பிரதமர் அலுவலகம்

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 03 MAR 2019 9:00PM by PIB Chennai

முதலில் நீங்கள் அனைவரும் உங்கள் கைகளை உயர்த்தி நான் சொல்வதை மூன்றுமுறை திரும்பச் சொல்ல வேண்டும்.

பாரத் மாதா கி ஜெய் என்று சொல்லுங்கள்!

வலிமையான இந்தியாவிற்கு – பாரத் மாதா கி ஜெய்!

சத்தமாக சொல்லுங்கள் - வலிமையான இந்தியாவிற்கு – பாரத் மாதா கி ஜெய்!

வெற்றிகரமான இந்தியாவிற்கு - பாரத் மாதா கி ஜெய்!

வீரமிக்க வீரர்களுக்கு - பாரத் மாதா கி ஜெய்!

நன்றிகள் பல!

உத்தரப்பிரதேசத்தின் செல்வாக்கு மிக்க மற்றும் வெற்றிகரமான முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்களே, பாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களே, மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி அவர்களே, மாநில அமைச்சர்கள் மோசின் ரஸா மற்றும் சுரேஸ் பாசி அவர்களே, சட்டமன்ற உறுப்பினர்கள் சரண் சிங், கரிமா சிங், தல் பகதூர் கோரி மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே, ஜெய் ராம்ஜி! நீங்கள் அனைவரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? அனைத்தும் நல்லவிதமாக இருக்கும் என்று நம்புகிறேன்! இங்கு பெருமளவில் குழுமியுள்ள உங்கள் அனைவருக்கும்  எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அமேதி திகர்மபி மகராஜ் அவதரித்த புண்ணிய பூமியாகும். ஜாய்மினா மகாபுராண எழுத்தாளர் பாபா புருஷோத்தம் தாஸ் வாழ்ந்த பூமி இது. மாலிக் முகமது ஜெயாஸி-யின் பூமி இது. ஆர்ய சமாஜத்தின் தேசிய தலைவரின் பூமி இது. சிறப்பு மிக்க இந்த மண்ணை நான் வணங்குகிறேன்.

அமேதியில் நமது அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன். இன்று கூட “மேகராஜா” (வருண பகவான்) நமக்கு கருணை காட்டியிருக்கிறார். அவர் நம்மை வரவேற்று இருக்கிறார். எனது ஞாபகம் சரியாக இருக்குமேயானால், 1998ஆம் ஆண்டு  ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அடல் பிஹாரி வாஜ்பாயுடன் நான் இங்கு வந்தேன். அப்போதும் கூட கனமழை பெய்தது. அதன் பிறகும் கட்சி பணிகளுக்காக அமேதிக்கு நான் வந்துள்ளேன். நான் பிரதமரான பிறகு, உங்கள் அனைவருடனும் இருக்கும் வாய்ப்பு எனக்கு மீண்டும் கிடைத்துள்ளது.

2014 தேர்தலின்போது, “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்ற முழக்கத்தை நாம் எழுப்பினோம். அமேதியைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே, “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்ற நமது முழக்கத்திற்கு கிடைத்த வெற்றிக்கு அமேதியே சிறந்த உதாரணமாகும். “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்று கூறும்போது, நமக்கு வாக்களித்தவர்கள் மட்டுமின்றி வாக்களிக்காதவர்களும் நம்மைச் சேர்ந்தவர்களே என்று நான் இப்போதும் கூறிக் கொள்கிறேன். நமக்கு வெற்றி தேடித்தந்த பகுதி மட்டுமின்றி வெற்றி தராத பகுதியும் நம்மைச் சேர்ந்ததுதான்.

ஐந்தாண்டுகள் கழித்து அமேதி தொகுதி மக்களிடம் நான்        தலைவணங்குகிறேன். அருமை சகோதரி திருமதி ஸ்மிருதி இரானி உங்கள் முன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்பதை நான் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  அவர் உங்களுக்கு புதிய முகமாகவோ அல்லது புதிய அடையாளமாகவோ இருந்தாலும், நீங்கள் அவருக்கு உங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறீர்கள். கடந்த தேர்தலின்போது நாங்கள் இங்கு வெற்றிபெறவில்லை என்ற போதிலும், உங்கள்  இதயங்களை வெல்வதில் வெற்றி பெற்றிருக்கிறோம். உங்களது அன்புடன், கடந்த ஐந்தாண்டுகளில் அமேதியின் வளர்ச்சிக்காக திருமதி ஸ்மிருதி இரானி உண்மையாகவே கடினமாக பாடுபட்டுள்ளார். நீங்கள் அவரை வெற்றிபெற செய்தீர்களா அல்லது தோற்கடித்தீர்களா என்பதை பற்றி அவர் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. வெற்றி பெற்றவரை விட அதிகமாகவே அவர் பணியாற்றியுள்ளார். அமேதி மக்களிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். எங்களது பணியில் உங்களுக்கு திருப்தி ஏற்பட்டதா? நாங்கள் உங்களுக்காக கவலைப்படுகிறோம் என்பதை உணர்ந்தீர்களா? உங்களது நலனுக்காக நாங்கள் எவ்வளவு நேர்மையாக பாடுபட்டுள்ளோம்?  சிறிதளவேனும் உங்களுக்கு அநீதி இழைத்தோமா? நாங்கள் முழுமையாக நீதியை நிலைநாட்டினோமா? இதுவே, “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்ற நமது தாரக மந்திரத்திற்கு உதாரணமாகும்.

சற்றுமுன்புகூட, அமேதியின் வளர்ச்சிக்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டிருப்பதோடு, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதில், பள்ளிக்கூடங்கள், சாலை, மருத்துவ மையங்கள், கால்நடை இனப்பெருக்க மையங்கள், மின்சார வசதி மற்றும் விவசாயம் சார்ந்த பிற திட்டங்களும் அடங்கும்.

சகோதர, சகோதரிகளே,

இந்தத் திட்டங்கள் தவிர, மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை நான் இங்கு வெளியிட இருக்கிறேன். இந்த அறிவிப்பு அமேதிக்கு புதிய அடையாளமாகவும், சிறப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.  பெருந்தலைவர்கள் பலர் இங்கு வந்துள்ளனர்; ஆனாலும், அமேதி அந்த தலைவர்களால் அறியப்பட்டதல்ல, நான் இங்கு கொண்டு வந்துள்ள திட்டத்தால் அனைவரையும் அறியச்செய்யும்.

சகோதர, சகோதரிகளே,

கலாஸ்னிகோவ் என்று அழைக்கப்படும் ஏ கே -23 ரக அதி நவீன துப்பாக்கிகள், அமேதி தொகுதிக்கு உட்பட்ட கொர்பா படைக்கல தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ளது. இந்த துப்பாக்கிகள் ரஷ்யா – இந்தியா கூட்டு முயற்சியில் தயாரிக்கப்படவுள்ளன. நம் நாட்டின் முதலாவது பெண்காதுகாப்பு அமைச்சரான திருமதி நிர்மலா சீத்தாரமன்   ரஷ்ய அதிபர் அனுப்பிய செய்தியை சற்றுமுன் உங்கள் முன் வாசித்தார். இந்த ஒத்துழைப்புக்காக, எனது மிக நெருங்கிய நண்பரும் இந்தியாவின் நண்பருமான அதிபர் புட்டினுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.  இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு காரணமாக, இந்த கூட்டு முயற்சி மிகக்குறுகிய காலத்தில் சாத்தியமானது. அதிபர் புட்டினின் நட்புரீதியான வாழ்த்துச் செய்திக்காகவும் அவரது நல்வாழ்த்துக்களுக்காகவும் நான் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்; இந்தக் கூட்டு முயற்சியில் தொடர்புடைய ரஷ்யாவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களையும் நான் பாராட்டுவதோடு இத்திட்டத்தின் வெற்றிக்காக அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

சிலர் கிராமங்களுக்கு சென்று  உஜ்ஜைனில் தயாரிக்கப்பட்டது, ஜெய்ப்பூரில் தயாரிக்கப்பட்டது, ஜெய்சால்மரில்  தயாரிக்கப்பட்டது, பரோடாவில் தயாரிக்கப்பட்டது என்று கூறுவார்கள். இந்தப் பேச்சுக்கள் வெறும் பேச்சுக்களாகவே இருக்கும். ஆனால் இது நரேந்திர மோடி. எனவே, அமேதியில் தயாரிக்கப்படும் ஏ.கே- 203 ரக துப்பாக்கிகள், தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது நமது பாதுகாப்புப் படையினரின் வலிமையை அதிகரிப்பது நிச்சயம். தற்போது இதுபோன்ற லட்சக்கணக்கான துப்பாக்கிகள்  அமேதி தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ளன. இங்கு தயாரிக்கப்படும் துப்பாக்கிகள், எதிர்காலத்தில், உலகின் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். எனவே, அமேதியில் தொடங்கப்படும் இந்தத் தொழிற்சாலையில் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்புக்களை அளிப்பதோடு, நாட்டின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் புதிய பாதையை ஏற்படுத்துவதாகவும் அமையும்.

சகோதர, சகோதரிகளே,

இந்தப் பணிகள் இன்று (03.03.2019) தொடங்குகின்றன. இந்தப் பணிகள் 8-9 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டிருக்க வேண்டும். நவீன ரக துப்பாக்கிகளை தயாரிப்பதற்காகவே கொர்பாவில் தொடங்கப்பட்ட இந்தத் தொழிற்சாலையின் முழு திறமையை இதுவரை பயன்படுத்தாமல் இருந்தனர். நமது ராணுவமும் வீரர்களும் இதுவரை புறக்கணிக்கப்பட்டதற்கு அமேதியில் உள்ள இந்தத் தொழிற்சாலையே சான்றாகும்.

நண்பர்களே,

நாட்டின் பாதுகாப்புக்காக நவீன ஆயுதங்கள் தேவை என, 2005ஆம் ஆண்டு அப்போது இருந்த அரசிடம் நமது ராணுவம் வலியுறுத்தியது. 2007ஆம் ஆண்டு இத்தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டபோது, 2010ஆம் ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கும் என இந்தத் தொகுதியிலிருந்து வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். ஆனால் அவர் தெரிவித்தபடி நடந்ததா? இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டதா? இல்லையா? என்ன சொன்னாலும், அது நிறைவேற வேண்டுமா இல்லையா? குறைந்தபட்ச பொறுப்புகூட ஏற்காதவர்கள் மீது நீங்கள் ஏன் இன்னமும் நம்புகிறீர்கள். ஆனால் நண்பர்களே, பணிகளை தொடங்காதது மட்டுமின்றி, படைக்கல தொழிற்சாலையில்  ஆயுதங்களின் வகைகளைக்கூட முடிவு செய்ய இயலவில்லை.

அமேதியைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளே,

பல ஆண்டு தாமதத்திற்குப்பிறகு உலகின் அதிநவீன துப்பாக்கிகள் அமேதி தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ளன.

உங்களது பிரதமர் சேவகனால்தான் உங்களுக்காக பாடுபட முடியும். விவசாயிகள், ராணுவ வீரர்கள் அல்லது இந்த நாட்டின் இளம் புதல்வர்கள், புதல்விகளாக இருந்தாலும், உங்களது வாழ்த்துக்கள் மற்றும் வலிமையை பெற்றிருப்பதால்தான் இது சாத்தியமாகிறது.

அமேதியின் வளர்ச்சிக்காக பாடுபடும் திருமதி ஸ்மிருதி இரானிக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். தற்போது உலகம் முழுவதும் பெண்களின் சக்தியை உணர்ந்து வருகின்றனர். நாடு தற்போது பெண் பாதுகாப்பு அமைச்சரை பெற்றுள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பிற்காக எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதை உலகிற்கு அவர் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார்.

கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in  இணையதளத்தைக் காணவும்.

 

***



(Release ID: 1575547) Visitor Counter : 191


Read this release in: Assamese , English , Marathi