIB Chennai

ஒடிசா முதல்அமைச்சர் திரு நவீன் பட்நாயக், இன்று இரண்டு பிரத்யேக கோவிட்-19 மருத்துவமனைகளை காணொலிக் காட்சி மூலம் ஒடிசாவில் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் மற்றும் நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி ஆகியோர் காணொலி காட்சி மூலம் இணைந்து இருந்தனர்.  இந்த இரு மருத்துவமனைகளுக்கும் தேவையான முழு நிதியையும் தேசிய அலுமினியம் கம்பெனியும் கோல் இந்தியாவின் துணை நிறுவனமான மஹாநதி கோல்ஃபீல்ட் லிமிடெட்டும் வழங்கும். ஒடிசா அரசு தொடங்கியுள்ள இந்த மருத்துவமனைகள் மாநிலத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளின் உதவியுடன் செயல்படும்.

நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி ”கோவிட்-19க்கு எதிரான போராட்டத்துக்கு நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கு சிறப்பான முறையில் உதவிகளை வழங்கி வருவது பெருமைக்குரிய விஷயமாகும்” எனத் தெரிவித்து உள்ளார். ஒடிசா மாநிலத்தின் நபரங்பூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 200 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனைக்கு தேசிய அலுமினியம் கம்பெனி நிதி உதவி வழங்கும். அதே போன்று அங்குல் மாவட்டத்தின் டால்ச்செர் என்ற இடத்தில் தொடங்கப்பட்டுள்ள 150 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனைக்கு மஹாநதி கோல்ஃபீல்ட்ஸ் லிமிட்டெட் நிதி வழங்கும். மேலும்,  இந்த மருத்துவமனையை நிர்மாணிக்க தனது மருத்துவக் கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகளையும் எம்.சி.எல் வழங்கும். 

கோவிட்-19ஐ எதிர்கொள்வதற்காக மாவட்ட கனிம நிதியத்தில் இப்போது இருக்கும் 30 சதவீத  நிலுவைத் தொகையை மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டு உள்ளது.  இந்த அனுமதியானது கனிம வளம் செறிவாக உள்ள ஒடிசா போன்ற மாநிலங்கள் பெருந்தொற்றுப் பரவலை எதிர்த்துப் போராட உதவியாக இருக்கும்” என்று நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



(Release ID: 1616450) Visitor Counter : 167