பிரதமர் அலுவலகம்

பிரான்ஸுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி மேற்கொண்ட பயணத்தின்போது இந்தியா-பிரான்ஸ் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை (ஆகஸ்ட் 22-23, 2019)

Posted On: 22 AUG 2019 11:57PM by PIB Chennai
  1. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அழைப்பின்பேரில், பிரான்ஸுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். பாரிஸில் ஆகஸ்ட் 22-23, 2019-ல் இந்தியா-பிரான்ஸ் இருதரப்பு மாநாட்டில் கலந்துகொள்ளவும், பியாரிட்ஸ் நகரில் ஆகஸ்ட் 25-26, 2019-ல் நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்ளவும் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். பிரான்ஸ் நாட்டின் தலைமையின்கீழ் ஜி7 மாநாடு நடைபெறுகிறது.
  2. இந்தியாவும், பிரான்ஸும் 1998-ம் ஆண்டில் பாதுகாப்பு ஒத்துழைப்பு நாடுகளாக மாறின. இந்த பாரம்பரிய நட்புறவு என்பது மிகவும் நீடித்திருக்கக் கூடிய, நம்பிக்கைக்கு உரிய, ஒத்த கருத்துடைய மற்றும் அனைத்து விவகாரங்களுடனும் தொடர்புடையதாக உள்ளது. இந்தியாவும், பிரான்ஸும் ஒவ்வொரு நாட்டுக்கும் பரஸ்பரம் கைகொடுத்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, பாதுகாப்பு ஒத்துழைப்பு கொண்ட இரண்டு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கை கொண்டதாக உள்ளது. இந்த நல்லுறவு, இருதரப்பு அளவிலும், சர்வதேச அமைப்புகள் அளவிலும் கட்டமைக்கப்பட்ட நட்புறவாக உள்ளது. புதிய துறைகளிலும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி இந்த நட்புறவில், புதிய இலக்கை கொடுக்க இந்தியாவும், பிரான்ஸும் முடிவுசெய்துள்ளன.
  3. தங்களது நாடுகளுக்கு இடையே இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார நல்லுறவை மேம்படுத்துவதில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை இரு நாடுகளும் குறிப்பிட்டன. இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேலும் ஊக்குவிக்கவும், பொருளாதாரத்தை இயக்குபவர்கள் பலனடையும் வகையில், சந்தை வாய்ப்புகள் கிடைப்பதற்கான தீர்மானங்களை விரைவுபடுத்தவும், உரிய மதிப்பீடுகள் மற்றும் வழிகளை உருவாக்கும் வகையிலான உரிய கட்டமைப்பை இந்தியா-பிரான்ஸ் நிர்வாக பொருளாதார மற்றும் வர்த்தக குழு வழங்கும் என்று இரு தரப்பினரும் மீண்டும் உறுதியளித்தனர். இந்த விவகாரத்தில் பிரான்ஸ் மற்றும் இந்திய நிறுவனங்கள் தொடர்பான கூடுதல் வழிகள் மற்றும் வழிமுறைகள் உள்ளிட்ட வர்த்தகம் மற்றும் முதலீடு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்காக கூட்டாக இணைந்து பணிகளை வலுப்படுத்த முடிவுசெய்யப்பட்டது. இந்தியா-பிரான்ஸ் பொருளாதார மற்றும் நிதி விவகாரங்கள் குறித்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் மீண்டும் மேற்கொள்வது என்று தலைவர்கள் கூட்டாக ஒப்புக் கொண்டனர்.
  4. இந்தியாவுக்கு மார்ச் 2018-ல் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட கூட்டு தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில், இந்தியாவும், பிரான்ஸும் விண்வெளி ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன. இதன்மூலம், புதிய கோள்களை கண்டறிதல் அல்லது விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது போன்ற புதிய சவால்களை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள முடியும். 2022-ம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் திட்டத்தில் பங்கேற்கும் இந்திய விண்வெளி வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முடிவுக்கு இந்தியாவும், பிரான்ஸும் வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்த பயிற்சி பிரான்ஸிலும், இந்தியாவிலும் வழங்கப்படும். கூட்டு கடல்சார் அமைப்பு விழிப்புணர்வுத் திட்டத்தை நனவாக்கும் வகையிலான வழிமுறைகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளில் கையெழுத்திட்டதற்கு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். வானிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக இந்தியா-பிரான்ஸ் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், விண்வெளி வானிலை ஆய்வகத்தைத் தொடங்கியதற்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். திரிஷ்னா கூட்டுத் திட்டம் மற்றும் ஓசியன்சாட்-3-ல் ஆர்கோஸ் கருவியை இணைத்துக் கொண்டதற்கும் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். அச்சுறுத்தல் அதிகரித்துள்ள சூழலில், விண்வெளித் திட்டங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், சர்வதேச அளவில் விதிமுறைகளையும், சிறந்த நடைமுறைகளையும் ஊக்குவிக்க இணைந்து செயல்படுவது என்று தீர்மானித்தனர்.
  5. டிஜிட்டல் தொழில்நுட்ப விவகாரங்களில், சர்வதேச சட்டங்கள் அமல்படுத்தப்படும் இடங்களில், வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் அமைதி வழிகளுக்கான இணையதளங்கள் மூலம் பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு அடைவதற்கு இரு நாடுகளும் ஆதரவு அளிக்கின்றன. இதன் இறுதியில், இணையதள பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப திட்டத்தை இரு தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர். ஒவ்வொரு நாடுகளுக்கும் மிக நெருக்கமான தொழில் தொடங்குவதற்கான அமைப்பை கொண்டுவரும் நோக்கில், இந்தியா-பிரான்ஸ் இருதரப்பு ஒத்துழைப்பை, குறிப்பாக, உயர் அளவில் செயல்படும் கம்பியூட்டிங் மற்றும் செயற்கை புலனறிவு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குவான்டம் கம்ப்யூட்டிங், செயற்கை புலனறிவு மற்றும் எக்சாஸ்கேல் சூப்பர் கம்ப்யூட்டிங் துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் நோக்கில், அடோஸ் மற்றும் அதிநவீன கம்ப்யூட்டிங் மேம்பாட்டுக்கான மையம் இடையே ஒத்துழைப்புக்கான உடன்பாடு கையெழுத்தானதற்கு வரவேற்பு தெரிவித்தனர்.
  6. இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஜெய்த்தாபூர் பகுதியில் 6 அணுஉலைகளை அமைப்பதற்காக இரு தரப்புக்கும் இடையே கடந்த 2018-ம் ஆண்டில், தொழில் துறை முன்னோக்கிய உடன்பாடு முடிவுக்கு வந்ததுமுதலே, என்பிசிஐஎல் மற்றும் ஈடிஎஃப் இடையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதற்கு இரு தலைவர்களும் திருப்தியை வெளிப்படுத்தினர். இருதரப்புக்கும் இடையே சிஎல்என்டி சட்டம் (CLND Act) குறித்த பொதுவான புரிதலை அதிகரிக்கவும், இந்தியாவிலேயே உற்பத்தி செய்து உள்ளூர் பயன்பாட்டை அதிகரிப்பது குறித்தும், தொழில்நுட்ப வணிக வழிமுறைகள் மற்றும் திட்டத்துக்கு நிதியளிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதை தலைவர்கள் குறிப்பிட்டனர். விரைந்து முடிவை எட்டுவதற்காக பேச்சுவார்த்தையை தீவிரமாக மேற்கொள்வது என்று இருதரப்பும் உறுதியளித்தனர். அணுசக்தி ஒத்துழைப்புக்காக சர்வதேச மையத்துடனான ஒத்துழைப்பு தொடர்பாக அணுசக்தித் துறை மற்றும் பிரான்ஸ் மாற்றுமுறை எரிசக்தி மற்றும் அணுசக்தி ஆணையத்துக்கு இடையேயான புரிந்துணர்வு உடன்பாட்டை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வகையில், ஜனவரி 2019-ல் கையெழுத்திட்டதற்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இதேபோல, இலகு வகை நீர் அணுஉலைகள் பாதுகாப்புக்காக பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் பிரான்ஸ் மாற்றுமுறை எரிசக்தி மற்றும் அணுசக்தி ஆணையத்துக்கு இடையே செயல்பாட்டு உடன்பாடு கையெழுத்தானதற்கும் வரவேற்பு தெரிவித்தனர். சர்வதேச வெப்ப அணுக்கரு ஆய்வு உலைகள் மற்றும் அணுஆராய்ச்சிக்கான ஐரோப்பிய கவுன்சில் திட்டங்களில் கூட்டு முயற்சிகளுக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
  7. இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு ஒத்துழைப்பு மூலம், பாதுகாப்புத் துறையில் விரிவான ஒத்துழைப்புக்கு வழி ஏற்பட்டது. 2019-ம் ஆண்டில் நடைபெற்ற வருணா கடற்படை மற்றும் கருடா விமானப்படை கூட்டுப் பயிற்சிகளின் வெற்றி மற்றும் இந்தியாவில் இலையுதிர் காலத்தில் நடைபெற உள்ள சக்தி பயிற்சிக்கான ஏற்பாடுகள் குறித்து வரவேற்பு தெரிவித்தனர். தங்களது பாதுகாப்புப் படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியாவும், பிரான்ஸும் உறுதிபூண்டுள்ளன. இதற்காக இயங்குதன்மையை அதிகரிக்கவும், கூட்டுப் படைகள் ஒத்துழைப்புக்கான வழிவகைகளை ஏற்படுத்தவும் பணியாற்றி வருகின்றன. இதையொட்டி, பரஸ்பரம் தளவாடங்கள் ஒத்துழைப்புக்கான வழிமுறைகளுக்காக உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது.
  8. இந்தியா, பிரான்ஸ் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பில், பாதுகாப்பு தொழில் துறை ஒத்துழைப்பு முக்கியமானதாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகளை செயல்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றம், குறிப்பாக இந்த ஆண்டு முதலே முதலாவது ரஃபேல் போர் விமானத்தை வழங்க உள்ளதற்கு இந்திய பிரதமரும், பிரான்ஸ் அதிபரும் திருப்தி தெரிவித்தனர். பாதுகாப்பு தொழில் துறையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்களது தீர்மானத்தை இரு தலைவர்களும் உறுதிசெய்தனர். மேலும், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் அடிப்படையிலும், இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பயனளிக்கும் வகையிலும், இரு நாடுகளின் பாதுகாப்புத் துறை நிறுவனங்களுக்கு இடையே ஏற்கனவே உள்ள மற்றும் புதிதாக ஏற்படுத்தப்பட உள்ள ஒத்துழைப்புகளுக்கு அவர்கள் ஆதரவைத் தெரிவித்தனர். பிரான்ஸ் பாதுகாப்பு, விமான மற்றும் விண்வெளி திட்டங்களுக்கான தயாரிப்பாளர்களுக்கு சர்வதேச அளவில் பொருட்களை விநியோகிப்பவர்களாக இந்தியாவின் சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் இருப்பதற்கு இரு தரப்பும் திருப்தி தெரிவித்தன. இந்தச் சூழலை ஊக்குவிக்க ஆதரவு அளிப்பது என உறுதியளித்தனர். இரு நாடுகளின் விமான, விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் துறை சங்கங்களுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கு, இந்தியாவின் எஸ்ஐடிஎம் மற்றும் பிரான்ஸின் ஜிஐஎஃப்ஏஎஸ் இடையே தற்போது உள்ள ஒத்துழைப்புக்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
  9. மக்களுக்கு இடையேயான தொடர்புகள் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்த இந்தியாவும், பிரான்ஸும் ஒப்புக் கொண்டன. தூதரக விவகாரங்களில் வழக்கமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன்மூலம், பரிமாற்றம் மற்றும் மக்கள் நகர்வுக்கு வழிவகை ஏற்படும். இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை பரஸ்பரம் அதிகரிப்பதற்கு வரவேற்பு தெரிவித்தனர். குறிப்பாக, 2018-ம் ஆண்டில் பிரான்ஸுக்கு 7 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகள் பயணம் மேற்கொண்டனர். இது 2017-ம் ஆண்டைவிட 17% அதிகமாகும். 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள், இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டனர்.
  10. இருதரப்புக்கும் இடையேயான ஒத்துழைப்புக்கான முக்கிய பகுதியாக கல்வி திகழ்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே மாணவர்கள் இடம்பெயர்வு நிலவரம் குறித்து இரு தரப்பிலும் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் பிரெஞ்ச் கற்றுக் கொடுப்பது மற்றும் பிரெஞ்ச் மொழியில் உயர்திறன் கல்வி நிறுவனங்களை உருவாக்கியது ஆகியவற்றின் மூலம் இது சாத்தியமானது. மாணவர்கள் பரிமாற்ற அளவை 10,000-மாக நிர்ணயித்து 2018-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இலக்கு, இந்த ஆண்டிலேயே பூர்த்தி செய்யப்படும். எனவே, 2025-ம் ஆண்டில் மாணவர்கள் பரிமாற்ற அளவை 20,000-மாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிப்பது என இருதரப்பும்  முடிவுசெய்தது.
  11. பிரான்ஸின் லியோன் நகரில், அக்டோபர் 2019-ல் இரண்டாவது அறிவுசார் மாநாட்டை நடத்துவதற்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இந்த மாநாடு, முக்கியமான விவகாரங்களில் தொழில் நிறுவனங்களுடன் கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி அமைப்புகளுக்கு ஒத்துழைப்பை ஏற்படுத்த உதவும். அதாவது, விமான, விண்வெளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ரசாயனம், பொலிவுறு நகரங்கள், வேளாண்மை, கடல்சார் அறிவியல் மற்றும் செயற்கை புலனறிவு போன்ற விவகாரங்களில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும். திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியாவும், பிரான்ஸும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  12. கலாச்சாரத் துறையில் இந்தியா-பிரான்ஸ் இடையே ஒத்துழைப்புக்கான வலுவான வாய்ப்பு இருப்பதை இரு தலைவர்களும் வரவேற்றனர். பரஸ்பரம் நடைபெறும் மிகப்பெரும் கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதன் மூலம், ஒத்துழைப்பை ஏற்படுத்த முடியும். பாரிஸ் சர்வதேச புத்தக கண்காட்சியான லிவ்ரே பாரிஸின் அடுத்த ஆண்டு நிகழ்வை இந்தியாவில் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது. இதேபோல, பிரான்ஸ் கலைஞரான ஜெரார்டு கரவுஸ்டே-வின் முதல் இந்திய கண்காட்சியை ஜனவரி 2020-ல் டெல்லியில் உள்ள நவீன கலைக்கான தேசிய அருங்காட்சியகம் நடத்தும். இந்திய கலைஞர் சயேது ஹைதர் ரசா-வின் படைப்புகளை 2021-ம் ஆண்டில் Musée national d’art moderne (Centre Georges Pompidou) நடத்தும். நமஸ்தே பிரான்ஸ் நிகழ்ச்சியை 2021-2022-ல் இந்தியா நடத்தும். சினிமா, வீடியோ விளையாட்டுகள், வெர்ச்சுவல் ரியாலிட்டி ஆகிய துறைகளில் இருதரப்பும் தயாரிப்பு திட்டங்கள், விநியோகம் மற்றும் பயிற்சி ஆகியவற்றை இணைந்து மேற்கொள்வதை,  அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, செயல் திட்டத்தை 2019-ம் ஆண்டு இறுதியில் இரு நாடுகளும் ஏற்றுக் கொள்ளும். இரு நாடுகளிலும் திரைப்படப் படப்பிடிப்புகளில் ஒத்துழைக்க இந்தியாவும், பிரான்ஸும் ஒப்புக் கொண்டன.
  13. புவியின் நலனுக்காக தங்களது ஒத்துழைப்பு வழிமுறைகளின் கீழ், வானிலை மாற்றம் மற்றும் உயிரி பரவல் இழப்பு ஆகியவற்றை சிறப்பாக எதிர்கொள்ள தங்களது உறுதியை இந்தியாவும், பிரான்ஸும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
  14. வானிலை மாற்றத்தை எதிர்கொள்ள உள்ளூர், தேசிய, பிராந்திய, சர்வதேச அளவில் பல் துறை நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்பதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். வானிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக சர்வதேச முயற்சிகளை ஊக்குவிக்கவும், செப்டம்பர் 23, 2019-ல் ஐநா பொதுச் செயலாளர் நடத்த உள்ள வானிலைக்கான செயல் திட்ட மாநாடு வெற்றிபெறவும், தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரையும் இந்தியாவும், பிரான்ஸும் கேட்டுக் கொள்கின்றன. தற்போது உள்ளதைவிட அதிக அளவில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக தங்களது தேசிய அளவிலான இலக்கை முன்னேற்றத்தின் அடிப்படையில் மேம்படுத்திக் கொள்ள அவர்கள் உறுதிபூண்டனர். வானிலை மாற்றம் குறித்த ஐநா வழிமுறைகள் மற்றும் பாரிஸ் உடன்படிக்கையின் அடிப்படையில் உயர்ந்தபட்ச இலக்குகளை வெளிப்படுத்துவது என்றும் உறுதிபூண்டனர். இது சமமானது மற்றும் பொதுவானது. ஆனால், தங்களது திறனுக்கேற்ப மாறுபட்ட பொறுப்புகளைக் கொண்டது உள்ளிட்டவற்றை கொண்டதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் உறுதியளித்தனர்.
  15. UNFCCC மற்றும் பாரிஸ் உடன்படிக்கையின் கீழ், வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை இந்தியாவும், பிரான்ஸும் உறுதிப்படுத்தின. தங்களது வாக்குறுதிக்கேற்ப முதலாவது நிரப்பப்படாத காலகட்டத்தில் பசுமை வானிலை நிதிக்கான தங்களது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து வளர்ந்த நாடுகளையும் கேட்டுக் கொண்டன. பாரிஸ் உடன்படிக்கையின் இலக்குகள், தொழில் நிறுவனங்கள் வருவதற்கு முன்னதாக இருந்த அளவைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு புவி வெப்பமயமாதல் அதிகரிக்கும்போது, ஏற்படும் தாக்கங்கள் குறித்த அரசுகளுக்கு இடையேயான குழுவின் சிறப்பு அறிக்கை முடிவுகள் மற்றும் வானிலை மாற்றமும், நிலமும் குறித்த வானிலை மாற்றத்துக்கான, அரசுகளுக்கு இடையேயான, குழுவின் சிறப்பு அறிக்கை ஆகியவற்றை கணக்கில் கொண்டு, பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நீண்டகால திட்டத்தை இந்தியாவும், பிரான்ஸும், ஐரோப்பிய ஒன்றியத்தின்கீழ், 2020-ம் ஆண்டில் வகுக்கும். இதில், தங்களது பொதுவான, ஆனால், நாடுகளின் மாறுபட்ட சூழலுக்கு ஏற்ப மற்றும் தங்களது திறனுக்கு ஏற்ப மாறுபட்ட பொறுப்புகள் ஏற்றுக் கொள்ளப்படும். மேலும், பாரிஸ் உடன்படிக்கையின் அடிப்படையில், தேசிய இலக்குகளை அதிகபட்சமாக வெளிப்படுத்தும்.
  16. பியாரிட்ஸில் நடைபெறும் ஜி7 மாநாடு, செப்டம்பர் 23, 2019-ல் ஐநா பொதுச் செயலாளர் நடத்தும் வானிலை செயல் திட்ட மாநாடு ஆகியவற்றின் அடிப்படையில், புதிய முயற்சிகளுக்கு இந்தியாவும், பிரான்ஸும் ஆதரவு அளிக்கும். இதில் வானிலை மாற்றத்துக்கான பசுமை இல்ல வாயுவை குறைந்த அளவில் உருவாக்குவதற்கு, பாரிஸ் உடன்படிக்கை நோக்கத்தின் அடிப்படையில், நிதி அளிப்பதில் மாற்றங்களைக் கொண்டுவருவது, உயர்ந்தபட்ச வாயு வெளியிடும் தொழிற்சாலைகளை குறைந்தபட்ச வாயு வெளியிடும் தொழிற்சாலைகளாக மாற்றுவதற்கு ஆதரவு தெரிவிப்பது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஹைட்ரோபுளூரோகார்பன் அளவைக் குறைப்பதற்காக கிகாலி திருத்தங்கள் முதல் மான்ட்ரியல் வழிமுறைகள் வரை ஏற்றுக் கொள்ளவும், செயல்படுத்தவும் இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் உறுதியளித்துள்ளன. மேலும், குளிரூட்டி துறையில் எரிசக்தியை சேமிக்கும் திறனை மேம்படுத்துவது ஊக்குவிக்கப்படும். இதற்காக திறமையான முறையில் குளுமைப்படுத்துவதற்கான விரைவு செயல்பாடு குறித்து மேற்கொள்ளப்பட உள்ள பியாரிட்ஸ் உறுதிமொழி, கவனத்தில் கொள்ளப்படும். திறமையில்லாத படிம எரிபொருள் மானியங்களை நீக்கவும், நடுத்தர கால அளவில் நியாயமான வகையில் செயல்படவும் ஜி20 மாநாட்டில் உள்ள வாக்குறுதியை இந்தியாவும், பிரான்ஸும் வெளிப்படுத்தின. மிகவும் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு ஆதரவு அளிப்பது மற்றும் இரு தரப்பும் இணைந்து விரிவான ஆய்வு செய்வது என்றும் இரு நாடுகளும் உறுதியளித்தன.
  17. வளர்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவது என்ற தங்களது கூட்டு வாக்குறுதியை இரு நாடுகளும் உறுதிசெய்தன. சூரிய சக்தியைப் பெறுவதற்காக சிறந்த நடைமுறைகளை உறுப்பு நாடுகளுக்கு இடையே பரிமாறிக் கொள்வதிலும், திறன் வளர்ப்பதிலும் சர்வதேச சூரிய கூட்டமைப்பு இதுவரை மேற்கொண்டுள்ள முன்னேற்றங்கள் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். இந்திய சூரிய சக்தி கழகம் அமல்படுத்தியுள்ள பணம் செலுத்துதல் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு இரு நாடுகளும் பாராட்டு தெரிவித்தன. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்காக உலக வங்கியும், பிரான்ஸ் மேம்பாட்டு முகமையும், சூரிய இடர் கட்டுப்படுத்தும் முயற்சியில் மேற்கொண்டுள்ள முன்னேற்றங்களுக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. ஹைட்ரஜன் சக்தி துறையில், சூரிய சக்திக்கான தேசிய நிறுவனம் (NISE) மற்றும் பிரான்ஸின் மாற்றுமுறை எரிசக்தி, அணுசக்தி ஆணையம் (CEA) இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு வரவேற்பு தெரிவித்தனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தங்களது தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் விரிவாக்கம் செய்ய ஒப்புக் கொண்டனர். ஆப்பிரிக்காவில் நீடித்த வளர்ச்சி நடவடிக்கைக்கு பங்களிப்பை செய்துவரும் இந்தியாவும், பிரான்ஸும் இந்த முடிவின் அடிப்படையில், இந்த கண்டத்தில் கூட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தன. முத்தரப்பு திட்டங்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, ஆப்பிரிக்க நாடுகளில் கிராமப்புற மேம்பாடு, சூரிய மின்சக்தியைப் பெறுவது மற்றும் சாத் நாட்டில் சூரிய மின்சக்தியை ஈர்க்கும் துறையில் நீடித்த வளர்ச்சிக்காக தொழில் கல்வி மூலம் திறனை வளர்ப்பது ஆகியவற்றுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
  18. உயிரிபரவல் அழிக்கப்பட்டுவரும் நிலையில், பியாரிட்ஸ் ஜி7 மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட உள்ள பயோஉயிரியல் குறித்த தீர்மானத்தின் அடிப்படையில், 2020ம் ஆண்டில் நடைபெற உள்ள முக்கிய சர்வதேச நிகழ்ச்சிகளான மார்செய்லே-வில் நடைபெறும் ஐயூசிஎன் (IUCN) உலக பாதுகாப்பு மாநாடு மற்றும் உயிரி பரவல் குறித்த தீர்மானத்துக்கான COP15 அடிப்படையில், புதிய சர்வதேச, பிராந்திய, தேசிய மற்றும் உள்ளூர் அளவிலான வாக்குறுதிகளை அளிப்பதற்கு இந்தியாவும், பிரான்ஸும் இணைந்து தீவிரமாக செயல்படும். எதிர்கால உலகளாவிய உயிரி பரவலுக்கான உத்தி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை நினைவுகூர்ந்ததுடன், மாநாட்டின் மூன்று நோக்கங்களை நிறைவேற்றியது என்பது ஆதாரங்களை சேர்த்ததை சார்ந்தே இருந்தது. சவால்களுக்கு ஏற்பவும், வளரும் நாடுகளில் உயிரி பரவலுக்கு சர்வதேச நிதி ஆதாரங்களை ஒதுக்குவது என்று ஹைதராபாத்தில் 2012-ல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு அடிப்படையிலும், நிதி ஆதாரங்களை திரட்டுவது என விருப்பத்தை தெரிவித்தனர்.
  19. வானிலை மாற்றத்தை எதிர்கொள்தல், உயிரி பரவலைப் பாதுகாத்தல் மற்றும் மேம்பாட்டுக்கு. பெருங்கடல்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என்று இந்தியாவும், பிரான்ஸும் ஒப்புக் கொண்டன. சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புக்கு இடையே இணைப்பு இருப்பதை ஒப்புக் கொண்ட இரு நாடுகளும், இந்தப் பிரச்சினைகளுககுத் தீர்வுகாண தங்களது கடல்சார் ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடிவுசெய்தனர். கடல்சார் ஆதாரங்களை நீடித்து பயன்படுத்துவதற்காக உரிய சர்வதேச அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பெருங்கடல் ஆளுமைக்காக பணியாற்றும். நீலப் பொருளாதாரம் மற்றும் கடலோர விரிதிறன் ஆகியவை இந்தியாவுக்கும், பிரான்ஸுக்கும் பொதுவான நோக்கங்கள். இந்த விவகாரத்தில், இந்தியப் பெருங்கடல் உள்ளிட்ட பெருங்கடல்களை சிறந்த முறையில் புரிந்துகொள்வதற்காக கடல்சார் அறிவியல் ஆராய்ச்சியில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளைக் கண்டறிய இருதரப்பும் ஒப்புக் கொண்டன.
  20. பாலைவனமாக்கலை எதிர்கொள்வதற்காக ஐநா அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கான 14-வது கருத்தரங்கம், புதுதில்லியில் செப்டம்பர், 2-13, 2019-ல் நடைபெற உள்ளது. பாரிஸில் ஜூன் 1994-ல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட, 25-வது ஆண்டை கொண்டாடி வருகிறோம். இந்நிலையில், பூமித் தாயின் பயன்பாட்டை மாற்றியமைப்பது அவசரத் தேவை என்று இந்தியாவும், பிரான்ஸும் நினைவுகூர்ந்தன. நில மீட்பு நடவடிக்கைகளுக்கான பங்களிப்புகளை செய்ய அவர்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். இதன்மூலம், ஒரு புறம் வறுமை ஒழிப்பு, சமநிலையற்ற தன்மை மற்றும் உணவு பாதுகாப்பின்மையை சரிசெய்யலாம் என்று குறிப்பிட்டனர். மேலும், வானிலை மாற்றத்தைத் தடுப்பது மற்றும் வலுவிழக்கச் செய்தல் மற்றும் உயிரி பரவலைப் பாதுகாப்பது அல்லது மீட்டெடுப்பது. இந்த நடவடிக்கைகள், நிலத்தை சிதைப்பது, உயிரி பரவலை மீட்டெடுப்பது மற்றும் அதன் சர்வதேச மதிப்பீடு ஆகியவை குறித்த உயிரி பரவல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளுக்கான அரசுகளுக்கு இடையேயான அறிவியல் கொள்கை தளத்தின் (IPBES) சிறப்பு அறிக்கை, நிலம் மற்றும் வானிலை மாற்றத்துக்காக ஜெனீவாவில் ஆகஸ்ட் 2019-ல் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஐபிசிசி சிறப்பு அறிக்கை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
  21. இந்த உறுதியுடன், வனப்பகுதிகளை அழிப்பதைத் தடுப்பதற்காக வேளாண் பொருட்களை அளிக்கும் நீடித்த அமைப்புகளை ஏற்படுத்த மெட்ஸ் பகுதியில் ஜி7 வேளாண்மைத் துறை அமைச்சர்கள் மேற்கொண்ட முயற்சிகளை ஊக்குவிக்க இந்தியாவும், பிரான்ஸும் தீர்மானித்துள்ளன. குறிப்பாக, அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் மூலம், சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
  22. தீவிரவாதத்தை அதன் அனைத்து வடிவங்கள் மற்றும் எல்லைதாண்டிய தீவிரவாதம் உள்ளிட்ட அனைத்து வெளிப்பாடுகளுக்கும் இரு தலைவர்களும் தங்களது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தனர். இதேபோல, பிரான்ஸ் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற தீவிரவாதம் தொடர்பான சம்பவங்களுக்கும் கண்டனம் தெரிவித்தனர். எந்தவொரு நிலையிலும் தீவிரவாதத்தை நியாயப்படுத்த முடியாது என்று இரு தலைவர்களும் உறுதியாகத் தெரிவித்தனர். இதனை எந்தவொரு மதம், இனம், சமயம், தேசியத்துடன் இணைத்துப் பார்க்கக் கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
  23. தீவிரவாதம் குறித்து இரு நாடுகளும் ஜனவரி 2016-ல் நிறைவேற்றிய கூட்டு அறிக்கையை நினைவுகூர்ந்த இரு தலைவர்களும், தீவிரவாதம் எங்கு இருந்தாலும், அதனை அகற்றுவதற்கு வலுவான உறுதியை வெளிப்படுத்தினர். தீவிரவாதிகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுத்தல் மற்றும் எதிர்கொள்வதற்கான முயற்சிகளை வலுப்படுத்துமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்தி கேட்டுக் கொண்டனர். தீவிரவாதிகளுக்கு நிதியுதவி கிடைப்பதற்கு எதிரான முயற்சிகளை மேற்கொள்வதற்காக மார்ச் 28-ல் நிறைவேற்றப்பட்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 2462-வை செயல்படுத்துமாறு அனைத்து ஐநா உறுப்பு நாடுகளையும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். தீவிரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுப்பது குறித்த “தீவிரவாதத்துக்கு நிதி கிடையாது” என்ற புதிய சர்வதேச கருத்தரங்கை மெல்போர்னில் நவம்பர் 7-8-ல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்தனர். இது பிரான்ஸ் அரசு மற்றும் பாரிஸ் திட்டம் அடிப்படையில், பாரிஸில் ஏப்ரல் 2018-ல் நடத்தப்பட்ட கருத்தரங்கை வலுப்படுத்தும். உலகம் முழுவதும் நிலவிவரும் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, இந்தியா வலியுறுத்தியபடி, சர்வதேச கருத்தரங்கை விரைவில் நடத்த பணியாற்றுவது என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
  24. தீவிரவாதிகளின் புகலிடங்கள் மற்றும் கட்டமைப்புகளை முற்றிலுமாக அழிப்பதற்கு இணைந்து பணியாற்றுமாறு அனைத்து நாடுகளையும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும், தீவிரவாத இணைப்புகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தெற்கு ஆசியா மற்றும் சாகெல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தீவிரவாத குழுக்கள் மற்றும் அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ், ஜெய்ஸ்-இ-முகம்மது, ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகளின் எல்லைதாண்டி செல்லும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
  25. இரு நாடுகளின் தலைமை அமைப்புகள் மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு இடையே சிறந்த ஒத்துழைப்பை தொடர்வதோடு மட்டுமன்றி, தீவிரவாதத்தை, குறிப்பாக ஆன்லைன் தீவிரவாதத்தை எதிர்கொள்ளவும், தடுக்கவும், புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், செயல்பாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
  26. தீவிரவாதம் மற்றும் வன்முறையான பயங்கரவாத ஆன்லைன் கருத்துக்களை ஒழிப்பதற்காக பாரிஸில் கடந்த ஆண்டு மே 15-ல் நிறைவேற்றப்பட்ட கிறிஸ்ட்சர்ச் அழைப்பை செயல்படுத்துவதற்கு ஆதரவு அளிப்பது என்று இரு தலைவர்களும் உறுதியளித்தனர். ஐநா, தீவிரவாத தடுப்பு அமைப்பு (GCTF), தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதற்கான நிதி செயல்பாட்டு அதிரடிக் குழு, ஜி20 போன்ற பல்துறை அமைப்புகளில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த அவர்கள் ஒப்புக் கொண்டனர். தீவிரவாத அமைப்புகள் மீதான ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1267 மற்றும் பிற பொருத்தமான தீர்மானங்களை செயல்படுத்துமாறு அனைத்து ஐநா உறுப்பு நாடுகளையும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஐநா-வில் தீவிரவாத ஒழிப்புக்கான விரிவான தீர்மானத்தை விரைந்து நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்து பணியாற்றுவது என்றும் தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.
  27. சுதந்திரமான கடல் பாதை, குறிப்பாக இந்தோ-பசிபிக் பிராந்தியம், இந்தியா-பிரான்ஸ் இடையேயான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பராமரிப்பது என்ற பகிர்ந்தளிக்கப்பட்ட வாக்குறுதி என்பது, தங்களது பாதுகாப்பு ஒத்துழைப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த விவகாரத்தில், அதிபர் மேக்ரான், இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட மார்ச் 2018-ல் இறுதிசெய்யப்பட்ட இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியா-பிரான்ஸ் ஒத்துழைப்புக்கான கூட்டு பாதுகாப்பு திட்டத்தை வேகமாக செயல்படுத்தியதற்கு இந்தியாவும், பிரான்ஸும் வரவேற்பு தெரிவித்தன.
  28. வெள்ளை கப்பல் (வர்த்தக கப்பல்) ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்காக, குருகிராமில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துக்கான தகவல் இணைப்பு மையத்தில் பிரான்ஸ் தொடர்பு அதிகாரியை நியமித்ததை இந்தியாவும், பிரான்ஸும் வரவேற்றன.
  29. இந்திய பெருங்கடல் ரிம் சங்கத்தில் தங்களது செயல்பாடுகளை ஒருங்கிணைக்க இந்தியாவும், பிரான்ஸும் விருப்பத்தை தெரிவித்தன. மேலும், தெற்கு இந்தியப் பெருங்கடலில் கொள்ளையை எதிர்கொள்ளவும், அனைத்து வகையான கடல்சார் கடத்தலைத் தடுக்கவும், கூட்டுத் திட்டத்தை செயல்படுத்த விருப்பமுள்ள நாடுகளுடன் இணைந்து செயல்பட விருப்பத்தை தெரிவித்தன. இந்தியப் பெருங்கடல் கடற்படை அமைப்பில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்பட தனது விருப்பத்தை பிரான்ஸ் வெளிப்படுத்தியது. இந்த அமைப்புக்கு 2020-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை தலைமை வகிக்க உள்ளது.
  30. ஜனநாயக நாடுகளான இந்தியாவும், பிரான்ஸும் பல நாடுகளை உள்ளடக்கிய அமைப்புகளை செயல்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளன. 21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்வதற்காக இதற்கு முன்பு இருந்ததைவிட, சர்வதேச அமைப்பில் சீர்திருத்தங்களை செய்வதுடன் அதிக திறன் வாய்ந்ததாக மாற்ற வேண்டும் என்ற அவர்கள் விரும்புகின்றனர். எனவே, ஜி7 மாநாட்டில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட பிரான்ஸ் விருப்பம் தெரிவித்தது. இதன்மூலம், டிஜிட்டல் மாற்றம், வானிலை அவசரநிலை மற்றும் உயிரிபரவல் அழிப்பு ஆகிய சவால்களை சிறந்த முறையில் எதிர்கொள்ள முடியும். இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம் கிடைக்கும் வகையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை செய்ய இந்தியாவும், பிரான்ஸும் அழைப்பு விடுத்தன. ஜூன் 2020-ல் நடைபெற உள்ள 12-வது அமைச்சக கருத்தரங்கிற்கு உதவும் வகையில், உலக வர்த்தக அமைப்பை நவீனமயமாக்குவதற்காக தாங்கள் ஒன்றாகவும், மற்றவர்களுடன் இணைந்து விரைந்தும், பயனுள்ள வகையிலும் பணியாற்ற அவர்கள் தங்களது உறுதியை வெளிப்படுத்தினர். வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நீண்டகால விதிகள் அடிப்படையிலான பல்துறை வர்த்தக அமைப்பு மற்றும் வெளிப்படையான, நியாயமான செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், கருத்து வேறுபாடுகளை தீர்க்கும் முறையை கவனத்தில் கொண்டு, அமைப்பின் செயல்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் விதிகளை மேம்படுத்துவதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டனர். தரமான கட்டமைப்பு முதலீட்டுக்கான ஜி20 கொள்கைகளை செயல்படுத்த அவர்கள் ஆதரவு தெரிவித்தனர். மேலும், அலுவல்ரீதியான இருதரப்பு கடன்களை மறுகட்டமைப்பு செய்வதற்கு பிரதானமான சர்வதேச அமைப்பான பாரிஸ் கிளப்-பின்கீழ், ஒருங்கிணைந்து செயல்பட உள்ளன.
  31. இந்த இருதரப்பு நல்லுறவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கூடுதல் மதிப்பு வழங்குவதை இருதரப்பும் புரிந்துகொண்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் பல்துறை விவகாரங்கள் மட்டுமன்றி வர்த்தகம், முதலீடு மற்றும் புத்தாக்க விவகாரங்களில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா இடையேயான நல்லுறவை தீவிரப்படுத்த தங்களது தீர்மானத்தை இந்தியாவும், பிரான்ஸும் உறுதிப்படுத்தின.
  32. தங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள பிராந்திய நெருக்கடிகளை எதிர்கொள்வது உள்ளிட்ட சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பிரான்ஸும், இந்தியாவும் ஒருங்கிணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. ஆப்கானிஸ்தானில் நல்லிணக்க நடவடிக்கைகள் மற்றும் அமைதி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இது ஆப்கான் தலைமையிலான, ஆப்கானுக்கு சொந்தமான, ஆப்கானிஸ்தான் கட்டுப்படுத்தும் வகையிலானது. இதன்மூலம், அரசியல்சாசன அமைப்பு, மனிதஉரிமைகள், குறிப்பாக கடந்த 18 ஆண்டுகளாக பெறப்பட்ட பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய, ஆதாயங்களைப் பாதுகாக்கும் வகையிலான அரசியல் தீர்வுகாண வழிவகை செய்யும். ஆப்கானிஸ்தானில் நீடித்த அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக தீவிரவாதிகளின் புகலிடங்களை அழித்தல்; தீவிரவாத வன்முறையை முடிவுக்கு கொண்டுவருதல்; அதிபர் தேர்தலை உரிய காலத்தில் நடத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள அவர்கள் வலியுறுத்தினர்.
  33. பிராந்திய மற்றும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஈரானின் அணுஆயுத திட்டத்தில் விரிவான கூட்டு செயல் திட்டம் மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 2231-ஐ முழுமையாக செயல்படுத்த இந்தியாவும், பிரான்ஸும் ஒப்புக் கொண்டன. தற்போதைய பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்வுகாண வேண்டும். தற்போது நிலவும் பதற்றத்தைக் குறைப்பதற்காக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
  34. தற்போது உள்ள இருதரப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்கு இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். பிராந்திய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் தங்களது செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட நல்லுறவை ஏற்படுத்தவும், நெருங்கிய மற்றும் அதிவலுவான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, தங்களது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் இருதரப்பும் தங்களது உறுதியை வெளிப்படுத்தினர்.

*****


(Release ID: 1583125) Visitor Counter : 267