நிதி அமைச்சகம்
உள்நாட்டு நிறுவனங்களுக்கு 22%-மாகவும், புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு 15%-மாகவும், கார்ப்பரேட் வரி விகிதம் குறைப்பு மற்றும் சில சலுகைகள்
प्रविष्टि तिथि:
20 SEP 2019 11:59AM by PIB Chennai
1961-ஆம் ஆண்டின் வருமானவரி சட்டத்திலும், 2019 நிதி (எண்-2) சட்டத்திலும் திருத்தங்களை செய்வதற்கு வரிவிதிப்பு விதிகள் (திருத்த) அவசரச்சட்டம் 2019-ஐ மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. கோவாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இதனைத் தெரிவித்தார். இந்த திருத்தங்களின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
- வளர்ச்சியையும், முதலீட்டையும் அதிகரிக்க வருமானவரிச் சட்டத்தில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது 2019-20 நிதியாண்டிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, உள்நாட்டு நிறுவனங்கள் விதிவிலக்கு அல்லது ஊக்கத்தொகை கோராவிட்டால் அவை 22% வருமானவரி செலுத்தலாம். இத்தகைய உள்நாட்டு நிறுவனங்களுக்கு அனைத்துக் கூடுதல் வரிகள், செஸ் உட்பட வரிவிகிதம் 25.17%-மாக இருக்கும். இத்தகைய நிறுவனங்கள் குறைந்தபட்ச மாற்று வரியையும் செலுத்த வேண்டியதில்லை.
- உற்பத்தித்துறையில் புதிய முதலீட்டை ஈர்க்கவும், இதன்மூலம் இந்தியாவில் உற்பத்தி என்ற அரசின் முன்முயற்சிக்கு ஊக்கம் அளிக்கவும், மற்றொரு புதிய அம்சம் வருமானவரிச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இதன்படி, 2019 அக்டோபர் 1 அன்றோ அதற்குப் பிறகோ அமைக்கப்படும் புதிய உள்நாட்டு நிறுவனம் 15% வரி செலுத்தும் வாய்ப்பைப் பெறும். ஊக்கத்தொகை / வரிவிலக்குக் கோராமல் 2023 மார்ச் 31-க்கு முன்னதாக உற்பத்தியைத் தொடங்கும் நிறுவனத்திற்கு இந்தச் சலுகை கிடைக்கும்.
- மூலதனச் சந்தைக்கான நிதி வரவை நிலைப்படுத்த, ஒரு நிறுவனத்தில் அல்லது சமபங்கு சார்ந்த நிதிப்பிரிவில் அல்லது பங்குகள் பரிவர்த்தனை வரிக்கு உட்பட்ட வர்த்தக நிறுவனத்தின் பிரிவில் சமபங்கு விற்பனை மூலம் பெறப்படும் மூலதன லாபத்திற்கு, 2019 நிதி(எண்.2)சட்டத்தின்கீழான, விரிவுபடுத்தப்பட்ட துணை வரி பொருந்தாது.
- 2019 ஜூலை 5-ஆம் தேதிக்கு முன்னதாகத் தங்களின் பங்குகளைத் தாங்களே வாங்குவதாக, ஏற்கனவே அறிவித்த, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு திரும்ப வாங்கிய பங்குகளுக்கு வரி இல்லை.
- கார்ப்பரேட் வரிக் குறைப்பு மற்றும் இதர சலுகைகளால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு மொத்த வருவாய் இழப்பு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாயாகும்.
(रिलीज़ आईडी: 1585665)
आगंतुक पटल : 472