நிதி அமைச்சகம்

நலத் திட்டங்களுக்காக தொழில்நுட்பத்தை சிறப்பாகப் பயன்படுத்துதல் – ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பயன்

Posted On: 04 JUL 2019 12:06PM by PIB Chennai

உலகின் மிகப்பெரும் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டமான, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ், வறட்சியால் பாதிக்கப்பட்ட வட்டங்களில், 20% கூடுதலாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட வட்டங்களில் தேவை அதிகரித்துள்ளதாலேயே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ், வேலை வழங்கப்பட்டுள்ளதை இது வெளிப்படுத்துகிறது. பொருளாதார ஆய்வறிக்கை 2018-19-ஐ, நாடாளுமன்றத்தில், மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில், வறட்சியால் பாதிக்கப்படாத வட்டங்களில், பணியாளர்களின் வருகைப் பதிவு 19% அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக, வறட்சியால் பாதிக்கப்பட்ட வட்டங்களில், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், பணியாளர்களின் எண்ணிக்கை 44% அதிகரித்துள்ளது. மேலும், ஆதார் இணைப்பு மூலம் பணம் செலுத்தும் முறை பின்பற்றப்பட்டதால்கூட, வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் செய்யப்பட்ட பணிகளின் அளவு குறிப்பிடத்தகுந்த அளவு உயர்ந்துள்ளது. வறட்சியால் பாதிக்கப்படாத பகுதிகளைவிட, வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டு மடங்குக்கும் அதிகமாக கூடுதல் வேலை வழங்கப்பட்டுள்ளது.

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமல்படுத்தியபோதிலும், தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அரசு ஊக்குவித்ததைத் தொடர்ந்து, 2015-ம் ஆண்டிலேயே இந்தத் திட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டதாக அவர் கூறினார். இதில், நேரடி மானியத் திட்டம், ஆதார் இணைப்பு மூலம் பணம் செலுத்துதல் உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டன. ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணியாளர்களுக்கான ஊதியத்தை அவர்களது வங்கிக் கணக்கில், மக்கள் நிதி, ஆதார் மற்றும் மொபைல் தொழில்நுட்பம் (JAM) மூலம் நேரடியாக செலுத்தியதால், ஊதியம் வழங்குவதில் ஏற்படும் தாமதம் குறைந்தது.

24 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் தேசிய மின்னணு நிதி மேலாண்மை முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளர்களுக்கு அவரது வங்கி/அஞ்சலக கணக்குகளில் மத்திய அரசு நேரடியாக ஊதியம் செலுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் நேரடி மானியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகளின் மூலம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ், மின்னணு முறையில் செலுத்தப்பட்ட ஊதியத்தின் அளவு, 2014-15-ம் நிதியாண்டிலிருந்த 77.34%-லிருந்து, 2018-19-ம் நிதியாண்டில் 99%-ஆக அதிகரித்துள்ளது.

2015-ம் ஆண்டில், அதிக அளவில் வங்கிக்கணக்குகள் உள்ள 300 மாவட்டங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஆதார் இணைப்பு மூலம் பணம் செலுத்தும் முறையை அரசு அறிமுகப்படுத்தியது. மற்ற மாவட்டங்களில் 2016-ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது. ஆதார் அடிப்படையிலான பணம் செலுத்தும் முறையால், பணம் செலுத்தும் காலம், கீழ்க்காணும் இரண்டு வழிகளில் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பணியாற்றும் 11.61 கோடி பணியாளர்களில் 10.16 கோடி தொழிலாளர்களின் (87.51 சதவீதம்) ஆதார் எண்கள் சேகரிக்கப்பட்டு, இணைக்கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ், செலுத்தப்படும் ஊதியத்தில் 55.05 சதவீதம் அளவுக்கு ஆதார் அடிப்படையிலான ஊதிய முறையிலேயே வழங்கப்படுகிறது. நேரடி மானியத் திட்டத்தின்கீழ், பயனாளர்களின் எண்ணிக்கையும், நிதி பரிமாற்றமும் 2015-16-லிருந்து 2018-19-ம் நிதியாண்டில் பல மடங்கு அதிகரித்துள்ளது.


(Release ID: 1577187) Visitor Counter : 559


Read this release in: English , Marathi , Punjabi