உள்துறை அமைச்சகம்

குடியுரிமை (திருத்த) மசோதா 2019 மக்களவையில் நிறைவேறியது

Posted On: 10 DEC 2019 12:08AM by PIB Chennai

குடியுரிமை (திருத்த) மசோதா 2019 மக்களவையில் நிறைவேறியது. குடியுரிமை பெறுவதற்கான நிபந்தனைகளை நிறைவு செய்தால், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் மத அடிப்படையில் இன்னல்களை எதிர்கொண்டு, இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்ஸி, கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இந்த மசோதா வகைசெய்கிறது. இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, இந்தியாவின் சிறுபான்மை சமூகத்தை இந்த மசோதா எவ்வகையிலும் குறிவைக்கவில்லை; ஆனால், சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்து வந்தவர்களை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்றார்.  

விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய திரு. ஷா, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானது இந்த மசோதா என்ற தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 70 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருப்போருக்கு குடியுரிமை வழங்கும் மனிதாபிமான செயல் இது என்றார்.  மத அடிப்படையில், இந்தியா பிரிவினைக்கு ஒப்புக் கொண்டது காங்கிரஸ் கட்சி என்பதால், இந்த மசோதா அவசியமாகியுள்ளது என்றும் அவர் கூறினார். உண்மையான அகதிகளையும், ஊடுருவல்காரர்களையும் உறுப்பினர்கள் பாகுபடுத்திப் பார்க்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார். பாதுகாப்புக்கும், அனைவருக்கும் சமமான உரிமைகளுக்கும் உறுதிபூண்டுள்ள நரேந்திர மோடி அரசு, மத அடிப்படையில் பாகுபாடு இருக்காது என்று திரு.ஷா கூறினார். 

இந்த மசோதாவுக்குப் பின்னால், அரசியல் நோக்கம் ஏதுமில்லை என்று கூறிய அவர், கடந்த 70 ஆண்டுகளாக அடிப்படையான உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்கு அரசியல் சட்ட நடைமுறையின்படி, குடியுரிமை வழங்குவதற்குத்தான் இந்த மசோதா என்றார். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளின் அரசியல் சட்டத்தில் அரசு மதம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை அவர் எடுத்துக்காட்டினார். இந்தப் பின்னணியில் இந்த நாடுகள் இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்ஸி, கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு மதரீதியாக இன்னல் ஏற்படுத்தியது வரலாறாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.  இவர்கள், அன்றாட வாழ்க்கையில் தங்களின் மதஉரிமைகளை நடைமுறைப்படுத்தவும், கடைபிடிக்கவும், பிரச்சாரம் செய்யவும் தடைகளும், கட்டுப்பாடுகளும் இருப்பதால்  அச்சமடைந்துள்ளனர். இத்தகையோர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். தங்களின் பயண ஆவணங்கள் காலாவதியான பின்பு அல்லது, அரைகுறையாக உள்ள நிலையில், அல்லது ஆவணங்களே இல்லாமல் இந்தியாவில் தொடர்ந்து தங்கியுள்ளனர்.

1971-ஆம் ஆண்டு பங்களாதேஷிலிருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு அப்போதிருந்த அரசு குடியுரிமை வழங்கியதை அவர் உதாரணமாக எடுத்துரைத்தார். அதன்பிறகும் அகதிகள் வருகை நிற்கவில்லை என்று உள்துறை அமைச்சர் கூறினார். உகாண்டாவிலிருந்து வந்த அகதிகளும், குடியுரிமை பெற்றுள்ளனர். இதேமாதிரி நடவடிக்கை இலங்கை பிரச்சினையிலும், 1985-ல் அஸ்ஸாம் உடன்பாடு கையெழுத்தான பின்னரும் மேற்கொள்ளப்பட்டது. இந்த முடிவுகள் அரசியல் சட்டப்பிரிவு 14-க்கு பொருத்தமான அடிப்படையிலேயே எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த மசோதா, அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கும், நெறிகளுக்கும் எதிராக உள்ளது என்று உறுப்பினர்கள் கூறுவதில் உண்மையில்லை என்று அமைச்சர் கூறினார். “இந்த மசோதா இந்திய அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவுக்கும் எதிரானது அல்ல என்றும் நாட்டுக்கு நான் உறுதியளிக்கிறேன்” என அவர் கூறினார்.

 

******



(Release ID: 1595706) Visitor Counter : 315