கலாசாரத்துறை அமைச்சகம்
துருக்பா பாரம்பரியத்தைச் சேர்ந்த குங் பூ துறவிகளை சந்தித்தார் திரு.பிரஹலாத் சிங் படேல்
சிறப்பான மனிதஉரிமை சேவைகளுக்காக ஆசிய சமூகத்தின் மாற்றத்துக்கான விருதைப் பெற்றதற்காக குங் பூ துறவிகளுக்கு திரு.படேல் வாழ்த்து தெரிவித்தார்
Posted On:
04 NOV 2019 7:31PM by PIB Chennai
புதுதில்லியில் குங் பூ பெண் துறவிகளை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.பிரஹலாத் சிங் படேல் சந்தித்தார். இமயமலைப் பகுதியின் மிகவும் பிரபலமான மனிதஉரிமை ஆர்வலர்களாக உள்ள துருக்பா பாரம்பரியத்தைச் சேர்ந்த குங் பூ பெண் துறவிகளுக்கு, இமயமலைப் பகுதியில் பாலின அடிப்படையிலான ஆதிக்கத்தை முறியடித்தது மற்றும் பெண்கள் மேம்பாடு ஆகியவற்றுக்காக அற்புதமாக பணியாற்றியதற்காக ஆசிய சமூகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்துக்கான விருது வழங்கப்பட்டது. நியூயார்க்கில் அக்டோபர் 30, 2019-ல் நடைபெற்ற விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.
தங்களது சாகச செயல்பாடுகளுக்காக ஆசிய சமூகத்தின் மாற்றத்துக்கான விருதைப் பெற்ற குங் பூ பெண் துறவிகளுக்கு மத்திய அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். பெண்கள் மேம்பாட்டின் உண்மையான அடையாளமாக அவர்கள் இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். “உங்களது சொந்த நாயகனாக இருங்கள்” என்ற அவர்களது வாசகம், அமைச்சரை மிகவும் கவர்ந்தது. இந்த வாசகம், நம் அனைவரையும் ஊக்குவிப்பதாகவும், வழிகாட்டியாகவும் இருப்பதாக அமைச்சர் கூறினார். குங் பூ பெண் துறவிகளுடன் அமைச்சர் திரு.படேல் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்கள் ஜிக்மே என்ற பட்டத்துடன் இருப்பதையும், அதன் பொருள் “அச்சமின்மை” என்பதையும் அறிந்துகொண்டார். இந்தியாவின் அச்சமில்லாத மகள்களாக இருப்பதாக துறவிகளை மத்திய அமைச்சர் பாராட்டினார்.

புதிய தலைமுறை புத்த மதத்தவர்களின் அடையாளமாக குங் பூ பெண் துறவிகள் உள்ளனர். தங்களது போதனைகள் மூலம், பாலின சமத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஊக்குவித்து உலகில் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர். தங்களது வீரம் மூலம் தடைகளை தகர்த்தெறிந்து, சக குடிமக்களுக்கு வழிகாட்டியாக இருப்பதற்காக முந்தைய ஆண்டுகளில் ஆசிய சமூகத்தால் கவுரவிக்கப்பட்ட இந்திரா நூயி, முகேஷ் அம்பானி, தேவ் படேல் போன்ற இந்திய தலைவர்களுடன் தற்போது குங் பூ துறவிகள் இணைந்துள்ளனர்.
ஆசிய சமூகத்தின் மாற்றத்துக்கான விருது குறித்து…
1956-ல் தோற்றுவிக்கப்பட்ட ஆசிய சமூகம் என்ற அமைப்பு, எந்தவொரு அரசியல் அமைப்பையும் சாராத மற்றும் லாபநோக்கமற்ற அமைப்பு ஆகும். இதன் அலுவலகங்கள் ஹாங்காங், ஹூஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், மணிலா, மெல்போர்ன், மும்பை, நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, சியோல், ஷாங்காய், டோக்கியோ, வாஷிங்டன் டிசி, ஜுரிச் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. சர்வதேச அடிப்படையில், ஆசியா மற்றும் அமெரிக்காவில் உள்ள மக்கள், தலைவர்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையே பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவிக்கவும், நல்லுறவை வலுப்படுத்தவும் அர்ப்பணித்து செயல்படுகிறது. ஆசிய சமூகத்தின் முக்கிய தூண்களான கொள்கை மற்றும் வர்த்தகம், கலை மற்றும் கலாச்சாரம், கல்வி ஆகிய துறைகளில் உண்மையான தலைமைப் பண்பை வெளிப்படுத்துபவர்கள், மற்றவர்களை ஊக்குவிக்கும், வழிகாட்டியாக திகழும் தனிநபர்கள், அமைப்புகள் அல்லது இயக்கங்களை ஒவ்வொரு ஆண்டும் ஆசிய சமூகம் கவுரவித்து வருகிறது. உலகை சிறந்த இடத்துக்கு கொண்டுசெல்ல தங்களது தனிப்பட்ட கனவு மற்றும் திறமையை வெளிப்படுத்திய பெண்களுக்கு தனது நிறுவன கூட்டாளியான சிட்டி குழுமத்துடன் இணைந்து இந்த ஆண்டுக்கான மாற்றத்துக்கான விருதை வழங்கியுள்ளது.
குங் பூ பெண் துறவிகள் குறித்து…
இந்தியாவின் அச்சமில்லாத மகள்களாக குங் பூ பெண் துறவிகள் திகழ்கின்றனர். புதிய தலைமுறை புத்த மதத்தின் அடையாளமாக திகழும் அவர்கள், ஆன்மீகத்தைப் பயன்படுத்தி உண்மையான வாழ்க்கை செயல்பாடுகள் மற்றும் தாக்கம் குறித்து ஊக்குவிக்கின்றனர். 700 துறவிகளைக் கொண்ட வலுவான அமைப்பாக உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான துருக்பா பாரம்பரியத்துடன் திகழ்கின்றனர். பழமையான தற்காப்புக் கலையைப் பயன்படுத்தி, பலத்தை வளர்த்து, சமத்துவத்தை ஊக்குவித்து, சமூகத்தை மேம்படுத்தும் அவர்கள், பழமையான செயல்பாடுகளை உடைத்தெறிந்து, தங்களுக்கான நாயகர்களாக இருக்க ஊக்குவிக்கின்றனர். இமயமலையில் தொடங்கிய ஆயிரம் ஆண்டு பழமையான துருக்பா பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள். தங்களுக்குள் தலைவர்கள் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக பெண் துறவிகளுக்கு குங் பூ கலையை கற்றுக் கொள்ள துருக்பா பாரம்பரியத்தின் நிறுவனரும், ஆன்மீக குருவுமான கியால்வாங் துருக்பா ஊக்குவிக்கிறார். இதனை செய்ததன் மூலம், பெண் துறவிகள் உடற்பயிற்சி செய்யக் கூடாது என்ற நூற்றாண்டு கால புத்த மத பாரம்பரியத்தை மாற்றியுள்ளார். உலகில் குங் பூ பயிற்சி மேற்கொள்ளும் ஒரே புத்தமத பெண் துறவிகளாக அவர்கள் உள்ளனர். இந்தியாவின் பழமைவாத கலாச்சாரத்தில் பாலின ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்கு தற்காப்புக் கலையின் திறனை இந்த துறவிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
*****
(Release ID: 1590496)