குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

பெருகிவரும் பணபலம், ஜனநாயக ஆட்சி அமைப்பின் நம்பகத்தன்மையை குலைத்துவிடுகிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறியுள்ளார்


பல்வேறு நன்மைகளைத் தருவதால் ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்துவதற்கான தருணம் வந்துவிட்டது என்கிறார்

Posted On: 09 JAN 2020 12:56PM by PIB Chennai

பெருகி வரும் பணபலம் நாட்டின் ஜனநாயக ஆட்சி அமைப்பின் நம்பகத்தன்மையை குலைத்துவிடுகிறது என்று கவலை தெரிவித்த குடியரசுத் துணைத்தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான திரு.எம்.வெங்கையா நாயுடு, இந்தப் போக்கைத் தடுக்க நாடாளுமன்றத்தில் விரைவாக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும் ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஹைதராபாதில் இன்று (09.01.2020) பொது கொள்கைக்கான பாரத் நிறுவனம் மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த “அரசியலில் பணபலம்”  என்பது பற்றிய மாநாட்டில் அவர் உரையாற்றினார். வாக்காளர்களை கவருவதற்காக அரசுகளும், அரசியல் கட்சிகளும் கட்டுப்பாடின்றி பணத்தை பயன்படுத்துவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறினார்.

நமது அரசியல் அமைப்பில் இரண்டு முக்கியமான பிரச்சினைகள் அவசரமாகவும், ஒற்றுமையாகவும் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். முதலாவது, கணக்கில் வராத சட்டவிரோத பணத்தை அரசியலிலும் தேர்தல்களிலும் மிகப்பெரிய அளவில் பயன்படுத்துவது. இரண்டாவதாக, குறுகிய கால நன்மைகளை முன்வைத்து நீண்டகால இலக்குகளை கைவிட்டு வாக்காளர்களைக் கவரும் முயற்சிகள் அதிகரித்து வருவது ஆகும்.

கட்டுப்பாடற்ற அதிக அளவிலான தேர்தல் செலவினங்கள், ஊழலை அதிகரித்து கொள்கை வகுப்பதில் சமரசம் செய்து கொள்ளுதல் மூலம் ஆளுகையின் தரத்துக்கு அச்சுறுத்தலாக  அமைந்துவிடுகிறது என்று குடியரசுத் துணைத்தலைவர் கவலை தெரிவித்தார்.

ஆட்சி அமைப்பில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக சட்டம் இயற்றுவது குறித்து நாடாளுமன்றம் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக திரு. நாயுடு கூறினார். அரசியல் கட்சிகளைக் கணக்குகளைப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் உரிய கட்டுப்பாடு நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் கூறினார்.

தேர்தல் ஆதாயத்துக்காக பொதுமக்கள் விரும்பும் திட்டங்களை அளிப்பதை, அரசுகள் பின்பற்றுவதால், அவை ஆற்ற வேண்டிய முக்கிய செயல்பாடுகள் கைவிடப்பட்டு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நீண்ட கால நலன்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.

ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்துவதால் தேர்தல் செலவினங்கள் குறைவதுடன், அரசியல் கட்சிகளின் செலவிடும் தன்மையும் குறைந்துவிடும் என்பதால் இந்தக் கருத்து பற்றி மிகவும் கவனத்துடன் பரிசீலிக்க  வேண்டிய தருணம் வந்து விட்டதாக திரு. வெங்கைய்யா நாயுடு கூறினார்.

கடந்த 70 ஆண்டுகளில், நாட்டில் ஜனநாயகம் வேரூன்றி நிலைபெற்றுவிட்டது என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், எனினும் ‘தரப் பற்றாக்குறை’யால் இது பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இதனை நிவர்த்தி செய்ய, அடையாளம் கண்டு வாக்களித்தல், பணத்துக்காக வாக்களித்தல் ஆகியவை அகற்றப்படவேண்டும் என்றும் கூறினார்.

2022ல், நாடு, 75வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ள நிலையில், ஆட்சி முறையில் பணபலத்தை கட்டுப்படுத்துவதற்கான திறம்பட்ட நடடிவடிக்கைகள் எடுக்கப்படும் என திரு. நாயுடு நம்பிக்கை தெரிவித்தார். மக்கள் தங்கள் பிரதிநிதிகளை “நற்பண்புகள், நன்னடத்தை, சிறப்பான திறன், பண்பாற்றல்” ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டும் என்றும் வேட்பாளர்களின் “பணம், சாதி, சமுதாயம், குற்றத்திறன்” ஆகியவற்றால் தவறாக தேர்ந்தெடுத்துவிடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.  

இந்தக் கருத்தரங்கில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான நிறுவனத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜெயபிரகாஷ் நாராயண், பொதுக்கொள்கைக்கான பாரத் நிறுவனம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உட்பட பல பிரமுகர்கள் பங்கேற்றனர்.

குடியரசுத் துணைத் தலைவரின் முழு உரைக்கு www.pib.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

----


(Release ID: 1598933) Visitor Counter : 234