பிரதமர் அலுவலகம்
ஆளுநர்களின் 50-ஆவது மாநாட்டு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
24 NOV 2019 8:36PM by PIB Chennai
ஆளுநர்களின் 50 ஆவது மாநாடு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (24.11.2019) நிறைவடைந்தது. பழங்குடியினர் நலன் மற்றும் நீர் மேலாண்மை, வேளாண்மை, உயர்கல்வி மற்றும் வாழ்க்கையை எளிதாக்குதல் போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறு இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
இந்த பிரச்சினைகள் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆளுநர்கள் அடங்கிய ஐந்து துணைக் குழுக்கள், தனித்தனியாக கூடி விவாதித்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய அம்சங்களை அடையாளம் கண்டு, அவற்றில் ஆளுநர்களின் பங்களிப்பு குறித்த அறிக்கை மாநாட்டில் தாக்கல் செய்யப்பட்டது. பழங்குடியினர் நலன் தொடர்பான அம்சங்கள் குறித்து மாநாட்டில் அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன், பழங்குடியினர் மேம்பாட்டிற்கான கொள்கைகளை, உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப மதிப்பீடு செய்யுமாறும் வலியுறுத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆளுநர்களின் 50-ஆவது மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக, அதில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்ததுடன், போதிய காலஅவகாசம் தேவைப்பட்டாலும், வருங்காலத்தில் தேச வளர்ச்சியை உறுதி செய்யவும், சாமானிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் ஆளுநர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
மாநாட்டில் பங்கேற்ற ஆளுநர்கள் மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கியதற்காக பாராட்டுத் தெரிவித்த பிரதமர், மாநிலத்தின் முதல் குடிமகன் என்ற முறையில், உள்ளூர் சூழலுக்கு ஏற்ற கொள்கைகளை, மாநில அளவில் விவாதித்து அவற்றை தீவிரமாக செயல்படுத்த ஆளுநர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பழங்குடியினர் பகுதிகளின் மேம்பாடு பற்றி குறிப்பிட்ட பிரதமர், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதோடு, விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுக்கான முன்னேற்றத் திட்டங்களை பின்பற்றுமாறும், கேட்டுக் கொண்டார். 112 விருப்ப மாவட்டங்களில் வளர்ச்சிக்குத் தேவையான பணிகளை, ஒரு இயக்கமாக மேற்கொள்வதுடன், குறிப்பாக நாட்டில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார். பழங்குடியினர் வளர்ச்சி குறித்த அட்டவணையில் மாநிலம் மற்றும் தேசிய சராசரிகளைத் தாண்டி வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவதை உறுதி செய்யுமாறும் அவர் வலியுறுத்தினார்.
இந்த மாநாட்டில் ஜல் ஜீவன் இயக்கம் குறித்து நடைபெற்ற விவாதம், தண்ணீர் சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை தொழில்நுட்பங்களுக்கு அரசு அளித்து வரும் முக்கியத்துவத்தை பிரதிபலிப்பதாக கூறிய பிரதமர், உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப தொழில்நுட்பங்களை மாற்றியமைத்து செயல்படுத்துமாறும் வலியுறுத்தினார். பல்கலைக் கழகங்களின் வேந்தர்கள் என்ற முறையில், தண்ணீர் சேமிப்பு பற்றிய நல்ல பழக்கங்களை மாணவர்கள் மற்றும் இளைஞர் சமுதாயத்தினர் இடையே கொண்டு செல்வதற்கு ஆளுநர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். ‘புஷ்கரம்’ போன்ற தண்ணீர் பற்றிய பாரம்பரியத் திருவிழாக்களின் சிறப்பை எடுத்துரைப்பதற்கான வழிமுறைகளை ஆளுநர்கள் கண்டறிய வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
புதிய கல்விக் கொள்கை மற்றும் உயர்கல்வித் துறை பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், குறைந்த செலவிலான கண்டுபிடிப்புக்கு வழிவகுக்கும் உயர்தர ஆராய்ச்சிக்கான முதலீடுகள் மற்றும் ஹேக்கத்தான் போன்ற தொழில்நுட்ப முறைகளை பல்கலைக் கழகங்களில் பின்பற்றுவதை உறுதி செய்வதில் ஆளுநர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். இதன்மூலமே, புதிய தொழில் தொடங்கும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதுடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுக்க முடியும் என்றார். வாழ்க்கையை எளிதாக்குவதற்கான முன்முயற்சிகள் பற்றி குறிப்பிடுகையில், அதிகார வர்க்கத்தின் ஆதிக்கம் மற்றும் மிகைமிஞ்சிய கட்டுப்பாடுகளை, மாநில அமைப்புகள் சீரமைக்க வேண்டியது அவசியம் எனவும் பிரதமர் தெரிவித்தார். அதே வேளையில், சுகாதார சேவைகள் மற்றும் கல்வி போன்றவற்றை குறைந்த செலவில் மேற்கொள்வது உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை உறுதி செய்ய வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
வேளாண்மையைப் பொறுத்தவரை, நம்பகமான தீர்வு ஏற்படுத்தக்கூடிய கூட்டு அணுகுமுறையைப் பின்பற்றி, வேளாண்மை சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துமாறும் பிரதமர் அறிவுறுத்தினார். வேளாண் பல்கலைக்கழகங்களின் முக்கிய பங்களிப்புடன், சர்வதேச அளவில் சிறப்பான நடைமுறைகளை பின்பற்றுவதற்கான செயல் விளக்கம் அளிக்கப்படுவதை உறுதி செய்ய ஆளுநர்கள் உதவ வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரும் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் உரையாற்றினர்.
*************
(Release ID: 1593372)
Visitor Counter : 149