பிரதமர் அலுவலகம்

அடல் நிலத்தடி நீர் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

Posted On: 25 DEC 2019 1:22PM by PIB Chennai

ரோத்தங் கணவாய்க்கு கீழே அமைந்துள்ள ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சுரங்கப்பாதைக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி-யின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

புதுதில்லி, டிசம்பர் 25, 2019

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி-யின் பிறந்தநாளான இன்று புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அடல் நிலத்தடி நீர்த்திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, ரோத்தங் கணவாய்க்கு கீழே அமைந்துள்ள ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சுரங்கப்பாதைக்கு வாஜ்பேயி-யின் பெயரை சூட்டினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாட்டின் மிக முக்கிய  திட்டமான, இமாச்சலப்பிரதேசத்தின்  மணாலி பகுதியை லடாக்கின் லே, மற்றும் ஜம்மு காஷ்மீருடன் இணைக்கும் ரோத்தங் சுரங்கப்பாதை இனி அடல் சுரங்கப்பாதை என அழைக்கப்படும் என்றார்.   ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இந்த சுரங்கப்பாதை, இந்தப் பகுதியின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும் இது உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

  அடல் ஜல் யோஜனா பற்றி குறிப்பிட்ட பிரதமர், தண்ணீர் என்பது வாஜ்பேயி மிக முக்கியமாகக் கருதிய ஒரு அம்சம் என்றும்,  அவரது  இதயத்தில் மிக  ஆழமாக பதிந்தது என்றும் தெரிவித்தார். அவரது கனவை நனவாக்க எங்களது அரசு பாடுபட்டு வருகிறது.  அடல் ஜல் யோஜனா அல்லது ஜல் ஜீவன் இயக்கத்துடன் தொடர்புடைய வழிகாட்டு நெறிமுறைகள், 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், தண்ணீர் வழங்குவது என்ற அரசின் உறுதிப்பாட்டை நிரூபிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய நடவடிக்கை என்றும் பிரதமர் தெரிவித்தார். தண்ணீர் பற்றாக்குறை மிகவும் கவலை அளிப்பதாகவும்,  ஒரு குடும்பம், ஒரு குடிமகன், ஒரு நாடு என்ற அடிப்படையில் இப்பிரச்சினை வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் கூறினார். தண்ணீர்ப் பிரச்சினை தொடர்பான எந்த ஒரு சூழ்நிலையையும், எதிர்கொள்ளக் கூடியதாக புதிய இந்தியா நம்மை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டார். இதற்காக  5 மட்டங்களில் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தனித்தனியாக பிரித்து அணுகும் முறையிலிருந்து தண்ணீரை நீர்வள அமைச்சகம் விடுவித்து, விரிவான முழுமையான அணுகுமுறையை வலியுறுத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இந்த ஆண்டு பருவமழையின்போது நீர்வளத்துறையால், சமுதாயத்தின் சார்பில், தண்ணீரைச் சேமிக்க எந்த அளவுக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதை நாம் அறிவோம். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க ஜல் ஜீவன் இயக்கத்தின்  மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வேளையில், மறுபுறம் அடல் ஜல் திட்டம், நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில், அதனை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தும் என்றும் தெரிவித்தார்.

தண்ணீர்  மேலாண்மையில் சிறப்பாக பணியாற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், சிறப்பாக பணியாற்றும் கிராம பஞ்சாயத்துக்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க அடல் ஜல் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.  கடந்த 70 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 18 கோடி கிராமப்புற வீடுகளில், 3 கோடி வீடுகளுக்கு மட்டுமே குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.  தற்போது தங்களது அரசு, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 15 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்க இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

ஒவ்வொரு கிராம அளவிலும், அங்குள்ள நிலைமைக்கு ஏற்ப,  தண்ணீர் சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார். ஜல் ஜீவன் இயக்கத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் போது இது கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தண்ணீர் சார்ந்த திட்டங்களுக்காக அடுத்த  5 ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் ரூ.3.5 லட்சம் கோடி செலவிடப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, அனைத்து கிராம மக்களும், தண்ணீர் தொடர்பான செயல் திட்டம் ஒன்றை உருவாக்குவதோடு இதற்கான நிதியம் ஒன்றை ஏற்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார். நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில், விவசாயிகள் இதற்கென நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

அடல் நிலத்தடி நீர் திட்டம் (அடல் ஜல்)

நிலத்தடி நீர் மேலாண்மைக்கு பங்களிப்புடன் கூடிய அமைப்பு ரீதியான கட்டமைப்பை  வலுப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அடல் ஜல் திட்டம், குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் நீடித்த நிலத்தடி நீர் ஆதார மேலாண்மைக்காக, சமுதாய அளவில் பழக்க வழக்க மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும் கொண்டுவரப்பட்டுள்ளது.  இந்தத் திட்டத்தை செயல்படுத்தும்போது இந்த மாநிலங்களுக்கு உட்பட்ட 78 மாவட்டங்களில் அடங்கிய சுமார் 8,350  கிராமப் பஞ்சாயத்துகள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.   அடல் ஜல் திட்டம் பஞ்சாயத்து அளவிலான நிலத்தடி நீர் மேலாண்மையை மேம்படுத்துவதோடு பழக்க வழக்க மாற்றத்தையும் ஏற்படுத்துவதுடன் தேவைக்கு ஏற்ற மேலாண்மையையும், முக்கிய நோக்கமாகக்  கொண்டதாகும்.

     5 ஆண்டுகளில் (2020-21 முதல் 2024-25 வரை) செயல்படுத்தப்பட உள்ள  இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடான ரூ.6000 கோடியில், 50%  உலக வங்கியிடமிருந்து கடனாகப் பெறப்பட்டு மத்திய அரசால் திருப்பிச் செலுத்தப்படும். எஞ்சிய 50% மத்திய நிதியுதவியாக பட்ஜெட் ஒதுக்கீடு மூலம் வழங்கப்படும்.  உலக வங்கிக் கடன் தொகை மற்றும் மத்திய உதவித் தொகை முழுவதும் மாநிலங்களுக்கு நிதி உதவியாக வழங்கப்படும்.

ரோத்தங் கணவாய்க்குக் கீழே அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை

ரோத்தங் கணவாய்க்குக் கீழே ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சுரங்கப்பாதை அமைப்பது என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு, அடல் வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது எடுக்கப்பட்டது. 8.8 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த சுரங்கப்பாதை, 3000 மீட்டர் உயரத்திற்கு மேல் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையாகும். இது மணாலி மற்றும் லே  இடையிலான பயண தூரத்தை 46 கிலோ மீட்டர் அளவுக்கு குறைப்பதோடு, போக்குவரத்துக்காக செலவிடப்படும் பலகோடி ரூபாய் தொகையும் மிச்சமாகும். 10.5 மீட்டர் அகலமுள்ள  ஒரே குழாய் போன்ற இருவழிப்பாதையுடன் கூடிய இந்த சுரங்கப்பாதை, எளிதில் தீப்பற்ற இயலாதவாறு, பிரதான  சுரங்கப்பாதையிலிருந்து தனியாக பிரிந்து செல்லக் கூடிய அவசரப் பாதையுடன் கூடியதாகும்.  2017ஆம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி இந்த சுரங்கப்பாதையின் இரண்டு புறங்களிலும் சுரங்கம் தோண்டி முடிக்கப்பட்டது. தற்போது பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ள இந்த சுரங்கப்பாதை, குளிர்காலமாக கருதப்படும் 6 மாதங்களில் நாட்டின் பிறபகுதிகளிலிருந்து துண்டிக்கப்படும் நிலையை மாற்றி, அனைத்து பருவநிலைக் காலங்களிலும் இமாச்சலப்பிரதேசம் மற்றும் லடாக் பிராந்தியங்களில் உள்ள தொலை தூரப் பகுதிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளிக்கக் கூடியதாகும்.  

-----



(Release ID: 1597628) Visitor Counter : 263