இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
இந்தியாவை கட்டுடல் நாடாக மாற்றவும், விளையாட்டுத் துறையில் சிறப்புற்று விளங்கவும், விளையாட்டுக் கலாச்சாரத்தை ஊக்குவிக்க விளையாட்டுத் துறை மேற்கொண்ட பல்வேறு முன்முயற்சிகள்
Posted On:
20 DEC 2019 10:38AM by PIB Chennai
இந்தியாவை ஆரோக்கியமான மற்றும் கட்டுடல் தேசமாக மாற்றும் நோக்கில், பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஆகஸ்ட் 29, 2019 அன்று கட்டுடல் இந்தியா இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். கட்டுடல் இந்தியா இயக்கம் தற்போது மக்கள் இயக்கமாக மாறியிருப்பதுடன் பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் வாழ்க்கையின் அனைத்துத் தரப்பையும் சேர்ந்த மக்கள் தீவிரமாக பங்கேற்றுள்ளனர்.
அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் கட்டணமின்றி விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள ஏதுவாக, விளையாட்டு மைதானங்களும் பிற விளையாட்டுக் கட்டமைப்பு வசதிகளும் மத்திய விளையாட்டுத் துறையால் அமைக்கப்பட்டுள்ளன. உலக வில்வித்தை சாம்பியன் போட்டி, காமன்வெல்த் பளு தூக்கும் போட்டி மற்றும் டேபிள்டென்னிஸ் சாம்பியன் போட்டிகள் மற்றும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடு இந்தாண்டு மிகச் சிறப்பாக அமைந்தது.
மத்திய இளைஞர் நலன் & விளையாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விளையாட்டுத் துறை, நாட்டில் விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவித்து, விளையாட்டுக்களில் தனிச் சிறப்பை அடைய, 2019 ஆம் ஆண்டில் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டது. அதிகரித்து வரும் தேவைகளுக்கு ஏற்ப, அதிநவீன கட்டமைப்பு வசதிகள், சாதனங்கள் மற்றும் அறிவியல் ரீதியான ஆதரவு போன்றவற்றை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, விளையாட்டு வீரர்களின் பயிற்சி மற்றும் சர்வதேச போட்டிகளில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது.
- கட்டுடல் இந்தியா இயக்கம்: தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29, 2019 அன்று விளையாட்டுத் துறையால் கட்டுடல் இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டது. இந்தியர்கள் தங்களது அன்றாட வாழ்வில் உடற்தகுதியை ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையாக மேற்கொள்ள செய்யும் நோக்கில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சிகள் ஆகஸ்ட் 29, 2023 அன்று நிறைவு பெறும்.
அனைத்து இந்தியர்களும், பாலினம், வயது, தொழில், வசிப்பிடம், சமூக/நிதிநிலை பேதமின்றி பங்கேற்கும் வகையில் கட்டுடல் இந்தியா இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. இந்தியர்கள் இந்தியாவில் இருந்தாலும் சரி, வெளிநாடுகளில் இருந்தாலும் சரி, அவர்கள் உடல் வலிமை, மனவலிமை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சுகாதாரமான உணவுப் பழக்கவழக்கங்கள், ஆரோக்கியம் மற்றும் சமச்சீரான உணவு, சுகாதார முன்னெச்சரிக்கைகள், நீடித்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை போன்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இந்த இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.
- கட்டுடல் இந்தியா இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள் / நடவடிக்கைகள்:
- மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளான அக்டோபர் 2, 2019 அன்று, கட்டுடல் இந்தியா இயக்கத்தின் கீழ், நாடு முழுவதும் 1500 கட்டுடல் இந்தியா ஓட்டங்கள் நடத்தப்பட்டது.
- கட்டுடல் இந்தியா பள்ளி வாரம், கட்டுடல் இந்தியா சான்றிதழ் முறை போன்றவை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பள்ளிக் கல்வி & எழுத்தறிவு துறையின் ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டது.
- கட்டுடல் இந்தியா இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதோடு, விளையாட்டு மைதானங்கள் மற்றும் பிற கட்டமைப்பு வசதிகள் விளையாட்டு வீரர்களுக்கு கட்டணமின்றி கிடைக்கச் செய்ய ஏதுவாக, அக்டோபர் 11, 2019-ல் நடைபெற்ற தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளின் கூட்டத்தில், அரசுக்குச் சொந்தமான அனைத்து விளையாட்டு கட்டமைப்புகளையும் கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ள நவம்பர் 1, 2019 முதல் அனுமதிப்பது என விளையாட்டுத் துறை முடிவு செய்தது.
- விளையாடு இந்தியா இளைஞர் விளையாட்டுக்கள் 2019: விளையாடு இந்தியா இளைஞர் விளையாட்டுக்கள் 2019, மகாராஷ்டிரா அரசால், புனேயில் உள்ள ஸ்ரீ ஷிவ் சத்ரபதி விளையாட்டு வளாகத்தில், 2019 ஜனவரி 9 முதல் 20 வரை நடத்தப்பட்டது. 18 விளையாட்டுக்களில் 403 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் 379 தனிநபர் போட்டிகளும், 24 குழு போட்டிகளும் நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
- ‘விளையாட்டுக்களில் ஊக்கமருந்து பயன்பாட்டை தடுத்தல்’ குறித்த தேசிய மாநாடு: தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் ஒத்துழைப்புடன் இந்திய உடற்கல்வி அறக்கட்டளை சார்பில், ஊக்கமருந்து தடுப்பு தொடர்பான இரண்டு நாள் தேசிய மாநாடு, புதுதில்லியில் 2019 ஜனவரி 30-31 நடைபெற்றது.
- விளையாட்டு அமைச்சக வலைதளத்திற்கு டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2018-க்கான வெப் ரத்னா விருது வழங்கப்பட்டது: மத்திய இளைஞர் நலன் & விளையாட்டு அமைச்சகம் டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2018-ன் கீழ், வெப் ரத்னா (வெள்ளி) விருதை வென்றது.
- தேசிய விளையாட்டு விருதுகள் 2019, குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆகஸ்ட் 29, 2019 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர், 2019-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கினார். இந்தாண்டு 32 விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மற்றும் 5 அமைப்புகள், பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய விளையாட்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர். சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்திற்கு, மவுலானா அபுல் கலாம் ஆசாத் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.
- உணவு கட்டணங்கள் சீரமைப்பு: சீனியர், ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் தடகள வீரர்கள் அனைவருக்கும் உணவு மற்றும் உப உணவு பொருட்களுக்கு நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளில், இந்தியா பேட்மிண்டன், துப்பாக்கிச்சூடு, வில்வித்தை, மல்யுத்தம், தடகளம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 89 பதக்கங்களை வென்றது.
அபிதாபியில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற 284 இந்தியர்கள் 85 தங்கம் உள்ளிட்ட 368 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 3-ம் இடம் பிடித்தனர்.
நேபாளத்தில் 2019 டிசம்பர் 1 முதல் 10 வரை நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 174 தங்கம் உள்ளிட்ட 312 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்தது.
*********
(Release ID: 1597035)
Visitor Counter : 234