சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2019-ன் முக்கிய அம்சங்கள்
Posted On:
06 AUG 2019 9:58AM by PIB Chennai
1. இடைநிலை சமுதாய சுகாதார சேவை பணியாளர்களுக்கு உரிமம் :
நாட்டில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையை சமாளிக்கவும், சிகிச்சை பெற வருவோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகவும், குறிப்பிட்ட அளவுக்கு இடைநிலை சமுதாய சுகாதாரப் பணியாளர் உரிமங்களை வழங்க தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2019-ன் 32-வது பிரிவில் வகை செய்யப்பட்டது. உலக சுகாதார நிறுவனம், 1,000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் (1:1000) என நிர்ணயம் செய்துள்ள நிலையில், இந்திய மக்கள் தொகையைப் பொறுத்தவரை, 1,456 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் (1:1456) என்ற அளவிலேயே உள்ளனர். இதுதவிர, நகர்ப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும், கிராமப்புறங்களில் உள்ள மருத்துவர்களுக்கும் இடையிலான விகிதம் 3.8:1 என்ற அளவிலேயே உள்ளது. இதன் காரணமாக இந்தியாவிலுள்ள கிராமப்புற மற்றும் ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சைகள் மறுக்கப்படும் சூழல் நிலவுகிறது. அத்துடன் தற்போது அலோபதி முறையில் சிகிச்சை அளிப்போரில் 57.3% பேர் முறையான மருத்துவக் கல்வித் தகுதி பெறாதவர்களாக உள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசின் மாபெரும் சுகாதார காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்படி, தொடக்க நிலை மற்றும் தடுப்பு சிகிச்சைகளை மேற்கொள்ள, அடுத்த 3 முதல் ஐந்தாண்டுகளில், 1,50,000 இடைநிலை மருத்துவ சேவை பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இந்த மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்குவதற்கு 7-8 ஆண்டுகள் ஆகும் என்பதால், மத்திய அரசால் தொடங்கப்படும் சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களில் சிகிச்சை அளிக்க, சிறப்பு பயிற்சி பெற்ற இடைநிலை மருத்துவப் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
இங்கிலாந்து, சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் அமெரிக்காவின் நியூயார்க்கிலும் இதுபோன்று சமுதாய சுகாதார பணியாளர்கள் / செவிலியர்கள், மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்படுவதால், சுகாதார நிலை ஓரளவுக்கு மேம்பட்டுள்ளது. இந்தியாவிலும், சத்தீஷ்கர் மற்றும் அசாம் மாநிலங்களில் சமுதாய சுகாதாரப் பணியாளர்கள் இதுபோன்ற சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்திற்கான ஹார்வேர்டு பள்ளி நடத்திய ஆய்வில், இதுபோன்ற பணியாளர்கள் சிறப்பாக செயல்படுவதும், இந்த பணியாளர்களின் தரத்தை முறைப்படுத்துவதன் மூலம், மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்து கவலையடையத் தேவையில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
2. நெக்ஸ்ட் (NEXT) நெக்ஸ்ட் தேர்வு :
மருத்துவக் கல்வி என்பது, சிறப்பு பிரிவு சார்ந்த தொழில்நுட்பத்திறன்களில் அதிக கவனம் செலுத்தும் ஒன்றாக உள்ளது. தேசிய அளவில் மருத்துவர்களுக்கான பொதுவான அறிவாற்றல் திறமைகளை மதிப்பிடுவதற்கான இடைநிலை மருத்துவ பட்டப்படிப்பின் இறுதியாண்டு தேர்வை, பொதுவான தகுதி தேர்வாக (NEXT) நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்பு காலத்திலேயே, தத்துவார்த்த மற்றும் அனுபவ ரீதியான திறனைப் பெறுவதை கருத்தில் கொண்டு, NEXT தேர்வுக்கான விதிமுறைகள் படிப்படியாக வகுக்கப்படவுள்ளன. மத்திய-மாநில மருத்துவ நிறுவனங்கள் / கவுன்சில்கள் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகங்களில் சேர்ந்த மருத்துவர்கள், தேசிய மருத்துவ ஆணையத்தில் 75% அளவிற்கு இடம்பெறுவார்கள். NEXT தேர்வு நடைமுறைக்கு வர இன்னும் 3 ஆண்டுகாலம் ஆகும் என்பதால், அதற்குள், இந்தத் தேர்வுக்கான நடைமுறைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து பேச்சுவார்த்தைகளை நடத்த, தேசிய மருத்துவ ஆணையத்தின் 15-வது பிரிவில், போதிய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
3. கட்டண முறைப்படுத்துதல் :
இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தின்படி, மருத்துவ கல்விக்கான கட்டணங்களை முறைப்படுத்த எந்த விதிமுறையும் இல்லை. இதன் காரணமாக சில மாநில அரசுகளே தனியார் மருத்துவக் கல்லூரிகளுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட கட்டணத்தை முறைப்படுத்தின. இதுதவிர, இடைக்கால ஏற்பாடாக, உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலான குழுக்களும், தனியார் கல்லூரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்தன. அதேவேளையில், இதுபோன்ற குழுக்களின் முடிவுகள் தங்களை கட்டுப்படுத்தாது என நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கூறுகின்றன.
நாடு முழுவதும் மொத்தமுள்ள எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்களில், சுமார் 50% அரசு கல்லூரிகளில்தான் உள்ளன. இந்த கல்லூரிகளில் நியாயமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எஞ்சிய இடங்களில், 50% இடங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தால் முறைப்படுத்தப்படும். அதாவது, மொத்தம் 75% இடங்களுக்கு நியாயமான கட்டணம் வசூலிக்கப்படும்.
கூட்டாட்சி தத்துவத்தின்படி, தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எஞ்சிய இடங்களுக்கான கட்டணத்தை, தனியார் கல்லூரிகளுடன் ஒப்பந்தம் செய்து, மாநில அரசுகளே நிர்ணயம் செய்துகொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக்கல்வி அனைத்து மாணவர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் கிடைப்பதை உறுதி செய்ய மாநில அரசுகள், தகுதி அடிப்படையில் கல்வி உதவித்தொகையை தொடர்ந்து வழங்கலாம்.
ஏழை மாணவர்கள், கல்வித்தகுதி உடைய மாணவர்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி நிறுவனர்கள் ஆகிய அனைத்து தரப்பினரின் நலன்களைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியமாகிறது. அதே வேளையில், முறைப்படுத்தப்படாத இடங்களுக்கான கட்டணத்தை கல்லூரிகள் தன்னிச்சையாக முடிவு செய்து கொள்ள முடியாது.
NEXT தேர்வு மூலம் ஏற்படக்கூடிய வெளிப்படைத்தன்மை, கட்டணத்தை முறைப்படுத்த உதவுவதோடு, வசூலிக்கும் கட்டணத்திற்கேற்ப கல்லூரிகள் தரமான மருத்துவக்கல்வி வழங்கவும் வலியுறுத்தும். அத்துடன் மருத்துவக்கல்வி நிறுவனங்களுக்கு, அவை வழங்கும் மருத்துவக்கல்வி/பயிற்சிக்கு ஏற்ப தர நிர்ணயம் செய்யப்பட்டு, அதுவும் கட்டண முறைப்படுத்தலுக்கு உதவும். நடுத்தர மக்கள் தொகை அதிக அளவில் உள்ள இந்தியாவில், சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியதும் அரசின் கடமையாகிறது.
மருத்துவக்கல்வித்துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வேளையில், அந்தக்கல்லூரிகளின் நிதிநிலை வலுவாக இருப்பதும் அவசியம் என்பதால், அரசு கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்கும் பொறுப்பிலிருந்து அரசு ஒதுங்கிக்கொள்ள முடியாது. கடந்த ஐந்தாண்டுகளில், ரூ.10,000 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்யப்பட்டு, அரசு கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவக்கல்விக்கு ஊக்கமளிக்கும் விதமாக, ரூ.30,000 கோடி செலவில், 21 புதிய எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
எனவே, தேசிய மருத்துவ ஆணைய மசோதாவால், பணக்காரர்களுக்கு மட்டும்தான் மருத்துவக்கல்வி கிடைக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. மாறாக, நீட் மற்றும் பொது கலந்தாய்வு முறைகள் அரசால் அறிமுகப்படுத்தப்படும் வரை, பணக்கார மாணவர்கள் அளவுக்கு அதிகமான நன்கொடை கொடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் நிலை இருந்தது. அரசு கொண்டு வந்த சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக மருத்துவக் கல்வியில் கருப்புப்பண புழக்கம் ஒழிக்கப்பட்டிருப்பதோடு, இத்தகைய சீர்திருத்தங்களுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் வழங்க தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படுவதால், தகுதி என்பது தேவையற்றதாகிவிடும் என்ற கருத்தும் உண்மைக்கு மாறானதாகும். முந்தைய விதிமுறைகள் காரணமாக, 12-ஆம் வகுப்பில் 50% மதிப்பெண் பெற்றவர்கள்கூட, எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் நிலை இருந்தது. கல்லூரிகள், மாணவர்களுடன் உடன்பாடு வைத்து, தாங்களாகவே ஒரு நுழைவுத்தேர்வை நடத்தி அதன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுவதும் இருந்தது. ஆனால், தற்போது, நீட் தேர்வில் தேர்ச்சியடையும் மாணவர்கள் மட்டுமே தகுதி அடிப்படையில, மருத்துவக்கல்வியில் சேர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
*****
(Release ID: 1581336)
Visitor Counter : 650