பாதுகாப்பு அமைச்சகம்

பினாகா ஏவுகணையை ஒடிஷா கடற்பகுதியில் வெற்றிகரமாக பரிசோதித்தது டிஆர்டிஓ

Posted On: 19 DEC 2019 5:17PM by PIB Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான      டிஆர்டிஓ-வால் உருவாக்கப்பட்ட பினாகா ஏவுகணை, ஒடிஷா மாநிலம் சந்திப்பூர் கடற்பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து இன்று (19.12.2019) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.  பீரங்கி பொருத்தப்பட்ட இந்த பினாகா ஏவுகணை, எதிரிகளின் பகுதிக்குள் 75 கிலோமீட்டர் தொலைவு வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடிய திறன் பெற்றதாகும்.   

     பினாகா எம்.கே-II ராக்கெட்டின் ஊடுருவல் திறன், கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டு நடைமுறைகளை ஒருங்கிணைத்து, துல்லியமான தாக்கும் திறனை மேம்படுத்தி இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையின் ஊடுருவல் திறன், ஐஆர்என்எஸ்எஸ் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

     இந்த ஏவுகணை அதன் அதிகரிக்கப்பட்ட தாக்குதல் தொலைவு, துல்லியத் தன்மை மற்றும் துணைக் கருவிகளின் செயல்பாடு உள்ளிட்ட அனைத்து நோக்கங்களையும் எட்டியது.  டிஆர்டிஓ அமைப்பின் கட்டுப்பாட்டில் பல்வேறு இடங்களில் செயல்படும் ஆய்வுக்கூடங்கள் ஒருங்கிணைந்து இந்த ஏவுகணையை உருவாக்கியுள்ளன.

இமரத் ஆராய்ச்சி மைய இயக்குனர் திரு. நாராயணமூர்த்தி, பீரங்கி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய இயக்குனர் டாக்டர் வி.வெங்கடேஸ்வர ராவ், ஒருங்கிணைந்த சோதனை தளத்தின் இயக்குனர் டாக்டர் பி கே தாஸ் மற்றும் ஆதாரம் & பரிசோதனை நிறுவனத்தின் இயக்குனர் டி கே ஜோஷி ஆகியோர் முன்னிலையில் இந்த ஏவுகணை பரிசோதனை நடைபெற்றது. இந்த ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட குழுவினருக்கு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளருமான டாக்டர் சதீஷ் ரெட்டி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

*****



(Release ID: 1596984) Visitor Counter : 222


Read this release in: Marathi , English , Hindi , Bengali