குடியரசுத் தலைவர் செயலகம்

ராணுவ விமானப் பிரிவுக்கு கொடி வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர்

Posted On: 10 OCT 2019 2:19PM by PIB Chennai

நாசிக்-கில் உள்ள ராணுவ விமான படைப்பிரிவுக்கு குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த், இன்று (10.10.2019) கொடி வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், ராணுவத்தின் விமான  படைப்பிரிவு, அதன் வீரதீர மற்றும் மதிப்புமிக்க சேவைகளுக்காக இதுவரை 273 விருதுகள் மற்றும் பதக்கங்களை பெற்றுள்ளதாகக் கூறினார். இந்த விருதுகள் மற்றும் கவுரவங்கள், இந்தப் படைப்பிரிவில் பணியாற்றும் வீரர்களின் அசாதாரண துணிச்சல் மற்றும் வீரத்தை பறைசாற்றும் என்று குறிப்பிட்ட அவர், இவர்கள் நமது ராணுவப் படைகளில் பணியாற்றும் அனைத்து வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கின்றனர் என்றும் தெரிவித்தார். ஐநா அமைதி காக்கும் படையில் இடம்பெற்று, சோமாலியா, காங்கோ போன்ற வெளிநாடுகளில் பணியாற்றும்போது, இந்தப் படைப்பிரிவினர் நம் நாட்டின் தலைசிறந்த தூதர்களாக செயல்படுகின்றனர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

ராணுவ விமான படைப்பிரிவில், பணியின்போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய குடியரசுத் தலைவர், அவர்கள் சிந்திய ரத்தமும், தியாகமும் நமது இறையாண்மையை பாதுகாத்து, நாட்டிற்கு பெரும் சிறப்பை தேடித் தந்துள்ளதாகவும் கூறினார். உலகில் மனிதர்கள் செல்ல முடியாத கரடுமுரடான பகுதிகளிலும், மோசமான வானிலை நிலவும் காலகட்டத்திலும், ராணுவத்தின் விமான படைப்பிரிவினர் பன்மடங்கு வீரர்களுக்கு இணையாக பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய ராணுவமும் இந்த தேசமும் அவர்களால் பெருமிதம் அடைவதாகவும் ராம் நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.

பின்னர், தியோலாலியில் உள்ள ராணுவ பீரங்கி பயிற்சிப் பள்ளியையும் பார்வையிட்ட குடியரசுத் தலைவர்,  அங்கிருந்த வீரர்களுடனும் கலந்துரையாடினார்.

         



(Release ID: 1587701) Visitor Counter : 132


Read this release in: English , Urdu , Hindi , Bengali