நிதி அமைச்சகம்
திவாலாதல் மற்றும் கடன்மீட்பு விதிகள்-2016-ஐ அமல்படுத்தியதன்மூலம் கடன் மீட்பு வழிமுறை வலுப்படுத்தப்பட்டுள்ளது
ரூ.1,73,000 கோடி அளவுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது
தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயங்கள்
வலுப்படுத்தப்படுகின்றன
Posted On:
04 JUL 2019 12:24PM by PIB Chennai
நாடாளுமன்றத்தில் 2018-19-ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். திவாலாதல் மற்றும் கடன்மீட்பு விதிகள் 2016 செயல்பாட்டுக்கு வந்தது முதலே கடன்களை மீட்பதில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து அதில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயங்கள் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களை மேலும் வலுப்படுத்த பொருளாதார ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.
நெருக்கடியால் சிக்கும் சொத்துக்களில் தீர்வுகாணப்பட்டு, மீட்கப்பட்டதன்மூலம், திவாலாதல் மற்றும் கடன்மீட்புக்கு உகந்த முறை, அமைப்புரீதியாக உருவாக்கப்பட்டுள்ளதை பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. மார்ச் 31, 2019 வரையான காலத்தில், நிறுவனங்கள் திவாலாதல் தீர்வு நடவடிக்கைகள் மூலம், 94 வழக்குகளில் தீர்வுகாணப்பட்டு, ரூ.1,73,359 கோடி ரூபாய் அளவுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 28, 2019 வரையான காலத்தில், திவாலாதல் மற்றும் கடன்மீட்பு விதிகளில் உள்ள வழிமுறைகளின் கீழ், ஒட்டுமொத்தமாக ரூ.2.48 லட்சம் கோடி ரூபாய் தொடர்பான 6,079 வழக்குகள், விசாரணைக்கு ஏற்பதற்கு முன்னதாகவே திரும்பப் பெறப்பட்டன. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, வாராக்கடன்களாக ஏற்கனவே இருந்த ரூ.50,000 கோடியை வங்கிகள் வசூலித்துள்ளன. மேலும், கூடுதலாக ரூ.50,000 கோடி அளவுக்கு, நிலையில்லாத சொத்துக்கள் என்ற வரையறையிலிருந்து நிலையான சொத்துக்களாக தரம் உயர்த்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கை, திவாலாதல் மற்றும் கடன்மீட்பு நடவடிக்கைகளுக்கு முன்னதாகவே, கடன் வழங்குவதற்கான அமைப்புகளின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
(Release ID: 1577225)
Visitor Counter : 131