பிரதமர் அலுவலகம்

சோலாப்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 09 JAN 2019 8:01PM by PIB Chennai

இந்திய தாய்க்கு வெற்றி!   இந்திய தாய்க்கு வெற்றி!   இந்திய தாய்க்கு வெற்றி!

      இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கும் மகாராஷ்ட்டிரா ஆளுநர் திரு வித்யாசாகர் ராவ்      அவர்களே, துடிப்புமிக்க முதலமைச்சர் திரு.தேவேந்திர பட்னவிஸ் அவர்களே, மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி அவர்களே,  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, எனது அருமை சகோதர சகோதரிகளே.

       கடந்த சில ஆண்டுகளில் 3-வது முறையாக சோலாப்பூருக்கு வரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. நான் இங்கு வந்து உங்களது வாழ்த்துக்களை பெற விரும்பும் போதெல்லாம், நீங்கள் என்மீது மிகுந்த பாசத்தைக் காட்டி வரவேற்கிறீர்கள். உங்களது வாழ்த்துக்கள் எனக்கு வலிமையைத் தருகிறது.  கடந்த முறை நான் இங்கு வந்தபோது, நீங்கள் எதிர்கொண்டு வந்த மின்சாரம், தண்ணீர் மற்றும் சாலைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்தேன். இதன் அடிப்படையிலே பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. “பிரதமரின் கிராமச் சாலைத்திட்டம்”, அல்லது “தேசிய நெடுஞ்சாலை” அல்லது “சவுபாக்கியா திட்டம்” போன்றவை முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்குவதில் ஆர்வம் காட்டி வரும் முதலமைச்சர் திரு. பட்னவிஸ்-ஐ பாராட்டுகிறேன்.

சகோதர,  சகோதரிகளே,

 இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து உங்களிடம் எடுத்துரைப்பதற்காகவே நான் இங்கு மீண்டும் வந்துள்ளேன். சில மாதங்களுக்கு முன், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான  “நவீன நகரங்கள்” திட்டம் அர்ப்பணிக்கப்பட்டது.  மேலும், ஏழைகளுக்கான குடியிருப்புகள், சாலைகள் மற்றும் குடிநீர் வசதித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.  இது தவிர, சோலாப்பூரிலிருந்து துல்ஜாப்பூர் வழியாக உஸ்மானாபாத் வழியாக புதிய ரயில்பாதை அமைப்பதற்கான ஆயிரம் கோடி ருபாய் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதையும் நான் உங்களுக்கு நினைவுகூற விரும்புகிறேன்.

சகோதர, சகோதரிகளே,

      துல்ஜாப் பவானி அன்னையின் ஆசிகளுடன் இந்த ரயில் பாதை திட்டம், வெகுவிரைவில் முடிவடைய உள்ளது. இத்திட்டம் இப்பகுதி மட்டுமின்றி நாடு முழுவதிலிருந்து வரும் யாத்ரீகர்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும். இந்தத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றிவரும் உங்கள் அனைவரையும் மனதார பாராட்டுகிறேன். நேற்றிரவு மக்களவையில், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மசோதா ஒன்றை நிறைவேற்றியதற்காக, சோலாப்பூர் மண்ணிலிருந்து ஒட்டுமொத்த நாட்டையும் பாராட்ட விரும்புகிறேன். தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முன்பாக நள்ளிரவுக்கு அப்பாலும் அமர்ந்திருந்து நீங்கள் எழுப்பிய கரவொலியின் சத்தத்தை நான் கேட்டறிந்தேன்.  அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற நமது சித்தாந்தத்திற்கு வலிவூட்டும் வகையில், பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு பத்து சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அநீதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஏழைகள் அவர்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்கள், பயனடைய வேண்டும். இதன் மூலம்  பாஜக உங்களது வளமான எதிர்காலத்திற்கு  வித்திட்டுள்ளது.

நண்பர்களே,

      அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களைப் பொறுத்தவரை, சோலாப்பூர் முதல் உஸ்மானாபாத் வரையிலான நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை ஏற்கனவே நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.  சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்தத் திட்டம் மூலம், அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் பயனடைந்துள்ளனர்.

நண்பர்களே,

      நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து  2014 வரை 90 ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்குத்தான் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளில்   மட்டும் சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 52 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது.

சகோதர, சகோதரிகளே,

      தேசிய நெடுஞ்சாலைத்திட்டம் உண்மையிலேயே அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கான, “பாரத் மாலா” திட்டமும், வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

“ஒரு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டு, தேர்தல் முடிந்ததும் நீங்கள் உங்கள் வழியில் செல்ல, நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம்” என்ற அரசியல் கலாச்சாரத்தை முற்றிலும் மாற்றியமைத்துள்ளோம். தற்போது முப்பதாயிரம் குடும்பங்களுக்கு வீடு வழங்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றால், இந்த வீடுகளுக்கான சாவியை வழங்க மீண்டும் நாங்களே வருவோம். நீளமான பாலமாக இருந்தாலும் சரி, அல்லது நீளமான சுரங்கபாதை அல்லது மிகநீண்ட தொலைவுக்கான விரைவுச் சாலையாக இருந்தாலும், இந்த அரசாங்கத்தால்தான் அமைக்கப்பட்டிருக்கும் அல்லது பணிகள் அதிவேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர்களே,

      “உடான்” திட்டத்தின் கீழ், இரண்டாவது மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் விமான நிலையங்கள் மற்றும் ஹெலிபேடுகள் அமைக்கப்படுகின்றன. இது தவிர அம்ருத் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 18 ஆண்டுகளுக்கு முன் அடல் பிஹாரி வாஜ்பாயால் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களை விரிவுபடுத்தும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், கடந்த நான்கரை ஆண்டுகளில் லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் நிலை மேம்பட்டிருக்கிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

   அடல் பென்சன் திட்டத்தின் கீழ், மிக்க் குறைந்த பிரீமியத்தில் சுமார் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு காப்பீடு வசதி செய்யப்பட்டுள்ளது. 2004 முதல் 2014 வரை அதிகாரத்தில் இருந்த ஆட்சி “ரிமோட் கண்ட்ரோல்” முறையில் இயக்கப்பட்டது. அத்துடன் இடைத்தரகர்களும், அதிகாரம் செலுத்தும் நிலை இருந்தது. எதிர்க்கட்சியினர் எத்தகைய அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும்,  உங்களது காவலாளி, அவரது தூய்மைப் பணியை நிறுத்தப்போவதில்லை.

நன்றிகள் பல!

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in  என்ற இணையதளத்தைக் காணவும்

---



(Release ID: 1575029) Visitor Counter : 184