பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பிரதமரின் பேறுகால உதவித்திட்டத்தை தமிழகம் சிறப்பாக செயல்படுத்தி வருவதாக மத்திய அமைச்சர் பாராட்டு - புதுச்சேரிக்கு விருது
Posted On:
03 FEB 2020 4:47PM by PIB Chennai
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான, பேறுகால உதவித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு, புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஸுபின் இரானி, பிரதமரின் மாத்ரு வந்தனா யோஜனா விருதுகளை வழங்கினார்.
இதில், ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கான பிரிவில், மத்தியப் பிரதேசம் முதலிடத்தையும் ஆந்திரப்பிரதேசம் இரண்டாவது இடத்தையும், ஹரியானா மூன்றாவது இடத்தையும் பெற்றன.
ஒரு கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள மாவட்டங்களுக்கான பிரிவில் மிசோரம் மாநிலத்தின் செர்ச்சிப் மாவட்டம் முதலிடத்தையும், இமாச்சலப் பிரதேசத்தின் உனா இரண்டாவது இடத்தையும், புதுச்சேரி மூன்றாம் இடத்தையும் பெற்றன.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஸுபின் இரானி, இத்திட்டத்தின்கீழ் இதுவரை 1.28 கோடி பயனாளிகளுக்கு, அவர்களது வங்கிக் கணக்கிலேயே ரூ.5,280 கோடி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
தமிழ்நாடு, அசாம், திரிபுரா மற்றும் மணிப்பூர் மாநிலங்கள் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதன் மூலம், மாவட்ட நிர்வாகம், மாநில மற்றும் மத்திய அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், செயல்படுத்த முடியாது என்பதே எதுவும் இல்லை என்பதை நிரூபித்துள்ளதாகக் கூறினார்.
முந்தைய திட்டங்களிலிருந்து இத்திட்டம் மாறுபட்டது என்று குறிப்பிட்ட அமைச்சர், புதிய திட்டத்தின்கீழ் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் உதவித் தொகை நேரடியாக வரவு வைக்கப்படுவதை சுட்டிக்காட்டினார். மேலும் முந்தைய திட்டங்களில் உதவித் தொகையைப் பெற 18- மாதங்களிலிருந்து 3 ஆண்டுகள் வரை ஆனநிலையில், தற்போது, வெளிப்படையான முறையில் உடனடியாக வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இத்திட்டத்தில் நூறு சதவீத இலக்கை அடைய அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்கள் முயற்சிக்க வேண்டும் எனவும் அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி கேட்டுக்கொண்டார்.
01.01.2017 முதல், நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின்கீழ், முதல் குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, அவர்களது வங்கி அல்லது அஞ்சலகக் கணக்கில் ரூ.5,000 நேரடியாக செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
*****
(Release ID: 1601755)
Visitor Counter : 262