சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

கரிமப் பொருள் பயன்பாடு குறைவான பொருளாதாரம் கொண்டதாக தொழில் துறையை மாற்றியமைப்பதற்காக பருவநிலை செயல்திட்ட மாநாட்டில் புதிய தலைமைக் குழு அறிவிப்பு

Posted On: 24 SEP 2019 2:01AM by PIB Chennai

இந்தக் குழுவிற்கு இந்தியாவும், சுவீடனும் தலைமையேற்று முன்னணியில் செயல்படும்: மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

உலகில் மிக அதிக அளவு பசுமை வாயுக்களை வெளியிடும் தொழிற்சாலைகளை, கரிமப்பொருட்களை குறைவாகப் பயன்படுத்தும் பொருளாதாரத்திற்கு மாற்றும் நோக்கில், செப்டம்பர் 23 அன்று நடைபெற்ற ஐ.நா. பருவநிலை செயல் திட்ட மாநாட்டில் புதிய முன்முயற்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் சுவீடன் நாடுகளுடன், அர்ஜென்டினா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, தென்கொரியா மற்றும் இங்கிலாந்து நாடுகளும், டால்மியா சிமெண்ட், டிஎஸ்எம், ஹீத்ரு விமான நிலையம், எல்கேஏபி, மஹிந்திரா குழுமம், ராயல் ஷிபோல் குழுமம், ஸ்கேனியா, ஸ்பைஸ் ஜெட், எஸ்எஸ்ஏபி, திசேன் குருப் மற்றும் வாட்டன்ஃபால் உள்ளிட்ட நிறுவனங்களும் இடம் பெற்றுள்ள புதிய தலைமைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவிலான இந்தப் புதிய முன்முயற்சி, உலக பொருளாதார அமைப்பு, எரிசக்தி மாற்ற ஆணையம், புதுமை இயக்கம், ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் மையம் மற்றும் ஐரோப்பிய பருவநிலை அறக்கட்டளை போன்றவற்றின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட உள்ளது. கனரக தொழில் நிறுவனங்கள் மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்கள், பாரீஸ் உடன்படுக்கையின்படி அரசு-தனியார் பங்களிப்புடன் செயல்படுவது உறுதி செய்யப்படும்.

இது குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தியில், “நமது சூழ்நிலைகள் மற்றும் திறமைக்கு ஏற்ப பருவநிலை மாற்றத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்படுவோம். தொழிற்சாலைகளை மாற்றியமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், நவீன தொழில்நுட்பங்களை விரைவில் புகுத்தவும், இந்த பயணத்தில் வளரும் நாடுகளுக்கு உதவிகரமாக இருக்கவும் வகை செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர், அன்னிய உதவியின்றி தாங்களே சொந்த முயற்சிகளை மேற்கொள்ளும் பெரும் தொழில் நிறுவனங்கள், கரிமப் பொருட்களை குறைவாக பயன்படுத்த முடிவு செய்திருப்பதாகக் கூறினார்.

***


(Release ID: 1586001) Visitor Counter : 285


Read this release in: English , Urdu , Marathi , Hindi