விவசாயத்துறை அமைச்சகம்
பொது முடக்கத்தின் போது வேளாண்மை அது தொடர்பான துறைகளில் பணிகளை ஊக்குவிக்க வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்
Posted On:
15 APR 2020 7:23PM by PIB Chennai
பொது முடக்கக் காலத்தின்போது, அடிமட்ட அளவில் விவசாயிகள் மற்றும் விவசாயப் பணிகளை ஊக்குவிக்க மத்திய அரசின் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளை கீழே காணலாம்:
- அறுவடை மற்றும் விதைப்பு பருவத்தை கருத்தில்கொண்டு, வேளாண் பணிகள் தொடர்வதற்காக பல்வேறு விதிவிலக்குகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.
- அகில இந்திய வேளாண் போக்குவரத்து தொடர்பு மையத்தை இணை அமைச்சர்களுடன் (வேளாண்மை) இணைந்து வேளாண் துறை அமைச்சர் இன்று முறைப்படி தொடங்கி வைத்தார். காய்கறிகள், பழங்கள் போன்ற அழுகும் தன்மை கொண்ட பொருட்கள், விதைகள், பூச்சிக் கொல்லி மற்றும் உரங்கள் போன்ற வேளாண் உள்ளீடு பொருட்களை மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்வதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்த தொடர்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களை 18001804200 மற்றும் 14488 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். எந்தவொரு கைபேசி அல்லது தரைவழி தொலைபேசியிலிருந்தும் தொடர்பு கொள்ள முடியும்.
- பிரதம மந்திரியின் விவசாயிகள் நல நிதி திட்டத்தின்கீழ், பொது முடக்க காலத்தில், மார்ச் 24 ம் தேதி முதல், 8.46 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதுவரை ரூ.16,927 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
- பிரதம மந்திரியின் ஏழைகள் நலத் திட்டத்தின் கீழ், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகிப்பதற்காக 5,516 மெட்ரிக் டன் பருப்பு வழங்கப்பட்டுள்ளது.
- அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்காக 236 சிறப்பு சரக்கு ரயில்களை (இதில் 171 ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் இயங்கும் சரக்கு ரயில்கள்) இயக்குவதற்கு 67 வழித்தடங்களை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
- விவசாயிகளுக்கு தரமான செடிகள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட தோட்டக்கலை பண்ணைகளுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர மதிப்பீட்டு சான்றிதழின் காலவரம்பை செப்டம்பர் 30 ம் தேதி வரை தேசிய தோட்டக்கலை வாரியம் நீட்டித்துள்ளது.
- தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் தேன் கூடுகளை கொண்டுசெல்ல அனுமதிக்குமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
- பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், நாட்டில் 12 மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.2,424 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
- வேளாண் தங்கக்கடன் மற்றும் பிற விவசாயிகள் கணக்குகளை விவசாயிகள் கடன் அட்டை கணக்குகளாக மாற்றுவதற்கான தேதி, மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- வங்கிகளுக்கு 2 சதவீத வட்டித் தள்ளுபடி மற்றும் உரிய காலத்தில் கடனை செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை, மே 31ம் தேதி அல்லது உண்மையாக பணத்தை திரும்ப செலுத்த வேண்டிய தேதி, ஆகியவற்றில் எது முன்னதாக வருகிறதோ அதுவரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- பிரதமரின் விவசாயிகள் நலத் திட்டப் பயனாளிகள் அனைவருக்கும் விவசாயிகள் கடன் அட்டை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு 83 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 18.26 லட்சம் விண்ணப்பங்களுக்கு ரூ.17,800 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- 2020-ம் ஆண்டுக்கான ராபி பருவக் காலத்தில், இந்திய தேசிய விவசாயிகள் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு குறைந்தபட்ச ஆதார விலையில், 1,24,125 மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களை ரூ.606.52 கோடிக்கு வாங்கியுள்ளது. இதன்மூலம், 91,710 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
- மின்னணு - தேசிய வேளாண் சந்தை கட்டமைப்பில் சரக்குகளை கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளும் திட்டம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கட்டமைப்பில் ஏற்கனவே 7.76 லட்சத்துக்கும் அதிகமான லாரிகள் மற்றும் 1.92 லட்சம் சரக்கு வண்டிகளின் உரிமையாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
- சரக்குகளை கொண்டுசெல்வது, ஊரடங்குகால அனுமதி அளித்தல், பேக்கேஜிங் பிரிவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஏராளமான முயற்சிகளை வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டுள்ளது. அரிசி, நிலக்கடலை, பதப்படுத்தப்பட்ட உணவு, மாமிசம், கோழி, பால்வளம் மற்றும் இயற்கை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய பொருட்களும் ஏற்றுமதி செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.
- பல்வேறு நாடுகள் விடுத்த குறிப்பிட்ட கோரிக்கைகளின்படி, அரசுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், ஆப்கானிஸ்தானுக்கு 50,000 மெட்ரிக் டன் கோதுமையையும், லெபனானுக்கு 40,000 மெட்ரிக் டன் கோதுமையையும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
- ஏற்றுக்கொள்ளத்தக்க நிலைப்பாட்டை ஒப்புக் கொள்வது: தாவரத்தின் தன்மை குறித்த டிஜிட்டல் சான்றிதழை ஏற்றுக் கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளது. பொருள் கிடைத்தவுடன் வழங்குவது என்று இறக்குமதியாளர் அளிக்கும் உத்தரவாதத்தின் அடிப்படையில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதேபோல, ஏற்றுமதிக்கான வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
- ஏற்றுமதி செய்வதற்காக தாவரங்களின் ஆரோக்கியத்தன்மை குறித்து ஒட்டுமொத்தமாக 9,759 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இறக்குமதிக்காக 2,728 சரக்கு தொகுப்புகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
- கோவிட்-19 தொற்று அச்சுறுத்தல் காரணமாக பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்ட காலத்தில் உரிமம் காலாவதியான பேக்கேஜிங் மையங்கள், அரிசி ஆலைகள், பதப்படுத்தும் பிரிவுகள், சிகிச்சை அளிக்கும் வசதிகள், புகை மூலம் தூய்மைப்படுத்தும் அமைப்புகள், ஆகியவற்றின் உரிம காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- மேலும், பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்வதற்காக 33 இறக்குமதி அனுமதிகள், பூச்சிக் கொல்லிகளை ஏற்றுமதி செய்வதற்கான 309 சான்றிதழ்கள், பூச்சிக் கொல்லிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான 1,324 சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
- 2020-ம் ஆண்டு கரீப் பருவ காலத்தில் அகில இந்திய அளவில் விதை தேவை மற்றும் கிடைக்கும் அளவு குறித்த தகவல்கள் பல்வேறு தரப்பினருக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு கரீப் பருவத்துக்கு விதைப்பதற்கான விதைகள் ஒதுக்கீடு மற்றும் 2021-ம் ஆண்டு கரீப் பருவத்திற்கான விதைகள் தேவை ஆகியவை இறுதி செய்யப்பட்டுள்ளன. பொதுமுடக்கக் காலத்தின்போது, வட இந்தியாவுக்கு, குறிப்பாக ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு தானியங்கள், தினைகள், பருப்புகள் போன்றவை 2.70 லட்சம் குவிண்டால்களும், 42.50 லட்சம் பருத்தி விதை பாக்கெட்டுகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
*****
(Release ID: 1614967)
|