வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வேளாண் பொருள்கள் ஏற்றுமதி கொள்கைக்கான செயல்திட்டத்தை 8 மாநிலங்கள் இறுதி செய்துள்ளன

Posted On: 05 JAN 2020 1:39PM by PIB Chennai

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதை உறுதி செய்வது, ஏற்றுமதியை இரட்டிப்பாக்குவது என்ற நோக்கத்துடன், வேளாண் பொருள்கள்,  ஏற்றுமதி கொள்கை சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த நோக்கத்தை நிறைவேற்ற மாநில அரசுகளின் பெரும் ஈடுபாட்டை உறுதி செய்யும் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் கவனம் செலுத்தியது.

     வேளாண் ஏற்றுமதி கொள்கை அமலாக்கத்திற்குத் தேவைப்படும்  நிதி ஒதுக்கீடு, உற்பத்தித் தொகுப்புகள், திறன்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், பொருள் போக்குவரத்து, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற அத்தியாவசிய அம்சங்களை உள்ளடக்கிய மாநில செயல்திட்டத்தைத் தயாரிப்பதற்கு இந்த ஆணையம் சென்ற ஆண்டு முழுவதும், மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தியது.

ஏற்றுமதியை அதிகரிக்கவும், வர்த்தகத்தில் தற்போதுள்ள சிக்கல்களை சரி செய்யவும், உத்திகளை வகுப்பதற்காக வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம், உணவு பதனத் தொழில்கள் அமைச்சகம் ஆகியவற்றுடன் பல சுற்று  விவாதங்கள் நடத்தப்பட்டன.

இதன் அடிப்படையில், பல மாநிலங்கள், தொடர்பு முகமைகளையும், தொடர்பு அதிகாரிகளையும் நியமித்தன. மகாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம், கேரளா, நாகாலாந்து, தமிழ்நாடு, அசாம், பஞ்சாப், கர்நாடகா ஆகிய 8 மாநிலங்கள் செயல்திட்டத்தை இறுதி செய்துள்ளன.  மற்ற மாநிலங்கள் இறுதி செய்வதற்கான பல்வேறு கட்டங்களில் உள்ளன.

பல மாநிலங்களில், கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண் விளைப் பொருள்களின், தொகுப்பு இடங்களை ஆணையத்தின் தொடர்பு அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.  ஜலந்தர் (உருளைக் கிழங்கு), பானஸ்கந்தா (பால் பொருட்கள்), சாங்லி (திராட்சை),  சோலாப்பூர் (மாதுளை), நாக்பூர் (ஆரஞ்ச்), சித்தூர் (மாங்கனி), தேனி (வாழைப்பழம்),  சேலம் (கோழிப்பண்ணைப் பொருட்கள்), இந்தூர் (வெங்காயம்), சிக்கபல்லப்பூர் (இளஞ்சிவப்பு வெங்காயம்) ஆகிய இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டனர். இதன் பயனாக வேளாண் பொருட்கள் தொகுப்பு நிலைக் குழுக்கள் மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளன.  பஞ்சாப் (உருளைக்கிழங்கு), மகாராஷ்ட்ரா (மாதுளை, ஆரஞ்ச், திராட்சை), தமிழ்நாடு (வாழைப்பழம்) ஆகிய மாநிலங்களில் இத்தகைய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆணையம்,  வேளாண் ஏற்றுமதிக் கொள்கையை அமலாக்க சென்ற ஆண்டு முழுவதும், பல கூட்டங்களையும், ஏராளமான கருத்தரங்குகளையும் நடத்தி உள்ளது.

 

***

(Release ID: 1598469)


(Release ID: 1598480) Visitor Counter : 235


Read this release in: English , Urdu , Hindi