நிதி அமைச்சகம்
2024-25 ஆண்டுக்குள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கான பொருளாதார நாடாக இந்தியா உயர்வதற்கு தொடர்ச்சியாக 8% வளர்ச்சி விகிதம் தேவைப்படுகிறது என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது
``கடந்த 5 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் முன்னேற்றகரமாகவே இருந்தது'' என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது
நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு நேர்மையான பயணத்தை ஆரம்பிக்க ``வேகத்தை முன்னெடுப்பது'' என்பதை அடிப்படை கொள்கையாகக் குறிப்பிட்டுள்ளது பொருளாதார ஆய்வறிக்கை
சேமிப்புகள், முதலீடுகள் மற்றும் ஏற்றுமதிகள் ஆகியவை நேர்மையான பயண முயற்சியாக இருக்கும்
மக்களின் சாதகமான செயல்பாடுகளின் ஆதரவுடன் இவை நடைபெறும்
Posted On:
04 JUL 2019 12:26PM by PIB Chennai
மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று 2018-19 பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். வளமையான பொருளாதார வளர்ச்சிக்கான அறிவிப்புகள் அதில் இடம் பெற்றுள்ளன. ``பிரதமர் கூறியுள்ளபடி 2024-25 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவை எட்ட வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு'' ``வேகத்தை முன்னெடுப்பது'' என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருப்பதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதை எட்டுவதற்கு ``இந்தியா 8 சதவீத ஜி.டி.பி. வளர்ச்சியை எட்ட வேண்டியிருக்கும்'' என்று அறிக்கை கூறுகிறது. ``இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான மாடலாக நேர்மையான அல்லது மாறுபடும் வகைகளில் செயல்படுதல் என்ற வழக்கமான நிலையில் இருந்து மாறுபட்டதாக இது இருக்கும்'' என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
``முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், குறிப்பாக தேவைகளை முன்னெடுத்துச் செயல்படும் தனியார் துறையில் முதலீட்டுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இது இருக்கும். அதன் மூலம் உற்பத்தித் திறன் உருவாக்கப்படும், தொழிலாளர் உற்பத்தித் திறன் அதிகரிக்கும், புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும், வேலைவாய்ப்புகள் பெருகும்'' என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. ``வளர்ச்சிக்கான மாதிரியில் ஏற்றுமதிகள் ஒருங்கிணைந்த அம்சமாக இருக்க வேண்டும். ஏனென்றால் சேமிப்புகள் காரணமாக உள்நாட்டுப் பயன்பாடு குறையும். அதுதான் இறுதிநிலை தேவையை முடிவு செய்யும். எனவே ஏற்றுமதியோடு இணைந்ததாக இருக்க வேண்டும்'' என்றும் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தேவை, வேலைவாய்ப்புகள், ஏற்றுமதிகள் போன்ற பல்வேறு பொருளாதார சவால்களை சமாளிக்க வேண்டுமானால், இவை அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, தனித்தனி பிரச்சினைகளாகக் கருதப்படக் கூடாது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெரிய அளவிலான இந்தப் பொருளாதார அம்சங்கள் குறிப்பிடத்தக்க அளவில் சார்ந்து செயல்படும் தன்மையை வெளிப்படுத்துவதன் மூலம் ``நேர்மையான முன்னேற்றப் பயணத்துக்கான'' உத்வேகத்தை அளிக்கும் அம்சமாக இருக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ``மக்கள் நலன் குறித்த தகவல்கள் முன்வைத்தல், சட்டத் துறை சீர்திருத்தம் குறித்து வலியுறுத்தல், கொள்கை உறுதிப்பாடு மற்றும் போக்கிற்கு ஏற்ற பொருளாதாரம் என்ற கோட்பாடுகளைப் பயன்படுத்தி செயல்பாடுகளை மாற்றிக் கொள்வதை ஊக்குவித்தல்'' ஆகியவை பற்றியும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
``அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், அதிக உற்பத்தித் திறனை உருவாக்கவும், முதலீட்டுச் செலவைக் குறைக்கவும், முதலீடுகளுக்கான ஆபத்தான அம்சங்களை சீர்திருத்தம் செய்யவும், MSME-க்கள் எனப்படும் குறு மற்றும் சிறுதொழில் துறைகளின் மீது கவனம் செலுத்தும் வகையில்'' முக்கிய அம்சங்கள் இருக்க வேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் வலியுறுத்தப் பட்டுள்ளது.
- சாதனைகள் :
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற்றகரமாக இருந்தது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சியின் பயன்களும், பெரிய அளவிலான பொருளாதார ஸ்திரத்தன்மையின் பயன்களும் சமூகத்தில் அடித்தட்டு மக்களைச் சென்றடைவதை அரசு உறுதி செய்திருக்கிறது என்றும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
2014 மற்றும் 2018ல் உலகின் பொருளாதார வளர்ச்சி 3.6% ஆக இருந்த நிலையில், இந்தியா பெரிய முன்னேற்றத்தைக் கண்டு, உலகில் ஆறாவது பெரிய பொருளாதார நாடாக மாறியிருக்கிறது. சீனாவைவிட அதிகமான பொருளாதார வளர்ச்சியை இந்தியா உருவாக்கியிருக்கிறது. ``இந்த 5 ஆண்டுகளில் சராசரி பணவீக்கமானது, அதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் இருந்த பணவீக்கத்தைவிடக் குறைவாகவே இருந்துள்ளது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இது மிகக் குறைந்த அளவாக உள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை, கையாளக் கூடிய அளவுக்குள்ளேயே இருந்து வருகிறது. அன்னியச் செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டிருக்கிறது'' என்று அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
4 சதவீதத்திற்கு கீழான பணவீக்கம் என்ற இலக்கை நிர்ணயித்து 2015 பிப்ரவரியில் உருவாக்கப்பட்ட ``நிதிக் கொள்கை குழு'' என்ற புதிய அமைப்பு காரணமாக இந்தச் சூழ்நிலை உருவாகும் வாய்ப்பு கிடைத்தது என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. ``ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை (GFD) குறித்தும் கட்டாயமான ஒழுங்குமுறை கடைபிடிக்கப்பட்டது.
ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறையில் இருந்து ஒட்டுமொத்த உற்பத்திக் குறியீட்டுக்கு மாறுவதற்கான விகிதாச்சார இலக்கை 3 சதவீதமாக நிர்ணயிக்கும், நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM) சட்டம் 2003 காரணமாக 2016ல் இருந்து புதிய உத்வேகம் ஏற்பட்டது. அதன் மூலம் 2013-14ல் 4.5 சதவீதமாக இருந்த இந்தக் குறியீடு 2018-19-ல் 3.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேபோல பெரிய பொருளாதாரக் குறியீடுகளும் உயர்ந்திருக்கின்றன என்று அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பயனாளர்கள் மீது கவனம் செலுத்தி நேரடியாக பயன் கிடைக்கச் செய்தல்
``வளர்ச்சியின் பயன்கள் சமூக-பொருளாதார அடுக்கில் கீழ்த்தட்டில் இருக்கும் பயனாளிகளையும் எட்டுவதற்கு உதவும் வகையில் ஆதார் சட்டம் 2016 அமைந்திருக்கிறது'' என்று அறிக்கை கூறுகிறது. பிரதமரின் ஜன் தன் யோஜ்னா (PMJDY), ஜன்தன், ஆதார், மொபைல் (JAM) என்ற மூன்று அம்சங்கள் இணைந்த திட்டங்கள் காரணமாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், தேசிய சமூக உதவியளிப்புத் திட்டம் (NSAP), பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், பிரதமரின் உஜ்வாலா திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.7.3 லட்சம் கோடி அளவிற்கான பயன்கள் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப் பட்டுள்ளன. இப்போது ரொக்கம் அடிப்படையிலான 370 திட்டங்களின் மூலம் 55 மத்திய அமைச்சகங்கள், பணப் பயன்களை, நேரடி பட்டுவாடா திட்டத்தின் கீழ் அளித்து வருகின்றன.
கட்டமைப்பு வசதி
2014-19 கால கட்டத்தில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் வேகம் அதிகரித்திருக்கிறது என அறிக்கை கூறுகிறது. ``ஏப்ரல் 2018ல் இந்தியாவில் எல்லோருக்கும் மின்சாரம் கிடைத்துவிட்டது. தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி அதிவேகத்தில் நடைபெற்றது. இப்போதுள்ள 1,32,000 கிலோ மீட்டர் நீளத்துக்கான தேசிய நெடுஞ்சாலைகளில் 20 சதவீதத்துக்கும் அதிகமான சாலைகள் கடந்த நான்கு ஆண்டுகளில் அமைக்கப் பட்டிருக்கின்றன. 3 மற்றும் 4 ஆம் நிலை நகரங்களுக்கு விமான சேவை அளிக்கும் திட்டம் 2017ல் தொடங்கப்பட்டது'' என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டாட்சி
பகிர்ந்தளிக்கக் கூடிய மத்திய வரிகள் தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு அளிக்கப்படும் அளவை 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக 14வது நிதிக் கமிஷன் உயர்த்திய நிலையில், கூட்டாட்சி தத்துவம் பலப்படுத்தப்பட்டது. 2017ல் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டது மற்றும் ஜி.எஸ்.டி. கவுன்சில் அனுபவங்கள் மூலமாக தொழிலாளர் மற்றும் நிலம் ஒழுங்குபடுத்தல் போன்ற பல்வேறு துறைகளிலும் கூட்டாட்சித் தத்துவத்தை அமல் செய்வதற்கான முக்கிய பாடங்கள் கிடைத்துள்ளன.
கார்ப்பரேட்கள் மீதான நடவடிக்கை
திவால் நிலை அறிவிப்புக்கான வரையறைகள் நடைமுறை (IBC) 2017ல் அமல்படுத்தப்பட்டது. கணிசமான வாராக்கடன் சொத்துகள் இந்த வரம்புக்குள் கொண்டுவரப்பட்டன. நாட்டில் தொழில் செய்யும் நிலையில் ஒட்டுமொத்தமாக வளர்ச்சியைக் காணும் வகையில், கடன்களை பைசல் செய்தல் அல்லது சொத்துகளை பறிமுதல் செய்தல் மூலம் பெருமளவிலான தொகைகள் வசூல் செய்யப்பட்டுள்ளன.
- அடுத்த 5 ஆண்டுகளில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான அணுகுமுறைத் திட்டம்
``உலகில் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக வளருவதற்காக 2024-25 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவிற்கு பொருளாதார வளர்ச்சியை எட்டுவதை இந்தியா இலக்காகக் கொண்டிருக்கிறது. இதற்கு ஆண்டுதோறும் 8 சதவீத ஜி.டி.பி. வளர்ச்சி தேவைப்படுகிறது.''
``பொருளாதாரம் தொடர்ச்சியாக, சமன்பாடானதாக - நேர்மையான முன்னேற்றப் பயணம் அல்லது மாறுதலுக்கேற்ற பயணம் என்ற வழக்கமான பாதையில் இருந்து இது மாறுபட்டதாக இருக்கும்'' என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ``நேர்மையான முன்னேற்றப் பாதையில் பொருளாதாரம் வளரும்போது முதலீடு, உற்பத்தி வளர்ச்சி, வேலைவாய்ப்பு பெருக்கம், தேவைகள் மற்றும் ஏற்றுமதி ஆகியவை ஒன்றை ஒன்று சார்ந்தவையாக இருந்து, பொருளாதாரத்தின் உத்வேகம் தொடர்வதற்கு வழிவகுப்பதாக இருக்கும்'' என்று அறிக்கை கூறுகிறது. சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா, தென்கொரியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட வளர்ச்சிகள் பற்றி அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த நாடுகளில் சேமிப்புகள் மற்றும் முதலீடுகள் என்ற ஒட்டுமொத்த முதலீட்டு உருவாக்கல் நடைமுறை, ஜிடிபி வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது என்பது சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
வேலைகள்
சீனாவின் அனுபவத்தை மேற்கோள் காட்டியுள்ள இந்த ஆய்வறிக்கை ``முழுமையான சங்கிலித் தொடர் செயல்பாடுகளை ஆய்வு செய்தால், முதலீடுகள் மூலமாக வேலைவாய்ப்பு பெருகும், சரக்கு உற்பத்தி, ஆராய்ச்சி, வளர்ச்சி பெருகும், விநியோக சங்கிலித் தொடரிலும் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிய வருகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்றுமதிகள்
உலக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு குறைவாக இருக்கிறது என்பதையும், அதை உயர்த்த வேண்டிய அவசியம் இருப்பதையும் சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதி அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. இந்தியா எந்த வகையில் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும் என்பது குறித்து டாக்டர் சுர்ஜித் பல்லா தலைமையிலான உயர்நிலை ஆலோசனைக் குழு 2019 ஜூன் மாதம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. சாத்தியமாகும் துறைகளில் இது அமல்படுத்தப்பட வேண்டும்'' என்றும் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் சமநிலையும் சமனற்ற நிலையும்
``சமநிலையான வரையறைகளைப் பயன்படுத்தி முந்தைய காலத்தில் உருவாக்கப்பட்ட 5 ஆண்டுத் திட்டங்கள், உலக அளவில் உள்ள நிச்சயமற்ற சூழ்நிலைகள் காரணமாக தோல்வியடைந்துவிட்டன. எனவே, சமநிலையற்ற முன்னேற்றம் கொண்ட நிச்சயமற்ற இந்த உலகில் முன்னேறிச் செல்வதற்கு மூன்று விஷயங்கள் தேவைப்படுகின்றன: (i) தெளிவான லட்சிய இலக்கு; (ii) லட்சிய இலக்கை அடைவதற்குப் பொதுவான அணுகுமுறைத் திட்டம் மற்றும் (iii) எதிர்பாராத சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில் தொடர்ச்சியாக அணுகுமுறையை மாற்றிக் கொள்ள ஆயத்தமாக இருக்கும் சூழ்நிலை ஆகியவை தேவைப்படுகின்றன.
2024-25 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவிலான பொருளாதாரத்தை எட்டுவதற்கு, உற்பத்தியை மேம்படுத்துதல், நலத் திட்டங்கள் அமலாக்கத்தை செம்மைப்படுத்துதல் என்ற நிலையை நோக்குதல் மற்றும் செயல்பாட்டு நிலைக்கேற்ற பொருளாதாரம் என்பவை போன்ற தொகுப்புக் காரணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் பொருளாதாரத்தின் வெவ்வேறு அம்சங்களை ஒருங்கிணைக்கும் ஒரு மாதிரி நமக்குத் தேவைப்படுகிறது.
அதற்கேற்ப, 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற நிலையை அடைவதற்கு, செயல்பாட்டு நிலைக்கேற்ற பொருளாதார அணுகுமுறை, புள்ளிவிவர ஆதாரங்களின் அடிப்படையில் தொடர்ச்சியாக மறுதிட்டமிடல் கொள்கைகள் பிரச்சினை, ஆகியவை குறித்து தனியாக அறிக்கையின் ஓர் அத்தியாயத்தில் விவரிக்கப் பட்டுள்ளது.
வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்பு என்ற இலக்குகளை அடுத்த 5 ஆண்டுகளில் எட்டுவதற்கு, ``சட்ட சீர்திருத்தங்கள் செய்து அதை பலமாக்குவது சிறந்த வழியாக இருக்கும்'' என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
III. இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய காரணிகள், சீர்திருத்தங்கள் மற்றும் ஆபத்து வாய்ப்புகள்
மக்கள் தொகையின் பங்கு
மக்கள் தொகையின் பங்கு என்பது ``1960 முதல் 1990 வரையிலான காலத்தில் ஆசியா முழுக்க பொருளாதார வளர்ச்சியில் முக்கியமானதாக இருந்திருக்கிறது'' என்பதால் ஒரு தனி அத்தியாயத்தில் இதுபற்றி விவரிக்கப் பட்டிருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. வேலைபார்க்கும் மக்கள் தொகையின் (20-59 வயதினர்) அளவு 2011ல் 50.5% என்றிருந்த நிலையில், 2041ல் இது 60% ஆக அதிகரிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைபார்க்கும் மக்கள் தொகையின் அளவு அதிகரிப்பு, குழந்தை பிறப்பு விகிதம் சரிவு ஆகியவை காரணமாக தனிநபர் வருமானம் அதிகரிக்கும், தனிநபரின் உற்பத்தி நிலையில் மாற்றம் இருக்காது என்றும், பிறரை நம்பியிருக்கும் இளவயதினர் எண்ணிக்கை குறையும் என்றும் அறிக்கை கூறுகிறது. இறுதியாக, பல்வேறு அம்சங்கள் ஒன்று சேருவதன் காரணமாக சேமிப்பும் உயரும்; மக்கள் பணி ஓய்வுக் காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவதால் 40 முதல் 65 வயதுக்கு உள்பட்டோர் அதிகமாக சேமிப்பில் ஈடுபடுவார்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.
``மக்கள் தொகை மற்றும் வருமான வளர்ச்சி ஆகியவை தான் சேமிப்புகள் வளர்ச்சிக்கு முதன்மையான காரணங்களாக இருக்கும் என பகுப்பாய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே உள்நாட்டு வட்டி விகிதங்களை அதிகமாக வைத்திருப்பதால் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க முடியாது. ஓரளவுக்கு சாதகமான ரியல் எஸ்டேட் துறை கவனமும் நல்லதாக இருக்கும். அதே சமயத்தில் உண்மையான வட்டி விகிதத்தை குறைப்பதும் முதலீட்டை ஊக்குவிக்கும். அதன்மூலம் முதலீடு, வளர்ச்சி, ஏற்றுமதிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் வளர்ச்சி என்ற நேர்மையான வளர்ச்சி முறை உத்வேகம் பெறும்'' என்று அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
குறு, சிறு தொழில் நிறுவனங்கள், அவற்றின் அளவு, வயது, ஊக்கத் திட்டங்கள் மற்றும் தொழிலாளர் சட்டங்கள்
தொழிற்சாலைகள் குறித்த 2016-17 ஆண்டுக்கான வருடாந்திர கணக்கெடுப்பு அடிப்படையில் `நிறுவன' அளவிலான - தகவல்களைக் கொண்டு பகுப்பாய்வு செய்ததில் ஆச்சர்யமூட்டும் உண்மைகள் தெரிய வந்திருப்பதாக அறிக்கை கூறுகிறது. சிறிய நிலையில் இருந்து பெரிய நிறுவனங்களாக (100 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்டதாகவும் 10 ஆண்டுகள் பழமை இல்லாததாகவும் உள்ளவை) காலப்போக்கில் வளரும் நிறுவனங்கள், பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்திருக்கின்றன என்று தெரிய வந்திருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
தொழிலாளர் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகள், சிறிய நிறுவனங்களுக்கு விலக்கு அளிப்பதாலும், அவற்றின் அளவின் அடிப்படையில் ஊக்கத் திட்டங்கள் அளிக்கப்பட்டதால், வயது வித்தியாசமின்றி குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு பயன்கள் கிடைத்ததால், இந்தியப் பொருளாதாரத்தில் அவை சிறிய நிறுவனங்களாகவே நீடிக்கும் நிலை ஏற்பட்டதில் முக்கிய பங்கு வகித்தன. அந்த வகையில் பத்தாண்டுகளுக்கும் குறைவான கால கட்டத்தில் இயங்கி வரும் சிறிய நிறுவனங்களுக்கு, குறு மற்றும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு தற்போதுள்ள ஊக்கத்திட்ட அம்சங்களை அளிக்கலாம் என்று அறிக்கையில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
ராஜஸ்தானில் தொழிலாளர் சட்டம் சீர்திருத்தப்பட்டது பற்றி அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. தொழிலாளர் ஒழுங்குமுறை சட்டங்களில் கட்டுப்பாடுகள் குறித்த சீர்திருத்தங்கள் செய்தால் வேலைவாய்ப்புகள் உருவாக்கம் மற்றும் முதலீடுகள் திரட்டுவது அதிகரிக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ``தொழிலாளர் சட்ட மாறுதல்கள் முக்கியமானவை. ஏனெனில் அவை முதலீட்டை அதிகரிக்கச் செய்யும்'' என்றும் அறிக்கை வலியுறுத்துகிறது.
நிதித் துறையின் பங்கு
``முதலீட்டால் முன்னெடுக்கப்படும் வளர்ச்சி மாதிரி என்பது நிதித் துறையில் வேகமான வளர்ச்சியைக் குறிப்பிடுவதாக இருக்கும். வங்கிகள் மற்றும் முதலீட்டுச் சந்தை வளர்ச்சியைக் குறிக்கும்'' என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. ஆனால், அதே சமயத்தில் ``2006 முதல் 2012 வரையில் வேகமான கடன் வளர்ச்சியில் நமக்கு ஏற்பட்ட அனுபவத்தை வைத்துப் பார்த்தால், எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதன் தரம் குறைந்துவிடும் ஆபத்து உள்ளதாகத் தெரிய வந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், வங்கிகள் செயல்பாட்டை சீர் செய்தல் மற்றும் திவால் நிலை அறிவிப்பு நடைமுறை உருவாக்கல் ஆகியவற்றை முழுமையாக அமல் செய்ய வேண்டியது முக்கியமானதாக இருக்கிறது. அது வலியை ஏற்படுத்தும் நடவடிக்கையாக இருந்தாலும், முதலீட்டால் முன்னெடுக்கப்படும் வளர்ச்சிக்கான பயணத்தைத் தொடங்க வேண்டுமானால், அதற்கு இந்த அடிப்படைப் பணிகள் தான் பயன் தரக் கூடியவையாக இருக்கும்'' என்று அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் ஆபத்து வாய்ப்பு குறைப்பின் அவசியம்
``இந்தியாவில் முதலீட்டாளர்களுக்கான ஆபத்து வாய்ப்புகளை திட்டமிட்டு குறைப்பது, முதலீட்டால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வளர்ச்சிக்கான மாதிரி வெற்றி பெறுவதற்கு முக்கியமான விஷயமாக இருக்கிறது'' என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. ஸ்டார்ட் அப் சூழ்நிலைகளைப் பொருத்த வரை உலகில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே சூழலை தனியார் முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து அளிக்கவும், நேர்மையான முதலீடு, தேவை, ஏற்றுமதி, வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் என்ற சுழற்சியை அளிக்கவும் சாதகமான சூழ்நிலைகளை அளிக்க வேண்டியது முக்கியம் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப் பட்டுள்ளது.
******
(Release ID: 1577217)