அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொவிட்-19ஐக் கண்டறிவதற்கான உபகரணங்களை மத்திய உயிர்ம, மூலக்கூறு உயிரியல் மையம் கண்டுபிடிக்கும்

கொவிட்-19 தொற்று வளர்ம சோதனைக்கும் மத்திய உயிர்ம, மூலக்கூறு உயிரியல் மையம் திட்டம்

Posted On: 25 MAR 2020 11:48AM by PIB Chennai

கொவிட்-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்தவும், அதனிடமிருந்து உயிர்களைக் காக்கவும் தொற்றை விரைந்து  கண்டறியும் சோதனைகளால் மட்டுமே முடியும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் இந்த அழைப்பை ஏற்று, மத்திய உயிர்ம, மூலக்கூறு உயிரியல் மையம், விலை குறைந்த, துல்லியமாக நோய்த் தொற்றைக் கண்டறியும் உபகரணங்களை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் அவற்றை விரிவாக விநியோகிக்க முடியும்.

‘’ எங்களது உற்பத்தி நிறுவனங்களுக்கு நாங்கள் உதவி வருகிறோம்; அவர்களது உத்திகளைச் செயல்படுத்த நாங்கள் ஒத்துழைப்பு அளிக்கிறோம். அவர்கள் அளித்துள்ள தொற்று கண்டறியும் உபகரணங்களை நாங்கள் சோதித்து வருகிறோம். இது நல்லபடியாக நடந்தால், இரண்டு, மூன்று வாரங்களில் சிறந்த உபகரணங்களைக் கண்டுபிடிக்க முடியும். தரமான, துல்லியமான உபகரணங்கள் இதற்கு  மிகவும் முக்கியமாகும். உபகரணங்கள் 100 சதவீத துல்லிய முடிவுகளை அளித்தால் மட்டுமே, அவற்றுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும் ‘’ என்று சிசிஎம்பியின் இயக்குநர் டாக்டர். ஆர்.கே.மிஸ்ரா கூறியுள்ளார்.

உபகரணத்தின் விலையை அமைப்பு கருத்தில் கொண்டுள்ளது. ‘’ பரிசோதனை என்பது ஆயிரம் ரூபாய்க்குள் முடிவதாக இருக்க வேண்டும் என நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். உபகரணங்களின் விலை ரூ.400- 500 என்ற அளவில் குறைவாக இருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். ஆனால், தற்போதைக்கு இதை எங்களால் உறுதியாகக் கூறமுடியாது. தரப்படுத்துதல் இதில் அவசியமாகும்’’ என்று டாக்டர் மிஸ்ரா கூறியுள்ளார்.

மேலும், சிசிஎம்பி கொவிட்-19 தொற்றைக் கண்டறிவதற்கான வளர்ம சோதனைக்கும் திட்டமிட்டு வருகிறது. இதற்கான வசதிகள் தங்கள் நிறுவனத்தில் உள்ளதாக டாக்டர் மிஸ்ரா கூறுகிறார். அரசிடமிருந்து அனுமதியும் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சோதனையை மேற்கொள்ள ,மாதிரி மற்றும் உபகரணம் இன்னும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். ‘’ இதற்கிடையே, இதற்கான வசதிகள் செய்யப்பட்டு, நகரின் அங்கீகரிக்கப்பட்ட இடங்களுக்கு சோதனைக்காக செல்பவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம் ‘’என்று அவர் கூறினார். தெலங்கானா மாநிலத்தில், 5  சோதனை மையங்களுக்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. சிசிஎம்பி 25 பேருக்கு பயிற்சி அளித்து வருகிறது. இவர்கள் இந்த மையங்களுக்கு சென்று சோதனை மேற்கொள்வார்கள்.

 ஹைதராபாத் நிஜாம் மருத்துவ அறிவியல் நிறுவனம், காந்தி மருத்துவமனை, உஸ்மானியா பொது மருத்துவமனை, சர்.ரொனால்டு ராஸ் தொற்று நோய் மருத்துவமனை, வாரங்கல் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில், கொவிட்-19 ஆய்வுக்கூடங்கள் செயல்பாட்டுக்கு வரும். மரபணு விரல் ரேகை மற்றும் ஆய்வு மையம் சிடிஎப்டியும் இந்தப் பணியில் இணைக்கப்பட்டுள்ளது

தொற்றைத் தடுக்கும் தடுப்பு மருந்து, ஊசி மருந்துகளை கண்டுபிடிப்பது மற்றொரு அம்சமாகும். ஆனால், தற்போதைக்கு சிசிஎம்பி இந்தப் பணியில் ஈடுபடவில்லை. ‘’இதில் ஈடுபடுவதற்கு எங்களிடம் நிபுணத்துவம் இல்லை. இருப்பினும், தொற்று கண்டறியப்படுமானால், அதுகுறித்த சோதனையை மேற்கொள்ளும் நடைமுறையை உருவாக்க நாங்கள் முயுற்சிப்போம்’’ என்று டாக்டர் மிஸ்ரா கூறினார். சிசிஎம்பியின் துணை நிறுவனமான இந்திய ரசாயன தொழில்நுட்ப நிறுவனம் மேற்கொண்டுள்ள புதிய மருந்து கண்டுபிடிக்கும் பணி வெற்றி பெற நீண்டகாலம் பிடிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

 

*****


(Release ID: 1608096) Visitor Counter : 177