பிரதமர் அலுவலகம்

பிரதமர் ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தமது குடும்பத்தினராகக் கருதும் படை வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார்

Posted On: 27 OCT 2019 5:07PM by PIB Chennai

முந்தைய ஆட்சியின் போது ஏற்படுத்திய மரபின் தொடர்ச்சியாக, ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இந்திய ராணுவத்தின் வீரர்களுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி தீபாவளிப் பண்டிகையை கொண்டாடினார். ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தினருடன் தீபாவளித் திருநாளை பிரதமர் கொண்டாடுவது இது 3-வது முறையாகும்.

ரஜோரி, புஞ்ச் பிரிவுகளைப் பாதுகாக்க தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த தீரம் மிக்க வீரர்களுக்கும், துணிச்சல்மிக்க மக்களுக்கும் ரஜோரியில் உள்ள நினைவுச் சின்னத்தில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார். அந்த இடம் “பராக்கிரம பூமி, உத்வேக பூமி” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

பின்னர், பதான்கோட் விமானப்படைத் தளத்துக்குச் சென்ற பிரதமர் அங்கு இந்திய விமானப்படையின் வீரர்களைச் சந்தித்தார்.

வீரர்களிடம் உரையாற்றிய பிரதமர், ஒவ்வொருவரும் தொலைத் தூரத்தில் உள்ள தங்கள் குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாட விரும்புவார்கள் என்றும், அதே போல, ராணுவத்தின் தீரம் மிக்க வீரர்களைக் கொண்ட தமது குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாட பிரதமரும் நீண்ட தூரம் பயணம் செய்துள்ளதாகவும் கூறினார்.

1947 ஆம் ஆண்டு அக்டோபர் 27-ந் தேதி ராணுவத்தினர் மேற்கொண்ட உயிர்த் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் அன்றைய தினம் ராணுவ வீரர்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுவதாக தெரிவித்தார். இந்திய ராணுவத்தினரின் தீரத்தைப் பாராட்டிய அவர், முன்பு முடியாது என்று கருதப்பட்ட முடிவுகளை மத்திய அரசு தற்போது எடுப்பதற்கு ராணுவ வீரர்கள் துணை புரிந்திருக்கிறார்கள் என்று கூறினார். தேசியப் பாதுகாப்பை உறுதி செய்ய அரணாக நின்ற ராணுவத்தினரின் துணிச்சலை அவர் புகழ்ந்துரைத்தார். அவர்களது முக்கியமான சேவைக்காக நாட்டு மக்களின் சார்பில் அவர் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

நாட்டுப் பாதுகாப்பில் வீரர்களின் பங்களிப்பை போற்றும் வகையில், தலைநகரில் தேசிய போர் நினைவுச் சின்னத்தை அரசு உருவாக்கியதை பிரதமர் சுட்டிக்காட்டினார். தேசிய போர் நினைவுச் சின்னத்திற்கு வருகை புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, ராணுவத்தினரின் பங்களிப்புக்கு மக்கள் மதிப்பளிப்பதைக் காட்டுகிறது என பிரதமர் தெரிவித்தார்.

இந்தியப் பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்கி மேலும் வலுவூட்ட அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பிரதமர் பட்டியலிட்டார். வீரர்களின் நலனை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

*******


(Release ID: 1589349) Visitor Counter : 100