குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
அணிசேரா நாடுகள் இயக்கத்தின் உச்சிமாநாட்டிற்கு இடையே ஆப்கானிஸ்தான், வியட்நாம், க்யூபா, வெனிசுலா அரசுத் தலைவர்களுடன் குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கய்யா நாயுடு கலந்துரையாடினார்
Posted On:
26 OCT 2019 10:38AM by PIB Chennai
அஜர்பைஜானின் பாக்கூ நகரில் நடைபெறும் அணிசேரா நாடுகள் அமைப்பின் 18 ஆவது உச்சிமாநாட்டிற்கு இடையே ஆப்கானிஸ்தான் அதிபர் டாக்டர் முகமது அஷ்ரப் கனி, வியட்நாம் துணை அதிபர் திருமதி டாங் தி நகோக் தின், க்யூபா அதிபர் மிகைல் டியாஸ் கேனல் பெர்முடெஸ், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மோரோஸ் ஆகியோருடன் குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கய்யா நாயுடு கலந்துரையாடினார்.
இந்த நாடுகளுடன் அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் நெருக்கமான உறவு மேலும் வலுப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த சந்திப்பில் அவர் வலியுறுத்தினார்.
ஆப்கானிஸ்தான் அதிபருடனான சந்திப்பின் போது, இருநாடுகளின் மக்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகள் முக்கியமான செயல்பாடுகளில் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது என்று திரு வெங்கய்யா நாயுடு தெரிவித்தார். வலுவான, பாதுகாப்பான, ஒன்றுபட்ட, அனைவரையும் உள்ளடக்கிய, வளமான ஆப்கானிஸ்தானைக் காணவே இந்தியா விரும்புகிறது என்று அவர் கூறினார். வளர்ச்சித் திட்டங்களில் ஆப்கானிஸ்தான் அரசோடும், மக்களோடும் நெருக்கமாகப் பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் வெற்றிகரமாக தேர்தல் நடத்தப்பட்டிருப்பதற்குப் பாராட்டு தெரிவித்த திரு வெங்கய்யா நாயுடு, இந்தத் தேர்தலின் முடிவுகள் ஆப்கானிஸ்தானின் நிலைத்தன்மையையும், அமைதியையும் மேம்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
2020-ல் ஆசியான் உச்சிமாநாட்டிற்குத் தலைமை பொறுப்பேற்கவுள்ள வியட்நாம், இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடு மட்டுமின்றி, இந்தியாவின் கிழக்கு நாடுகள் செயல்பாட்டுக் கொள்கைக்கான முக்கியத் தூண் என்றும் வியட்நாம் துணை அதிபரை சந்தித்தபோது குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார்.
க்யூபா அதிபருடனான சந்திப்பின்போது, அணிசேரா இயக்கத்தின் நிறுவக உறுப்பினர்கள் இந்தியாவும், க்யூபாவும் என்பதை சுட்டிக்காட்டிய திரு வெங்கய்யா நாயுடு, இந்த இயக்கத்தின் கொள்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார். ஜெனீவாவில் சென்ற மாதம் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ஜம்மு கஷ்மீர் குறித்த விஷயத்தில் இந்தியாவின் நிலையை ஆதரித்ததற்காக க்யூபாவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
வெனிசுலா அதிபரை சந்தித்துப் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கய்யா நாயுடு, இந்தியாவின் ஆதரவுடன், ஐநா மனித உரிமை கவுன்சில் தேர்தலில் வெனிசுலா வெற்றிப்பெற்றதற்குப் பாராட்டு தெரிவித்தார். 2021-22 காலத்திற்கு ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தரமல்லாத இடத்திற்கான தேர்தலில் இந்தியாவிற்கு க்யூபா ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
****
(Release ID: 1589293)