எரிசக்தி அமைச்சகம்

இந்தியா எங்கும் 10 லட்சம் அதிநவீன மின்சார மீட்டர்கள் பொருத்தப்பட்டிருப்பதாக மத்திய மின்சாரத் துறை இணையமைச்சர் திரு. ஆர்.கே.சிங் அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 25 FEB 2020 3:53PM by PIB Chennai

இந்திய அரசின் அதிநவீன மின்சார மீட்டர் தேசிய திட்டத்தின் கீ்ழ் 10 லட்சம் அதிநவீன மின்சார மீட்டர்கள் நாடெங்கும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டிருப்பதாக மத்திய மின்சாரம் (தனிப்பொறுப்பு), புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு.ஆர்.கே.சிங் அறிவித்துள்ளார். இந்த அதிநவீன மீட்டர்கள் மின்சார விநியோக அமைப்பில் சிக்கனத்தை கொண்டு வந்து சேவை நிலைமையை உயர்த்தியுள்ளன. இந்த திட்டத்தை மத்திய அரசின் கூட்டுத் துறை நிறுவனமான மின்சார சிக்கன சேவைகள் லிமிடெட் (இஇஎஸ்எல்) அமல்படுத்தி வருகிறது.

இஇஎஸ்எல் நிறுவனத்தின் 10 ஆண்டு சேவைகள் நிறைவை குறிப்பதற்கென தில்லியில் இன்று (25.02.2020) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர், விவசாய மின் கட்டமைப்புடன் இணைக்கும் வகையில் பரவலாக்கப்பட்ட சூரிய சக்தி மின் உற்பத்தி 100 மெகாவாட் அளவுக்கு தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

அதிநவீன மின் மீட்டர் தேசிய திட்டம், தேசிய மின் கடத்துதிட்டம் ஆகியவற்றை கண்காணிப்பதற்கான கருவிகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். திட்டங்களின் அமலாக்க நிலைமையையும், அவற்றின் தாக்கத்தையும் வெளிப்படையாக கண்காணிப்பதற்கான கருவிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

இஇஎஸ்எல் நிறுவனம் 12 மாத காலத்தில் 10.6 மில்லியன் தெருவிளக்குகளை மாற்றியமைத்தது என்றும், இதனையடுத்து 36 கோடி எல்இடி பல்ப்புகள் நேரடியாகவும், 80 கோடி எல்இடி பல்ப்புகள் வர்த்தக அமைப்புகள் மூலமும் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும், இதனால் 80 மில்லியன் டன் கரியமில வாயு வெளியேற்றம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இஇஎஸ்எல் நிறுவனம் ‘கட்டிடங்கள் மின்சார சிக்கனத் திட்டத்தி்ன்' கீழ் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட 10,344 கட்டிடங்களில் திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. மின்னேற்றும் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் வகையில் இந்த நிறுவனம் சென்னை, ஜதராபாத், நொய்டா, அகமதாபாத், ஜெய்ப்பூர் நகரங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒத்துழைத்து வருகிறது. நாட்டின் இதர நகரங்களிலும் இத்தகைய நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இஇஎஸ்எல் நிறுவனம் அமல்படுத்தி வரும் திட்டங்கள் காரணமாக மொத்தம் 58 பில்லியன் கிலோவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டிருப்பதாகவும், இவற்றையடுத்து உலகெங்கிலும் வெளியிடப்படும் பசுமை வாயு அளவில் 46 மில்லியன் டன் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் இஇஎஸ்எல் நிறுவனம் அரசு முகமைகள், உற்பத்தியாளர்கள், புதுமைப்படைப்பாளர்கள், பல்முனை முகமைகள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்புகள், சேவை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அமைப்புகளுடன் ஒத்துழைத்து தேசிய பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் மின்சார சிக்கனத்தை மேம்படுத்தி வருகிறது.

தனது மானியங்கள் அற்ற, மூலதன செலவினம் இல்லாத, செலுத்தும் போதே சேமியுங்கள் என்பது போன்ற புதிய வர்த்தக  நடைமுறைகள் மூலம் இஇஎஸ்எல் நிறுவனம் சந்தைப் புதுமைகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த சந்தை மாற்றத்துடன் கூடிய வர்த்தக நடைமுறையை இஇஎஸ்எல் நிறுவனம் இங்கிலாந்து, மத்திய கிழக்கு, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றுக்கும் கொண்டு சென்றுள்ளது

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1604355) வருகையாளர் எண்ணிக்கை : 244
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी