பாதுகாப்பு அமைச்சகம்

மத்திய படைக்கலத் தொழில் வாரியத் தலைவராக திரு.ஹரி மோகன் பொறுப்பேற்பு

Posted On: 01 DEC 2019 3:58PM by PIB Chennai

மத்திய படைக்கலத் தொழில் வாரியத் தலைவராக இருந்த திரு.சவ்ரப் குமார், பதவியிலிருந்து ஓய்வுபெற்றதை அடுத்து, இந்த வாரியத்தின் புதிய தலைவராக திரு.ஹரி மோகன் இன்று (01.12.2019) பொறுப்பேற்றுக் கொண்டார்.

     இயந்திரவியல் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவரும், 1982 ஆம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த இந்தியப் படைக்கலத் தொழில் சேவை அதிகாரியுமான திரு.ஹரி மோகன், அலகாபாத் மற்றும் புனே பல்கலைக்கழகங்களில் இயந்திரவியல் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் பட்டப் படிப்புகளை படித்த போது, பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றவராவார்.  இவர், பொது நிர்வாகத்தில் எம்ஃபில் பட்டமும் பெற்றுள்ளார்.

     தமது 39 ஆண்டுகால பணிக்காலத்தில், ஹரித்வாரில் உள்ள பாரத மிகுமின் நிறுவனம், ஜபல்பூர் வாகனத் தொழிற்சாலை, ஆவடி இயந்திரத் தொழிற்சாலை, ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலை, காட்கி வெடிமருந்து தொழிற்சாலை, போலாங்கீர் படைக்கலத் தொழிற்சாலை, சந்தா படைக்கலத் தொழிற்சாலை, தேஹூ சாலை படைக்கலத் தொழிற்சாலை, புதுதில்லியில்  உள்ள படைக்கலத் தொழில்வாரிய அலுவலகம் மற்றும் எஃகு & சுரங்கத்துறை அமைச்சகம் போன்றவற்றில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ளார்.  

இவர், 2018 ஆம் ஆண்டு, சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகனத் தொழிற்சாலையில் முதுநிலை பொது மேலாளராகப் பணியாற்றிய காலத்தில், தலைசிறந்த பணியாற்றியதற்காக “ஆயுத ரத்னா விருது” பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

*****


(Release ID: 1594418)   
 

 


(Release ID: 1594433)
Read this release in: English , Urdu , Hindi