பிரதமர் அலுவலகம்

ஆதித்யா பிர்லா குழுமத்தின் பொன் விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

Posted On: 03 NOV 2019 10:05AM by PIB Chennai

ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் திரு.குமாரமங்கலம் பிர்லா அவர்களே, தாய்லாந்து நாட்டின் வணக்கத்துக்குரிய பிரதிநிதிகளே, பிர்லா குடும்பத்தின் உறுப்பினர்களே, நிர்வாகிகளே, இந்தியா மற்றும் தாய்லாந்து நாட்டு வர்த்தக தலைவர்களே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம், சவாடி.

 

தாய்லாந்தின் இந்த சுவர்ண பூமியில் நாம், ஆதித்யா பிர்லா குழுமத்தின் சுவர்ண ஜெயந்தி அல்லது பொன்விழா கொண்டாட்டத்துக்காகக் கூடியுள்ளோம். இது உண்மையிலேயே ஒரு சிறப்பான தருணம். ஆதித்யா பிர்லா குழுமத்தின் குழுவினருக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தாய்லாந்தின் இந்த குழுமம் செய்துள்ள மிகச்சிறப்பான பணிகள் குறித்து திரு.குமாரமங்கலம் பிர்லா கூறியதை சற்று முன்பு கேட்டோம். இந்தக் குழுமம், இந்நாட்டின் பலருக்கு வாய்ப்புகளையும் வளத்தையும் உருவாக்கித் தந்துள்ளது.


நண்பர்களே,


தாய்லாந்து நாடானாது இந்தியாவுடன் வலுவான கலாச்சார பிணைப்பைக் கொண்டுள்ளது. தற்போது இந்த நாட்டில் இருக்கும் ஒரு முன்னணி இந்திய நிறுவனத்தின் 50வது ஆண்டை குறிக்கும் நிகழ்ச்சியில் நாம் உள்ளோம். என்னுடைய வலுவான நம்பிக்கை என்னவென்றால், வர்த்தகமும், கலாச்சாரமும், இயற்கையிலேயே ஒன்றிணைக்கும் சக்தியைக் கொண்டவை என்பதுதான். பல நூற்றாண்டுகளாக, துறவிகளும், வர்த்தகர்களும் துணிந்து நெடுந்தூர இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். அவர்கள் வீட்டில் இருந்து மிக நெடிய பயணத்தை மேற்கொண்டு பல கலாச்சாரங்களுடன் இணைந்துள்ளனர். கலாச்சாரங்களின் பிணைப்பு மற்றும் வர்த்தக ஆர்வம் ஆகியவை வருங்காலத்தில் உலகை நெருக்கமாக்கக்கூடிய நிலை ஏற்படுத்தும்.


நண்பர்களே,


இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள சில சாதகமான நிலைகள் குறித்து உங்களுக்கு எடுத்துக்கூற நான் ஆர்வமாக உள்ளேன். இந்தியாவில் இருப்பதற்கான மிகச்சிறந்த நேரம் இதுதான் என்பதை நான் முழு நம்பிக்கையுடன் கூறுகிறேன். இன்றைய இந்தியாவில் பல்வேறு விஷயங்கள் எழுச்சி அடைந்து வருகின்றன. பல வீழ்ச்சி அடைந்து வருகின்றன. ‘வர்த்தகம் செய்வதை எளிமையாக்குதல்’ வளர்ச்சி அடைந்து வருகிறது. எனவே வாழ்க்கை எளிமையாகி உள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீடு உயர்ந்துள்ளது. உற்பத்தி, திறன் ஆகியவை வளர்ச்சி அடைந்து வருகின்றன. உள்கட்டமைப்பு பணிகள் உயர்ந்து வருகின்றன. குறிப்பிடத்தக்க அளவிலான மக்களுக்கு தரமான மருத்துவ வசதி கிடைத்துள்ளது. அதேசமயம், பல வரிகள் குறைந்து வருகின்றன. வரி விகிதமும் சரிந்துள்ளது. சிவப்பு நாடா முறை, குடும்ப ஆட்சி முறை வீழ்ந்துள்ளது. ஊழல் சரிந்துள்ளது. ஊழல்வாதிகள் ஒழிந்துகொள்ள இடம் தேடி அலைகின்றனர். அதிகாரத்தின் கீழ் இருந்த இடைத்தரகர்களை இனி வரலாற்றில் மட்டுமே காண முடியும்.


நண்பர்களே,


கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளில் பல வெற்றிக் கதைகளை கொண்டுள்ளது. இதற்கு காரணம் அரசாங்கங்கள் மட்டுமில்லை. வழக்கமான அதிகாரத்துவ நடைமுறையில் செயல்படுவதை இந்தியா நிறுத்திவிட்டது. பெருமைவாய்ந்த இயக்கங்கள் மூலம் வெளிப்படையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பெருமைக்குரிய இயக்கங்கள், மக்களின் பங்களிப்புடன் இணையும்போது பெரும் ஊக்கம் பெறுவதுடன், அவை வெகுஜன இயக்கங்களாக மாறுகின்றன. மேலும், இந்த வெகுஜன இயக்கங்கள், அதிசயங்களை நிகழ்த்துகின்றன. முன்பு சாத்தியமே இல்லாததாக இருந்த விஷயங்கள், தற்போது சாத்தியமாகி உள்ளன. வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய அடிப்படை வசதிகள் கிட்டத்தட்ட 100 சதவீதம் அளவுக்கு சென்றடைந்துள்ளன. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக, ஜன்தன் யோஜ்னாவை சொல்லலாம். இது ஒட்டுமொத்த உள்ளடக்கிய நிதியை உறுதி செய்துள்ளது. மேலும், சுவச் பாரத் இயக்கத்தில், கிட்டத்தட்ட அனைத்து இல்லங்களிலும் கழிப்பறை வசதிகளைக் கொண்டு வந்துள்ளது.


நண்பர்களே,


இந்தியாவில் நாங்கள் சேவையை கொண்டு செல்வதில், அது பின்புற வாசல் வழியாக மற்றவர்களுக்கு செல்லும் மிகப்பெரிய பிரச்னையை நாங்கள் எதிர்க்கொண்டோம். இதனால் ஏழைகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஏழைகளுக்காக செலவழிக்கப்பட்ட தொகை, உண்மையிலேயே அவர்களுக்கு பல ஆண்டு காலமாக சென்றடையவில்லை என்பதை அறிந்தால் நீங்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாவீர்கள். எங்கள் அரசு, டிபிடி திட்டம் மூலம் இதை முடிவுக்கு கொண்டு வந்தது. இதற்காக டிபிடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டிபிடி என்றால், நேரடியாக பயனாளிக்கு பலன்களை மாற்றுதல் என்று பொருள். டிபிடி ஆனது இடைத்தரகர்களையும், சீரியமற்ற தன்மையையும் முடிவுக்கு கொண்டு வந்தது. இதில் மிகச்சிறிய அளவுக்குதான் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. டிபிடி ஆனது, 20 பில்லியன் டாலர் அளவுக்கு நிதியை மிச்சப்படுத்தி உள்ளது. வீடுகளில் எல்இடி விளக்குகள் எரிவதை பார்த்திருக்க முடியும். ஆனால், அவை மிக திறன்மிக்கவை என்பதும், மின்சாரத்தை சேமிக்கக் கூடியது என்பதும் உங்களுக்கு தெரியுமா? கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் 360 மில்லியன் எல்இடி பல்புகளை விநியோகித்துள்ளோம். மேலும், 10 லட்சம் தெருவிளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் மும்முனையில் ஐந்து பில்லியன் டாலர்களை சேமித்துள்ளோம். அதேசமயம் கார்பன் வெளிப்பாடும் குறைக்கப்பட்டுள்ளது. பணத்தை சேமிப்பதும் கூட, பணத்தை சம்பாதிப்பதற்கு சமம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதேபோல்தான் மின்சாரத்தை சேமிப்பதும், அதை உற்பத்தி செய்வதற்கு சமமானது. அந்த சேமிக்கப்பட்ட பணம் தற்போது, சரிசமமான சீரிய திட்டங்கள் மூலம் லட்சக்கணக்கானவர்களுக்கு அதிகாரம் அளிக்க பயன்படுத்தப்படுகிறது.


நண்பர்களே,

இன்றைய இந்தியாவில், கடினமாக உழைத்து வரி செலுத்துபவர்களின் பங்களிப்பு மதிக்கப்படுகிறது. நாங்கள் குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்ட ஒரு பகுதி என்றால், அது வரித்துறையாகும். இந்தியா தற்போது நட்புரீதியிலான வரி பிராந்தியங்களை கொண்ட நாடுகளில் ஒன்று என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதை மேலும் மேம்படுத்த நாங்கள் எங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளோம். கடந்த ஐந்து ஆண்டுகளில், நடுத்தட்டு மக்களின் வரிச்சுமையை குறிப்பிடத்தக்க அளவுக்கு நாங்கள் குறைத்துள்ளோம். தற்போது நாங்கள் நேரடியாக அதிகாரிகளின் முகத்தை பார்க்காமலேயே வரி மதிப்பீடு முறையை கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் துன்புறுத்தப்படவோ அல்லது பிரச்னைகள் எழவோ வாய்ப்பில்லை. நிறுவன வரிகளைக் குறைக்கும் இந்தியாவின் முடிவு பற்றி நீங்கள் ஏற்கனவே கேள்வி பட்டிருப்பீர்கள். எங்களுடைய ஜிஎஸ்டி திட்டம், இந்தியாவின் பொருளாதார ஒருங்கிணைப்புக்கான கனவை பூர்த்தி செய்துள்ளது. இதை மேலும் மக்களுக்கு உகந்த திட்டமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் விரும்புகிறோம். இங்கு நான் கூறிய அனைத்தும், உலகில் மிக சிறப்பான முதலீட்டுக்கான நாடாக இந்தியாவை உருவாக்கி உள்ளது.


நண்பர்களே,


கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா 286 பில்லியன் அமெரிக்க டாலர்களை நேரடி வெளிநாட்டு முதலீடாக பெற்றுள்ளது. இது கிட்டத்தட்ட, கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா பெற்ற ஒட்டுமொத்த நேரடி வெளிநாட்டு முதலீட்டில் பாதி அளவாகும். இதில் 90 சதவீதம் தானியங்கி ஒப்புதல்கள் மூலம் வந்துள்ளது. மேலும், 40 சதவீதம் பசுமை வெளி முதலீடுகள் மூலம் வந்துள்ளது. இதை பார்க்கும்போது, நீண்டகால அடிப்படையில் முதலீட்டாளர்கள் இந்தியாவை நோக்க ஆரம்பித்துள்ளனர் என்பது தெரிகிறது. இந்தியாவின் வளர்ச்சி பல்வேறு புள்ளிவிவரங்கள் மூலம் வெளிப்பட்டுள்ளது. யூ.என்.சி.டி.ஏ.டி.யின் கணிப்பின்படி நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் முதல் பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது, டபிள்யூ.ஐ.பி.ஓ. அமைப்பின் உலகளாவிய புத்தாக்க புள்ளிவிவரத்தில் இருந்த இந்தியாவின் நிலை, ஐந்து ஆண்டுகளில் 24 இடங்களை தாவி வந்துள்ளதைக் குறிப்பிடுகிறது. இதில் இரண்டு விஷயங்கள் குறித்து நாங்கள் குறிப்பாக பேச விரும்புகிறோம். ‘எளிமையாக வர்த்தகத்தை செய்தல்’ என்ற உலக வங்கியின் நாடுகள் பட்டியலில் இந்தியா கடந்த ஐந்து ஆண்டுகளில் 79 இடங்கள் முன்னேறி உள்ளது. 2014ல் இந்தியா 142வது இடத்தில் இருந்தது. ஆனால், 2019ல் இது 63வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும். மூன்றாவது ஆண்டாக, சீர்திருத்த நாடுகளின் வரிசையில் முதல் பத்து இடங்களில் உள்ளோம். இந்தியாவில் வர்த்தக வாய்ப்புகள் பரந்துபட்டு உள்ளன. நாங்கள் மிகப்பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட தேசத்தினர். இங்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் உள்ளன. இத்தகைய சூழ்நிலை, சீர்திருத்தங்களில் எங்களுடைய ஈடுபாட்டை விளக்குகிறது.


நண்பர்களே,

உலக வர்த்தக அமைப்பின் பயணம் மற்றும் சுற்றுலா போட்டி புள்ளிவிவரத்திலும் இந்தியாவின் நிலை உயர்ந்துள்ளது. 2013ல் இந்தியா 65வது இடத்தில் இருந்தது. 2019ல் அது 34வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இது மிகப்பெரிய முன்னேற்றம் ஆகும். இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்களுக்கு உகந்ததாகவும், தோதானதாகவும், பாதுகாப்பானதாகவும் உள்ளதாக கருதும் இடத்துக்குத்தான் சுற்றுலாப் பயணிகள் செல்வார்கள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இப்படியிருக்க, நாங்கள் அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை பெறுகிறோம் என்றால், எங்களுடைய முயற்சிகள் பலனளிக்கத் துவங்கியுள்ளன என்றுதான் பொருள். சிறந்த சாலைகள், சிறப்பான விமான நிலைய இணைப்புகள், சுத்தமான நிலை, சிறப்பான சட்டம் ஒழுங்கு ஆகியவை உலகை இந்தியாவுக்கு கொண்டு வருகின்றது.


நண்பர்களே,


வெளிப்பாடுகளின் தாக்கத்தின் பின்னணியில்தான் இந்த தரவரிசை வந்துள்ளது. இது வெறுமனே ஒரு முன்னெச்சரிக்கை அல்ல. ஏற்கனவே நடந்து கொண்டிருக்கக்கூடியவற்றின் வெளிப்பாடாக கொள்ளலாம்.


நண்பர்களே,


இந்தியா தற்போது அடுத்த கனவை நோக்கி நடைபோடுகிறது. அது ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற வேண்டும் என்பதுதான். 2014ம் ஆண்டில் என்னுடைய அரசு பொறுப்பேற்றபோது, இந்தியாவின் மொத்த பொருளாதார உற்பத்தி 2 டிரில்லியன் டாலராக இருந்தது. அதாவது 65 ஆண்டுகளில் 2 டிரில்லியன் டாலர் அளவுக்குத்தான் இருந்தது. ஆனால், ஐந்து ஆண்டுகளில், அதை கிட்டத்தட்ட 3 டிரில்லியன் டாலராக நாங்கள் உயர்த்தினோம். இதன் மூலம் விரைவில், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பதை நனவாக்கி விட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த தலைமுறை உள்கட்டமைப்புக்காக ஐந்து டிரில்லியன் டாலர்களை நாங்கள் முதலீடு செய்ய உள்ளோம்.


நண்பர்களே,


குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் நான் அதிகம் பெருமிதம் கொள்கிறேன் என்றால், அது இந்தியாவின் திறமையான மற்றும் திறன்வாய்ந்த மனித மூலதனமே. உலகில், மிகப்பெரிய ஸ்டார்ட் அப் சூழல் நிலவும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது என்றால், அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. டிஜிட்டல் நுகர்வோர்களில் மிகப்பெரிய மற்றும் மிக விரைவாக வளரும் சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் நூறுகோடி ஸ்மார்ட்போன் உபயோகிப்பாளர்கள் உள்ளனர். மேலும், சுமார் 50 கோடி இணையதள சந்தாதாரர்கள் உள்ளனர். நான்கு புள்ளி ஜீரோ நிலையில் இந்த தொழில்துறை உள்ளது. மேலும், வளர்ச்சி மற்றும் நிர்வாகத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான தொழில்நுட்பங்களை பின்பற்றி வருகிறோம். இந்த முன்னேற்றங்களால்தான், உலகளாவிய உற்பத்தி மையமாக நாங்கள் மற்றவர்களால் கவர்ந்திழுக்கப்படுகிறோம்.


நண்பர்களே,


‘தாய்லாந்து நான்கு புள்ளி ஜீரோ’ திட்டமானது, மதிப்பு அடிப்படையிலான பொருளாதாரம், அறிவியல் கட்டுமானம், தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றுக்கு தாய்லாந்தை மாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கிறது. இது இந்தியாவின் முன்னுரிமைகளுக்கு இணக்கமானது என்பதுடன், பாராட்டுதலுக்குரியது ஆகும். டிஜிட்டல் இந்தியா, திறன் இந்தியா, கங்கை தூய்மைப்பணி திட்டம், சுவச் பாரத் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், ஜெய் ஜீவன் இயக்கம் போன்ற இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு இது கூட்டு நடவடிக்கைக்கு நல்ல வாய்ப்புகளை வழங்குகிறது.


நண்பர்களே,


இந்தியா வளம் பெறும்போது, உலகமும் வளம் பெறுகிறது. இந்தியாவை மேம்படுத்தும் எங்கள் நோக்கம், சிறந்த கிரகத்துக்கான அடித்தளத்துக்கும் இட்டுச்செல்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், உயர் தரத்திலான மற்றும் குறைந்த செலவிலான மருத்துவ சேவையை 500 மில்லியன் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று நாங்கள் திட்டமிடும்போது, அது இயற்கையாகவே ஒரு ஆரோக்கியமான கிரகத்துக்கு வழிவகுக்கிறது. உலகளவில் 2030ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நாங்கள் 2025ம் ஆண்டுக்குள் அதை ஒழிக்கத் திட்டமிட்டுள்ளோம். இது நிச்சயம் காசநோய்க்கு எதிரான உலகத்தின் போராட்டத்துக்கு வலு சேர்க்கும். அதேசமயம், எங்களுடைய சிறப்பான சாதனைகள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றை உலகத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். எங்களுடைய தெற்காசிய செயற்கைக்கோள் இப்பிராந்தியத்தில் பல மக்களுக்கு உதவுகிறது. குறிப்பாக மாணவர்களுக்கும், மீனவர்களுக்கும் உதவுகிறது.


நண்பர்களே,

கிழக்கு நோக்கிய கொள்கைகள்படி, இப்பிராந்தியத்தில் இணைப்புகளை வலுப்படுத்த நாங்கள் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம். தாய்லாந்தின் மேற்கு கடலோர மற்றும் துறைமுகங்களுடன் இந்தியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளான சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா ஆகியவற்றுடன் நேரடி இணைப்பு ஏற்படுத்துவதன் மூலம் நமது பொருளாதார கூட்டு வலுப்பெறும். இந்த சிறப்பான காரணிகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம் முன்னோர்கள் செய்ததைப் போன்று  புவியியல் ரீதியான இந்த ஒற்றுமையை நாம் கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


நண்பர்களே,


நமது பொருளாதாரங்கள் பரஸ்பரம் இயல்பான திறனுடன் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளவும் கூடிய வாய்ப்புகளை வழங்குகிறது. நமது கலாச்சாரங்களில் உள்ள ஒற்றுமை, இயற்கையாகவே பரஸ்பர நல்லெண்ணத்துக்கு வழிவகுக்கிறது. நமது வர்த்தக கூட்டு நடவடிக்கையானது இரு தரப்புக்கும் வெற்றி என்ற நிலையை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இறுதியாக நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்: முதலீடு மற்றும் எளிதான வர்த்தகத்துக்கு இந்தியாவுக்கு வாருங்கள். புத்தாக்கம் மற்றும் ஸ்டார்ட் அப் ஆகியவற்றுக்கு இந்தியாவுக்கு வாருங்கள். மிகச்சிறப்பான சுற்றுலா தலங்களை அனுபவிக்கவும், மக்களின் அன்பான வரவேற்புக்காகவும் இந்தியாவுக்கு வாருங்கள். உங்களுக்காக திறந்த கரங்களுடன் இந்தியா காத்திருக்கிறது.

 

நன்றி!

••••••••••••••



(Release ID: 1590424) Visitor Counter : 216