பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

சர்வதேச சந்தை விலை அடிப்படையிலேயே சமையல் எரிவாயு விலை நிர்ணயம்


வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயுவை அரசு மானியத்துடன் விநியோகிக்கிறது

Posted On: 13 FEB 2020 3:40PM by PIB Chennai

சமையல் எரிவாயு விலை, முந்தைய மாதத்தின் சர்வதேச சந்தை விலை அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்படுகிறது.  வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவுக்கு, பாஹல் (PAHAL) திட்டத்தின்கீழ், மத்திய அரசு மானியம் வழங்குகிறது.  இந்த மானியத் தொகை, பாஹல் திட்ட  நுகர்வோருக்கு நேரடி பணப்பரிமாற்றத் திட்டத்தின்கீழ், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. 

தற்போது நாடுமுழுவதும் 27.76 கோடிக்கும் மேற்பட்ட இணைப்புகளுடன் 97 சதவீத அளவுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.  இந்த 27.76 கோடி நுகர்வோரில், 26.12 கோடி நுகர்வோருக்கான கூடுதல் விலைச் சுமையை மானியத் தொகை உயர்வு மூலம்  அரசே ஏற்றுக் கொள்கிறது.   மானியத்துடன் கூடிய விலையை அரசு நிர்ணயம் செய்வதன் மூலம், சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, சமையல் எரிவாயு விலையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் நுகர்வோரை பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனவரி 2020-ல் சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு 488 டாலரிலிருந்து 567 டாலராக அதிகரித்துள்ளது.  அதாவது 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ. 144.50 அதிகரித்துள்ளது.

எனவே, 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத் தொகையை ரூ.153.86-லிருந்து ரூ. 291.48-ஆக அரசு அதிகரித்துள்ளது.  பிரதமரின் உஜ்வாலா திட்ட நுகர்வோருக்கு, அரசு வழங்கும் மானியத் தொகையும், ரூ.174.86-லிருந்து ரூ.312.48 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் சர்வதேச சந்தையில் காணப்படும் விலை உயர்வால், சமையல் எரிவாயு விலையில், மானியத்துடன் கூடிய சிலிண்டர்கள் மற்றும் பிரதமரின் உஜ்வாலா திட்ட நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய கூடுதல் செலவை அரசே ஏற்றுக் கொள்கிறது.

*************


(Release ID: 1603115) Visitor Counter : 212