தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

2019 ஆம் ஆண்டின் செயல்பாடுகள்: தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

Posted On: 30 DEC 2019 3:14PM by PIB Chennai

தொழிலாளர் ஒவ்வொருவரின் பாதுகாப்பு, பந்தோபஸ்து, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை வலுப்படுத்துதல், வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதை ஊக்கப்படுத்தி தொழில்நிறுவனங்களில் சுமூகமான செயல்பாட்டைக் கொண்டுவருதல் எனும் நோக்கத்துடன் தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்கள் மற்றும் அமலாக்கத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவர பல நடவடிக்கைகளை  தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. 

தொழிலாளர் நலச் சட்ட சீர்திருத்தங்கள்:

1) ஊதியங்கள் குறித்த தொழிலாளர் சட்டம்: குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948, ஊதியம் வழங்கல் சட்டம் 1936, போனஸ் வழங்கல் சட்டம் 1965, சமஊதியச் சட்டம் 1976 ஆகியவை இணைக்கப்பட்டு, ஊதியங்கள் சட்டம் 2019 கொண்டுவரப்பட்டது.  இது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, 08.08.2019 அன்று குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2) தொழில் உறவுகள் குறித்த சட்டம்: தொழிற்சங்கச் சட்டம் 1926, தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலை ஆணைகள்) சட்டம் 1946, தொழில் தகராறுகள் சட்டம் 1947 ஆகியவை இணைக்கப்பட்டு, தொழிலுறவுகள் திருத்தச் சட்ட மசோதா உருவாக்கப்பட்டது.  இது மக்களவையில் 28.11.2019 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

3) சமூகப் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்த தொழிலாளர் சட்டம்: தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் 1923, பேறு கால பயன் சட்டம் 1961, பணிக்கொடை வழங்குதல் சட்டம் 1972, முறைசாரா தொழிலாளர்கள் சமூகப்பாதுகாப்புச் சட்டம் 2008 உள்ளிட்ட 9 சட்டங்கள் இணைக்கப்பட்டு, சமூகப் பாதுகாப்பு சட்ட மசோதா உருவாக்கப்பட்டது.  இது 2019 டிசம்பர் 11 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

4) பணியிடத்தில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் குறித்த தொழிலாளர் சட்டம்: தொழிற்சாலைகள் சட்டம் 1948, தோட்டத் தொழிலாளர் சட்டம் 1951, சுரங்கங்கள் சட்டம் 1952, கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பை முறைப்படுத்துதல் மற்றும் சேவை நிலைமைகள்) சட்டம் 1996 உள்ளிட்ட 13 தொழிலாளர் சட்டங்கள் இணைக்கப்பட்டு, பணியிடத்தில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் குறித்த தொழிலாளர் சட்ட மசோதா உருவாக்கப்பட்டது.  இது 23.07.2019 அன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதா தொழிலாளர் நலத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பொதுப்பதிவு:

     ஈபிஎஃப்ஓ, ஈஎஸ்ஐசி ஆகியவற்றுக்குப் பொதுவான படிவமுறை கொண்டுவரப்பட்டது.  இதையடுத்து, 2019 நவம்பர் 8 நிலவரப்படி,  ஈபிஎஃப்ஓ-வில் 1,27,544 அலகுகளும், ஈஎஸ்ஐசியில் 1,07,681 அலகுகளும் பதிவு செய்யப்பட்டன.

     கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பை முறைப்படுத்துதல் மற்றும் சேவை நிலைமைகள்) சட்டம் 1996, மாநிலங்களுக்கு இடையே குடிபெயரும் தொழிலாளர் (வேலைவாய்ப்பை முறைப்படுத்துதல் மற்றும் சேவை நிலைமைகள்) சட்டம் 1979, மத்திய தொழிலாளர் (முறைப்படுத்தல் மற்றும் நீக்குதல்) சட்டம் 1970 ஆகிய மூன்று மத்திய சட்டங்களுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள பொதுப் பதிவுக்கு ஷ்ரம் சுவிதா இணையப்பக்க வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி 08.11.2019 வரை 6,052 பதிவுகள் வழங்கப்பட்டுள்ளன.       

மாநிலங்களுக்கு இடையே குடிபெயரும் தொழிலாளர் (வேலைவாய்ப்பை முறைப்படுத்துதல் மற்றும் சேவை நிலைமைகள்) சட்டம் 1979, மத்திய தொழிலாளர் (முறைப்படுத்தல் மற்றும் நீக்குதல்) சட்டம் 1970 ஆகிய இரண்டு மத்திய சட்டங்களின்கீழ், இணையதளம் மூலம் 08.11.2019 வரை 20,316 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஷ்ரம் சுவிதா இணையப்பக்கம் மூலம் மாநிலங்களை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  தற்போதுள்ள நிலவரப்படி, ஹரியானா, குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், உத்ரகாண்ட், தில்லி ஆகியவை இந்த இணையப் பக்கத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்:

     முதியோர் பாதுகாப்புக்கும், முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புக்கும் என இரண்டு ஓய்வூதியத் திட்டங்களை மத்திய அரசு 2019-ல் தொடங்கியது.

     முறைசாரா தொழிலாளர்கள் பயனடையும் வகையில், பிரதமரின் தொழிலாளர் நல நிதி எனும் தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் 2019 பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. இதில் மாத வருமானம் ரூ.15,000 அல்லது அதற்கும் குறைவாக உள்ள 18-க்கும், 40-க்கும் இடைப்பட்ட   வயதுள்ளவர்கள் மாதாந்திர பங்களிப்பு செய்துவந்தால், 60 வயதிலிருந்து பயனாளிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3,000 உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், 10.12.2019 வரை 39,00,525 பயனாளிகள் இணைந்துள்ளனர்.

     வணிகர்கள், சிறுகடை வியாபாரிகள், சுயவேலை செய்வோருக்கான தேசிய ஓய்வூதியத் திட்டம் 12.09.2019 அன்று தொடங்கப்பட்டது.  இதுவும் தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும்.  இந்தத் திட்டத்தில் 10.12.2019  வரை 20,000 பேர் இணைந்துள்ளனர்.  

     இந்த இரண்டு ஓய்வூதியத் திட்டங்களிலும் பதிவுகளை அதிகரிக்க பொது சேவை மையங்களின் ஒருங்கிணைப்புடன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2019 நவம்பர் 30-லிருந்து டிசம்பர் ஆறு வரை ஓய்வூதிய வாரம் கொண்டாடப்பட்டது.

     தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய பணிசேவை மையங்கள் மூலம் 2019 அக்டோபர் 31 வரை 67,761 பேருக்கு வழிகாட்டுதல் மற்றும் கவுன்சிலிங் தரப்பட்டது. 5,621 மாணவர்களுக்குத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. 1,050 பேருக்குக் கணினிப் பயிற்சி வழங்கப்பட்டது.   

     பிரதமரின் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு திட்டத்தின்கீழ், புதிய தொழிலாளர்களுக்கான ஈபிஎஃப் மற்றும் ஈபிஎஸ் பங்களிப்பு 12% முழுவதையும் 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசு வழங்கும். இந்தத் திட்டத்தில் 2019 நவம்பர் 25 வரை 1,21,65,587 தொழிலாளர்களை உள்ளடக்கிய 1,52,778 நிறுவனங்கள் பயனடைந்துள்ளன.  

*****


(Release ID: 1598014) Visitor Counter : 4932


Read this release in: Urdu , English , Hindi , Bengali