நிதி அமைச்சகம்
மக்களுக்கான கொள்கைகள், திட்டங்கள் வெற்றி பெற நடத்தைசார் பொருளாதாரத்துக்கு முக்கிய பங்கு: பொருளாதார ஆய்வறிக்கை
நிதி ஆயோக் நிறுவனத்தில் நடத்தைசார் பொருளாதாரப் பிரிவை அமைக்க யோசனை, ஒவ்வொரு திட்டத்திலும் நடத்தைசார் பொருளாதாரத் தணிக்கை
Posted On:
04 JUL 2019 12:04PM by PIB Chennai
மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2018-19 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
அந்த ஆய்வறிக்கை, அரசின் கொள்கைகள், திட்டங்களின் நற்பயன்கள் மேம்படும் வகையில் புதுமையான பரிந்துரையை அளித்துள்ளது. பொது நடத்தையில் மேலதிக அளவு செல்வாக்கு செலுத்தும் இந்தியா போன்ற நாடுகளில் மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படுவதற்கான கருவியாக நடத்தைசார் பொருளாதாரத்தை எப்படிக் கடைப்பிடிப்பது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இது பாரம்பரிய பொருளாதாரத்தில் நடைமுறைக்கு ஒவ்வாத இயந்திரங்களின் முடிவுகளிலிருந்து நிஜமான மனிதர்கள் எடுக்கும் முடிவுகள் எப்படி வேறுபடுகின்றன என்ற எண்ணத்தின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.
“மனித நடத்தையின் உளவியல் அடிப்படையில் வரையப்பட்டுள்ள நடத்தைசார் பொருளாதாரம் மக்களை விரும்பத் தக்க நடத்தையின் பால் ஈடுபடுவதற்குத் தூண்டும் நுட்பங்களை அளிக்கிறது” என்றும் அந்தப் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பெண் குழந்தைகளைக் காப்போம், பெண்குழந்தைகளுக்குக் கல்வியளிப்போம், தூய்மை இந்தியா போன்ற அரசின் வெற்றிகரமான திட்டங்களைச் சுட்டிக் காட்டிய பொருளாதார ஆய்வறிக்கை, அந்தத் திட்டங்களைச் செயல்படுத்தும்போது, கோட்பாடுகளுக்கு மேம்பட்ட பலன்கள் கிடைப்பதற்காக நடத்தைக்கான நுட்பங்கள் கடைப்பிடிக்கப்பட்டன என்று குறிப்பிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் “#பெண் குழந்தையுடன் செஃல்பி” என்பது உலக அளவில் பிரபலமாகிவிட்டது. பெண் குழந்தைகளைக் கொண்டாடுவது ஒரு நடைமுறையாகவே மாறிவிட்டது. அதை ஏராளமானோர் உறுதி செய்கிறார்கள். அதைப் போல், அண்மையில் பல்வேறு திட்டங்களுக்கு புனித கங்கை காப்போம், எரிவாயுத் திட்டம், ஊட்டச்சத்து பிரச்சாரம் என சமூக, கலாச்சார அடையாளத்துடன் கூடிய பெயர்கள் சூட்டியது மக்களிடையில் அத்திட்டங்கள் சென்றடைய பெருமளவில் உதவியது.
தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும்போது, தியாகிகள் என்பதற்கு இணையாக தூய்மைத் தொண்டர்கள் என்ற பெயரிலான தன்னார்வலர்களின் துணையோடு சமூகம் சார்ந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்தது அக்கருத்துக்கு வலுவூட்டியது.
தூய்மை இந்தியா இயக்கத்தின் பாலின அதிகாரமளித்தல் என்ற நடைமுறை “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண்குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” திட்டத்துக்குத் ஆதரவாக அமைந்துள்ளது.
‘நலன்சார்ந்த சமூக நெறியை வலியுறுத்தல்’, ‘மாறிவரும் இயல்புநிலை விருப்பம்’ மற்றும் ‘மீண்டும் வலுவூட்டல்கள்’ ஆகியவை நடத்தைசார் பொருளாதாரத்தின் முக்கியமான கோட்பாடுகளாக அமைந்துள்ளன என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் பல திட்டங்கள் நடத்தைசார் பொருளாதாரத்தின் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கும் போது, திட்டங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு இந்த நுட்பங்களைப் பயன்படுத்த ஏராளமான வழிகள் உள்ளன என்று பொருளாதார ஆய்வறிக்கை கருத்து தெரிவித்துள்ளது.
நிதி ஆயோக் நிறுவனத்தில் நடத்தைசார் பொருளாதாரப் பிரிவை உருவாக்க வேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை செய்கிறது. மேலும், ஒவ்வொரு திட்டமும் அமல்படுத்துவதற்கு முன்பாக நடத்தைசார் பொருளாதாரத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என பொருளாதார ஆய்வறிக்கை உறுதியுடன் பரிந்துரைக்கிறது.
*****
(Release ID: 1577172)
Visitor Counter : 199