மத்திய அமைச்சரவை

தற்போதுள்ள பயிர்க்காப்பீட்டுத் திட்டங்களை அமலாக்குவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ள பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா, மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க்காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றைத் திருத்தி அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

Posted On: 19 FEB 2020 4:36PM by PIB Chennai

தற்போதுள்ள பயிர்க்காப்பீட்டுத் திட்டங்களை அமலாக்குவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ள பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா, மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க்காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றைத் திருத்தி அமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

 

பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா, மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க்காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றில் கீழ்க்காணுமாறு சில மாற்றங்களை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது:

  • காப்பீட்டு நிறுவனங்களின் செயல்பாட்டு ஒதுக்கீடு 3 ஆண்டுகளாக இருக்கும்
  • இந்தத் திட்டங்களின்கீழ், மத்திய அரசின் மானியம் பாசன வசதி இல்லாத பகுதிகள் / பயிர்களுக்குப் பிரிமிய விகிதம் 30%-ஆகவும், பாசன வசதி உள்ள பகுதிகள் / பயிர்களுக்கு 25%-ஆகவும் இருக்கும். 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் பாசன வசதி உள்ள பகுதிகள் இருக்கும் மாவட்டம் முழுமையான பாசன வசதி பெற்ற பகுதி அல்லது மாவட்டமாகக் கருதப்படும்.
  • வரையறுக்கப்பட்ட கால வரம்புக்குப் பின்னால் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களுக்குப் பிரிமியம் மானியத்தை விடுவிக்க மாநில அரசுகளால் தாமதம் ஏற்படும் பட்சத்தில் அடுத்த பருவங்களுக்கு இந்தத் திட்டத்தை அமலாக்க அனுமதிக்கப்பட மாட்டாது. கரீஃப் பருவத்திற்கான கடைசித் தேதி மார்ச் 31-ஆகவும், ரபி பருவத்திற்கான கடைசித் தேதி செப்டம்பர் 30-ஆகவும் இருக்கும்.
  • வடகிழக்கு மாநிலங்களுக்குத் தற்போதுள்ள 50:50 என்ற மத்திய அரசின் பிரிமிய மானிய விகிதப் பங்கு 90 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • திருத்தியமைக்கப்பட்ட நடைமுறைகள் 2020 கரிஃப் பருவத்திலிருந்து செயல்பாட்டுக்கு வரும்.

பயன்கள்:

வேளாண் உற்பத்தியை நிர்வகிப்பதில் உள்ள அபாயங்களை நல்ல முறையில் விவசாயிகள் சமாளித்து, விவசாய வருவாயை நிலைக்கச்  செய்வதற்கு இந்த மாற்றங்கள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் மூலம் பயிர் விளைச்சலை மிகத் துல்லியமாக விரைந்து கணக்கிட முடியும். மேலும், காப்பீட்டுக் கோரிக்கைகள் விரைவாக பைசல் செய்யப்படுவதற்கும் வழிவகுக்கும்.

திருத்தியமைக்கப்பட்ட நடைமுறைகள் 2020 கரிஃப் பருவத்திலிருந்து நாடு முழுவதும் செயல்பாட்டுக்கு வரும்.

                              •••••••••



(Release ID: 1603710) Visitor Counter : 277