பிரதமர் அலுவலகம்

பொதுமக்கள் பங்கேற்புடன் நீர் ஆதார இயக்கம் விரைவான, வெற்றிகரமான முன்னேற்றத்தை எட்டியுள்ளது என்று பிரதமர் கூறினார்


ஒரு சில வெற்றிகரமான, புதுமையான தண்ணீர் சேமிப்பு முயற்சிகள் பற்றியும் பகிர்ந்துகொண்டார்

Posted On: 26 JAN 2020 8:32PM by PIB Chennai

நீர் ஆதாரத்திட்டம்

    

பொதுமக்கள் பங்கேற்புடன் நீர் ஆதார இயக்கம் விரைவான வெற்றிகரமான முன்னேற்றத்தை எட்டியுள்ளது என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார். நாட்டின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சில வெற்றிகரமான, புதுமையான தண்ணீர் சேமிப்பு முயற்சிகள் பற்றியும் அவர் பகிர்ந்துகொண்டார்.

     ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டம் பற்றி அவர் குறிப்பிட்டார். “இங்கே வரலாற்றுச் சிறப்புமிக்க படிக்கிணறுகள் இரண்டு, குப்பைகளும் செத்தைகளும் குவிக்கப்பட்ட அழுக்கடைந்த தண்ணீரைக் கொண்டதாக மாறிப் போயிருந்தன. ஆனால், ஒருநாள் பத்ராயு மற்றும் தானவாலா பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் நீர் ஆதார இயக்கத்தின்கீழ் இவற்றைப் புனரமைக்கத் தீர்மானித்தனர். மழைக் காலத்திற்கு முன்னதாகவே இந்தக் கிணறுகளில் மண்டிக்கிடந்த அசுத்தமான நீர், குப்பைகள், கழிவுகள் ஆகியவற்றை அகற்றும் பணியில் மக்கள் ஈடுபட்டனர்.  இந்த இயக்கத்திற்காக, சிலர் பணத்தை நன்கொடையாக அளித்தனர்.  சிலர் தங்கள் உழைப்பையும், வியர்வையையும் தந்தனர். இதன் விளைவாக, இந்தப் படிக்கிணறுகள், இன்று அப்பகுதியின் வாழ்க்கை ஊற்றாக மாறிவிட்டன.  

     இதேபோன்று, உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கியின் சராஹி ஏரி கிராமவாசிகளின் கூட்டு முயற்சியால் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. பொதுமக்கள் பங்கேற்பின் மற்றொரு உதாரணம் உத்தரகாண்டின் அல்மோரா-ஹால்ட்வாணி நெடுஞ்சாலையில் உள்ள சூனியாகோட் கிராமமாகும். இந்த கிராமவாசிகள் தண்ணீர் தங்கள் கிராமத்திற்கு வருவதைத் தாங்களாகவே உறுதிசெய்தனர். மக்கள் பணம் திரட்டினார்கள், உழைப்பை தானம் செய்தார்கள். கிராமம்வரை குழாய் பதிக்கப்பட்டது. நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது. இவ்வாறு பத்தாண்டுகால தண்ணீர்ப் பிரச்சினை என்ற நெருக்கடி தீர்க்கப்பட்டது.

     #ஜல்சக்தி4இண்டியா என்பதைப் பயன்படுத்தி, இதுபோன்ற தண்ணீர் சேமிப்பு மற்றும் தண்ணீர்ப் பயன்பாட்டுக்கான முயற்சிகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு ஒவ்வொருவரையும் பிரதமர் வலியுறுத்தினார்.

     தண்ணீர் சேமிப்பு மற்றும் தண்ணீர்ப் பாதுகாப்புக்கு ஜல்சக்தி அபியான் என்ற இயக்கம் கடந்த மழைக்காலத்தில் 2019 ஜூலையில் தொடங்கப்பட்டது. தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களிலும், வட்டாரங்களிலும் இந்த இயக்கம் கவனம் செலுத்தியது.

 

*****


(Release ID: 1600702) Visitor Counter : 202