நிதி அமைச்சகம்
அனைத்து பிரிவினருக்குமான வளர்ச்சிக்காக இந்தியாவில் குறைந்தபட்ச ஊதிய முறையை மாற்றியமைக்க பொருளாதார ஆய்வறிக்கையில் வலியுறுத்தல்
குறைந்தபட்ச ஊதிய முறையை சிறப்பாக வடிவமைப்பதற்கான கொள்கைகள் குறித்த பரிந்துரைகளை அளித்துள்ளது
குறைந்தபட்ச ஊதிய முறையை சிறப்பாக வடிவமைப்பதுடன், வலுவான முறையில் செயல்படுத்துவதன் மூலம், ஊதிய சமநிலையற்ற தன்மையைக் குறைக்க முடியும்
குறைந்தபட்ச ஊதியத்தை வழக்கமாக மற்றும் அடிக்கடி சரிசெய்வதற்கு ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தின் கீழ், மாநில அரசுகளுக்கு கிடைக்கும் வகையில் தேசிய அளவில் தர மதிப்பீட்டு முறையை உருவாக்கலாம்
நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் கிடைக்காதது தொடர்பான குறைகளை பதிவுசெய்ய கட்டணமில்லா தொலைபேசி வசதியை ஏற்படுத்த பரிந்துரை செய்யப்படுகிறது
Posted On:
04 JUL 2019 12:05PM by PIB Chennai
குறைந்தபட்ச ஊதிய முறையை சிறப்பான முறையில் வடிவமைப்பதுடன், அதனை வலுவாக செயல்படுத்துவதன் மூலம், குறைந்தபட்ச ஊதிய முறையில் ஊதிய சமநிலையற்ற தன்மையை, குறிப்பாக கீழ்மட்ட அளவில் குறைக்க முடியும். ஊதிய பகிர்வு முறையின் அடிமட்ட அளவில் பெரும்பாலும் பெண்களே இருக்கும் நிலையில், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இது நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த 2018-19-ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் அடிமட்ட அளவில் வறிய நிலையில் ஊதியம் பெறும் பிரிவினரை இலக்காக நிர்ணயித்து வலுவான குறைந்தபட்ச ஊதிய கொள்கையை வடிவமைப்பதன் மூலம், தேவையை ஏற்படுத்துவதுடன், நடுத்தர வகுப்பினரை வலுப்படுத்த முடியும். மேலும், நீடித்த மற்றும் அனைத்து பிரிவினருக்குமான வளர்ச்சி முறையை மேம்படுத்தும் என்று பொருளாதார ஆய்வறிக்கை 2018-19-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கை 2018-19-ன் படி, குறைந்தபட்ச ஊதிய முறையை சிறப்பாக வடிவமைப்பதற்காக கீழ்க்காணும் கொள்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன:
- எளிமையாக்குதல் மற்றும் சமமான முறையில் ஏற்படுத்துதல்: ஊதிய மசோதா விதிகளின் கீழ், குறிப்பிடப்பட்டுள்ளவாறு குறைந்தபட்ச ஊதியத்தை அனைவருக்கும் சமமான முறையில் அமல்படுத்த ஆதரவளிக்க வேண்டியது அவசியம். இந்த விதிகளின்படி, குறைந்தபட்ச ஊதிய சட்டம்-1948, ஊதியம் செலுத்துதல் சட்டம்- 1936, போனஸ் வழங்குதல் சட்டம்-1965, சமமான ஊதிய சட்டம்-1976 ஆகியவற்றை ஒரே சட்டமாக மாற்ற வேண்டும். புதிய சட்டத்தின்கீழ், தற்போது பல்வேறுபட்ட தொழிலாளர் சட்டங்களின் கீழ் உள்ள ஊதியம் என்பதற்கான 12 வகையான வரையறைகளை ஒன்றாக இணைக்க வேண்டும்.
- நாடுதழுவிய முறையில் அடிமட்ட அளவில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்தல்: புவி அடிப்படையில் ஐந்து பிராந்தியங்களுக்கும் மாறுபடும் வகையிலான “நாடுதழுவிய முறையில் அடிமட்ட குறைந்தபட்ச ஊதியத்தை” மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதற்குப் பிறகு, “அடிமட்ட ஊதியத்துக்கு” குறையாத அளவில் மாநில அரசுகள் தங்களது குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்துக் கொள்ள முடியும். இது நாடு தழுவிய அளவில் குறைந்தபட்ச ஊதிய முறையில் ஒத்த தன்மையை ஏற்படுத்தும். முதலீட்டுக்கான தொழிலாளர் ஊதிய அடிப்படையில், அனைத்து மாநிலங்களும் சமமான அளவில் தொழிலாளர்களைக் கவரும் வகையில் ஊதியத்தை நிர்ணயிக்கும். இது நெருக்கடி காரணமாக தொழிலாளர்கள் இடம்பெயர்வதைக் குறைக்கும்.
- குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான காரணிகள்: குறைந்தபட்ச ஊதிய விதிகளின் கீழ், குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க இரண்டு காரணிகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். அதாவது, 1) திறன் அடிப்படையிலான பிரிவு, உதாரணமாக, திறன் பெறாதவர்கள், பகுதிஅளவு திறன் பெற்றவர்கள், முழு திறன் பெற்றவர்கள் மற்றும் உயர் தகுதிபெற்றவர்கள். 2) புவி அடிப்படையிலான பிராந்தியம். இந்த இரண்டில் ஒரு காரணி அல்லது இரண்டையுமே கணக்கில் கொள்ளலாம். இந்த மாற்றங்களை செய்வதன்மூலம், நாட்டில் உள்ள குறைந்தபட்ச ஊதிய எண்ணிக்கைகள் குறையும்.
- பயன்பெறுவோர்: பரிந்துரைக்கப்படும் ஊதிய மசோதா விதிகளை, அனைத்து துறைகளில் உள்ள அனைத்து பணிகள்/தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அமைப்புசார்ந்த மற்றும் அமைப்புசாராத துறைகளிலும் பயன்படுத்த வேண்டும்.
- ஊதிய அளவை அடிக்கடி மாற்றிக் கொள்வது மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு: குறைந்தபட்ச ஊதியத்தை வழக்கமாகவும், அடிக்கடியும் மாற்றிக் கொள்ளும் வகையிலான வழிமுறையை உருவாக்க வேண்டும். தேசிய அளவிலான தர மதிப்பீட்டு முறையை மத்திய அரசு உருவாக்கலாம். இதனை மாநில அரசுகளுக்கு கிடைக்கச் செய்து, குறைந்தபட்ச ஊதியத்தை மாநில அரசுகள் வழக்கமாக மாற்றிக் கொள்ளச் செய்யலாம். இந்த வலைதள அமைப்பு, கிராமப்புறப் பகுதிகள் மற்றும் பொது சேவை மையங்களில் பார்த்து தெரிந்துகொள்ளும் வகையில் இருக்க வேண்டும். இதனை போதுமான அளவில் மக்களுக்குச் சென்றடையச் செய்ய வேண்டும். இதன்மூலம், தொழிலாளர்களால் பேரம் பேசி ஊதியத்தை பெற்றுக் கொள்ள முடியும். மேலும், முடிவுகளை மேற்கொள்ளும் திறனை வலுப்படுத்தும்.
- குறைகளைத் தீர்த்தல்: நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கப் பெறாவிட்டால், அதுகுறித்து புகார்களை பதிவுசெய்ய எளிதில் நினைவில் கொள்ளும் வகையில், இலவச தொலைபேசி சேவையை ஏற்படுத்த வேண்டும். குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள், தங்களது குறைகளைத் தெரிவிப்பதற்காக கட்டணமில்லா தொலைபேசி சேவை குறித்து விரிவான விளம்பரம் செய்யப்பட வேண்டும்.
வலுவான குறைந்தபட்ச ஊதிய முறையை உருவாக்குவது என்பது, வளர்ச்சியின் பல்வேறு கோணங்களிலும் உதவியாக இருக்கும். எனவே, இது அவசரத் தேவை என்று பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
*****
(Release ID: 1577171)