பிரதமர் அலுவலகம்

73-வது சுதந்திர தினத்தன்று செங்கோட்டை கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் அவரது உரையின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

Posted On: 15 AUG 2019 4:28PM by PIB Chennai
  1. 73-வது சுதந்திர தினத்திற்காகவும் ரக்ஷா பந்தன் விழாவிற்காகவும் நாட்டு மக்கள் அனைவருக்கும், சகோதர  சகோரிகளுக்கும்  நான் அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

  1. நாடு  சுதந்திர தினவிழாவைக் கொண்டாடும்போது நாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்கள், வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். மீண்டும் இயல்பு நிலையைக் கொண்டுவர மத்திய – மாநில அரசுகளும், பிற அமைப்புகளும் கடுமையாகப் பாடுபட்டு வருகின்றன.

 

  1. புதிய அரசு அமைந்த பத்து வாரங்களுக்குள் பிரிவு 370, 35-ஏ நீக்கப்பட்டது சர்தார் வல்லபாய் படேலின் கனவை நனவாக்குவதை நோக்கிய முக்கியமான முன்னெடுப்பாகும். கடந்த 70 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத இந்தப் பணி 70 நாட்களுக்குள் முடிக்கப்பட்டுள்ளது. பிரிவு 370, 35-ஏ ஆகியவற்றை நீக்குவதற்கான தீர்மானம் மாநிலங்களவையிலும், மக்களவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேறியது.

 

  1. சதி முறையை நம்மால் நீக்க முடியும் என்றால் சிசுக்கொலைக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் நிறைவேற்ற முடியும் என்றால், குழந்தைத் திருமணத்திற்கும், வரதட்சிணைக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்றால் முத்தலாக்குக்கு எதிராகவும் நாம் குரல் எழுப்ப முடியும். நமது முஸ்லீம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க முத்தலாக் முறைக்கு எதிராக நாம் சட்டம் இயற்றிருக்கிறோம்.

 

  1. பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், கடுமையானதாகவும் மாற்ற முக்கியமான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

 

  1. குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, பிரதமரின் விவசாயிகள் நலநிதி திட்டத்தின் பயனாளிகளான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.90,000 கோடி மாற்றப்பட்டு வருகிறது.    

 

  1. முன்பு எப்போதும் கற்பனை செய்து பார்க்கப்படாதிருந்த விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

 

  1. தண்ணீர் தட்டுப்பாடுப் பிரச்சினையை எதிர்கொள்ள புதிய ஜல்சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

  1. வரும் நாட்களில் மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து ஜல்-ஜீவன் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும். இதற்காக ரூ.3.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  1. நாட்டில் மருத்துவர்களுக்கும், சுகாதார முறைகளுக்கும் பெரும்  தேவை  உள்ளது. மருத்துவக் கல்வியை வெளிப்படையானதாக மாற்றுவதற்கு முக்கிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

 

  1. சிறார்களைப் பாதுகாக்க நாடு வலுவான சட்டங்களை இயற்றியுள்ளது.

 

  1. 2014-2019 தேவைகளை  பூர்த்திச் செய்யும்  காலமாக இருந்தது.  2019-க்கு பிந்தைய காலம் முன்னேறும் விருப்பங்களையும், கனவுகளையும் நிறைவேற்றுவதாக இருக்கும்.

 

  1. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கின் குடிமக்களது விருப்பங்களை நிறைவேற்றுவது நமது பொறுப்பாகும்.  நாட்டின் பிற பகுதிகளில் உள்ள தலித் மக்கள் அனுபவிப்பதுபோல், அங்கு வாழும் தலித் மக்களும் சமஉரிமைகளைப் பெறவேண்டும். அதே போல்,  குஜ்ஜார், பக்கர்வால், கட்டி, சிப்பி, பால்ட்டி போன்ற சமூகத்தினரும் அரசியல் உரிமைகளைப் பெறவேண்டும். பிரிவினைக்குப் பின் ஜம்மு-காஷ்மீருக்கு இடம் பெயர்ந்து குடியேறிய லட்சக்கணக்கான மக்கள் அடிப்படை மனித உரிமைகளையோ, குடியுரிமைகளையோ பெறவில்லை. 

 

  1. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் அமைதிக்கும், வளத்திற்கும்  முன்மாதிரிகளாக மாறவிருக்கின்றன. இந்தியாவின் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவை செய்யவிருக்கின்றன. அந்த மாநிலம் இந்தியாவின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பைச் செய்ய முடியும். இன்று ஒவ்வொரு இந்தியரும் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். ‘ஒரு நாடு, ஒரு அரசியல் சட்டம்’.

 

  1. ‘ஒரு நாடு, ஒரு வரி’ என்ற கனவை ஜிஎஸ்டி நனவாக்கியுள்ளது. மின்சாரத்துறையில் ‘ஒரு நாடு, ஒரு தொகுப்பு’ என்பதை வெற்றிகரமாக நாம் சாதித்துள்ளோம்.  ‘ஒரு நாடு ஒரு குடும்ப அட்டை’ என்பதையும் நாம் உருவாக்கியுள்ளோம். தற்போது ‘ஒரு நாடு, ஒரு தேர்தல்’ என்பது நாட்டில் விவாதமாகியிருக்கிறது. ஜனநாயக முறையில் இது நடைபெற வேண்டும்.

 

  1. மக்கள் தொகைப் பெருக்கம் பல்வேறு புதிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக வருங்கால சந்ததியினருக்கு அதனால் புதிய பிரச்சனைகள் ஏற்படும். ஆனால், சமூகத்தில் இந்த சவால் குறித்து அறிந்த ஒரு அறிவாற்றல் மிக்கவர்களின் பகுதியும் உள்ளது. சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் இந்த பிரச்சனையை எடுத்துச் செல்வது குறித்து நாம் ஆலோசிக்க வேண்டும்.
  2. ஊழல் மற்றும் தங்கள் உறவினர்களுக்கு சலுகைகளை அளிக்கும் நடைமுறை ஆகியவை கற்பனைக்கு அப்பாற்பட்ட அளவுக்கு நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இவற்றைக் களைவதற்காக தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்.
  3. சுதந்திர இந்தியாவில் வாழ்க்கையை எளிமையாக்க வேண்டியது அவசியம். இதனால் தான் சூழலுக்கு உகந்த அமைப்பை நாங்கள்  உருவாக்கி உள்ளோம். இதில் தினசரி வாழ்வியல் நடவடிக்கையில், அரசு நிர்வாகத்தின் தலையீடு என்பது மிகக் குறைவாக இருக்கும்.
  4. நாடு வருடாந்திர அளவிலான சாதாரண முன்னேற்றத்துக்காக காத்திருக்க முடியாது. மாறாக பெரும் முன்னேற்றத்தை நோக்கி நடைபோட வேண்டியது அவசியம்.
  5. நவீன உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, இந்த காலகட்டத்தில் ரூ.100 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுடன், வாழ்வியல் தரத்தையும் மேம்படுத்தும்.
  6. இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளது. சுதந்திரம் பெற்று 70 ஆண்டு காலகட்டத்தில், இந்தியா 2 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறியது. ஆனால், கடந்த 5 ஆண்டு காலத்தில், நாங்கள் 3 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக அதை மேம்படுத்தி உள்ளோம். இந்த வகையில், 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக நாம் அதை மாற்றுவோம்.
  7. நாட்டின் 75வது சுதந்திர ஆண்டுக்குள், விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும், எல்லா ஏழைகளுக்கும் நிரந்தர வீடு கட்டித்தரப்பட வேண்டும், அனைத்து குடும்பங்களும் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும், ஒவ்வொரு கிராமமும் ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் (கண்ணாடி இழை வலைப்பின்னல்) இணைப்பு, பிராட் பேண்ட் இணைப்பு (அகண்ட அலைவரிசை) பெற்றதாகவும், தொலைதூர கல்விக்கான வசதியைப் பெற்றதாகவும் இருக்க வேண்டும்.
  8. நீலப் பொருளாதாரத்தின் (பெருங்கடல் வளங்கள்) மீது நம் கவனத்தை செலுத்த வேண்டியது மிக அவசியம். நமது விவசாயிகள் ஏற்றுமதியாளர்களாக மாற வேண்டும். மேலும், நாட்டின் ஒவ்வொரு மாவட்டமும் ஒரு ஏற்றுமதி மையமாக மாற வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், உலக சந்தையை அடைய வேண்டும்.
  9. உலக அளவில் இந்தியா மிக அற்புதமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. அனைத்து இந்தியர்களும் சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில், சுற்றுலாத்  துறை, மிகக்குறைந்த முதலீட்டில் ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்குவதாகவும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
  10. ஒரு நிலையான அரசாங்கம்தான், முன்கணிப்புக் கொள்கைகள், நிலையான அமைப்புகளை உருவாக்கி சர்வதேசத்தின்  நம்பிக்கையை உருவாக்கும். தற்போது உலகம், இந்தியாவின் நிலையான அரசியல் ஸ்திரத்தன்மையால் கவரப்பட்டு, உற்றுநோக்கி வருகிறது.
  11. உயர் பொருளாதார வளர்ச்சியை நாங்கள் உருவாக்கி உள்ளோம். விலைவாசியையும் கட்டுக்குள் வைத்துள்ளோம். இது இந்தியாவுக்கு பெருமையான ஒரு விஷயமாகும்.
  12. நமது பொருளாதாரத்தின் அடிப்படைகள் மிக வலுவானது. மேலும், ஜிஎஸ்டி, ஐபிசி போன்ற சீரமைப்புகள் உருவாக்கப்பட்டதன் மூலம் இந்த அமைப்பின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நமது முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம், வேலைவாய்ப்புகளையும் அதிகம் உருவாக்கலாம். நமக்கு வளம் சேர்ப்பவர்களை சந்தேக கண்ணோட்டத்துடன் பார்ப்பதை நிறுத்த வேண்டும். அவர்கள் மிகுந்த மரியாதைக்கு உரியவர்கள். பெரும் வளத்தை உருவாக்குவதால், சிறப்பான விநியோகம் ஏற்படும். ஏழைகள் நலன்களுக்கும் அது உதவும்.
  13. தீவிரவாதத்தைப் பரப்பும் சக்திகளுக்கு எதிராக இந்தியா வலிமையாகப் போராடுகிறது. தீவிரவாதத்துக்கு இடம் கொடுப்பது, ஊக்குவிப்பது, அதை மற்ற நாட்டுக்கு பரப்புவது ஆகியவற்றை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த, உலகின் பிற நாடுகளுடன் இந்தியா அணி சேர்ந்துள்ளது. தீவிரவாதத்தைக் களைய, நமது பாதுகாப்பு படைகள், பாதுகாப்பு அமைப்புகள், மிகச்சிறப்பான முன்மாதிரி பங்கைக் கொண்டுள்ளன. அவர்களுக்கு என்னுடைய வீரவணக்கங்கள்.
  14. இந்தியாவின் அண்டை நாடுகளான, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகியவை தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.  நமது நல்ல நண்பரான அண்டை நாடு ஆப்கானிஸ்தான் தனது 100-ஆவது சுதந்திர தினத்தை இன்னும் நான்கு நாட்களில் கொண்டாடவுள்ளது.  சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகளான ஆப்கானிஸ்தான் மக்களுக்கு, செங்கோட்டை கொத்தளத்திலிருந்து, எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.    
  15. 2014 ஆம் ஆண்டில் செங்கோட்டை கொத்தளத்தில் நான் உரையாற்றும்போது, ஸ்வச்தா (தூய்மை) பிரச்சினையை எழுப்பினேன்.  இன்னும் சில வாரங்களில் அக்டோபர் 2 ஆம் தேதியன்று மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் போது, இந்தியா திறந்தவெளி கழிப்பறை இல்லாத நாடாக ஆகியிருக்கும்.
  16. ராணுவப் படைகளில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவது பற்றி நீண்டகாலமாக நமது நாடு விவாதித்துக் கொண்டுள்ளது.  பல ஆணையங்களும், அவர்களது அறிக்கைகளும்  இவற்றை சுட்டிக்காட்டியுள்ளன.  படைகளிடையேயான ஒருங்கிணைப்பை கூர்மைப்படுத்துவதற்காக, ஒட்டுமொத்த பாதுகாப்புத் துறைக்கான தலைமையை இந்தியா பெறவுள்ளது.  இது பாதுகாப்பு படைகளை மேலும் செயல்திறன்மிக்கதாக ஆக்கும். 
  17. அக்டோபர் 2 ஆம் தேதியன்று இந்தியாவை பிளாஸ்டிக் இல்லாத நாடாக மாற்ற நாட்டு மக்கள் உறுதியேற்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.  இதற்காக ஒவ்வொரு குடிமகனும், நகராட்சிகளும், கிராம பஞ்சாயத்துகளும் ஒன்றிணைய வேண்டும். 
  18. “இந்தியாவில் தயாரிப்போம்” திட்டத்தில் உற்பத்தியாகும் பொருளுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.  சிறந்த வருங்காலத்திற்காக, உள்ளூர் உற்பத்திப் பொருட்களைப் பயன்படுத்தி, ஊரகப் பொருளாதாரத்திற்கும், சிறு-குறு-நடுத்தரத் தொழில் துறைகளுக்கும் உதவுவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
  19. நமது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தளங்கள் வலுவாக உருவாகி வருகின்றன.  நமது கிராமப்புற கடைகள், சிறு கடைகள் மற்றும் சிறுநகர அங்காடிகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கு நாம் முக்கியத்துவம் தரவேண்டும்.
  20. ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதால் நமது மண் வளத்தை சிதைத்து வருகிறோம்.  காந்தியடிகள் ஏற்கனவே காட்டியுள்ள பாதையில், ரசாயன உரங்கள் பயன்பாட்டை 10 சதமோ, 20 சதமோ அல்லது 25 சதமோ நாம் ஏன் குறைக்கக்கூடாது.  நமது விவசாயிகள் என்னுடைய இந்த விருப்பத்திற்கு செவிமடுப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
  21. இந்திய தொழில் நிபுணத்துவம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  இதுவரை அறியப்படாத சந்திரனின் நிலப்பரப்பை சென்றடையும் சந்திரயான் திட்டத்தில் நமது விஞ்ஞானிகளின் திறமை நிருபிக்கப்பட்டுள்ளது. 
  22. வரும் நாட்களில், கிராமங்களில் 1.5 லட்சம் உடல் நல மையங்கள் அமைக்கப்படவுள்ளன.  மூன்று மக்களவைத் தொகுதிகள் பயன்பெறும் வண்ணம் ஒரு மருத்துவக் கல்லூரி, இரண்டு கோடி ஏழை மக்களுக்கு வீட்டு வசதி, 15 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் விநியோக வசதி, ஊரகப் பகுதிகளில் 1.25 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு சாலைகள் வசதி, ஒவ்வொரு கிராமத்திற்கும் அகண்ட அலைக்கற்றை இணைப்பு மற்றும் கண்ணாடி இழை நெட்வொர்க்  ஆகியவை இனி எட்டப்படவுள்ள இலக்குகளில் சில.  50,000-க்கும் அதிகமான புதிய நிறுவனங்கள் துவக்கத்திற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
  23. இந்திய அரசியலமைப்பு பாபா சாஹிப் அம்பேத்கரின் கனவுப்படி 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.  குருநானக் தேவ் அவர்களின் 550-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த ஆண்டும் முக்கியமானதாகும்.  சிறந்த சமுதாயத்திற்காகவும், சிறந்த நாட்டிற்காகவும் பாபா சாஹிப் மற்றும் குருநானக் தேவின் அறிவுரைகளைப் பின்பற்றி முன்னோக்கி நடைபோடுவோம். 

**********


(Release ID: 1582112) Visitor Counter : 287