ஜவுளித்துறை அமைச்சகம்
தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி அளித்திட ஜவுளி அமைச்சகத்துடன் தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து
Posted On:
14 AUG 2019 3:38PM by PIB Chennai
இன்று புதுதில்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஜவுளி அமைச்சகத்துடன் தமிழ்நாடு உள்ளிட்ட பதினாறு மாநில அரசுகள், சமர்த் – ஜவுளித் துறையில் திறன் வளர்ப்பு திட்டத்தில் (எஸ்.சி.பீ.டி.எஸ்.) பங்கேற்க கையெழுத்திட்டன.
இத்திட்டத்தின் கீழ் அமைச்சகத்துடன் பங்காற்றிட பதினெட்டு மாநிலங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. அவற்றில் ஜம்மு-காஷ்மீர், ஒடிசா ஆகியவை இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. துவக்கமாக, இத்திட்டத்தை செயல்படுத்திட மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட முகமைகளுக்கு 3.5 இலட்சத்திற்கும் அதிகமான இலக்குகளை அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. பயிற்சிக்குப் பின்பாக, அனைத்து பயனாளிகளுக்கும் பல்வேறு ஜவுளி சம்பந்தப்பட்ட தொழிற்துறைகளில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். நூற்பு மற்றும் நெசவு தவிர்த்து, ஜவுளித் துறையில் உள்ள அனைத்து பிரிவுகளும் இத்திட்டத்தின் கீழ் உள்ளடங்கும்.
ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை (ஏ.இ.பீ.ஏ.எஸ்.), சி.சி.டி.வி. பதிவு, அர்ப்பணிக்கப்பட்ட அழைப்பு மையம், மொபைல் செயலி அடிப்படையிலான மேலாண்மை தகவல் அமைப்பு மற்றும் இணையதள வாயிலான கண்காணிப்பு உள்ளிட்ட உயரிய தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களை இப்பயிற்சித் திட்டம் கொண்டுள்ளது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய ஜவுளி மற்றும் மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சித் துறை அமைச்சர் திருமதி.ஸ்மிருதி ஜுபின் இராணி, மாநில அரசுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்பது, ஜவுளித் துறையை ஊக்குவிக்கும் வகையில் தேசிய வளர்ச்சிக்கான உணர்வை உருவாக்கிட மாநில முகமைக்கு ஆதரவு அளித்து, அவற்றை சமமான பங்குதாரர்களாக ஆக்கிட அமைச்சகம் கொண்டுள்ள உறுதியை வெளிப்படுத்துகிறது என்றார்.
மேலும் திருமதி.ஸ்மிருதி ஜுபின் இராணி, தமிழ்நாடு மற்றும் ஜார்காண்ட் போன்ற சில மாநிலங்கள் நிர்ணயித்துள்ள இலக்குகள், அம்மாநிலங்களில் ஜவுளித் துறையில் தேவைப்படும் திறன் தொழிலாளர்களைவிட குறைவான இலக்கினை கொண்டுள்ளதாகவும், அந்த இலக்குகளை மீண்டும் பரிசீலித்திடவும் வலியுறுத்தினார். தொழிற்சாலைகளால் வேலைவாய்ப்பு அளிக்கப் பெறாதவர்களுக்கு, முத்ரா திட்டத்தின் கீழான நிதி சேவைகளை கூடுதலாகப் பெற்றிட அமைச்சகம் முயற்சிக்கும் என்றும் அவர் கூறினார். 4 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு திறன் மேம்படுத்துவது என்பது மிகப் பெரிய நடவடிக்கை என்ற அவர், அதனை எட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார். பல்வேறு மாநிலங்களுக்கும் நேரில் சென்று பயிற்சிக்கான வசதிகளை அறிந்துக் கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் திருமதி.ஸ்மிருதி ஜுபின் இராணி அவர்கள், ஜவுளித் துறையில் உள்ள தொழிலாளர்களில் 75%மும், முத்ரா கடன் திட்டத்தின் பயனாளிகளில் 70%மும் பெண்கள் என்றார். மேலும் அவர், வடகிழக்கு மாநிலங்கள் பட்டு மற்றும் சணல் துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், சமர்த் திட்டத்தின் கீழ் திறன்வளர்ப்பிற்கான இலக்குகளை மறு ஆய்வு செய்திடவும் கேட்டுக் கொண்டார்.
ஜவுளித் துறை செயலாளர், திரு.ரவி கபூர் தனது உரையில், உலகளாவிய சந்தையில் ஜவுளித் துறையில் இந்தியா மிகச் சிறிய பங்கு வகிப்பதாகவும், ஜவுளித் துறையில் அதிகளவிலான வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார். ஜவுளித் துறையில், 16 லட்சம் பயிற்சி பெற்ற திறன் தொழிலாளர்கள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார். மேலும் அவர், தொழிலாளர்களுக்கு திறன் வளர்த்திட சமர்த் திட்டத்தின் கீழ் உயர் நிலைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் தொழிற்சாலைகளில் உடனடி வேலைவாய்ப்பு பெற ஏதுவாக இருக்கும் என்றார். திறன் தொழிலாளர்களுக்கு பயனுள்ள பயிற்சி அளிப்பதை நோக்கமாக கொண்டு பயிற்சியளிக்கும் வகையில் பயிற்சியின் நிலை சிறப்பாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியின்போது பிரதமர் திரு.நரேந்திர மோடியின் சமர்த் திட்டத்தின் கீழ் திறன்வளர்ப்பு குறித்த செய்தி வாசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், இத்திட்டம் குறித்த குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியின்போது மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
திறன் வளர்ப்பின் மீது அரசு செலுத்தும் விரிவான கவனத்தின் ஒரு பகுதியாக, ஜவுளி அமைச்சகம், 2017-ம் ஆண்டிற்குள் ஜவுளித் துறையில் 15 லட்சம் கூடுதலான திறன் தொழிலாளர்களை உருவாக்குவதை இலக்காக கொண்டு, ஜவுளித் துறையில் திறன் வளர்ப்புத் திட்டமான (2010 முதல் 2017 வரை), ஒருங்கிணைந்த திறன் வளர்ப்புத் திட்டம் என்ற முன்னோடித் திட்டத்தை செயல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் 2018, மார்ச் வரை 11.14 லட்சம் நபர்கள் பயிற்சி பெற்றுள்ளதுடன், 8.41 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சகம், தொழிற்நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைப்புடன் உருவாக்கப்பட்ட நிறுவனத் திறனை மேலும் உயர்த்தும் வகையிலும், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சகக் குழு புதிய திறன்வளர்ப்புத் திட்டமான, 2017-18 முதல் 2019-20 வரைக்குமான, “சமர்த்” – ஜவுளித் துறையில் திறன்வளர்ப்புத் திட்ட”த்திற்கு தனது ஒப்புதலை வழங்கியது. இது, ஜவுளித் துறையில் தேவைப்படும் திறன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டமாகும். ரூ.1300 கோடி மதிப்பீட்டில், நூற்பு மற்றும் நெசவு தவிர்த்து, ஜவுளித் துறையில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் 2020-ம் ஆண்டிற்குள் 10 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஜவுளி அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை காண இங்கே சொடுக்கவும்.
Click here for the targets set for different States and Ministry of Textiles
*******
(Release ID: 1582009)
Visitor Counter : 251