விவசாயத்துறை அமைச்சகம்

மண் வள அட்டை திட்டம் 19.02.2020 அன்று ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறது

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்படுகிறது
நீடித்த வேளாண்மைக்கு மண் வளம் வழிவகுக்கிறது

Posted On: 17 FEB 2020 11:50AM by PIB Chennai

சர்வதேச மண் ஆண்டு 2015-ல் கொண்டாடப்பட்ட வேளையில், நாட்டில் உள்ள ஒவ்வொரு விளை நிலத்திலும் அவற்றின் ஊட்டச்சத்து தன்மையை ஆராய்வதற்கான இந்தியாவின் பிரத்யேக திட்டமான மண் வள அட்டை, அதே ஆண்டு பிப்ரவரி 19 அன்று தொடங்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மண் வள அட்டைகளை வழங்குவதன் மூலம் உரப் பயன்பாட்டு நடைமுறைகளில் காணப்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்குவதே மண் வள அட்டை திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். மண் பரிசோதனை அடிப்படையில் ஊட்டச்சத்து மேலாண்மையை ஊக்குவிப்பதற்காகவே மண் பரிசோதனை உருவாக்கப்பட்டுள்ளது. சரியான அளவுக்கு உரமிடுவதன் மூலம் சாகுபடி செலவை மண் பரிசோதனை வெகுவாக குறைக்கிறது. விளைச்சலை அதிகரித்து விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதை உறுதி செய்வதோடு நீடித்த வேளாண்மையையும் இது ஊக்குவிக்கிறது.

மண் வள அட்டை திட்டம் பிரதமர் திரு.நரேந்திர மோடியால் 19.02.2015 அன்று ராஜஸ்தானின் சூரத்கரில் தொடங்கப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மாநில அரசுகளால் மண் வள அட்டை வழங்க உதவும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மண் வள அட்டை, விளை நிலங்களில் ஊட்டச்சத்து தன்மை குறித்த தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குவதோடு, மண் வளம் மற்றும் விளைச்சலை மேம்படுத்த தேவையான அளவு ஊட்டச்சத்து பயன்பாட்டிற்கும் இது பரிந்துரைக்கிறது.

மண் வள அட்டை திட்டத்தின் செலவின முன்னேற்றம்:

(ரூ.கோடியில்)

ஆண்டு

விடுவிக்கப்பட்ட நிதி

2014-15

23.89

2015-16

96.47

2016-17

133.66

2017-18

152.76

2018-19

237.40

2019-20

107.24

மொத்தம்

751.42

2015-17 முதல் சுற்று 1-ல் 10.74 கோடி மண் வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. சுற்று 2-(2017-19) –ல் 11.69 கோடி மண் வள அட்டைகள் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

மண் பரிசோதனை ஆய்வுக் கூடங்களை அமைத்தல்: இதுவரை 429 புதிய நிலையான மண் பரிசோதனை ஆய்வுக் கூடங்களும், 102 புதிய நடமாடும் மண் பரிசோதனை ஆய்வுக் கூடங்களும், 8752 சிறிய அளவிலான மண் பரிசோதனை ஆய்வுக் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண் தொழில் முனைவோர் மூலம் கிராம அளவிலான மண் பரிசோதனை வசதிகளை ஏற்படுத்துவது ஊக்குவிக்கப்பட்டு இதுவரை 1562 கிராம அளவிலான மண் பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதுடன், இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே செயல்பட்டு வரும் 800 மண் பரிசோதனைக் கூடங்களை வலுப்படுத்தவும் மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மண் பரிசோதனை திறன், 5 ஆண்டு கால குறுகிய இடைவெளியில் ஆண்டுக்கு 1.78 கோடி மண் மாதிரிகளிலிருந்து 3.33 கோடி மண் மாதிரிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

     இயற்கை உரப் பயன்பாடு உட்பட 6 வகையான பயிர்களுக்குத் தேவையான 2 செட் உரங்களை மண் வள அட்டை பரிந்துரைக்கிறது. விவசாயிகள் தங்களது தேவைக்கேற்ப கூடுதல் பயிர்களுக்கான பரிந்துரைகளையும் பெற்றுக் கொள்ளலாம். மண் வள அட்டை இணையதளத்திலிருந்து தங்களுக்கு தேவையான மண் வள அட்டைகளை அவர்களே அச்சிட்டுக் கொள்ளலாம். விவசாயிகளுக்கு உதவும் வகையில், 2 சுற்றுகளுக்குமான அவர்களை பற்றிய புள்ளிவிவரங்கள் 21 மொழிகளில் மண் வள அட்டை இணையதளத்தில் உள்ளது.

     மண் வள அட்டை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இதுவரை 5.50 லட்சம் செயல் விளக்கங்கள் நடத்தப்பட்டிருப்பதுடன் 8898 விவசாய பயிற்சி நிகழ்ச்சிகளும், 7425 விவசாய மேளாக்களும் நடத்த மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

************


(Release ID: 1603530) Visitor Counter : 931


Read this release in: English , Hindi , Bengali , Malayalam