பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய கடலோரக் காவல்படையின் தலைமை இயக்குனராக கே நடராஜன் பொறுப்பேற்றார்

Posted On: 30 JUN 2019 2:14PM by PIB Chennai

இந்திய கடலோரக் காவல்படையின் 23-வது தலைவராக திரு. கிருஷ்ணசாமி நடராஜன் புதுதில்லியில் இன்று (30.06.2019) பொறுப்பேற்றுக் கொண்டார்.  இந்திய கடலோரக் காவல்படையின் ஐந்தாம் தொகுதி அலுவலரான இவர், ஜனவரி 1984-ல் பணியில் சேர்ந்தார். தொடக்க காலத்தில் வெர்ஜீனியாவின் யார்க்டவுனில் உள்ள அமெரிக்க கடலோர காவல்படை பயிற்சி மையத்தில், தேடுதல் மற்றும் மீட்புப் பணி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் துறைமுக செயல்பாடுகளில் அவர் நிபுணத்துவம் பெற்றார். சென்னை பல்கலைக்கழகத்தில், பாதுகாப்புத் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவரான தலைமை இயக்குனர், வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியிலும் பயின்றுள்ளார்.

      கடந்த 35 ஆண்டுகளாக கடலோர காவல்படையில் பணியாற்றி வரும் கே நடராஜன், கடலோர காவல்படையின் பல்வேறு ரோந்து கப்பல்களை தலைமையேற்று வழிநடத்தியிருப்பதுடன், கடலோர காவல்படையின் 5-ம் மாவட்ட (தமிழ்நாடு) கமாண்டராகவும், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை முகாமின் கமாண்டிங் அதிகாரியாகவும், கொச்சியில் உள்ள கடலோர காவல்படை பயிற்சி மைய பொறுப்பு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.  

      இவரது தலைசிறந்த பணியைப் பாராட்டி, குடியரசுத் தலைவரின் தத்ரக்ஷக் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

 

*****

 

 

 

 

 

 

 

 

 

 


(Release ID: 1576371) Visitor Counter : 139