நிதி அமைச்சகம்

நேரடி வரி நிர்வாகத்தில் விரிவான சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக நிதியமைச்சர் தகவல்

Posted On: 01 FEB 2020 2:40PM by PIB Chennai

நேரடி வரி செலுத்துவது தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க விவாத் சே விஸ்வாஸ் (சர்ச்சை இல்லை; நம்பிக்கை) என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று 2020-21க்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், வரி செலுத்துவோரின் மேல் முறையீட்டு வழக்குகள் எந்த மட்டத்தில் நிலுவையில் இருந்தாலும் அவர்கள் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெறலாம் என்றும் தெரிவித்தார்.

இத்தி்ட்டத்தின்கீழ், வரி செலுத்துவோர் தாம் செலுத்த வேண்டிய பாக்கி தொகையை 31 மார்ச் 2020க்குள் செலுத்தி விட்டால்
வட்டி மற்றும் அபராதத் தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். 31 மார்ச் 2020க்கு பிறகு இத்திட்டத்தின் கீழ் பயனைடைய விரும்புவோர் சற்று கூடுதல் தொகையை செலுத்த வேண்டியிருக்கும். இத்திட்டம் 2020 ஜூன் 30 வரை நடைமுறைப்படுத்தப்படும் என்பதால், வரி செலுத்துவோர் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளிலிருந்து விடுபடுவார்கள் என்று நிதியமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் உட்பட பல்வேறு மேல் முறையீட்டு அமைப்புகளிலும், நேரடி வரி தொடர்பான 4 லட்சத்து 83 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டிய திருமதி. நிர்மலா சீதாராமன்இந்த வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளையும் பட்டியலிட்டார். கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சப்கா விகாஸ் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 89 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் அவர் கூறினார். அரசால் ஏற்படுத்தப்படும் சீர்திருத்த நடவடிக்கைளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், மனித தலையீடுகளை ஒழிக்கவும், வருமானவரி சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆதார் மூலம் உடனடியாக நிரந்தர கணக்கு எண் (பான்) வழங்குதல்

விரிவான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யாமலேயே ஆதார் அட்டை அடிப்படையில், ஆன்லைன் முறையில் வருமானவரி நிரந்தர கணக்கு எண் (PAN) வழங்கும் திட்டம் தொடங்கப்பட இருப்பதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

அறக்கட்டளைகள்

அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வரி விலக்கு பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், வரி செலுத்துவோர் தமது வருமானவரி கணக்குப் படிவத்தில், யாருக்கு நன்கொடை அளிக்கிறோம் என்ற விவரத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரிசெலுத்துவோர் தான் அளிக்கும் நன்கொடைகளுக்கு சிக்கலின்றி வரிச்சலுகை பெறலாம் என்றும் திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

*****



(Release ID: 1601558) Visitor Counter : 209