பிரதமர் அலுவலகம்
73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
15 AUG 2019 1:37PM by PIB Chennai
என் நாட்டு மக்களே,
கம்பீரமான இந்த சுதந்திர நாளில், என் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய தினம் ரக்சா பந்தன் தினமாகவும் உள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இந்த மரபு, சகோதர சகோதரிகளுக்கு இடையிலான பாசத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது. இந்த ரக்சா பந்தன் நன்னாளில் என் நாட்டு மக்கள் அனைவருக்கும், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது சகோதர, சகோதரிகளின் நம்பிக்கைகள், உயர்விருப்ப நோக்கங்கள் மற்றும் கனவுகளை நிறைவேற்றுவதாகவும், அவர்களின் வாழ்வில் அன்பை அதிகரிப்பதாகவும் இந்தத் திருநாள் அமையட்டும்.
இன்று, நாடு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ளம் மற்றும் கனமழையால் சிரமங்களைச் சந்தித்து வருகிறார்கள். பலர் தங்களின் நேசத்துக்குரியவர்களை இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுடைய கஷ்டங்களைப் போக்கி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசுகளும், மத்திய அரசும், தேசிய பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணக் குழு போன்ற இதர அமைப்புகளும் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றன.
இன்று சுதந்திர தின நன்னாளை நாம் கொண்டாடும் வேளையில், நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை ஈந்தவர்களுக்கும், இளமைக் காலத்தை சிறைகளில் கழித்தவர்களுக்கும், தூக்குமேடை ஏறியவர்களுக்கும், சத்யாகிரகம் மூலம் அஹிம்சையின் உத்வேகத்தை உருவாக்கியவர்களுக்கும் நான் மரியாதை செலுத்திக் கொள்கிறேன். காந்தியடிகளின் தலைமையின் கீழ் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது. அதேபோல, சுதந்திரம் பெற்றதில் இருந்து நாட்டின் அமைதி, வளமை மற்றும் பாதுகாப்புக்காக எண்ணற்ற மக்கள் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்காகவும், மக்களின் உயர்விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகள் நிறைவேறவும், நாட்டின் அமைதி மற்றும் வளமைக்காகவும் பங்களிப்பு செய்த அனைவருக்கும் இன்று நான் வணக்கம் செலுத்திக் கொள்கிறேன்.
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, செங்கோட்டையில் இருந்து உங்கள் அனைவர் மத்தியிலும் மீண்டும் உரையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. புதிய அரசு அமைந்து இன்னும் 10 வாரங்கள் கூட ஆகவில்லை. ஆனால், குறுகிய இந்த பத்து வார காலத்தில், அனைத்து துறைகளிலும், அனைத்து வகையிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு, புதிய பரிமாணங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. தங்களுக்காகப் பணியாற்ற நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், உயர்விருப்ப நோக்கங்களுடன் மக்கள் எங்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளனர். ஒரு நொடியைக் கூட வீணாக்காமல், முழுமையான அர்ப்பணிப்புடன், உங்களுக்கு சேவையற்றுவதற்கு நாங்கள் அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறோம்.
10 வாரங்களுக்குள் பிரிவு 370 மற்றும் 35ஏ ரத்து செய்யப்படுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கை சர்தார் வல்லபாய் பட்டேலின் கனவை நிறைவேற்றுவதை நோக்கிய முக்கியமான முன்னெடுப்பாகும்.
வெறும் 10 வாரங்களுக்குள், நமது இஸ்லாமியப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க முத்தலாக் முறைக்கு எதிராக சட்டம் இயற்றுதல், பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கான சட்டங்களை மேலும் சக்திவாய்ந்ததாகவும், கடுமையானதாகவும் ஆக்குவதற்கு செய்யப்பட்ட பெரும் திருத்தங்கள், பிரதமரின் விவசாயிகள் நலநிதித் திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் சுமார் 90,000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது போன்ற மிக முக்கியமான அறிவிப்புகளை நாங்கள் செய்திருக்கிறோம். 60 வயதுக்குப் பின் உடல் தளர்ந்து மற்றொருவரின் ஆதரவைக் கோரும் சமயத்தில் கவுரவமான வாழ்க்கையை நடத்த வேளாண் சமூகத்தின், சிறு வியாபார நிறுவனங்களின் சகோதர, சகோதரிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் அவர்களால் கற்பனை செய்தும் பார்த்திருக்க முடியாததாகும். இந்த நோக்கத்திற்காக ஓய்வூதியத் திட்டத்தையும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
குடிநீர் தட்டுப்பாடு என்பது இந்நாளில் பரவலான செய்தியாக உள்ளது. நமது முகத்தில் அச்சத்தை ஏற்படுத்துகிற குடிநீர் தட்டுப்பாடு வரும் என்பது எதிர்பார்க்கப்பட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டுப் பிரச்சனையை எதிர்கொள்ள மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதற்கு, புதிய, அர்ப்பணிப்பு மிக்க ஜல் சக்தி அமைச்சகத்தின் உருவாக்கத்தை நாங்கள் அறிவித்தோம்.
வலுவான, சுகாதார வசதிகளோடு நமது நாட்டிற்கு ஏராளமான மருத்துவர்களும் தேவைப்படுகிறார்கள். இந்தத் தேவையை நிறைவேற்ற நமக்கு புதிய சட்டங்கள், மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு வசதிகள், புதிய சிந்தனை, மருத்துவ தொழிலை மேற்கொள்வதற்கு இளைஞர்களை ஊக்கப்படுத்தும் புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை அவசியமாகின்றன. இந்தப் பார்வையோடு சட்டங்களை நாங்கள் வகுத்திருக்கிறோம். மருத்துவக் கல்வியில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் முக்கியமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்.
தற்காலத்தில் உலகம் முழுவதும் சிறார் உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்தியா தங்களின் குழந்தைகளை இதற்கு இலக்காக்கி விடாது. இதன் காரணமாக சிறார் உரிமைகளைப் பாதுகாக்கக் கடுமையான சட்டம் தேவைப்பட்டது. அது நிறைவேற்றப்பட்டுள்ளது.
சகோதர, சகோதரிகளே
2014-லிருந்து 2019 வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு உங்களுக்குப் பணியாற்ற எனக்கு வாய்ப்பை வழங்கினீர்கள். அடிப்படை வசதிகள் கிடைக்க சாமானிய மக்கள் எதிர்கொண்ட போராட்டங்களை நாங்கள் கவனத்தில் கொண்டோம். கடந்த 5 ஆண்டுகளில் சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைச் சந்திப்பதற்கு தேவைப்படும் வசதிகளை செய்து கொடுக்க எமது அரசு பாடுபட்டது. கிராமங்களில் வாழ்வோர், ஏழைகள், விளிம்பு நிலை மக்கள், பழிவாங்கப்பட்டோர், சுரண்டப்பட்டோர், வாய்ப்பு மறுக்கப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு வசதிகள் செய்து தர சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வளர்ச்சிப் பாதையை நோக்கி தேசத்தைக் கொண்டு வர நாங்கள் அயராது பாடுபட்டு வருகிறோம். ஆனால் காலம் மாறுகிறது. 2014-2019 என்பது உங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் காலமாக இருந்தது. 2019-ம் இதற்குப் பிந்தைய ஆண்டுகளும் உங்களின் முன்னேற்ற விருப்பங்களையும், கனவுகளையும் நிறைவேற்றுவதாக இருக்கும்.
21 ஆவது நூற்றாண்டில் இந்தியா எப்படியிருக்க வேண்டும்? எந்த வேகத்தில் செல்ல வேண்டும்? எந்த அளவு பரவலாக பணியாற்ற வேண்டும், எந்த உயரங்களை எட்ட உழைக்க வேண்டும் – இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வரைபடத்தைத் தயாரித்து, நாங்கள் ஒவ்வொரு நடவடிக்கையாக எடுத்து வருகிறோம்.
2014-ல், இந்த நாட்டுக்கு நான் புதியவனாக இருந்தேன். 2013-14 தேர்தலுக்கு முன்பாக, நான் நாடெங்கிலும் பயணம் செய்தேன். நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தேன். ஒவ்வொருவரின் முகத்திலும் ஏமாற்றமே காணப்பட்டது. ஒவ்வொருவரிடமும் ஐயங்கள் நிறைந்திருந்தன. இந்த நாட்டை மாற்றத்தான் முடியுமா என்று மக்கள் வியந்தனர். ஆட்சி மாறும்போது நாடும் மாறிவிடுமா? எளிய மக்களின் மனங்களில் நம்பிக்கையற்ற நிலை ஊறியிருந்தது. நீண்டகாலமாக அவர்கள் எதிர்கொண்ட அனுபவத்தின் விளைவுதான் இது. அவர்களின் நம்பிக்கைகள் நீடித்திருக்கவில்லை, விரைவிலேயே அவர்கள் விரக்தியில் ஆழப்புதைந்தனர்.
ஆனால் 2019-ல், எளிய மக்களுக்கான அர்ப்பணிப்புடன் மட்டுமே, எனது உள்ளத்தில் எனது நாட்டையும், கோடிக்கணக்கான எனது நாட்டு மக்களையும் மட்டுமே சுமந்து கொண்டு ஐந்தாண்டு கால கடின உழைப்புக்குப் பிறகு – இந்த உணர்வுடன் ஒவ்வொரு தருணத்தையும் இதற்காக அர்ப்பணித்துக் கொண்டு நாங்கள் முன்னேறிச் சென்றோம். 2019 ஆம் ஆண்டை அடைந்த போது நாங்கள் வியப்பில் ஆழ்ந்தோம். நாட்டு மக்களின் மனநிலை மாறியிருந்தது, விரக்தி நம்பிக்கையாக மாறியிருந்தது, கனவுகள் தீர்மானங்களுடன் இணைந்திருந்தன, சாதனைகள் தென்பட்டன, எளிய மக்கள் ஒற்றைக் குரலில் சொன்னார்கள் – ஆம், எனது நாடு மாற முடியும்.
எளிய மக்கள் ஒரே குரலில் பிரதிபலித்தார்கள் – ஆம், நம்மாலும் நாட்டை மாற்ற முடியும், நம்மால் பின்தங்கியிருக்க முடியாது.
130 கோடி குடிமக்களின் கூற்றும், அவர்களின் உணர்வுகளும் எமக்கு புதிய வலிமையையும், புதிய நம்பிக்கையையும் தருகின்றன.
அனைவரும் ஒன்றிணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற முழக்கத்துடன் நாங்கள் துவங்கினோம். ஆனால் ஐந்தாண்டுகளில், நமது நாட்டுமக்கள், அனைவரையும் அரவணைப்போம் என்ற வண்ணத்தைப் பூசி, நாட்டின் மனநிலையை ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டார்கள். கடந்த ஐந்தாண்டுகளாக, ஒவ்வொருவரிடமும் உருவாக்கிய நம்பகத்தன்மையும், நம்பிக்கையும் சேர்த்து, நாட்டு மக்களுக்காக அதிக வலிமையுடன் பணியாற்ற எங்களை ஊக்குவித்துக் கொண்டே இருக்கும்.
அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில், அப்போதே நான் சொல்லியதுதான், எந்த அரசியல்வாதியும் போட்டியிடவில்லை, எந்த அரசியல் கட்சியும் போட்டியிடவில்லை, மோடியோ, அவர் நண்பர்களோ போட்டியிடவில்லை. இந்திய மக்கள்தான், 130 கோடி நாட்டு மக்கள்தான் இந்தத் தேர்தலில் போட்டியிட்டார்கள். அவர்கள் தமது கனவுகளுக்காகப் போட்டியிட்டார்கள். இந்தத் தேர்தலில் ஜனநாயகத்தின் உண்மையான தன்மையை பார்க்க முடிந்தது.
எனதருமை நாட்டு மக்களே, கனவுகள், கடப்பாடுகள் மற்றும் சாதனை நிறைந்த காலத்துடன், பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது நாம் தற்போது இணைந்து நடப்பதுதான். பிரச்சினைகள் தீர்க்கப்படும்போது தற்சார்பு உணர்வு மேம்படும் என்பது கண்கூடு. தற்சார்பு இருக்கும்போது, சுயமாண்பு தானாக வளரும். சுயமாண்பு என்பது மிக வலிமையானது. சுயமரியாதையின் ஆற்றல் வேறு எதையும்விட மிகச்சிறப்பானது. தீர்வு, தீர்மானம், செயல்திறன், சுயமரியாதை ஆகிய அனைத்தும் இருக்கும்போது வெற்றிக்கு இடையூறாக எதுவும் வர முடியாது. தற்போது நமது நாடு சுயமரியாதை உணர்வுடன் விளங்குகிறது.
மேலும் இன்றைக்கு, அந்த சுயமரியாதையுடன் வெற்றியின் புதிய உச்சங்களைத் தொடுவதற்கு முன்னேறிச் செல்வதில் நாம் உறுதியாக இருக்கிறோம். பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நாம் முயற்சிக்கும்போது, தனிமைப்படுத்துவது பற்றி சிந்திக்கக் கூடாது. அதில் சிரமங்கள் இருக்கும். கைத்தட்டல்களைப் பெறுவதற்காக அரைமனதுடன் செய்யும் காரியங்கள் நாட்டு மக்களின் கனவுகளை நிறைவேற்ற உதவியாக இருக்காது. அவர்களுடைய அடிப்படையில் இருந்தே பிரச்சினைகளைக் களைவதற்கு நாம் கடுமையாக முயற்சிக்க வேண்டும்.
தங்கள் தலைக்கு மேல் முத்தலாக் என்னும் கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நமது முஸ்லிம் சகோதரிகளும், பெண்களும் எந்தளவுக்கு அச்சத்தில் வாழ்ந்தார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். முத்தலாக் காரணமாக அவர்கள் பாதிக்கப்படாமல் இருந்தாலும்கூட, எந்த நேரத்திலும் தங்களுக்கு அதன் பாதிப்பு ஏற்படலாம் என்று தொடர்ச்சியான அச்சத்தில் இருந்தனர். இந்த கெட்ட நடைமுறையை பல இஸ்லாமிய நாடுகள் நீண்டகாலத்துக்கு முன்பே ரத்து செய்துவிட்டன. ஆனால் நமது முஸ்லிம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு அவர்களுக்கு உரிய உரிமைகளைத் தருவதில், சில காரணங்களுக்காக நாம் தயக்கம் காட்டி வந்தோம். உடன்கட்டை ஏறுதலை நம்மால் தடை செய்ய முடியும் என்றால், பெண் சிசுக் கொலைக்கு முடிவு கட்ட நம்மால் சட்டங்கள் உருவாக்க முடியும் என்றால், குழந்தைத் திருமணத்துக்கு எதிராக நம்மால் குரல் எழுப்ப முடியும் என்றால், இந்த நாட்டில் வரதட்சிணை நடைமுறைக்கு எதிராக நம்மால் கடும் நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்றால், முத்தலாக் நடைமுறைக்கு எதிராக நம்மால் ஏன் குரல் எழுப்ப முடியாது? நமது முஸ்லிம் சகோதரிகளுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக பாபாசாகேப் அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் அரசியல்சாசனத்தின் உணர்வுகளுடன் இந்த முக்கியமான முடிவை நாம் எடுத்துள்ளோம்; முஸ்லிம் பெண்களிடம் புதிய நம்பிக்கைகளை உருவாக்குவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் அவர்களும் தீவிரப் பங்கேற்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். இதுபோன்ற முடிவுகள் அரசியல் ஆதாயங்களுக்காக எடுக்கப்படுவது இல்லை. நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு நீடித்த பாதுகாப்பை இவை உறுதி செய்கின்றன.
அதேபோல, நான் இன்னொரு உதாரணம் சொல்கிறேன். 370 மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகள் ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன? இதுதான் இந்த அரசின் முத்திரை பதிக்கும் முயற்சி. நாங்கள் பிரச்சினைகளைக் கண்டு அஞ்சுவதில்லை, அதை வளரவும் விடுவதில்லை. பிரச்சினைகளை தள்ளிப் போடுவதற்கோ அல்லது புறக்கணிப்பதற்கோ நேரம் கிடையாது. கடந்த 70 ஆண்டுகளில் செய்யப்படாத பணிகள், புதிய அரசு பதவியேற்ற 70 நாட்களுக்குள் செய்யப் பட்டிருக்கின்றன. 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளை ரத்து செய்யும் முயற்சிகள் மாநிலங்களவையிலும், மக்களவையிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் நிறைவேற்றப் பட்டுள்ளன. அதாவது அனைவருமே இந்த முடிவை விரும்பியிருக்கிறார்கள், ஆனால் யாராவது இதை ஆரம்பித்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று காத்திருந்தார்கள் என்பது இதன் அர்த்தம். என் நாட்டு மக்கள் எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றுவதற்காக நான் வந்திருக்கிறேன். சுயநலம் இல்லாமல் நான் பணியாற்றுகிறேன்.
ஜம்மு மற்றும் காஷ்மீரை மறு உருவாக்கம் செய்வதற்கு நாம் முயற்சிகள் எடுக்கிறோம். 70 ஆண்டுகளாக ஒவ்வோர் அரசும், வேறு பலரும் ஏதாவது செய்வதற்கு முயற்சி செய்திருக்கிறார்கள்.
ஆனால், விருப்பப்பட்ட விளைவுகள் ஏற்படவில்லை. விருப்பப்பட்ட விளைவுகள் ஏற்படாதபோது புதிய சிந்தனையும், புதிய முயற்சிகளும் தேவைப்படுகின்றன. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் விருப்பங்கள் நிறைவேறியுள்ளனவா என்பதைக் கண்டறிவது, நமது பொறுப்பாகும். அவர்களின் கனவுகளுக்குப் புதிய சிறகுகளை வழங்குவது நமது கூட்டுப் பொறுப்பாகும். அந்தப் பொறுப்புக்கு நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் தோள் கொடுக்க வேண்டும். இந்த உறுதியை எதிர்கொள்ள அந்தப் பாதையில் தடைகள் எதுவாக இருந்தாலும் நீக்குவதற்கு நாங்கள் முயற்சி மேற்கொண்டோம்.
கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த நடைமுறை பிரிவினைவாதத்தை அதிகப்படுத்தியது. இதுதான் பயங்கரவாதத்தை பெற்றெடுத்தது. இது பரம்பரை ஆட்சியை ஊக்கப்படுத்தியது. ஊழல் மற்றும் பாகுபாட்டிற்கான அடித்தளங்களை இது வலுப்படுத்தியது. இதனால் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பெண்கள் தங்களின் உரிமைகளைப் பெற நாங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருந்தது. அங்கு வாழும் தலித் சகோதர, சகோதரிகள் இதுவரை மறுக்கப்பட்டு வந்த உரிமைகளைப் பெற நாங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்தியாவில் உள்ள பழங்குடி மக்கள் அனுபவித்த உரிமைகள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் உள்ள பழங்குடியின சகோதர, சகோதரிகளுக்கும் கிடைக்க வேண்டும். அங்குள்ள குஜ்ஜார், பக்கர்வால், கட்டி, சிப்பி, பால்டி போன்ற பல சமூகத்தவருக்கு அரசியல் உரிமைகளோடு அதிகாரமும் அளிக்கப்பட வேண்டும். துப்புரவுப் பணியாற்றும் சகோதர, சகோதரிகளுக்கும் ஜம்மு-காஷ்மீரில் சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் இருந்தது வியப்புக்குரியது. அவர்களின் கனவுகள் சிதைக்கப்பட்டன. அந்தத் தளைகளிலிருந்து அவர்களை நாங்கள் விடுவித்திருக்கிறோம்.
இந்தியா பிரிவினை செய்யப்பட்டபோது தங்களின் குற்றம் ஏதும் இல்லாதபோதும் கோடிக்கணக்கான மக்கள் பூர்வீகக் குடியிருப்புகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. ஜம்மு-காஷ்மீரில் குடியேறியவர்கள் மனித உரிமைகளையும் பெறவில்லை, குடியுரிமைகளையும் பெறவில்லை. ஜம்மு-காஷ்மீரின் குன்றுப் பகுதிகளிலும் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் நல்வாழ்வுக்கும், நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் விரும்புகிறோம்.
எனதருமை நாட்டு மக்களே,
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கின் அமைதியும், வளமும் இந்தியாவின் விருப்பமாக இருக்கிறது. அவர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை செய்ய முடியும். அவர்களின் புகழ் மிக்க கடந்த காலத்தை அவர்களுக்குத் திருப்பித் தரும் முயற்சிகள் தேவைப்படுகின்றன. அண்மையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பின் புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது அம்மாநில மக்களுக்கு நேரடியான பயன்களை உருவாக்கும். தற்போது இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருப்பவர்களை போல் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த எவரும் தில்லியில் உள்ள அரசை அணுக முடியும். இடைநிலையில் தடைகள் ஏதும் இருக்காது. நாங்கள் அப்படியொரு நடைமுறையைக் கொண்டு வந்திருக்கிறோம். அண்மையில் பிரிவு 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த முயற்சியை ஒட்டு மொத்த தேசமும் வரவேற்றது. விதிவிலக்குகள் இல்லாமல் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேற்றன. சிலர் வெளிப்படையான ஆதரவை அளித்தபோது, வேறு சிலர் மறைமுகமாக ஆதரவு அளித்தனர். இருப்பினும் அதிகாரத்தில் உள்ள சிலர் வாக்கு வங்கி அரசியலிலிருந்து ஆதாயமடையும் முயற்சியாக பிரிவு 370-க்கு ஆதரவாக பேசினார்கள். பிரிவு 370-ம், 35ஏ-ம் அவ்வளவு முக்கியமானது என்றால் பிரிவு 370-ஐ ஆதரித்துப் பேசியவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்று தேசம் கோருகிறது.
அரசியல் சட்டப்பிரிவு 370 மிகவும் முக்கியமானது என்றால், ஆளும் கட்சிகளுக்கு பெரும்பான்மை பலம் இருந்த போது, கடந்த 70 ஆண்டுகளில் அதை ஏன் நிரந்தரமானதாக ஆக்கவில்லை? அது ஏன் தற்காலிகமானதாகவே வைக்கப் பட்டிருந்தது? அவ்வளவு உறுதிப்பாடு இருந்திருந்தால், முன்முயற்சி எடுத்து அதை நிரந்தரமானதாக ஆக்கியிருக்க வேண்டும். இதில் எடுக்கப்பட்ட முடிவு, சரியானதல்ல என்று உங்களுக்குத் தெரிந்திருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. ஆனால் அதைத் திருத்துவதற்கு உங்களுக்கு தைரியமும், உறுதியும் இல்லை. அரசியல் எதிர்காலம் பற்றிய கவலை எழுந்திருக்கிறது. என்னைப் பொருத்தவரை, நாட்டின் எதிர்காலம் தான் எல்லாமே, அரசியல் எதிர்காலம் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரசியல் ஐக்கிய நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நமது அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களும், சர்தார் வல்லபாய் படேல் போன்ற பெரும் தலைவர்களும், அந்த சிரமமான காலகட்டத்தில், தைரியமாக முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளனர். தேச ஒருங்கிணைப்பு என்பது வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. ஆனால், 370 மற்றும் 35ஏ பிரிவுகள் காரணமாக சில சிரமங்கள் ஏற்பட்டன.
இன்றைக்கு, நான் செங்கோட்டையில் இருந்து தேசத்துக்கு உரையாற்றுகிறேன், இந்தியர்கள் அனைவரும் ஒரே நாடு, ஒரே அரசியல்சாசனம் பற்றி பேச முடியும் என்று பெருமையுடன் என்னால் கூற முடியும். ஒன்றுபட்ட பாரதம் ஒப்பில்லா பாரதம் என்ற சர்தார் சாஹிப்பின் கனவை நனவாக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். எனவே, நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்துவதாகவும், பிணைப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கும் நடைமுறைகளை நாம் உருவாக்க வேண்டும். இந்த நடைமுறை தொடர்ச்சியாக நடைபெறும் செயல்பாடாக இருக்க வேண்டும். இது தற்காலிக ஏற்பாடாக இல்லாமல், தொடர் நடவடிக்கையாக அமைய வேண்டும்.
ஜி.எஸ்.டி. மூலமாக ஒரே தேசம், ஒரே மாதிரியான வரி என்ற கனவை நனவாக்கினோம். அதேபோல, மின்சாரத் துறையில் ஒரே நாடு, ஒரே மின்தொகுப்பு என்ற கனவை சமீபத்தில் நனவாக்கினோம்.
அதேபோல ஒரே நாடு, ஒரே மாதிரியான சரக்குப் போக்குவரத்து என்பதற்கான நடைமுறையை உருவாக்கியுள்ளோம். நாடுமுழுக்க ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்துவது பற்றி இப்போது நாடு முழுக்க விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவாதங்களை ஜனநாயக முறையில் நடத்திட வேண்டும். ஒன்றுபட்ட பாரதம் ஒப்பில்லா பாரதம் என்ற நமது கனவுகளை நனவாக்க இதுபோன்ற புதிய சிந்தனைகளை நாம் அமல் செய்ய வேண்டும்.
எனதருமை நாட்டு மக்களே, இந்த நாடு புதிய உச்சங்களை எட்ட வேண்டும். உலக அரங்கில் இந்த நாடு தடம் பதிக்க வேண்டும். இதற்காக, நாட்டில் ஏழ்மையை ஒழிப்பது குறித்த செயல்பாடுகளை மாற்றிட வேண்டும். அது பரிதாபத்தால் உபகாரம் செய்வது போல இருக்கக் கூடாது. நாட்டிற்குப் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டியது நம்முடைய கடமை என்பதாக அது இருக்க வேண்டும். ஏனெனில், எப்படியாவது ஏழ்மையின் பிடியில் இருந்து நம்மை நாம் விடுவித்துக் கொண்டாக வேண்டும். ஏழ்மையைக் குறைப்பதற்கு, கடந்த 5 ஆண்டுகளில் வெற்றிகரமான பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. முந்தைய காலத்தைவிட அதிக வேகத்தில் நாம் இதில் வெற்றி கண்டிருக்கிறோம். ஏழை ஒருவருக்கு சிறிதளவு ஆதரவு தருவதன் மூலம், ஏழையின் சுயமரியாதை அதிகரிக்கிறது, அரசின் உதவி இல்லாமலே ஏழ்மையில் இருந்து விடுபடுவதற்கு முயற்சிக்கும் உத்வேகத்தை அவருக்கு தருவதாக இருக்கும்.
வறுமையைத் தனது சொந்த பலத்தோடு அவரால் முறியடிக்க முடியும். பாதகத்திற்கு எதிராகப் போராடும் பலத்தை நம்மிடையே யாராவது பெற்றிருந்தால் அவர்கள்தான் எனது ஏழை சகோதரர்களும், சகோதரிகளும். மிகக் கடுமையான பனியாக இருந்தபோதும் ஏழைகள் தங்களின் கைகளால் போர்த்தி வாழ்க்கையை நடத்த முடிகிறது. இந்த பலத்தை அவர்கள் தாங்களாகவே பெற்றிருக்கிறார்கள். வாருங்கள், இந்த பலத்திற்கு நாம் தலைவணங்குவோம். அவர்களின் அன்றாட வாழ்க்கைச் சிரமங்களை நீக்க உதவி செய்வோம்.
ஏழைகள் ஏன் கழிப்பறைகள் இல்லாமல், வீட்டில் மின்சாரம் இல்லாமல், வாழ்வதற்கு வீடு இல்லாமல், குடிநீர் விநியோகம் இல்லாமல், வங்கிக் கணக்கு இல்லாமல் இருக்க வேண்டும்? எதையாவது அடகு வைத்துக் கடன் பெற கந்து வட்டிக்காரர்களிடம் செல்ல அவர்கள் ஏன் நிர்ப்பந்திக்கப்பட வேண்டும்? வாருங்கள், ஏழைகளின் சுயமரியாதையை, தன்னம்பிக்கையை, சுயமதிப்பை மேம்படுத்த நாம் முயற்சிகளை மேற்கொள்வோம்.
சகோதர, சகோதரிகளே,
சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அனைத்து அரசுகளும் தங்களின் சொந்த வழிமுறைகளில் பல பணிகளை செய்திருக்கின்றன. கட்சி எதுவாக இருந்தாலும் மத்திய அல்லது மாநிலங்களாக இருந்தாலும் ஒவ்வொரு அரசும் தங்களின் சொந்த வழியில் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. இருப்பினும் இன்று இந்தியாவில் உள்ள வீடுகளில் பெரும் பகுதி குடிநீர் வசதி இல்லாமல் இருக்கின்றன என்பது உண்மை. குடிநீர் கொண்டு வர மக்கள் சிரமப்படுகிறார்கள். தாய்மார்களும், சகோதரிகளும் தங்களின் தலைகளில் தண்ணீரை சுமந்து கொண்டு வர 2,3,5 கிலோ மீட்டர் தூரம் நடக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையில் பெரும் பகுதி நேரம் தண்ணீர் கொண்டு வருவதிலேயே கழிந்து போகிறது. எனவே இந்த அரசு இதற்கான சிறப்புத் திட்டத்தை செயல்படுத்துவதென முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வது எவ்வாறு என்பதுதான் அந்தத் திட்டம். ஒவ்வொரு வீடும் தண்ணீரை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை எவ்வாறு பெறுவது? இதற்குத் தீர்வாக நாங்கள் வரும் ஆண்டுகளில் ‘ஜல் – ஜீவன்’ இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்று இன்று செங்கோட்டையிலிருந்து அறிவிக்கிறேன். இந்த ஜல்-ஜீவன் இயக்கத்தில் மத்திய-மாநில அரசுகள் கூட்டாக பணியாற்றும். வரும் ஆண்டுகளில் இந்த இயக்கத்திற்காக ரூ.3.5 லட்சம் கோடிக்கும் கூடுதலாக செலவிட நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். தண்ணீர் சேமிப்பு, பாசனம், மழைநீர் சேகரிப்பு, கடல்நீர் அல்லது கழிவுநீர் சுத்திகரிப்பு, விவசாயிகளுக்கான ‘ஒவ்வொரு சொட்டுக்கும் கூடுதல் சாகுபடி’, எனும் நுண்ணீர் பாசனம் ஆகியவை குறித்து செயல்பட வேண்டும். தண்ணீரைப் பற்றி சாமானிய மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தண்ணீரின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் அவர்களின் உணர்வை மேம்படுத்தவும் தண்ணீர் பாதுகாப்பு பிரச்சாரம் துவக்கப்பட வேண்டும். குழந்தைப் பருவத்திலேயே பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக தண்ணீர் சேமிப்பு குறித்து குழந்தைகளுக்கும் கற்பிக்கப்பட வேண்டும். கடந்த 70 ஆண்டுகளில் தண்ணீர் பாதுகாப்புக்காகவும், நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காகவும் செய்யப்பட்ட பணிகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் 4 மடங்குக்கும் அதிகமான பணிகளைச் செய்வோம் என்ற நம்பிக்கையோடு நாம் முன்னோக்கிச் செல்வோம். இதற்கு மேலும் நாம் காத்திருக்க முடியாது. எவர் ஒருவரும் குடிநீர் பிரச்சனை குறித்தும், தண்ணீரின் முக்கியத்துவம் குறித்தும் எண்ணிப் பார்க்காத காலத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மாமுனிவர் திருவள்ளுவர் அவர்கள் முக்கியமான விஷயத்தைக் கூறியிருக்கிறார்.
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அவர்கள், நீரின்றி அமையாது உலகெனின்… என்று கூறியுள்ளார். இதன் பொருள், நீர் இல்லாத நிலை ஏற்படத் தொடங்கினால், இயற்கையின் செயல்பாடுகள் பாதிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக, நீர் முற்றிலும் காணாமல் போய்விடும். இது ஒட்டுமொத்த அழிவுக்கான நடவடிக்கையைத் தொடங்கிவிடும் என்பதாகும்.
நான் குஜராத் மாநிலத்தில் பிறந்தேன். குஜராத்தின் வடக்குப் பகுதியில், ஜெயின் மதத்தினருக்கான புனித நகரம் உள்ளது. அது மகுதி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜெயின் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் விவசாய நிலத்தில் பணியாற்றி வந்தார். ஆனால், ஜெயின் மதத்தின் மீதான பற்றுதல் காரணமாக, அதனைத் தழுவினார். பின்னர் புத்தி சாகர் ஜி மகாராஜ் என்று அழைக்கப்பட்டார். 100 ஆண்டுகளுக்கு முன்பே, அவர் சில திருமறை நூல்களை எழுதிவிட்டு சென்றார். அதில், நீரை பல்பொருள் அங்காடியில் விற்கும் காலம் வரும் என்று தெரிவித்துள்ளார். 100 ஆண்டுகளுக்கு முன்பே அவர் எழுதிவிட்டுச் சென்ற வார்த்தைகள், தற்போது உண்மையாகிவிட்டதை உங்களால் யூகிக்க முடிகிறதா? நூறு ஆண்டுகளுக்கு முன்பே யூகித்தவை, தற்போது உண்மையாக உள்ளது. இன்று நாம் அனைவரும் பல்பொருள் அங்காடியில் நீரை வாங்கிக் கொண்டிருக்கிறோம்.
எனது அருமை நாட்டு மக்களே,
நாம், நமது முயற்சிகளில் சோர்வடையவோ, முன்னோக்கிச் செல்வதை நிறுத்திக் கொள்ளவோ, தயங்கவோ இல்லை.
நீர் சேமிப்பு குறித்த இந்தப் பிரச்சாரம், அரசின் முயற்சியாக மட்டுமே இருந்துவிடக் கூடாது. இது தூய்மை இந்தியா திட்டம் போன்று மக்கள் இயக்கமாக மாற வேண்டும். சாதாரண மக்களின் கொள்கைகள், விருப்பங்கள், முயற்சிகள் ஆகியவற்றின் உதவியுடன் இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
எனது அருமை நாட்டு மக்களே,
ஒவ்வொரு செயலிலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற நிலையை நமது நாடு அடைந்துள்ளது.
நமக்கு முன் உள்ள சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. சில நேரங்களில் அரசியல் ஆதாயத்தின் அடிப்படையில், முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அவை, நமது நாட்டின் எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சியை விட்டுக் கொடுத்து மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து செங்கோட்டை முகப்பிலிருந்து இன்று நான் எடுத்துரைக்க விரும்புகிறேன்.
அபரிமிதமாக வளர்ந்துவரும் மக்கள் தொகையால், நமக்கும், நமது எதிர்கால சந்ததியினருக்கும் புதிய சவால்கள் ஏற்படுகின்றன.
நமது சமூகத்தில், கட்டுப்படுத்த முடியாத மக்கள்தொகை வளர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஒரு தரப்பினர் மிகவும் சிறப்பாக அறிந்து வைத்துள்ளனர். அவர்கள் பாராட்டுக்கும், மரியாதை செலுத்தவும் தகுதி பெற்றவர்கள். நாட்டின் மீதான அவர்களது அன்பின் வெளிப்பாடாகவும் உள்ளது. குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்கு முன்பாக, குழந்தையின் தேவைகளை நிறைவேற்ற முடியுமா? அவர்களது கனவுகளை நனவாக்க முடியுமா? என்பது குறித்து அவர்கள் தெளிவாக சிந்தித்து, பொறுப்புள்ள பெற்றோராக செயல்படுகின்றனர்.
இந்த அளவீடுகளை கணக்கில் கொண்டு, இந்த சிறிய அளவிலான பொறுப்புள்ள குடிமக்கள், தாங்களாகவே ஊக்குவிக்கப்பட்டு, தங்களது குடும்பத்தை சிறிய அளவாக வைத்துக் கொள்கின்றனர். அவர்கள், தங்களது குடும்பத்தினரின் நலனுக்கான பங்களிப்பை செய்வதோடு மட்டுமன்றி, நாட்டின் நலனுக்காகவும் பங்காற்றுகின்றனர்.
அவர்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்துகின்றனர். அவர்களது வாழ்க்கையை சமூகத்தில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் உற்றுநோக்கிப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும், குடும்பத்தின் அளவைக் குறைப்பதன் மூலம், தங்களது குடும்பத்துக்கு எவ்வாறு சேவையாற்றுகின்றனர் என்பதையும் பார்க்க வேண்டும். இது, ஒன்று அல்லது இரண்டு சந்ததி மூலம், குடும்பம் எவ்வாறு முன்னேற்றம் பெற்றுள்ளது? குழந்தைகள் எவ்வாறு கல்வியைப் பெறுகின்றன? நோய்கள் தாக்காமல் குடும்பங்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன? தங்களது அடிப்படைத் தேவைகளை குடும்பங்கள் எவ்வாறு சிறப்பாக நிறைவேற்றுகின்றன? என்பதைச் சார்ந்தது.
அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நமது குடும்பத்தில் குழந்தையை பெற்றெடுத்துக் கொள்வதற்கு முன்னதாக, குழந்தையின் தேவையை நிறைவேற்ற எனக்குள்ளாகவே நான் தயாராகிவிட்டேனா? அல்லது சமூகத்தை சார்ந்திருக்கட்டும் என்று விட்டுவிடுவேனா? குழந்தையை வளர்க்காமல் விட்டுவிடுவேனா? இதுபோன்ற வாழ்க்கை முறைக்கு தள்ளுவதற்காக, எந்தப் பெற்றோரும் குழந்தையைப் பெற்றுக் கொள்ளக் கூடாது. எனவே, சமூக விழிப்புணர்வு அவசியமானது.
இந்த மிகப்பெரும் பங்களிப்பை செய்பவர்களை கவுரவிக்க வேண்டும். அவர்களை முன்மாதிரியாக மாற்ற வேண்டும். சமூகத்தில் இந்த விவகாரங்கள் குறித்து இன்னும் சிந்திக்காத பிரிவினருக்கு நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். மக்கள் தொகை அதிகரிப்பு குறித்து நாம் கவலைகொள்ள வேண்டும்.
அரசுகள் கூட, பல்வேறு திட்டங்கள் மூலம் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். மாநில அரசாக இருந்தாலும் சரி, மத்திய அரசாக இருந்தாலும் சரி, ஒவ்வொருவரும் தோளோடு தோள் கொடுத்து பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஆரோக்கியமில்லாத சமூகத்தையும், கல்வியறிவு பெறாத சமூகத்தையும் நம்மால் சிந்திக்க முடியாது. 21-ம் நூற்றாண்டு இந்தியாவில், கனவுகளை நனவாக்கும் திறன் என்பது, தனிநபர்களிடமிருந்து, குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும். மக்கள் கல்வியறிவு பெறாமலும், ஆரோக்கியமாக இல்லாமலும் இருந்தால், குடும்பமோ, தேசமோ மகிழ்ச்சியாக இருக்க முடியாது. மக்கள் கல்வியறிவு பெற்றிருப்பதோடு, மேம்பாடு அடைந்து, திறன் பெற்றிருப்பதன் மூலம், தங்களது தேவைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான சரியான செயல்களை செய்ய முடியும். அதன்பிறகு, இவை அனைத்தையும் நாடு நிறைவுசெய்யும் என்று நினைக்கிறேன்.
எனது அருமை நாட்டு மக்களே,
ஊழல் மற்றும் தகுதியில்லாதவர்களுக்கு பணிகளை வழங்குதல் போன்றவை, நாட்டை நாம் யூகித்ததைவிட அதிக அளவில் சேதப்படுத்திவிட்டது என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். இவை நமது வாழ்க்கையில் கரையான்கள் போன்று புகுந்துவிட்டன. அவற்றை அகற்றுவதற்கு நாங்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இதில் வெற்றியைக் கூட பெற்றுள்ளோம். ஆனால், நோய், மிக ஆழமாக துளைத்துவிட்டது. மிகவும் விரிவாக பரவிவிட்டது. எனவே, அரசு மட்டத்தில் மட்டுமன்றி, அனைத்து மட்டங்களிலும் அதிக அளவில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதனையும் நாம் தொடர்ந்து செய்துகொண்டிருக்க வேண்டும்.
அனைத்துப் பணிகளையும் ஒரே நேரத்தில் முடித்துவிட முடியாது. மோசமான செயல்பாடுகள், நாள்பட்ட நோய்களைப் போன்றது. சில நேரங்களில் இதனை குணமாக்கிவிட முடியும். ஆனால், சில நேரங்களில் பழைய நிலைக்கே திரும்பிவிடும். இந்த நோய்க்கும் கூட, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலமே இதனை அகற்ற முடியும். அனைத்து மட்டங்களிலும் நேர்மையையும், வெளிப்படைத் தன்மையையும் வலுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
அரசு பொறுப்பேற்ற உடனேயும், கடந்த 5 ஆண்டுகளிலும், அரசில் பல்வேறு மூத்த அதிகாரிகளும் நீக்கப்பட்டதை நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். அவர்கள் அனைவரும் தடையை ஏற்படுத்தியவர்கள். அவர்களது சேவை நாட்டுக்குத் தேவையில்லை என்று கூறினார்கள். எனவே, அவர்கள் நீக்கப்பட்டார்கள்.
அரசு முறையில் மாற்றங்கள் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதேநேரத்தில், சமூக கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட வேண்டும். சமூக கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுவதுடன், இந்த அரசு அமைப்பை நடத்தும் மக்களின் மனநிலையும், நம்பிக்கையும் மாற வேண்டியது மிகவும் அவசியமானது. இதன்மூலமே, எதிர்பார்த்த பலன்களைப் பெற முடியும்.
சகோதர, சகோதரிகளே,
நாடு சுதந்திரம் பெற்று, பல்வேறு ஆண்டுகளுக்குப் பிறகு, நாடு முதிர்ச்சியடைந்துள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாட உள்ளோம். நமது பாரம்பரிய மதிப்புகள், செயல்பாடுகள், உணர்வுகள் அடிப்படையில், இந்த சுதந்திரம் நமக்கு மிகவும் மதிப்பு மிகுந்தது. அதிகாரிகளுடன் எப்போதெல்லாம் நான் ஆலோசனை நடத்துகிறேனோ, அப்போதெல்லாம் நான் குறிப்பிடுவது, இதனை வெளிப்படையாக நான் பேசுவதில்லை. ஆனால், இன்று நான் அதை வெளிப்படுத்த விரும்புகிறேன். நாடு சுதந்திரம் பெற்று பல்வேறு ஆண்டுகளைக் கடந்தபிறகும், அரசில் உள்ள அளவுக்கு அதிகமான ஒழுங்குமுறைகளைக் குறைக்கவும், சாதாரண மக்களின் தினசரி வாழ்க்கையில் அரசின் தலையீட்டைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று அதிகாரிகளிடம் தொடர்ந்து கடிந்துகொள்வேன்.
என்னைப் பொறுத்தவரை, சுதந்திர இந்தியா என்பது, மக்களின் வாழ்க்கையில் அரசின் தலையீட்டை படிப்படியாக குறைக்கும் வகையிலான அமைப்பை உருவாக்குவது ஆகும். இது மக்களுக்கு தங்களது விதியை நிர்ணயிக்கும் வாய்ப்பை வழங்கும். தேசிய நலன், தங்களது குடும்பத்தின் மேம்பாடு மற்றும் தங்களது கனவுகளை நிறைவேற்றுவது ஆகியவற்றுக்காக தாங்கள் விரும்பும் வழியை தேர்ந்தெடுக்க முடியும்.
அரசு நெருக்கடி கொடுப்பது போன்ற உணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தக் கூடாது. ஆனால், நெருக்கடி காலத்தில், தாங்கள் விரும்பியதை செயல்படுத்தும் வகையில் அரசு செயல்படக் கூடாது. அரசு என்பது நெருக்கடி கொடுப்பதாகவோ, விரும்புவதை செயல்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது. எனினும், தங்களது கனவுகளின் அடிப்படையில் செயல்பட நம் அனைவரையும் அனுமதிக்க வேண்டும். அரசு என்பது எப்போதும் நம்முடன் உற்ற தோழனைப் போல இருக்க வேண்டும். தேவை ஏற்படும்போது, மக்களும் கூட, அரசு எப்போதுமே தங்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதுபோன்ற அமைப்பை நம்மால் உருவாக்க முடியுமா?
அளவுக்கு அதிகமாக இருந்த தேவையில்லாத பல்வேறு சட்டங்களையும், விதிகளையும் நாங்கள் நீக்கியுள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் நாள்தோறும் ஒரு சட்டத்தை நீக்கியுள்ளேன். இதுகுறித்து சாதாரண மக்களுக்குத் தெரியாது, - ஒவ்வொரு நாளும் தேவையில்லாத ஒரு சட்டத்தை நீக்கியுள்ளோம் என்றால், சுமார் 1,450 சட்டங்களை நீக்கியுள்ளோம். சாதாரண மக்களின் வாழ்க்கையில் சுமையாக இருந்துவிடக் கூடாது என்ற நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. புதிய அரசு பதவியேற்று, 10 வாரங்களே முடிந்துள்ளது. இதில் ஏற்கனவே 60 சட்டங்களை நீக்கியுள்ளோம். மக்கள் வாழ்வதை எளிதாக்கும் நோக்கில் இந்த சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. சுதந்திர இந்தியாவுக்கு, எளிதான வாழ்க்கை முறை என்பது முக்கியமானது. எளிதாக வாழ்வதற்கான நடவடிக்கையில் கவனம் செலுத்துவதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இதனை தொடர்ந்து செயல்படுத்தவும் விரும்புகிறோம்.
இன்று, தொழில் செய்வதை எளிதாக்கும் நடவடிக்கையில் சிறந்த முன்னேற்றத்தைப் பெற்றுள்ளோம். சர்வதேச தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் வர இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்கு பல்வேறு சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன; சிறு நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலையை அமைக்க விரும்பினால், பல்வேறு சிறிய மற்றும் பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது, பல்வேறு விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதும், பல்வேறு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியுமுள்ளது. இருந்தாலும், போதிய அனுமதியைப் பெறுவதில்லை. இந்த வலைப்பின்னலை நீக்குவதற்காக, ஒவ்வொரு சீர்திருத்தங்களாக மேற்கொண்டு வருகிறோம். மத்திய, மாநில அரசுகளை ஒருங்கிணைத்துள்ளோம். நகரம் மற்றும் நகராட்சிகளை ஒன்றாக்கியுள்ளோம். இதன்மூலம், தொழில் செய்வதை எளிதாக்குவதில் வெற்றி பெற்றுள்ளோம்.
வளரும் நாடான இந்தியா போன்ற மிகப்பெரும் நாட்டில், மிகப்பெரிய அளவில் கனவு கண்டு, அதனை நிறைவேற்ற முடியும் என்ற எண்ணம் உலகம் முழுமைக்கும் வளர்ந்து வருகிறது. “தொழில் செய்வதை எளிதாக்குவது” என்பது வெறும் ஒரு மைல்கல்லாகத் தோன்றுகிறது; “வாழ்வதை எளிதாக்குவதே” எனது முக்கியமான நோக்கமாக உள்ளது – அரசு/அதிகாரிகளின் அனுமதிக்காக சாதாரண மக்கள் நேரில் செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கக் கூடாது, அவர்களது உரிமைகளை எளிதில் பெற வேண்டும். அதற்காக இந்தக் கோணத்தில் நாங்கள் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
எனது அருமை நாட்டு மக்களே,
நமது தேசம் முன்னோக்கி வீறுநடை போட வேண்டும். இருந்தாலும், சிறிது சிறிதாக வளர்ச்சி பெறுவதற்காக நாடு நீண்டகாலத்துக்கு காத்திருக்கக் கூடாது, நாம் மிகப்பெரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நமது சிந்தனையை மாற்றிக் கொள்ள வேண்டும். சர்வதேச தரத்துக்கு இந்தியாவை கொண்டுவர நவீன கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம்.
சோர்வடையும் சூழல் இருந்தபோதிலும், நல்ல கட்டமைப்பு இருக்க வேண்டும் என்றே சாதாரண மக்கள் எப்போதும் கனவு காண்கின்றனர். நல்ல செயல்களை அவர்கள் விரும்புகின்றனர்; இதற்கான சூழலை அவர்கள் உருவாக்குகின்றனர். எனவே, இந்தக் காலகட்டத்தில் நவீன கட்டமைப்புக்காக ரூ.100 லட்சம் கோடியை முதலீடு செய்ய நாங்கள் முடிவுசெய்துள்ளோம். இது வேலைவாய்ப்புகளை உருவாக்கும்; புதிய கட்டமைப்பை ஏற்படுத்தும் மற்றும் பல்வேறு எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். இது சாகர்மாலா திட்டம் அல்லது பாரத் மாலா திட்டமாக இருந்தாலும் சரி, நவீன ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் அல்லது விமான நிலையங்கள், நவீன மருத்துவமனைகள் அல்லது உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக இருந்தாலும் சரி, ஒட்டுமொத்த கட்டமைப்பை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். தற்போது நாட்டுக்கு கடல் துறைமுகங்களும் தேவை. சாதாரண மக்கள் மாறிவிட்டார்கள். நாம் அதை புரிந்துகொள்ள வேண்டும்.
முன்னதாக, ஒரு குறிப்பிட்ட பகுதியில் ரயில் நிலையம் அமைக்கப்படும் என்று காகித அளவில் முடிவுசெய்யப்பட்டால், நமக்கு அருகே புதிய ரயில் நிலையம் அமைய உள்ளது என்ற நேர்மறையான எண்ணம் மக்கள் மத்தியில் பல ஆண்டுகளுக்கு இருக்கும். காலம் தற்போது மாறிவிட்டது. வெறும் ரயில் நிலையத்தை அமைப்பதைக் கண்டு சாதாரண மக்கள் திருப்தி அடைந்துகொள்வதில்லை. அவர்கள், “வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் எப்போது எங்களது பகுதிக்கு வரும்?” என்று உடனடியாக கேள்வி எழுப்புகிறார்கள். அவர்களின் சிந்தனை மாறிவிட்டது. நாம் மிகவும் சிறந்த பேருந்து நிலையம் அல்லது 5 நட்சத்திர ரயில் நிலையத்தை கட்டமைத்தால், அதனைப் பார்த்து, “சிறப்பாக செய்துள்ளீர்கள்,” என்று மக்கள் கூறுவதில்லை. “விமான நிலையம் எப்போது தயாராகும்?” என்று கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு அவர்களின் சிந்தனை மாறிவிட்டது என்றே அர்த்தம். வெறும் ரயில் நிறுத்தத்தைப் பெற்றதால் மகிழ்ச்சி அடைந்துவந்த மக்கள், தற்போது, “அது சரி, இங்கு விமான நிலையம் எப்போது திறக்கப்படும்?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
முன்னதாக மக்கள், “எங்களது பகுதியில் உறுதியான சாலைகள் எப்போது அமைக்கப்படும்?” என்று கேள்வி எழுப்பினர். ஆனால், தற்போதோ, “புதிதாக கட்டமைக்கப்படுவது 4 வழிச் சாலையா அல்லது 6 வழிச் சாலையா?” என்று கேட்கின்றனர். சாலைகளைக் கொண்டு மட்டும் அவர்கள் திருப்தியடைவதில்லை. மாற்றமிகு இந்தியாவுக்கான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாக இதனை நான் கருதுகிறேன்.
முன்னதாக, மின் கம்பங்களை நிலப்பகுதியில் போட்டிருந்ததைப் பார்த்து கூட, மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மின் கம்பங்களை நடாமலேயே மின்சாரம் கிடைத்துவிட்டதைப் போன்று உணர்ந்தனர். தற்போது, மின்சார வயர்களையும், மின்சார மீட்டர்களையும் பொருத்திய பிறகும் கூட, “24 மணிநேர மின்சார விநியோகத்தை நாங்கள் எப்போது பெறுவோம்?” என்று கேட்கின்றனர். வெறும் கம்பங்கள் அல்லது வயர்களைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சியடைவதில்லை.
முன்னதாக, மொபைல் போன்கள் பயன்பாட்டுக்கு வந்தபோது, மொபைல் போன்கள் கிடைத்துவிட்டதாகக் கருதினர். ஆனால், தற்போது டேட்டா வேகம் குறித்து விவாதிக்கின்றனர். இந்த உளவியல் மாற்றம் மற்றும் கால மாற்றத்தை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். நவீன கட்டமைப்பு, தூய்மையான எரிசக்தி, எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரம், எரிவாயு தொகுப்பு, மின்னணு நகர்வு போன்ற பல்வேறு துறைகளில் சர்வதேச தரத்துக்கு ஏற்ப நாம் முன்னேற வேண்டும்.
எனது அருமை நாட்டு மக்களே,
பொதுவாக, நமது நாட்டில் அரசுகளை குறிப்பிட்ட பகுதி அல்லது குறிப்பிட்ட சமூகம் அல்லது குழுவுக்கு என்ன செய்தார்கள் என்ற அடிப்படையில் அடையாளப்படுத்துகின்றனர். பொதுவாக, அரசு எந்த அளவுக்கு கொடுத்தது அல்லது யாருக்கு கொடுத்தது என்ற அளவுகோலில் அரசும், மக்களும் செயல்படுகின்றனர். இதுவே போதுமானதாக இருந்தது. இது அந்த காலத்தின் தேவை அல்லது கட்டாயமாக இருந்திருக்கலாம்.
கடந்த காலத்தில் என்னவாக இருந்தாலும், எவ்வளவாக இருந்தாலும், எங்கெல்லாம் இருந்திருந்தாலும் அல்லது யாருக்கெல்லாம் கிடைத்திருந்தாலும், தற்போது, தேசம் என்ற அடிப்படையில் நாம் என்ன சாதிக்க விரும்புகிறோம் என்ற கனவை நாம் ஒருங்கிணைந்து சிந்திக்க வேண்டும். இந்தக் கனவுகளை நிறைவேற்றுவதற்காக நாம் ஒருங்கிணைந்து போராடி முன்னேற வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. இதனை மனதில் கொண்டு, 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற கனவு இலக்கை நாம் நிர்ணயித்துள்ளோம். 130 கோடி மக்களில் ஒவ்வொருவரும் சிறு பங்களிப்பையாவது செய்து ஒருங்கிணைந்து முன்னேற வேண்டும். 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்கு, சில மக்களுக்கு நிறைவேற்ற முடியாததைப் போன்று தோன்றலாம். இது தவறாக இல்லாமலும் கூட இருக்கலாம். ஆனால், நாம் கடினமான இலக்கை நிர்ணயிக்காவிட்டால், நாடு எவ்வாறு முன்னேற்றம் பெறும்? கடினமான சவால்களை நாம் எடுத்துக் கொள்ளாவிட்டால், முன்னோக்கி செல்லும் மனநிலையை நாம் எவ்வாறு உருவாக்க முடியும்? உளவியல் ரீதியாகவும் மிகப்பெரும் அளவில் இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். இதையே நாங்கள் செய்துள்ளோம். இது வெறும் வாய் வார்த்தை அல்ல. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, 2 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற அளவை எட்டினோம். வளர்ச்சிப் பாதையில் 70 ஆண்டுகளுக்குப் பிறகே, நம்மால் வெறும் 2 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற அளவை எட்ட முடிந்தது. ஆனால், 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையான 5 ஆண்டுகளுக்குள் 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நாம் எட்டியுள்ளோம். அதாவது, ஒரு டிரில்லியன் டாலர்களை சேர்த்துள்ளோம். வெறும் 5 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய முன்னேற்றத்தை நம்மால் பெற முடிகிறது என்றால், அடுத்த 5 ஆண்டுகளில் நம்மால் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற முடியும். இது ஒவ்வொரு இந்தியனின் கனவாக இருக்க வேண்டும்.
பொருளாதாரம் வளர்ச்சி பெற்றால், மக்களுக்கு சிறந்த தரமான வாழ்க்கையை கொண்டுவரும். அடித்தட்டில் உள்ள மக்களுக்கு கூட கனவுகளை நிறைவேற்றுவதற்கு வாய்ப்புகளை உருவாக்க முடியும். இந்த வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக, நாட்டின் பொருளாதாரத் துறை குறித்து, இந்த மனநிலையை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை நிறைவுசெய்யும்போது, நமது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும், ஏழைகளில் ஏழை உள்ளிட்ட அனைத்து குடும்பத்தினருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும், ஒவ்வொரு குடும்பமும் தங்களது வீடுகளுக்கு மின்சாரத்தைப் பெற வேண்டும், இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க், அகண்ட அலைவரிசை இணைப்பு, தொலைதூரக் கல்வி ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டும் என்று நாம் கனவு காண்கிறோம். இவை அனைத்தும் நீண்ட காலத்துக்கு வெறும் கனவுகளாகவே இருந்துவிடக் கூடாது.
நமது கடல்சார் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நமது மீனவ சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும். நமக்கு உணவு அளிக்கும் நமது விவசாயிகள், சக்தி வழங்குபவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் ஏன் ஏற்றுமதியாளர்களாக இருக்கக் கூடாது, நமது விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள், சர்வதேச சந்தையில் ஆதிக்கம் செலுத்தக் கூடாதா? இந்தக் கனவுகளை நிறைவேற்ற கவனம் செலுத்த வேண்டும். ஏற்றுமதியை நமது நாடு ஊக்குவிக்க வேண்டும். சர்வதேச சந்தையை அடைவதற்கு அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம்.
நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும், ஒரு நாட்டுக்கு இணையான வளத்தைப் பெற்றுள்ளது. நமது ஒவ்வொரு மாவட்டமும், உலகில் உள்ள ஒரு சிறு நாட்டுக்கு இணையான திறனைப் பெற்றுள்ளது. இந்த சக்தியை நாம் புரிந்துகொண்டு, அதனை ஒழுங்குபடுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டமும் ஏற்றுமதி மையமாக ஏன் மாறக் கூடாது? ஒவ்வொரு மாவட்டமும் தங்களுக்கென்று கைவினைத் திறன் மற்றும் தனிப்பட்ட சிறப்பு பண்புகளைப் பெற்றுள்ளன. சில மாவட்டங்கள் அழகுசாதனப் பொருட்களுக்கு பெயர் பெற்றிருக்கும். சில மாவட்டங்கள் சேலைகளுக்கும், சில மாவட்டங்கள் பாத்திரங்களுக்கும், சில மாவட்டங்கள் இனிப்புப் பொருட்களுக்கும் பெயர்பெற்றிருக்கும். நமது மாவட்டங்கள் ஒவ்வொன்றும், வேறுபட்ட அடையாளத்தைக் கொண்டுள்ளன. சர்வதேச சந்தைக்கு செல்லும் திறனைப் பெற்றுள்ளன. சர்வதேச சந்தைகளுக்காக குறைபாடுகள் இல்லாத மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில் பொருட்களை எவ்வாறு உருவாக்க முடியும் என்று நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இந்த வேற்றுமையை உலகத்துக்கு அறியச் செய்து, உலகச்சந்தையை பிடிப்பதற்கு நாம் முயற்சி மேற்கொண்டால், நமது நாட்டில் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். இது நமது சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு மிகப்பெரும் பலத்தை அளிக்கும். இந்தப் பலத்தை நாம் அதிகரிக்க வேண்டும்.
உலகுக்கே சுற்றுலாத்தலமாக நமது நாட்டை மாற்ற முடியும். ஆனால், சில காரணங்களுக்காக நமது திறமைக்கேற்ப வேகமாக நாம் செய்ய முடிவதில்லை. நாட்டு மக்களே, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, நாட்டின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க முடிவெடுப்போம். சுற்றுலாத் துறை வளர்ச்சியடைந்தால், மூலதன முதலீடுகள் மூலம் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும். நாட்டின் பொருளாதாரமும் ஊக்கம் பெறும். இந்தியாவை புதிய வழியில் பார்க்க உலகம் முழுவதையும் சேர்ந்த மக்கள் இன்று தயாராக உள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்து நமது நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளை எவ்வாறு ஈர்க்க முடியும், சுற்றுலாத் துறையை எவ்வாறு மேம்படுத்த முடியும் மற்றும் சுற்றுலாத் தலங்களில் எந்த மாதிரியான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று நாம் சிந்திக்க வேண்டும். சாதாரண குடிமக்களின் வருமானத்தை அதிகரிப்பது, சிறந்த கல்வி அளிப்பது, புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவது ஆகியவை குறித்தும் நாம் பேச வேண்டும். நடுத்தர வகுப்பு மக்களை ஊக்குவிக்கும் தளங்கள் இருக்க வேண்டும். இதன்மூலமே, அவர்கள் தங்களது கனவுகளை உணர்வார்கள். நமது விஞ்ஞானிகளுக்கு சிறந்த வசதிகள் மற்றும் வளங்கள் இருக்க வேண்டும். நமது பாதுகாப்புப் படைகளுக்கு சிறந்த ஆயுதங்கள் மற்றும் கருவிகள் கிடைக்கச் செய்ய வேண்டும். அதுவும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்காக, இந்தியாவுக்கு புதிய பலத்தை அளிப்பதற்காக பல்வேறு துறைகள் இருப்பதாக நான் கருதுகிறேன்.
எனது அருமை சகோதர, சகோதரிகளே,
பொருளாதாரத்தில் சாதிப்பதற்கு மிகவும் உகந்த சூழலை நாடு தற்போது பெற்றுள்ளது. நிலையான அரசு, யூகிக்க முடிந்த அளவுக்கான கொள்கைகள் மற்றும் நிலையான அமைப்பு முறை ஆகியவை இருக்கும்போது, உங்கள் மீது உலகம் நம்பிக்கை வைக்கத் தொடங்கிவிடும். நாட்டு மக்கள் இதனை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியாவின் அரசியல் நிலைத்தன்மையை மிகப்பெரும் பெருமையுடனும், மரியாதையுடனும் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த வாய்ப்பை நாம் தவற விட்டுவிடக் கூடாது. இன்று நம்முடன் வர்த்தகம் செய்ய உலகமே ஆவலுடன் உள்ளது. நம்முடன் இணைந்திருக்க விரும்புகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தியதுடன், வளர்ச்சிவிகிதத்தை அதிகரிப்பதற்கான புதிய மதிப்பீடுகளுடன் நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பது மிகவும் பெருமையளிக்கும் விஷயமாக உள்ளது. சில நேரங்களில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கலாம். ஆனால், பணவீக்கம் கட்டுக்குள் இல்லாமல் இருக்கும். சில நேரங்களில் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும். ஆனால், வளர்ச்சி விகிதம் பாதிக்கப்படும். ஆனால், நமது அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், வளர்ச்சி விகிதத்தையும் அதிகரித்துள்ளது.
நமது பொருளாதாரத்தின் அடிப்படை மிகவும் வலுவாக உள்ளது. இந்தப் பலம், முன்னோக்கிச் செல்வதற்கான நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது. இதே வழியில், ஜிஎஸ்டி போன்ற முறைகளை உருவாக்கியது, திவாலாதல் மற்றும் கடன்மீட்பு விதிகள் போன்ற சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது ஆகியவற்றின் மூலம், தன்னம்பிக்கைக்கான சூழலை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். நமது நாட்டில் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும், இயற்கை வளங்களைப் பதப்படுத்துவதை அதிகரிக்க வேண்டும், மதிப்புக் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், உலகுக்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் ஏதாவது ஓர் இந்தியப் பொருளை இறக்குமதி செய்ய வைக்கும் கனவை நாம் ஏன் காணக் கூடாது? இங்கு இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டமும் சில பொருட்களை ஏற்றுமதி செய்ய வைக்க வேண்டும் என்ற கனவை காணக் கூடாதா? இந்த இரண்டு விஷயங்களையும் கவனத்தில் கொண்டால், வருமானத்தையும் நம்மால் அதிகரிக்க முடியும். உலகச்சந்தையைப் பிடிக்க வேண்டும் என்று நமது நிறுவனங்களும், தொழில்முனைவோரும் கனவு காண்கின்றனர். உலகச் சந்தையை பிடிப்பதன்மூலம், இந்தியாவின் நிலையை நமது முதலீட்டாளர்களால் அதிகரிக்கச் செய்ய முடியும்; நமது முதலீட்டாளர்களால் அதிக வருமானம் ஈட்ட முடியும்; நமது முதலீட்டாளர்களால் மேலும் முதலீடு செய்ய முடியும்; நமது முதலீட்டாளர்களால் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு முன்வர நமது முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கு நாம் முழுமையான அளவில் தயாராக உள்ளோம்.
நமது நாட்டில், சில தவறான நம்பிக்கைகள் பழக்கத்தில் வந்துவிட்டன. அந்த மனநிலைில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். நாட்டுக்கு சொத்துகளை உருவாக்குபவர்கள், நாட்டின் சொத்து உருவாக்கலில் பங்களிப்பு செய்பவர்கள் இன்னும் நாட்டுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். சொத்துகளை உருவாக்குபவர்கள் மீது நாம் சந்தேகம் கொள்ளக் கூடாது.
நமது தேசத்துக்கு சொத்து உருவாக்குபவர்களை அங்கீகரித்து ஊக்கம் தர வேண்டியது தான் இப்போதைய தேவையாக இருக்கிறது. அவர்களுக்கு அதிக கவுரவம் அளிக்கப்பட வேண்டும். சொத்து உருவாக்கப்படாவிட்டால், சொத்தை பகிர்ந்து அளிக்க முடியாது. மேலும், சொத்து பகிரப்படாவிட்டால், நமது சமூகத்தில் ஏழைகளை நம்மால் கைதூக்கி விட முடியாது. நமது நாட்டில் சொத்து உருவாக்கலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் உள்ளது. அதை நாம் மேலும் ஊக்குவிக்க வேண்டும்.
சொத்து உருவாக்கலுக்கு முயற்சிகள் எடுப்பவர்கள், என்னைப் பொருத்த வரை, அவர்களே தேசத்துக்கு கிடைத்த சொத்து, அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.
எனதருமை நாட்டு மக்களே, இன்றைக்கு நாம் வளர்ச்சியுடன் அமைதி மற்றும் பாதுகாப்பை வலியுறுத்துகிறோம். உலக அளவில் பல நாடுகளில் பல வகையான பாதுகாப்பின்மைகள் உள்ளன. உலகில் சில அல்லது ஏதாவது ஒரு பகுதியில் மரணம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
உலக அமைதியை உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும். உலக சூழ்நிலையில் நாம் அமைதியான பார்வையாளர்களாக இருக்க முடியாது. பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நாம் கடுமையாகப் போராடி வருகிறோம். உலகின் எந்தப் பகுதியாக இருந்தாலும், பயங்கரவாதச் செயல்கள் மனிதகுலத்தின் மீதான தாக்குதலாகக் கருதப்பட வேண்டும். எனவே, பயங்கரவாத அமைப்புகளை ஊக்குவிப்பவர்கள் மற்றும் புகலிடம் தருபவர்களுக்கு எதிராக அனைத்து சக்திகளும் ஒன்று சேர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மனிதகுலத்துக்கு எதிரான இந்தச் செயல்பாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதிலும், பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவதற்கு உலக நாடுகளை ஒன்றிணைக்கும் உறுதியுடன் இருந்து காட்டுவதிலும் நாம் பங்களிப்பு செய்ய வேண்டும்.
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் தருபவர்களை, பயங்கரவாதத்தை ஊக்கமளிப்பவர்கள், வெளிநாடுகளில் பயங்கரவாதத்தை தூண்டுபவர்களை, வெளிச்சம் போட்டுக் காட்ட நமது அனைத்து சக்திகளையும் இந்தியா ஒன்றுபடுத்த வேண்டும்.
சில பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவை குறி வைத்திருப்பது மட்டுமின்றி, பக்கத்து நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் பயங்கரவாதச் செயல்களால் சீரழிந்துள்ளன. இலங்கையில், தேவாலயத்தில் அப்பாவி மக்கள் ஒட்டுமொத்தமாகக் கொல்லப்பட்டிருப்பது, சோகமான விஷயம். இது மனதை உருக்கும் சம்பவம். எனவே, நாம் அனைவரும் ஒன்றுபட்டு, இந்தத் துணைக் கண்டத்தில் பாதுகாப்பு, அமைதி, நல்லிணக்கத்தை உருவாக்க ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்.
அருகில் உள்ள நட்பு நாடான ஆப்கானிஸ்தானும் இன்னும் நான்கு நாட்களில் 100வது ஆண்டு சுதந்திர நாளைக் கொண்டாடப் போகிறது. அந்த நன்னாளுக்காக அவர்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
வன்முறையை ஊக்குவிப்போர், அச்சத்தைப் பரப்புவோர் தரைமட்டமாக்கப்பட வேண்டும் என்பது நமது தெளிவான கொள்கை. இதுபோன்ற கெட்ட எண்ணத்துடன் கூடிய செயல்களை ஒடுக்கும் வகையில் நமது கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகள் மூலம் இதை நாம் தெளிவுபடுத்தி இருக்கிறோம். இதில் நமக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. நமது ராணுவத்தினர், எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகள் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியுள்ளன. அவர்கள் சீருடை அணிந்து நிமிர்ந்து நின்று, எல்லா ஆபத்துகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றி வருகிறார்கள். நமக்கு ஒளிமயமான எதிர்காலம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர். அவர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன், அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். சீர்திருத்தங்களை நோக்கி நாம் அடியெடுத்து வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
ராணுவக் கட்டமைப்பு, ஆயுதப்படைகள் மற்றும் ராணுவ ஆதார வளங்களில் சீர்திருத்தங்கள் செய்வது பற்றி நீண்ட காலமாக கலந்துரையாடல்கள் நடந்து வருவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். முந்தைய அரசுகளும் இதை விவாதித்திருக்கின்றன. பல ஆணையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. அனைத்து அறிக்கைகளுமே ஒரே மாதிரியான விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன.
பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், இது திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளது. கடற்படை, ராணுவம் மற்றும் விமானப் படை இடையே ஒத்துழைப்பு இருக்கிறது. நமது ஆயுதப் படைகளின் அமைப்பு முறை பற்றி நாம் பெருமைப்படலாம். எந்த ஹிந்துஸ்தானியும் இந்திய ராணுவம் பற்றி பெருமை கொள்ள முடியும். அவர்களுக்கும், அவர்களுடைய வழியில் நவீனத்துவம் தேவைப்படுகிறது.
ஆனால் உலகம் இப்போது மாறி வருகிறது. போருக்கான கண்ணோட்டம் மாறி வருகிறது. போரின் இயல்பு மாறி வருகிறது. அது தொழில்நுட்பம் சார்ந்ததாக மாறி வருகிறது; இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் சிறிது, சிறிதான அணுகுமுறை இருக்கக் கூடாது. நமது ஒட்டுமொத்த ராணுவ பலமும் ஒன்றாக செயல்பட்டு, முன்னெடுத்துச் செல்ல வேண்டும். கடற்படை, ராணுவம், விமானப்படை என இவற்றில் ஒரு பிரிவு மட்டும் ஓரடி முன்னேறியதாக, மற்ற இரண்டும் பின்தங்கியதாக இருந்தால், சுமுகமான முன்னேற்றம் இருக்காது. இந்த மூன்று பிரிவுகளும் ஒரே சமயத்தில், ஒரே வேகத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அவற்றுக்குள் நல்ல ஒத்துழைப்பு இருக்க வேண்டும், அது நமது மக்களின் விருப்ப லட்சியங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். உலகில் மாறி வரும் போர் மற்றும் பாதுகாப்பு சூழலுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இன்று செங்கோட்டையில் இருந்து முக்கியமான ஒரு முடிவை அறிவிக்க நான் விரும்புகிறேன். இந்த விஷயத்தில் தொடர்புடைய நிபுணர்கள் நீண்ட காலமாகவே இதை வலியுறுத்தி வந்துள்ளனர்.
முப்படை தலைமைத் தளபதி - சி.டி.எஸ். என்ற பதவியை ஏற்படுத்த இன்று நாம் முடிவு செய்திருக்கிறோம். இந்தப் பதவி உருவாக்கப்பட்ட பிறகு, மூன்று படைகளுக்கும் உயர் நிலையில் செயல்திறன்மிக்க தலைமை உருவாக்கப்படும். உலகில் ஹிந்துஸ்தான் என்ற அணுகுமுறையில் நமது கனவை வேகமாக அமல்படுத்த இந்த சி.டி.எஸ். நடைமுறை மிகவும் முக்கியமானதாகவும், கட்டாயமானதாகவும் இருக்கிறது.
எனதருமை நாட்டு மக்களே, எதையாவது செய்ய முடியும் என்ற வாய்ப்புள்ள காலத்தில் பிறந்திருப்பது நமக்கு கிடைத்த அதிர்ஷ்டம். சுதந்திரத்துக்காக நாம் போராடியபோது பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு போன்றவர்கள், தியாகங்கள் செய்ய போட்டியிட்டது சில நேரம் என் நினைவுக்கு வரும். மகாத்மா காந்ஜியின் தலைமையின் கீழ், சுதந்திரப் போராட்ட வீரர்கள் வீடுவீடாகச் சென்று, சுதந்திரம் என்ற கனவை நனவாக்க நாட்டை தட்டி எழுப்பினார்கள். அந்த காலகட்டத்தில் நாம் பிறக்கவில்லை. நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்யும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், நாட்டுக்காக வாழ்வதற்கான வாய்ப்பு நிச்சயமாக இப்போது நமக்கு கிடைத்திருக்கிறது. இதுபோன்ற காலகட்டம் இருப்பது நமக்கான விருப்ப முன்னுரிமை, இந்த ஆண்டு நமக்கு மிகவும் முக்கியமானது. இது அண்ணல் மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு விழா திருநாள் ஆண்டு.
இதுபோன்ற ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பது அதிர்ஷ்டம். 75 ஆண்டு கால சுதந்திரம் மற்றும் நாட்டுக்காக தியாகங்கள் செய்தவர்களை நினைவுகூர்வது, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது. இந்த வாய்ப்பை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 130 கோடி மக்களான நாம், மகாத்மா காந்தி, சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க இன்னும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நாட்டின் 75 ஆண்டு கால சுதந்திரம், காந்தியின் 150வது பிறந்த நாள் ஆகியவற்றை திருவிழாவாக நாம் ஆக்கிட வேண்டும். இது நமது உத்வேகத்துக்கான பெரிய வாய்ப்பு.
2014 ஆம் ஆண்டு இந்த செங்கோட்டையில் நின்று தூய்மைத் திட்டம் பற்றி நான் பேசினேன். 2019ல் அடுத்த சில வாரங்களில், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை அறிவிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மாநிலங்கள், கிராமங்கள், நகராட்சிகள், ஊடகங்கள் என அனைவருமே, திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதிகளாக மாற்றும் முயற்சியை மக்கள் இயக்கமாக உருவாக்கியுள்ளனர். இதில் அரசை காண முடியவில்லை. மக்களே பெரிய இயக்கமாக இதில் பங்கேற்றுள்ளனர். பயன்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன.
எனதருமை நாட்டு மக்களே, உங்கள் முன் ஒரு சிறிய கேள்வியை வைக்க நான் விரும்புகிறேன். வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி, ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை நாம் உருவாக்குவோமா? நாம் முன்னெடுத்துச் செல்வோம், அணிகள் உருவாக்குவோம், வீடு, பள்ளி, கல்லூரிகளில் இருந்து முன்னெடுப்போம்.
மதிப்புக்குரிய மகாத்மாவை நினைவுகூர்ந்து, வீடுகளில் இருந்து வெளியே வந்து வீடுகள், தெருக்கள், கடைவீதிகள் மற்றும் கால்வாய்களில் கிடக்கும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிந்த பிளாஸ்டிக் பொருட்களை சேகரிப்போம். நகராட்சிகள், மாநகராட்சிகள், கிராம ஊராட்சிகள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க அக்டோபர் 2 ஆம் தேதி பெரிய முயற்சியை முதலில் எடுப்போமா?
வாருங்கள் என் நாட்டு மக்களே, நாம் இதை முன்னெடுத்துச் செல்வோம்.
இந்த பிளாஸ்டிக் பொருட்களை எந்த வகையில் மறுசுழற்சி செய்ய முடியும் என்பதைக் கண்டறிய வேண்டும் என ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தொழில் திறன்மிக்கவர்கள் மற்றும் தொழல்முனைவோரை நான் கேட்டுக் கொள்கிறேன். நெடுஞ்சாலைகள் அமைப்பதில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற பல வழிமுறைகள் இருக்கலாம். ஆனால் இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு, மக்கள் இயக்கத்தை நாம் தொடங்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் மாற்று வழிமுறைகள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். கடைக்காரர்கள் தங்கள் கடைகளில் வைத்திருக்கும் நிறைய விளம்பரப் பலகைகளுடன், பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தாதீர்கள் என்று வாடிக்கையாளர்களை கேட்டுக் கொள்ளும் ஒரு பலகையையும் தயவுசெய்து வையுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்; அதற்குப் பதிலாக, பொருட்களை எடுத்துச் செல்ல அவர்கள் துணிப் பைகளை கொண்டு வரலாம் அல்லது துணிப் பை வாங்கிக் கொள்ளலாம். நாம் ஒரு சூழ்நிலையை உருவாக்குவோம். தீபாவளியின் போது மற்றவர்களுக்கு பொதுவாக நாம் பரிசுகள் வழங்குவோம். இந்த ஆண்டும் மற்றும் ஒவ்வொரு சமயத்திலும் அந்தப் பரிசுகளை ஏன் துணிப் பைகளில் வைத்து தரக் கூடாது?மக்கள் துணிப் பைகளுடன் கடைகளுக்குச் சென்றால், உங்கள் நிறுவனத்துக்கும் விளம்பரம் செய்வதாக அது இருக்கும். நீங்கள் ஒரு டைரியோ, காலண்டரோ கொடுத்தால் எதுவும் நடக்காது. ஆனால், ஒரு பை கொடுத்தால், அது விளம்பர சாதனமாக இருக்கும். அது சணல் பையாக இருக்க வேண்டும். அது விவசாயிகளுக்கு உதவி செய்வதாக அமையும். துணிப் பைகள் விவசாயிகளுக்கு உதவும். இவை அனைத்தும் சிறிய விஷயங்கள். தையல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஏழை விதவைகளுக்கு இது உதவியாக இருக்கும்.நமது சிறிய நடவடிக்கைகள் சாமானிய மக்களின் வாழ்க்கையை மாற்றும். அதை நோக்கி நாம் பணியாற்ற வேண்டும்.
எனதருமை நாட்டு மக்களே, ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவாக இருந்தாலும், தற்சார்பு கொண்ட இந்தியாவாக இருந்தாலும், நாம் மகாத்மா காந்தியின் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறோம். மகாத்மா காந்தியின் சிந்தனைகள் இன்றைக்கும் பொருத்தமானவையாக உள்ளன. எனவே நாம் `இந்தியாவில் தயாரியுங்கள்' என்ற லட்சியத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு நாம் முன்னுரிமை தர வேண்டாமா? நம் நாட்டில் தயாரிக்கப்பட்டு, விற்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை தருவது என நாம் முடிவு செய்வோம். நாளைய தினம் அதிர்ஷ்டமானதாக அமைய, உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருட்களை அதிகம் பயன்படுத்துவோம்; ஒளிமயமான எதிர்காலத்துக்கு நாம் உள்ளூரை வளமாக்குவோம். கிராமங்களில் தயாரிக்கப்படுபவை எதுவாக இருந்தாலும் அதற்கு முன்னுரிமை தர வேண்டும். கிராமத்தில் அது கிடைக்கவில்லை என்றால் அதைத் தாண்டி - தாலுகா, மாவட்டம் மற்றும் அதன் பிறகு மாநில அளவில் நாட வேண்டும். ஒருவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு யாரும் மாநிலத்திற்கு வெளியே செல்ல வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நமது கிராமப்புற பொருளாதாரம் இதனால் ஊக்கம் பெறும்; சிறுதொழில்முனைவோர் ஊக்கம் பெறுவார்கள்; நமது பாரம்பரிய விஷயங்கள் உந்துதலைப் பெறும்.
சகோதர, சகோதரிகளே நாம் செல்போன்களை விரும்புகிறோம், வாட்ஸப் தகவல்கள் அனுப்புவதை விரும்புகிறோம், முகநூல் - ட்விட்டரில் இருக்க விரும்புகிறோம். இந்த அம்சங்கள் மூலமாக நாட்டின் பொருளாதாரத்துக்கு நாம் உதவிட முடியும். தொழில்நுட்பத்தின் பயன்களை அறிந்து கொண்டால் அது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும். நாம் ஏன் டிஜிட்டல் பணப்பட்டுவாடா முறையை நோக்கிச் செல்லக் கூடாது? நம்முடைய ரூபே கார்டுகள் சிங்கப்பூரில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பதில் இன்றைக்கு நாம் பெருமை கொள்ளலாம். வெகுசீக்கிரத்தில் இந்தக் கார்டுகள் மேலும் பல நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்படும். நமது டிஜிட்டல் தளம் சீரான வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. கிராமங்கள், சிறிய கடைகள், சிறிய ஷாப்பிங்மால்களில் டிஜிட்டல் பணப் பட்டுவாடாவை நாம் வலியுறுத்த வேண்டாமா? நேர்மைக்காக, வெளிப்படைத்தன்மைக்காக, நமது நாட்டின் பொருளாதாரத்தை வலுவாக்குவதற்காக நாம் டிஜிட்டல் பணப் பட்டுவாடா முறைக்கு மாறுவோம். கிராமங்களுக்கு நீங்கள் சென்றால், ``ரொக்கம் மட்டும், தயவுசெய்து கடன் வேண்டாம்'' என்ற பலகைகளை வியாபாரிகள் வைத்திருப்பதை பொதுவாகப் பார்த்திருப்பீர்கள். வேறொரு பலகையும் வைக்க வேண்டும் என்று வணிகர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்: ``டிஜிட்டல் பணப் பட்டுவாடாவுக்கு ‘யெஸ்’ சொல்லுங்கள், ரொக்கம் ‘வேண்டாம்’ என்று சொல்லுங்கள்'' என்ற பலகையையும் வையுங்கள். இதுபோன்ற சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும். இந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று வங்கித் துறையினரையும், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும் நான் வலியுறுத்துவேன்.
நமது நாட்டில் நடுத்தர வகுப்பினரும், அந்தப் பிரிவில் மேல்தட்டுப் பிரிவினரும் அதிகரித்து வருகிறார்கள். இது நல்ல விஷயம். மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். நமது பிள்ளைகளுக்கு வெளியுலகம் பற்றி தெரிந்து கொள்வதற்கு இது நல்ல வாய்ப்பு. ஆனால் தங்கள் பிள்ளைகள் தங்கள் நாட்டைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா என்பது பற்றியும் அந்தக் குடும்பங்கள் சிந்திக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். நாடு 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், இதற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த பல பெரிய தலைவர்கள், ஆண்கள் மற்றும் பெண்களின் தியாகத்தை அறிய வேண்டாமா? நாட்டின் மண், வரலாறு, காற்று மற்றும் தண்ணீரில் உணர்வுப்பூர்வமான பிணைப்பு தங்கள் பிள்ளைகளுக்கு வேண்டாம் என்று நினைக்கும் பெற்றோர் யாராவது இருக்க முடியுமா? இவற்றில் இருந்து தங்கள் பிள்ளைகளுக்கு புதிய சக்தி கிடைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்ப மாட்டார்களா? நல்ல ஊக்கத்துடன் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நாம் எவ்வளவு முன்னேறியவர்களாக இருந்தாலும், வேர்களில் இருந்து நாம் விடுபட்டுப் போனால், ஒருபோதும் நீடித்திருக்க முடியாது. இன்று செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து, உங்களிடம் ஒரு விஷயத்தை நான் கேட்டுக் கொள்கிறேன். இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க, உலகில் இந்தியாவின் தோற்றத்தை கட்டமைக்க, இந்தியாவின் திறன்கள் பற்றி உலகிற்குச் சொல்வதற்கானது. 2022 ஆம் ஆண்டுக்குள், இந்தியா 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், நாட்டில் குறைந்தபட்சம் 15 சுற்றுலா தலங்களுக்கு நமது குடும்பங்களை அழைத்துச் செல்ல வேண்டும். அந்த இடங்களில் நமக்கு சில சிரமங்கள் இருக்கலாம். ஆனால், அப்போதும் நீங்கள் செல்ல வேண்டும். அங்கு நல்ல ஹோட்டல்கள் இல்லாதிருக்கலாம். ஆனால், சிலநேரங்களில் அதுபோன்ற சிரமங்களும், புதிய வாய்ப்புகளை உருவாக்குபவையாக இருக்கும். அதுபோன்ற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும்போது, தங்கள் நாடு எப்படிப்பட்டது என்பதை பிள்ளைகள் அறிந்து கொள்வார்கள். வசதிகளை உருவாக்கும் திறன் உள்ள குழந்தைகள் அங்கு சென்று வேலைவாய்ப்புகளை உருவாக்குவார்கள். நாம் ஏன் 100 சுற்றுலா முக்கியத்துவமான இடங்களை உருவாக்கக் கூடாது, ஒவ்வொரு மாநிலத்திலும் 2, 5 அல்லது 7 முதல்நிலை சுற்றுலாத் தலங்களை ஏன் உருவாக்கக் கூடாது? இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் பெருமளவு இயற்கை வளங்கள் இருக்கின்றன. ஆனால் தங்களுடைய சுற்றுலா தலமாக ஆக்குவதற்கு அந்தப் பகுதியை எத்தனை பல்கலைக்கழகங்கள் முயற்சி மேற்கொண்டிருக்கின்றன? நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை. நிறைய நேரமும் கூட செலவிட வேண்டாம்; 7 முதல் 10 நாட்களில் நாட்டிற்குள் நீங்கள் பயணம் சென்றுவிட முடியும்.
நீங்கள் செல்லும் இடங்களில் புதிய உலகைக் காண்பீர்கள். வடகிழக்குப் பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு இந்தியர்களான நாம் ஒருமுறை சென்றால் பேரின்பத்தை அனுபவிக்கலாம். வெளிநாட்டினரும் அதைப் பின்பற்றுவார்கள். ஆனால், நீங்கள் வெளிநாடு செல்லும்போது, அங்குள்ளவர்கள் தமிழ்நாட்டில் அந்தக் கோவிலுக்கு சென்றிருக்கிறீர்களா என்று அவர்கள் கேட்டால் நாம் ``இல்லை'' என்று சொல்வது பற்றி யோசித்துப் பாருங்கள்; அது எப்படியான உணர்வை ஏற்படுத்தும்? அவர்களுக்கு அது ஆச்சர்யத்தைத் தரும். வெளிநாட்டினராக இருந்தும் தாங்கள் அந்தக் கோவிலுக்குச் சென்றிருப்பதாகவும், இந்தியரான நீங்கள் இன்னும் சென்றதில்லையா என்று ஆச்சர்யப்படுவார்கள். எனவே, நாம் வெளிநாடு செல்வதற்கு முன்பு, நம் நாட்டைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இப்போது, என் விவசாய சகோதரர்களிடம் சிலவற்றைக் கேட்க நான் விரும்புகிறேன். விவசாயிகளுக்காக, என் நாட்டு மக்களுக்காக, இந்த நாடு அவர்களுடைய தாய்த் திருநாடு. ``பாரத மாதாவுக்கு ஜே'' என்று நாம் கூறும்போது நமது இயங்களில் புத்துணர்ச்சி நிறைகிறது.
``வந்தே மாதரம்'' என்ற வார்த்தை, நாட்டுக்காகத் தியாகம் செய்யும் விருப்பத்துடன் மனதை உற்சாகப்படுத்துகிறது. நமக்கு நீண்ட வரலாறு உண்டு. நமது தாய்நாட்டின் ஆரோக்கியம் பற்றி நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை நாம் பயன்படுத்துவது, நமது மண்ணின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. ஒரு விவசாயி என்ற முறையில், இந்த மண்ணின் மைந்தன் என்ற முறையில், அதன் ஆரோக்கியத்தைக் கெடுக்க எனக்கு உரிமை கிடையாது. என் தாய்த் திருநாட்டை வருத்தமானதாக ஆக்கிட அல்லது ஆரோக்கியம் குன்றியதாக ஆக்கிட எனக்கு எந்த உரிமையும் கிடையாது.
சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டை விரைவில் நாம் நிறைவு செய்யப் போகிறோம்.
போற்றுதலுக்குரிய மகாத்மா நமக்கு வழியைக் காட்டியிருக்கிறார். நமது விவசாய நிலங்களில் ரசாயன உரங்கள் பயன்படுத்துவதை 10 அல்லது 20 அல்லது 25 சதவீதம் குறைத்துக் கொள்வோமா? முடியுமானால் – முக்திகார் அபியான் (பிரச்சாரத்தை) திட்டத்தை நாம் தொடங்க வேண்டாமா? இது தேசத்துக்கு செய்யும் மகத்தான சேவையாக இருக்கும். அன்னை பூமியைப் பாதுகாப்பதில் இது மகத்தான நடவடிக்கையாக இருக்கும். பூமியைப் பாதுகாக்கும் உங்களுடைய முயற்சியால், நமது தாய்த் திருநாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தரும் கனவை நனவாக்குவதற்காக வந்தே மாதரம் என்று முழங்கி தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்களின் ஆசிகளையும் பெற்றுத் தரும். எனவே, என் நாட்டு மக்களால் நிச்சயமாக இதை சாதிக்க முடியும் என்று எனக்கு முழு நம்பிக்கை இருப்பதால், உங்களிடம் நான் வேண்டிக் கொள்கிறேன். என் விவசாயிகள் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருவார்கள், ஏனெனில் நான் அவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
எனதருமை சகோதர, சகோதரிகளே, நமது நாட்டின் தொழில் திறனாளர்கள் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்களுடைய திறமைகளுக்கு நன்றாக மதிப்பளிக்கப்படுகிறது. அவர்களை மக்கள் மதிக்கிறார்கள். விண்வெளியாக இருந்தாலும், தொழில்நுட்பமாக இருந்தாலும் நாம் புதிய உச்சங்களை எட்டியிருக்கிறோம். நிலவில் இதுவரை யாரும் செல்லாத பகுதியை நோக்கி நம்முடைய சந்திரயான் விண்கலம் பயணம் மேற்கொண்டிருக்கிறது என்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் விஷயமாக உள்ளது. அந்த அளவுக்கு நிபுணத்துவம் பெற்றவர்கள் நமது விஞ்ஞானிகள்.
அதேபோல, விளையாட்டுத் துறையில் நமது பங்களிப்பு குறைவாக இருந்தது. இன்று என் நாட்டில் 18 முதல் 22 வயது வரை உள்ள, இளம் புத்திரர்களும், புத்திரிகளும் இந்தியாவின் மூவர்ணக் கொடியை பல்வேறு விளையாட்டு அரங்குகளில் பறக்கும்படி செய்திருக்கிறார்கள். அது எவ்வளவு பெருமையாக இருக்கிறது! நம் விளையாட்டு வீரர்கள் நம் நாட்டுக்குப் பெருமைகளைத் தேடித் தருகின்றனர்.
அன்பான நாட்டு மக்களே, நாம் நமது நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நமது நாட்டில் நிலைமாற்றத்தை உருவாக்க வேண்டும். புதிய உச்சங்களை எட்டும்படி செய்ய வேண்டும். இதை நாம் கூட்டாக சேர்ந்து செய்ய வேண்டும். மக்களும் அரசும் கூட்டாக, ஒன்று சேர்ந்து இதைச் செய்திட வேண்டும். நமது நாட்டு மக்கள் 130 கோடி பேரும் இதைச் செய்ய வேண்டும். நாட்டின் பிரதமரும் கூட உங்களைப் போல இந்த நாட்டின் பிள்ளை தான். அவரும் இந்த நாட்டின் குடிமகன் தான். இதற்காக நாம் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்.
வரக்கூடிய நாட்களில் 1.5 லட்சம் நல மையங்களும், ஆரோக்கிய மையங்களும் கிராமப் பகுதிகளில் உருவாக்கப்படும். மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி உருவாக்கப்படும். இதனால் டாக்டராக வேண்டும் என்ற நமது இளைஞர்களின் கனவு நனவாக்கப்படும். 2 கோடிக்கும் அதிகமான ஏழைகளுக்கு வீடுகள் கட்டப்பட வேண்டும். கிராமப் பகுதிகளில் 15 கோடி வீடுகளுக்கு, பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும். கிராமப் பகுதிகளில் 1.25 லட்சம் கி.மீ தூரத்திற்கு சாலைகள் அமைக்க வேண்டும். அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் வசதி அளிக்கப்பட வேண்டும். ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் வசதி அளிக்க வேண்டும். 50000 க்கும் மேற்பட்ட புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும். பல கனவுகளுடன் நாம் முன்னேறிச் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது.
ஆகவே சகோதர சகோதரிகளே, இந்தக் கனவுகளை மனதில் கொண்டு, நாட்டு மக்களான நாம் கூட்டாக நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதற்காக சுதந்திரத்தின் 75 வது ஆண்டு என்பது மிகப் பெரிய உத்வேகம் தரக் கூடியது.
நாட்டு மக்கள் 130 கோடி பேருக்கு கனவுகள், சவால்கள் இருக்கும். ஒவ்வொரு கனவுக்கும், சவாலுக்கும் அதற்கான முக்கியத்துவம் இருக்கும். ஒன்று முக்கியமானது, மற்றது அதிக முக்கியமற்றது என்று கிடையாது. அனைத்து விஷயங்கள் பற்றியும் இந்த உரையில் நான் குறிப்பிடுவது சாத்தியமற்றது. எனவே, இன்றைக்கு நான் எதையெல்லாம் பேச முடிந்ததோ அவையும், என்னால் பேச முடியாமல் போனவையும் சம அளவுக்கு முக்கியமானவை. நாம் முன்னெடுத்துச் சென்றால், நமது நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள், மகாத்மாவின் பிறந்த தின 150 ஆண்டுகள், இந்திய அரசியல்சாசனத்தின் 70 ஆண்டுகள் ஆகியவை பாபாசாகேப் அம்பேத்கரின் கனவுகளை நனவாக்கும் வகையில் பூர்த்தியாகின்றன. ஒட்டுமொத்த உலகின் எதிர்பார்ப்புகளின்படி நல்ல சமுதாயம், நல்லதொரு நாட்டை நாம் உருவாக்க வேண்டியிருப்பதால், குருநானக் தேவ் ஜியின் 550வது பிறந்த தினத்தையும் இந்த ஆண்டு நாம் கொண்டாடுகிறோம். பாபாசாகேப் அம்பேத்கர், குருநானக் தேவ் ஜி ஆகியோரின் போதனைகளைப்பின்பற்றி நாம் முன்னேறிச் செல்வோம்.
என் அன்பான சகோதர சகோதரிகளே, நமது இலக்குகள் இமயமலையைப் போல உயரமானவை, நமது கனவுகள் எண்ணற்ற நட்சத்திரங்களைக் காட்டிலும் அதிகம் என்பதை நாம் அறிவோம். ஆனால் நமது துணிச்சலின் பயணத்தை வானத்தாலும் கூட தடுக்க முடியாது என்பதையும் நாம் அறிவோம்.
இதுதான் நமது தீர்மானம், நமது திறமைகள் இந்தியப் பெருங்கடலைப் போல அளவிட முடியாதவை. நமது முயற்சிகள் கங்கையைப் போல புனிதமானவை, அது எப்போதும் தொடர்கிற செயலாகவே இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக இவை அனைத்தும் தொன்மையான கலாச்சாரத்தில் இருந்தும், முனிவர்கள் மற்றும் துறவிகளின் தவத்தாலும் இந்த உத்வேகம் நமக்குக் கிடைத்திருக்கிறது.நமது நாட்டவர்களின் கடின உழைப்பும், தியாகங்களும் தான் நமக்கு உந்துதல் தருபவை.
வாருங்கள், லட்சியங்களையும் உறுதிகளையும் மனதில் வைத்து, புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு நாம் முன்னெடுத்துச் செல்வோம். புதிய இந்தியாவை உருவாக்க புதிய நம்பிக்கை மற்றும் புதிய உறுதியுடன் நமது கடமைகளை நிறைவேற்றுவது என்பது தான் நமது மந்திரமாக இருக்க வேண்டும். இந்த ஒற்றை எதிர்பார்ப்புடன் நமது நாட்டை நாம் முன்னெடுத்துச் செல்வோம். இந்த நாட்டுக்காக வாழ்ந்த, போராடிய, உயிர்த் தியாகம் செய்த அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நான் தலை வணங்குகிறேன்.
ஜெய் ஹிந்த்
ஜெய் ஹிந்த்
பாரத மாதாவுக்கு ஜே.
பாரத மாதாவுக்கு ஜே.
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
மிக்க நன்றி.
*****
(Release ID: 1582149)
Visitor Counter : 1714