அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சிறுநீரக நோயாளிகள் கொவிட் -19 தொற்றினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்

டயாலிசிஸுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு அபாயத்தைக் குறைக்க உரிய நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்
உரிய நெறிமுறைகள் சிறுநீரகவியல் சர்வதேச சங்கத்தின் வலைதளத்தில் உள்ளன

Posted On: 20 MAR 2020 12:50PM by PIB Chennai

உலக அளவு  நோய் தொற்று ஆகிவிட்ட கொவிட்-19 சுகாதார, மருத்துவ அமைப்புகளுக்கு பல சவால்களை ஏற்படுத்தியுள்ளது. முறையான ஹீமோடயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அது குறிப்பான சில சவால்களை உருவாக்கியுள்ளது. யூரிமிக் நோயாளிகள் என்றழைக்கப்படும் பாதிக்கப்பட்ட சிறுநீரகங்களைக்கொண்ட இந்த நோயாளிகள், நோய்த் தொற்றுக்கு எளிதில் ஆட்பட்டுவிடுகிறார்கள். மருத்துவ நோய் அறிகுறி  மற்றும்  தொற்றுத்திறன் ஆகியவற்றில் அதிக அளவு வேறுபாடுகள்  இவர்களிடையே காணப்படுகின்றன.

     “இதர ஆபத்து நிறைந்த நபர்களைப் போலன்றி இந்த நோயாளிகள் வீட்டிலேயே தங்கியிருப்பதற்கும் பிறருடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பதற்கும் திறனற்றவர்கள். அதிக ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ள நிலையிலும் அவர்கள் வாரத்திற்கு  மூன்று முறையாவது டயாலிசிஸ்“ மையங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினர், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் இதர நபர்களுக்கு உள்ளது” என்று சர்வதேச சிறுநீரியல் சங்கத்தின் தலைவரும், குளோபல் ஹெல்த் இந்தியா ஜார்ஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான பேராசிரியர் விவேகானந்தா ஜா கூறுகிறார்.   கொவிட்-19 நோய் தொற்றில் சிறுநீரகம் அடிக்கடி சம்பந்தப்படுகிறது.  தொற்று  கடுமையான நிலையில் இருந்தால் , அதனால் நோயாளி உயிரிழப்பும் ஏற்படுகிறது.

     சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் சிறுநீரகவியல் வல்லுநர் குழு தயாரித்துள்ள “நோவல் கொரோனா வைரஸ் - 2019 மற்றும் சிறுநீரகங்கள்”  என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் டயாலிசிஸ் நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொவிட்-19 நோய்த் தொற்று அவர்களிடையே பரவுவதைத் தடுக்க நோயாளிகளுக்கான முன்னெச்சரிக்கை  மற்றும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடல் வெப்பநிலைக் கண்காணிப்பு, நல்ல தனிநபர் சுகாதாரம்,  கைகழுவுதல், நோய்வாய் பட்டவர்களைப் பற்றி உடனடியாக தகவல் தெரிவித்தல் போன்றவை  முன்னெச்சரிக்கைளில் அடங்கும்.  இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் சர்வதேச சிறுநீரகம்  என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

     கொவிட்-19 தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் டயாலிசிஸ் நோயாளிகளின்  மேலாண்மை  அதற்குரிய நெறிமுறைகளின்படி நடைபெற வேண்டும் என்றும் அப்போதுதான் இதர நோயாளிகளுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் குறையும் என்றும் பேராசிரியர் ஜா கூறியுள்ளார். இந்த மேலாண்மை நெறிமுறைகள் சிறுநீரகவியல் சர்வதேச சங்கத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

     சார்ஸ், மெர்ஸ் – சிஓவி தொற்றுகள் காரணமாக ஐந்து முதல் 15 சதவீதம் நோயாளிகளில் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது என்றும் இவர்களில் 60 முதல் 90 சதவீதம் வரையிலானவர்கள்  உயிரிழந்தனர் என்றும் முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கொவிட்-19 பாதித்த நோயாளிகளில் 3 முதல் 9 சதவீதம் பேருக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதாக பூர்வாங்க அறிக்கைகள் தெரிவிக்கும் நிலையில் இதைவிட அதிகமானோர் சிறுநீரக பாதிப்பை அடைகிறார்கள் என பின்னர் வெளியான அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட்-19 பாதித்த 59 நோயாளிகள் பற்றிய ஆய்விலிருந்து மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகளுக்கு அவர்களது சிறுநீரில் பெருமளவில் புரோட்டீன் கசிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

     கொவிட்-19 பாதிக்கும் அபாயம் உள்ள நபர்களுக்கு மிகவும் மோசமான  நிலையில் உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ஆதரவு சிகிச்சைகள்  தேவை என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆதரவு சிகிச்சைகளில் ஓய்வு, ஊட்டச்சத்து மற்றும் திரவங்கள் வழங்குதல், ரத்த அழுத்தத்தையும் ஆக்ஸிஜன் வழங்குதலையும் பராமரித்தல், உறுப்புகள் ஆதரவை வழங்கி சிகிச்சை சிக்கல் ஏற்படுவதை தவிர்த்தல், ரத்த இயக்க ஸ்திரத்தன்மையைப் பராமரித்தல், இரண்டாம் நிலை நோய் தொற்றைத் தவிர்த்தல் ஆகியன அடங்கும்.

------


(Release ID: 1607286)

 

 



(Release ID: 1607399) Visitor Counter : 281


Read this release in: English , Hindi , Marathi , Bengali