ரெயில்வே அமைச்சகம்
நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க இந்திய ரயில்வே 24 மணி நேரமும் செயல்படுகிறது
கொவிட் -19 பரவலையொட்டி பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் சரக்கு ரயில்கள் தொடர்ந்து இயங்குகின்றன
உணவு தானியங்கள், உப்பு, சர்க்கரை, பால், சமையல் எண்ணெய், வெங்காயம், பழங்கள், காய்கறிகள், பெட்ரோலியப் பொருட்கள், நிலக்கரி, உரம் ஆகியவை ரயில்வே முனையங்களில் ஏற்றப்படுகின்றன
Posted On:
24 MAR 2020 4:17PM by PIB Chennai
கொரோனோ வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த, இந்திய ரயில்வே நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவைகளை மார்ச் 31-ம் தேதி வரை ரத்து செய்துள்ளது.
தற்போது, இந்திய ரயில்வே நாடு முழுவதும் சரக்கு ரயில்களை மட்டும் இயக்கி வருகிறது. தடைபடாத சரக்கு ரயில்கள் இயக்கத்தின் மூலம், அத்தியாவசியப்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் இந்திய ரயில்வே மேற்கொண்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் கடையடைப்பு நிலவும் சூழலில், நாடு முழுவதற்கும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, பல்வேறு சரக்கு வளாகங்கள், ரயில் நிலையங்கள், கட்டுப்பாட்டு அறைகள் ஆகியவை 24 மணிநேரமும் இயங்கும் வகையில், இந்திய ரயில்வே ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உணவு தானியங்கள், உப்பு, சர்க்கரை, பால், சமையல் எண்ணெய், வெங்காயம், பழங்கள், காய்கறிகள், பெட்ரோலியப் பொருட்கள், நிலக்கரி, உரம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மார்ச் 23-ந்தேதியன்று மொத்தம் 474 பெட்டிகளில் ஏற்றப்பட்டன. அதே நாளில், 121 பெட்டிகளில் இரும்புத்தாது, 48 பெட்டிகளில் உருக்கு, 25 பெட்டிகளில் சிமெண்ட், 28 பெட்டிகளில் உரம், 106 பெட்டிகளில் பெட்டகங்கள் உள்பட மொத்தம் 891 பெட்டிகளில் பிற முக்கியப் பொருட்களையும் இந்திய ரயில்வே ஏற்றியுள்ளது.
கொவிட்-19 தாக்கத்தையொட்டி, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிய பெட்டிகளை தாமதமின்றியும், சுமுகமாகவும் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கும் விதத்தில் நெருங்கிய ஒருங்கிணைப்பு பராமரிக்கப்பட்டு வருகிறது.
31.3.2020 வரை பொருட்கள் மற்றும் பார்சல்களுக்கான தாமதக்கட்டணம், கப்பல்துறைக் கட்டணம் ஆகியவற்றை பாதியாக இந்திய ரயில்வே குறைத்துள்ளது.
சரக்கு மற்றும் பெட்டக போக்குவரத்துக்கான கட்டணக் கொள்கைகளின் செல்லுபடியாகும் காலம் ஒருமாதத்துக்கு 30.4.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
24.3.2020 முதல் 30.4.2020 வரை காலி பெட்டகங்கள், காலி வாகன்கள் போக்குவரத்துக்கு விதிக்கப்படும் கட்டணமும் ரத்து செய்யப்படுகிறது.
சரக்கு ரயில் பெட்டிகளில் சரக்குகளை ஏற்றுவதற்கும், ரயில்வே வளாகங்களில் இருந்து அகற்றுவதற்கும் அனுமதிக்கப்படும் காலஅளவு 31.3.2020 வரை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கொண்டு செல்லப்படுவதைக் கண்காணிக்க ரயில்வே அமைச்சகத்தில் அவசரகால சரக்கு கட்டுப்பாட்டு முறை செயல்பட்டு வருகிறது. மூத்த அதிகாரிகள் மட்டத்தில் சரக்கு போக்குவரத்து மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
சரக்கு ரயில் இயக்கத்துக்காக கட்டுப்பாட்டு அறைகளில் இந்திய ரயில்வே பணியாளர்களை அமர்த்தியுள்ளது. பாதை கண்காணிப்பு ஊழியர்கள், பராமரிப்பு பணியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், ரயில்வே மருத்துவமனைகளில் மருத்துவ ஊழியர்கள் ஆகியோர் தொடர்ந்து 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில், இந்திய ரயில்வே அதன் முக்கியமான பங்கை உணர்ந்து செயல்பட்டு வருகிறது. அதேபோல, அத்தியாவசியப் பொருட்களை விரைந்து ஏற்றவும், இறக்கவும் சம்பந்தப்பட்டவர்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும் என்று அது கேட்டுக்கொள்கிறது.
****
(Release ID: 1607991)
Visitor Counter : 207