பிரதமர் அலுவலகம்

காவல்துறை டிஜிக்கள்/ஐஜிக்களின் 54 ஆவது மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்

Posted On: 08 DEC 2019 6:20PM by PIB Chennai

புனேயில் 2019 டிசம்பர் 7-8 தேதிகளில் நடைபெற்ற காவல்துறை டிஜிக்கள்/ஐஜிக்களின் 54 ஆவது மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்.  கடந்த இரண்டு நாட்களாக விவாதங்களுக்குத் தலைமையேற்று மதிப்புமிகு ஆலோசனைகளை  வழங்கிய அவர், இன்று மாலை மாநாட்டின் நிறைவு அமர்வில் உரையாற்றினார்.  சிறப்புமிக்க சேவை செய்த புலனாய்வுக் குழும அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் காவல் பதக்கங்களையும் பிரதமர் வழங்கினார். 
 

ஏற்கனவே, ஒருநாள் நிகழ்வாக நடைபெற்று வந்த இந்த மாநாடு, கருத்துக்களையும், அனுபவங்களையும் கூடுதலாகப் பகிர்ந்து கொள்வதை ஊக்கப்படுத்தும் பிரதமரின் வழிகாட்டுதல்படி, 2015-லிருந்து 3 நாள் நிகழ்வாக மாற்றப்பட்டது.  மேலும், இந்த மாநாடு தில்லியில் மட்டும் என்பதில் இருந்து மாறுபட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகிறது.  பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரும் பங்கேற்கும் வகையில் இந்த மாநாட்டின் வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்பட்டது.  இந்த மாநாட்டிற்கு முன்னதாக சமகாலப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து, கருத்துக்களை முன்வைப்பதற்கான வரையறைகளை உருவாக்க டிஜிபி-க்களின் குழுக்களும் அமைக்கப்படுகின்றன. இன்னும் கூடுதலாக   மாநாட்டிற்கு இடையே கொள்கை விஷயங்களை மேலும் செழுமைப்படுத்த தனித்தனி அமர்வுகள் நடத்தப்படுகின்றன.  இந்த ஆண்டு பயங்கரவாதம், நக்ஸலிசம், கடலோரப் பாதுகாப்பு, கணினி வழி அச்சுறுத்தல்கள், தீவிரவாத முறியடிப்பு, போதைப் பொருள் பயங்கரவாதம்  போன்று  நாட்டுக்கு உள்ளேயிருந்தும், வெளியேயிருந்தும், பாதுகாப்புக்கு ஏற்படும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக 11 குழுக்கள் அமைக்கப்பட்டன. 

 

கொள்கை திட்டமிடல் மற்றும் அமலாக்கத்திற்கான நல்ல கருத்துக்களை உருவாக்கியதற்காக இந்த மாநாட்டைப் பாராட்டிய பிரதமர், இறுதி செய்யப்பட்ட  செயல் திட்டங்களுக்கு உறுதியான  விளைவுகள்  இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். 

 

இயல்பு நிலையை உறுதி செய்து  நாட்டில் பொது அமைதியைப் பராமரிப்பதற்கு நாட்டின்  காவல்படையினர் மேற்கொள்ளும் கவனமான முயற்சிகளைப் பாராட்டிய  பிரதமர், இவர்களின் பின்னால் உறுதியுடன் நிற்கின்ற குடும்பங்களின் பங்களிப்பை நாம் மறந்து விடக்கூடாது என்றார்.  பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி,  காவல்துறை பற்றிய பார்வையை  மேம்படுத்தப் பாடுபட வேண்டும் என்றும் அவர் கூறினார்.  தாங்கள்  பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறோம் என்ற உணர்வைப் பெண்களுக்கு ஏற்படுத்துவதில் காவல்துறையின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.  

 

இந்த மாநாட்டின் உணர்வுகளை மாநிலத்திலிருந்து மாவட்டத்திற்கும், மாவட்டத்திலிருந்து காவல் நிலையம் வரைக்கும், காவல் துறை தலைவர்கள் கொண்டு செல்ல வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.  பல்வேறு மாநிலங்களின் காவல்துறையினர் தெரிவித்த கருத்துக்களைக் கேட்டறிந்த பிரதமர், மிகச்சிறந்த நடைமுறைகளுக்கான  ஒருங்கிணைந்த பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் செயல்படுத்தப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

 

சாமானிய மக்களிடம் இருந்து கருத்துக்களைப் பெற்று அதற்கேற்ப காவல்துறை நடைமுறைகளை உறுதி செய்ய தொழில்நுட்பங்கள் சிறந்ததொரு கருவியாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

மத்திய அரசின் கிழக்குப் பகுதி செயல்பாட்டுக் கொள்கையில் முக்கியமானதாக உள்ள வடகிழக்கு மாநிலங்களின்  மேம்பாட்டில் தமக்குள்ள சிறப்பு ஆர்வத்தை வெளிப்படுத்திய பிரதமர், வளர்ச்சித் திட்டங்களுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கக் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த மாநிலங்களின் டிஜிபிக்களை வலியுறுத்தினார். 

 

அன்றாடம் கடமைகளை  நிறைவேற்றும் போது, காவல்துறை அதிகாரிகளுக்கு  ஏற்படும் நெருக்குதல்களை உணர்ந்திருக்கும் குறிப்போடு, பிரதமர் உரையை நிறைவு செய்தார். இருப்பினும், அவர்களுக்கு சந்தேகம் வரும்போது, சமூகத்தின் நலிந்த, ஏழ்மையான பிரிவினரின் நலனை மனதில் கொண்டு,  தேச நலனுக்குத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று குடிமைப்பணிகள் தேர்வெழுத செல்லும்போது ஏற்பட்ட உணர்வை நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

***************



(Release ID: 1595493) Visitor Counter : 163