எரிசக்தி அமைச்சகம்

இந்தியாவை ஒளிமயமாக்கும் மத்திய அரசின் உஜாலா மற்றும் தேசிய தெருவிளக்குகள் திட்டம் வெற்றிகரமாக ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது

Posted On: 05 JAN 2020 6:15PM by PIB Chennai

2015ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்த மத்திய அரசின் மானியம் இல்லாத உஜாலா மற்றும் தேசிய தெருவிளக்குத் திட்டம் ஐந்தாண்டுகளை நிறைவு செய்துள்ளது.

உஜாலா என்பது வீடுகளுக்கு ஒளி தரும் உலகிலேயே மிகப்பெரிய திட்டமாகும். அதேபோல், தெருவிளக்குகளை மாற்றி அமைப்பது மற்றொரு திட்டமாகும். இந்த இரண்டு திட்டங்களையும் மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து இஇஎஸ்எல் நிறுவனம் அமல்படுத்துகிறது.

தேசிய தெருவிளக்குத் திட்டத்தின்கீழ் இதுவரை 1 கோடியே 3 லட்சம் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், ஆண்டுக்கு 6.97 பில்லியன் கிலோ வாட் ஹவர்ஸ் எரிசக்தி சேமிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு 4.80 மில்லியன் டன் கரிமிலவாயு வெளியேற்றம் குறைந்துள்ளது. மத்திய அரசின் இந்தியாவில் உற்பத்தி திட்டத்தின் ஆதரவுடன் பல்வேறு மாநிலங்களில் எல்இடி தெருவிளக்குகள் பொருத்தப்பட்டதன் மூலம், சுமார் 13,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

உஜாலா திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 36 கோடியே 13 லட்சம் எல்இடி விளக்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு 46.92 பில்லியன் கிலோ வாட் ஹவர்ஸ் எரிசக்தி சேமிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு 38 மில்லியன் டன் கரியமிலவாயு வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது.

தேசிய தெருவிளக்குகள் திட்டத்தின்கீழ், 2020 மார்ச் மாதத்திற்குள் 1.34 கோடி வழக்கமான தெருவிளக்குகளை மாற்றி எல்இடி விளக்குகளைப் பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆண்டுக்கு 9 பில்லியன் கிலோ வாட் ஹவர்ஸ் எரிசக்தி சேமிக்கப்படுவதோடு 6.2 மில்லியன் டன் கரியமிலவாயு வெளியேற்றமும் குறையும். இந்தியாவின் ஒட்டுமொத்த கிராமப்பகுதிகளிலும், அடுத்த 4-5 ஆண்டுகளுக்குள் இத்தகைய மாற்றத்தைக் கொண்டுவர இஇஎஸ்எல் நிறுவனம் ரூ.8,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்படி, இஇஎஸ்எல் நிறுவனத்தால் 30 மில்லியனுக்கும் அதிகமான எல்இடி தெருவிளக்குகள் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

                                                                                                                                        -----



(Release ID: 1598505) Visitor Counter : 183


Read this release in: English , Urdu , Hindi