எஃகுத்துறை அமைச்சகம்

நாட்டில் எஃகு பயன்பாடு கணிசமான அளவு அதிகரிக்கும்: தர்மேந்திர பிரதான்

Posted On: 06 NOV 2019 11:10AM by PIB Chennai

நாட்டில் எஃகு பயன்பாடு கணிசமான அளவுக்கு அதிகரிக்கும் நிலையில் உள்ளதாக மத்திய எஃகு மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று (06.11.2019) சர்வதேச குரோமியம் மேம்பாட்டு சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘குரோமியம் 2019’ என்ற கருத்தரங்கில் பேசிய அவர், “எஃகு பயன்பாட்டிற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே வலுவான தொடர்பு உள்ளது. எதிர்காலத்திற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் அரசு செலுத்திவரும் கவனம், நவீன நகரங்களை உருவாக்குதல், தொழில் வளாகங்களை உருவாக்குதல் போன்ற அடுத்தகட்ட வளர்ச்சிப் பாதையை நோக்கி இந்தியா பயணிக்கும் வேளையில், நாட்டின் எஃகு பயன்பாடு கணிசமான அளவிற்கு அதிகரிக்கும்” என்றார்.

பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையின்கீழ், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி இந்தியா நிலையாகப் பயணித்து வரும் வேளையில், தொழில் தொடங்குவதை எளிதாக்கவும், மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக திரு. தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது, கட்டமைப்புத் துறைகள், டிஜிட்டல் பொருளாதாரம் போன்றவற்றில் அதிக முதலீடுகளை சார்ந்ததாகவும், சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதைப் பொருத்தும் அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.  உள்நாட்டு மதிப்புக்கூட்டுதலை ஊக்கப்படுத்தி ஆதரவளிக்கும் நோக்கிலேயே “இந்தியாவில் உற்பத்தி” திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

இந்தியாவை முதலீட்டிற்கு உகந்த இடமாக மாற்ற பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், நாட்டில் உற்பத்தி செய்யப்படும் குரோமியத்தில் 70% எஃகு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதாகக் கூறினார்.  விண்வெளி, பாதுகாப்பு மற்றும் எண்ணெய் & எரிவாயு துறைகளில் எஃகு அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

“நாட்டின் பொருளாதார வளர்ச்சியினூடே எஃகு உற்பத்தி மற்றும் பயன்பாடும் அதிகரிக்கும் என நான் நம்புகிறேன்.  எஃகு பயன்பாட்டை அதிகளவில் ஊக்குவிக்கும் விதமாக “இஸ்பதி-இராடா” என்ற வணிக ரீதியான பெயரிடும்  நடவடிக்கை அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. எஃகு துறை வளர்ச்சி, ஃபெரோ குரோம் தேவை அதிகரிப்புக்கும், குரோமியம் தாது தேவை அதிகரிப்புக்கும் வழிவகுக்கும்” என்றும் திரு. தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.   

 



(Release ID: 1590575) Visitor Counter : 126


Read this release in: English , Urdu , Hindi