பிரதமர் அலுவலகம்
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
இடுகை இடப்பட்ட நாள்:
09 MAR 2019 9:00PM by PIB Chennai
நான் பேசத் தொடங்குவதற்கு முன்பு, நீங்கள் அனைவரும் கைகளை உயர்த்தி என்னுடன் பின்வருமாறு உரக்கக் கூற வேண்டும் என்று விரும்புகிறேன். நொய்டாவில் உள்ள மக்கள் தங்களுடன் இருப்பதை எல்லையில் உள்ள ராணுவ வீரர்கள் உணரும் வகையில் இவ்வாறு செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.
மூன்று முறை சொல்லுங்கள்.
வல்லமைமிக்க இந்தியாவுக்காக
பாரத மாதாவுக்கு ஜே!
வெற்றிகள் ஈட்டும் இந்தியாவுக்காக
பாரத மாதாவுக்கு ஜே!
துணிவுமிக்க வீரர்களுக்காக
பாரத மாதாவுக்கு ஜே!
வெற்றிகரமான மற்றும் புகழ்பெற்ற உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களே, என் அமைச்சரவை சகாவான திரு மகேஷ் சர்மா அவர்களே; பிகாரின் பக்சார் பகுதி மக்களும் இந்த நிகழ்ச்சியுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள், எனவே, இந்தியாவின் மின்துறை அமைச்சராக உள்ள பக்சார் பகுதியைச் சேர்ந்த திரு. ஆர்.கே. சிங் அவர்களே, பக்சாரில் இருக்கும் எங்கள் அமைச்சர் திரு. அஸ்வினி சௌபே அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் தேஜ்பால் நாகர் அவர்களே, பங்கஜ் சிங் அவர்களே, சகோதரி பிம்லா சோலங்கி அவர்களே, வீரேந்திர சிங் அவர்களே, விஜேந்திர சிங் அவர்களே, இங்கே பெருமளவில் வந்திருக்கும் சுறுசுறுப்புமிக்க என் சகோதர, சகோதரிகளே. உங்களுடைய மன எழுச்சியைக் காண்பதற்கு மகிழ்வாக உள்ளது! உங்களுடைய ஆர்வம் மற்றும் பாசத்தின் மீது நான் மிகுந்த மரியாதை காட்டுகிறேன். நொய்டாவைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே, சிலர் தங்களுடைய இரவுத் தூக்கத்தைத் தொலைத்திருக்கும் நிலையில், இங்கே நீங்கள் `மோடி - மோடி' என முழக்கங்கள் எழுப்புகிறீர்கள்.
நண்பர்களே,
நொய்டாவும், கிரேட்டர் நொய்டாவும் அரசின் கஜானாவை கொள்ளையடிக்கும் பகுதிகளாகக் கருதப்பட்ட ஒரு காலம் இருந்தது. அதிகாரம், டெண்டர் மற்றும் நில ஒதுக்கீடு தொடர்பாக புதிய ஊழல்கள் காரணமாக அப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டது. முன்பு நொய்டா பற்றி அப்படியொரு செய்தி இருந்து வந்தது. சரிதானா? அதுபற்றி நீங்கள் கவலைப்பட்டிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அது உண்மையா, இல்லையா? இப்போது நொய்டாவும், கிரேட்டர் நொய்டாவும் வளர்ச்சி, திட்டங்கள் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளுக்குப் பெயர் பெற்றிருக்கிறது. என் தேசம், என் உத்தரப்பிரதேசம் உண்மையில் மாற்றத்தை சந்தித்து, முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
சகோதர சகோதரிகளே,
இன்றைக்கு இந்தியாவின் முக்கிய மையமாக நொய்டா வளர்ந்து வருகிறது. இப்போது உலக அளவில் செல்போன் உற்பத்தியில் இரண்டாவது நாடாக இந்தியா வளர்ந்துள்ளது; அதில் நொய்டா முக்கிய பங்கு வகிக்கிறது. 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு நாட்டில் செல்போன் தயாரிக்கும் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. இப்போது நாட்டில் சுமார் 125 தொழிற்சாலைகள் செல்போன்கள் தயாரித்து வருகின்றன. 2 என்பதில் இருந்து 125 என்ற நிலைக்கு பெரிய மாற்றம்! இதில் பல தொழிற்சாலைகள் நொய்டாவில் அமைந்துள்ளன. செல்போன்கள் தவிர, டி.வி., பிரிட்ஜ் போன்ற மின்சாரம், மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் உள்ளன. அவற்றின் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன.
நண்பர்களே,
உங்கள் வாழ்வை எளிதாக்குவதற்கு உத்தரவாதம் அளிக்கும், அந்தத் திட்டங்கள் அனைத்தையும் தொடங்கி வைப்பதற்காக இன்று உங்கள் மத்தியில் நொய்டாவிற்கு நான் வந்திருக்கிறேன். மேற்கு உ.பி. மற்றும் பிகாரில் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கியத் திட்டங்களுக்கு சற்று முன்பு நான் அடிக்கல் நாட்டியிருக்கிறேன். நொய்டா சிட்டி சென்டரில் இருந்து நொய்டா எலெக்ட்ரானிக் சிட்டி வரை மெட்ரோ ரயில் இயக்குவதற்காக மக்களுக்கு நான் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இந்தப் பகுதியில் போக்குவரத்து தொடர்பை மேம்படுத்துவதற்காக, நாட்டின் மிகப் பெரிய விமான நிலையம் ஜேவாரில் உருவாக்கப் படுகிறது. அது தொடர்பான பல்வேறு நடைமுறைகள் அதிதீவிர வேகத்தில் பூர்த்தி செய்யப் படுகின்றன. நொய்டாவை மற்ற நகரங்களுடன் ஆகாய மார்க்கமாக இணைக்க இது உதவியாக இருக்கும். பின்னர் மக்கள் டெல்லிக்கு செல்ல வேண்டியிருக்காது. ஜேவார் விமான நிலையம் மேற்கு உ.பி.க்கு பொன்னான வாய்ப்புகளைக் கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன்.
அடுத்த சில வாரங்களில் உடான் (UDAN) திட்டத்தின் கீழ் பரேலி நகரில் இருந்து விமானப் போக்குவரத்து நடைபெறும் என்று உங்களுக்குத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். முனையத்துக்கான கட்டடம் மற்றும் அது தொடர்பான பணிகள் பூர்த்தி செய்யப் பட்டுள்ளன.
நண்பர்களே,
`நாட்டின் சாமானிய குடிமக்களும் விமானப் பயணம் செய்வது' என்ற நோக்கத்தைக் கொண்ட உடான் திட்டத்தின் கீழ் இதுவரை 120 வழித்தடங்கள் தொடங்கப் பட்டுள்ளன. இந்தத் திட்டத்தால் 2 மற்றும் 3 ஆம் நிலையில் உள்ள பல நகரங்களுக்கு இப்போது விமானப் போக்குவரத்து வசதி கிடைத்துள்ளது. நகரங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகவும் இது அமைந்துள்ளது.
நண்பர்களே,
மின்சாரம் தொடர்பான நவீன கட்டமைப்பு வசதிகளும், தொழில் வளர்ச்சிக்கு அவசியமாக உள்ளது. மேலும் இரண்டு முக்கிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு இங்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஒரு மின் உற்பத்தி நிலையம் உ.பி.யில் புலாந்த்சாகர் குர்ஜாவிலும், இன்னொன்று பிகாரில் பக்சாரிலும் அமைகின்றன. குர்ஜா மின் உற்பத்தி நிலையம் ரூ.12 ஆயிரம் கோடிக்கும் மேலான செலவில் அமைக்கப் படுகிறது. பக்சார் அனல் மின் உற்பத்தி நிலையம் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப் படுகிறது. பக்சாரில் இருந்து பெருமளவிலான நண்பர்கள் காணொலிக் காட்சி மூலம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன். இந்த நல்ல நேரத்தில் அவர்களுக்கு நான் வாழ்த்துகள் கூறி, பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பக்சாரில் அமைக்கப்படும் அனல்மின் நிலையம், 2015ல் அறிவிக்கப்பட்ட பிரதமரின் திட்டங்களில் ஒன்றாகும். நாட்டின் வளர்ச்சிக்கான என்ஜினாக கிழக்கு மாகாணங்களை உருவாக்க வேண்டும் என்ற எங்களது லட்சிய நோக்கத்தின் ஒரு பகுதியாக இத் திட்டம் அமைந்துள்ளது.
சகோதர, சகோதரிகளே,
இந்த இரு மின் உற்பத்தி நிலையங்களின் பணிகளும் முடியும்போது, உ.பி. மற்றும் பிகாரில் மின்சாரம் உபரியாக இருக்கும். குர்ஜா மின் உற்பத்தி நிலையத்தின் உதவியுடன் உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி, டெல்லி, உத்தரகாண்ட், ராஜஸ்தான், இமாச்சலப்பிரதேச மாநிலங்களுக்கும் மின்வசதி கிடைக்கும். அதேபோல பக்சார் மின் நிலையத்தின் மூலம் பிகார் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களில் மின் விநியோக நிலைமை மேம்படும். மற்றொரு முக்கிய அம்சமாக, இந்த மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகளின் தேவைக்கு ஏற்ப மின்சாரம் கிடைக்கும். புதிதாக அமைக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் தான் முதலாவது தேவையாக இருக்கிறது.
நண்பர்களே,
21வது நூற்றாண்டில் நாட்டின் மின்சாரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, பல வகைகளில் நமது அரசாங்கம் பணிகளை மேற்கொண்டிருக்கிறது. முந்தைய அரசுகள் இதற்கு முன்னுரிமை தரவில்லை. நாட்டில் மின் துறை எந்த அளவுக்கு புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது, மின்சாரத் தேவைகள் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன என்பதற்கான உதாரணத்தை நேற்று நான் பார்த்தேன்.
இங்குள்ள படித்த இளைஞர்கள் அதை நன்றாகப் புரிந்து கொள்வார்கள். நேற்று பன்கி மின் உற்பத்தித் திட்டத்தின் விரிவாக்கப் பணிகள் கான்பூரில் தொடங்கப்பட்டன. ஆனால் பன்கி நிலையத்தில் 40 - 50 ஆண்டு பழமையான இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை அறிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். அந்த இயந்திரங்கள் காலாவதியாகிவிட்டன. காங்கிரசைப் போன்ற நிலையில் அவை இருக்கின்றன. அதன் காரணமாக அங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தின் விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.10 ஆகிறது. யோசித்துப் பாருங்கள்! இன்றைக்கு சூரியசக்தி மூலம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2 அல்லது ரூ.3 என்ற விலையில் உள்ள நிலையில், இங்கு ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க ரூ.10 செலவாகிறது. இதில் யாருக்குப் பயன் கிடைக்கிறது? ஆம் இப்படித் தான் நடந்து கொண்டிருக்கிறது.
நண்பர்களே,
முந்தைய அரசுகளின் இத்தகைய போக்குகள் காரணமாக நாட்டில் மின்சாரத் துறையின் நிலைமை மோசமாக இருந்தது. `மின் நிலையங்களில் 2 - 3 நாட்களுக்குப் போதுமான அளவுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளது' என்று தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் செய்திகளைப் பார்த்ததை நாட்டு மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். மின் துறையின் மோசமான நிர்வாகம் காரணமாக, மின் தொகுப்புகள் செயல் இழந்து போயின, மாநிலங்கள் இருளில் மூழ்கின. சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு சங்கடமான நிலைமை ஏற்பட்டது. நாட்டில் மின் துறையை மேம்படுத்துவதற்கு எங்கள் அரசு புதிய அணுகுமுறை மற்றும் புதிய கொள்கைகளுடன் பணியாற்றியது. நாங்கள் 4 விஷயங்களில் கவனம் செலுத்தி, 4 வெவ்வேறு நிலைகளில் - உற்பத்தி, எடுத்துச் செல்தல், பகிர்மானம் மற்றும் இணைப்பு - என்ற நிலைகளில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். மின் இணைப்பு தருவதாக எவ்வளவு தான் பேசினாலும் மின் உற்பத்தி நடக்காவிட்டால், மின்சாரம் கொண்டு செல்வதற்கும் பகிர்மானத்திற்கும் வலுவான கட்டமைப்பு வசதிகள் இல்லாவிட்டால், எல்லா வீடுகளுக்கும் மின்சாரம் போய் சேராது.
எனவே 2014ல் இந்த அரசு அமைந்தவுடன், மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்தோம். சூரியசக்தி, நீர்மின் சக்தி, நிலக்கரி மூலமான மின் உற்பத்தி, அணுமின் உற்பத்தி போன்றவற்றின் மூலம் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தோம். பல கோடி ரூபாய் ஊழல்கள் நடைபெற்று வந்த நிலக்கரி ஒதுக்கீடு நடைமுறையை எங்கள் அரசு வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றி, நிலக்கரி ஏலம் விடுவதற்கு நவீன நடைமுறை பின்பற்றப் படுகிறது. நாட்டில் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யும் நிலையில், 2022 ஆம் ஆண்டுக்குள், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் துறையில் உற்பத்தியை 175 ஜிகாவாட் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துக் கொண்டிருக்கிறோம். இந்த இலக்கை நோக்கிய செயல்பாட்டில், புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களைக் கொண்டு இதுவரை 75 ஜிகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்கி இருக்கிறோம்.
நண்பர்களே,
மின்சாரம் கொண்டு செல்லும் பணிகளுக்கான முதலீட்டையும் அரசு அதிகரித்துள்ளது. இதனால் மின்சாரம் கொண்டு செல்லும் நெட்வொர்க் திறன் அபரிமிதமாக அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, நாட்டில் இப்போது பாதுகாப்பான, சீரான மின்தொகுப்பு இருப்பதுடன், `ஒரே தேசம், ஒரே மின்தொகுப்பு' என்ற கனவையும் நனவாக்கியுள்ளது. இப்போது நாம் சூரிய மின்சக்தியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். சகோதர சகோதரிகளே, என் கனவுகள் சிறியதாக இல்லை, அற்ப விஷயங்களில் நான் ஈடுபடுவதும் கிடையாது. `ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே மின் தொகுப்பு' என்பது நம்முடைய கனவாக இருக்கிறது. ஒருநாள் இந்தக் கனவு நனவாகும்!
நண்பர்களே,
நான் சொல்லப் போவதை அன்புடன் கவனியுங்கள். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நான் சில புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டப் போகிறேன். இந்தப் புள்ளிவிவரங்கள் உண்மையிலேயே பலமானவை. அதை நீங்கள் உன்னிப்பாக கவனிப்பீர்களா? அதை நினைவில் வைத்துக் கொள்வீர்களா? நிச்சயமாகவா? இதை நீங்கள் நினைவில் வைத்துக் கொண்டால், எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டியிருக்காது. சரியான தேர்வுகளை எளிதில் நீங்கள் முடிவு செய்துவிட முடியும். நான் சொல்லட்டுமா? நீங்கள் அவற்றை நினைவில் வைத்துக் கொள்வீர்களா?
பாருங்கள், 1950 முதல் 2014 வரையில், அதாவது சுமார் 65 ஆண்டுகளில், 2.5 லட்சம் மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தித் திறன் உருவாக்கப் பட்டுள்ளது. எத்தனை ஆண்டுகளில் எவ்வளவு மின் உற்பத்தி? 65 ஆண்டுகளில் 2.5 லட்சம் மெகாவாட்கள்! என்னை நீங்கள் தேர்வு செய்த பிறகு - நண்பர்களே! ஒரு பக்கம் 65 ஆண்டுகள் மறுபக்கம் வெறும் 5 ஆண்டுகள் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்! நாங்கள் ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள்கூட ஆகவில்லை. எங்கள் அரசு 1 லட்சம் மெகாவாட்டுக்கும் மேல் மின் உற்பத்தியை அதிகரித்துள்ளது. 65 ஆண்டுகளில் 2.5 லட்சம் மெகாவாட்கள், 5 ஆண்டுகளில் 1 லட்சம் மெகாவாட்கள்! இப்போது யோசித்துப் பாருங்கள் - அந்தப் பழைய, ஓய்ந்துவிட்ட நபர்கள் தொடர்ந்து ஆட்சி நடத்திக் கொண்டிருந்தால் எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும்? ஆனால் இப்போது புதிய உத்வேகத்துடன் `புதிய இந்தியா' பாய்ச்சல் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
சகோதர சகோதரிகளே,
மின் துறையில் நாடு புறக்கணிக்கப்பட்டு வந்ததால், இந்தத் துறை பலவீனமாக இருந்தது. அதன் விளைவாக எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும், அது மக்களுக்குப் போய்ச் சேரவில்லை. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண எங்கள் அரசு முயற்சி செய்தது. உதய் (UDAY) திட்டம் குறித்து நாங்கள் பணியாற்றினோம். கிராமப்புறங்களுக்காக தீன்தயாள் உபாத்யாய கிராம ஜோதி திட்டம் என்ற திட்டம் அமல் செய்யப்பட்டது. நகரங்களுக்கு ஒருங்கிணைந்த மின்சார மேம்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
அரசின் முயற்சிகள் காரணமாக, நாட்டில் மின் விநியோகம் மேம்பட்டது. சீர்திருத்தங்களுக்கு இடையில், நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற இலக்கை எங்கள் அரசாங்கம் எட்டியுள்ளது. சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து மின்சாரம் இல்லாத நிலையில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்தன. அந்தக் கிராமங்களுக்கு நாங்கள் மின்சாரத்தைக் கொண்டு சென்றிருக்கிறோம்.
அதேபோல சௌபாக்யா திட்டத்தின் கீழ், எல்லா வீடுகளுக்கும் மின் இணைப்பு தரும் இயக்கத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். இந்தத் திட்டத்தின் கீழ், இது வரையில் 2.5 கோடி வீடுகளுக்கு இலவச மின் இணைப்புகள் கொடுத்திருக்கிறோம். 70 ஆண்டுகால சுதந்திரத்திற்குப் பிறகும் 2.5 கோடி குடும்பங்கள் இருளில் வாழ்ந்து வந்திருக்கின்றன. அவர்களுக்கு எங்கள் அரசாங்கம் மின்சாரம் அளித்திருக்கிறது.
சகோதர சகோதரிகளே,
இருளில் வாழ்ந்து வந்த 2.5 கோடி குடும்பங்களுக்கு இப்போது மின்சார வசதி கிடைத்திருப்பதில் நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்களா? உங்களுக்கு மகிழ்ச்சியா? இதை யார் செய்தது? இந்தப் பணியை நிறைவேற்றியது யார்? இங்கே தான் நீங்கள் தவறு செய்கிறீர்கள். இல்லை. இதை மோடி செய்யவில்லை. நீங்கள் வாக்களித்த சக்தியின் காரணமாகத் தான் 2.5 கோடி குடும்பங்களுக்கு வெளிச்சம் கிடைத்துள்ளது. உங்களால் தான் இது சாத்தியமாகியுள்ளது.
நீங்கள் என்னுடன் இல்லாதிருந்து, ஏழை மக்களின் நலனில் அக்கறை கொண்ட பலமான அரசு டெல்லியில் இல்லாமல் போயிருந்தால், இந்த 5 ஆண்டுகள் கடந்துபோயிருக்கும். 2.5 கோடி குடும்பங்களின் வாழ்க்கை இருளிலேயே கழிந்திருக்கும். என்னுடைய கேள்வியை எழுப்ப யாரும் இருந்திருக்க மாட்டார்கள். எனவே இதற்கான பெருமை மோடிக்கு சேராது. ஆனால் 125 கோடி இந்தியர்களுக்கு, அதாவது உங்கள் எல்லோருக்கும் சேரும்.
மின் துறையைப் பலப்படுத்துவதுடன், மின்சாரத் தேவையைக் குறைப்பதற்கு நவீன முறைகளை அமல் செய்வதற்கும் அரசு முக்கியத்துவம் அளித்தது. நவீன முறைகளால் மின்சாரம் சேமிக்கப்படுவதுடன், மக்களின் மின் கட்டண செலவையும் குறைக்க முடிந்துள்ளது. நடுத்தரக் குடும்பங்களின் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கும் வகையிலும் நாங்கள் பணியாற்றினோம். அரசின் முயற்சிகள் காரணமாக, 2014 பிப்ரவரியில் ரூ.300 - 350 வரை விற்கப்பட்ட எல்.இ.டி. பல்புகள், நான் ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.40-50 என குறைந்துவிட்டது. அது ஏன் நடந்தது? எல்லா நிலைகளிலும் இடைத்தரகர்கள் இருந்தனர். இடைத்தரகர்களை மோடி ஒழித்தார். அதனால் எல்.இ.டி. பல்புகளின் விலை ரூ.300 - 350 என்பதில் இருந்து ரூ.40 - 50 என குறைந்துவிட்டது.
கொள்ளையடித்துக் கொண்டிருந்தவர்கள், தொழிலை இழுத்து மூடியவர்கள் எல்லோரும் மோடியை தூற்றுவார்களா இல்லையா? சொல்லுங்கள். மோடிக்கு எதிராக அவர்கள் சதி செய்வார்களா, இல்லையா? என்னை யார் பாதுகாப்பார்கள்? 125 கோடி மக்களால் பாதுகாக்கப்படும் ஒரு நபர், இடைத்தரகர்களுக்கு ஒருபோதும் அஞ்சத் தேவையில்லை.
இதுவரையில் நாட்டில் அரசு மற்றும் தனியார் கம்பெனிகள் மூலம் 150 கோடி எல்.இ.டி. பல்புகள் விநியோகம் செய்யப் பட்டுள்ளன. என் மதிப்பீட்டின்படி, இவற்றின் மூலம் நாட்டு மக்கள் மின்சாரக் கட்டணங்களில் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி மிச்சப்படுத்துவார்கள் என்று கருதுகிறேன். நீங்கள் முடிவு செய்யுங்கள்! இடைத்தரகர்களை ஒழித்ததன் மூலம் நாட்டு மக்களுக்கு ஆண்டுதோறும் ரூ.50 ஆயிரம் கோடி சேமிப்பை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது மிகப் பெரிய பணிதானே!
சகோதர, சகோதரிகளே,
நொய்டாவில் இன்று மற்றுமொரு குறிப்பிடத்தக்க பணி நிறைவேறியுள்ளது. நாட்டின் உயர்ந்த பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை ஆராய்ச்சியுடன் இணைப்பதற்காக தீன் தயாள் உபத்யாயா தொல்லியல் நிறுவனத்தின் பெருவளாகம் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த வளாகம், இந்தியாவின் புகழ்மிக்க கடந்த காலத்திற்கேற்ப கட்டப்பட்டுள்ளது. இனி இங்குள்ள ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் இந்தியாவின் உயர்ந்த பாரம்பரியம், நமது ஆன்மீகம், நமது கோவில்கள், நமது வேதங்கள், நமது புனிதயாத்திரை மண்டலங்கள், நமது கைவினை மற்றும் கலை போன்ற ஒவ்வொரு அம்சத்தையும் நவீன வசதிகளுடன் விரிவாக கற்க இயலும்.
நண்பர்களே,
தொல்லியல் என்பது பூமியின் அடியிலிருந்து வரலாற்று பக்கங்களையும், கற்களிலிருந்து வரலாற்றின் வாசத்தையும் தோண்டி எடுத்து, அறிவியல் ஆதாரங்கள் வாயிலாக வரலாற்று உண்மையை வெளிக்கொணர்வதாகும். ஆங்கிலேயரின் நீண்ட கால ஆட்சியையும், அந்நிய நாட்டு படைகளின் பல்வேறு தாக்குதலையும், அத்தகைய தாக்குதல்களின்போது நமது பண்டைய பாரம்பரியத்தின் அழிப்பையும் நமது புகழ்மிக்க நாடு கண்டுள்ளதால், தொல்லியல் என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
உங்களில் சிலர் நான் நேற்று வாரணாசி சென்றதை அறிந்திருப்பீர்கள். அங்கு காசி விஸ்வநாதர் கோவில் சம்பந்தமான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கலை நான் நாட்டினேன். போலே பாபா கோவிலைச் சுற்றி பல்வேறு வீடுகள் வந்துள்ளன. காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்ற உங்களில் யாரேனும் அதனை சுற்றி எப்படி குறுகிய சந்துகள் செல்கிறது என்பதை அறிந்திருப்பீர்கள். இத்தகைய சூழ்நிலைகளில் கடவுளுக்கே மூச்சு திணறல் ஏற்பட்டிருக்குமா என்பதை நான் அறியவில்லை. அந்த இடம் குழப்பமாக இருந்தது! அங்கே உள்ள மக்கள் என்னை அவர்களது நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தார்கள். எனவே, அவர்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி, உடனே பணியைத் துவக்கிவிட்டேன்.
தற்போது சென்று பாருங்கள். போலே பாபா கோவிலை சுற்றியிருந்த 300 சொத்துக்களை நாங்கள் பெற்று, அவற்றை இடிக்கத் தொடங்கினோம். வீடுகளை இடிக்கத் துவங்கியதும், கோவில் வெளிபடத் துவங்கியது. மக்கள் சுவற்றை எழுப்பி, கோவில்களை வீடுகளாகவும், தங்களது படுக்கையறைகளாகவும் கட்டியிருந்தனர். சுவற்களை இடித்திட, 200-250 ஆண்டுகள் பழமைவாய்ந்த தொல்லியல் சுவடுகள் வெளிவந்தன. நாங்கள் 40 கோவில்களைக் கண்டோம்!
நீங்கள் முடிவெடுங்கள்! எனக்கு முன்பாக, கலாச்சார அமைச்சகம் மற்றும் தொல்லியல் துறையை நிர்வகித்தவர்கள் சிறிதும் விருப்பமில்லாதவர்களாக இருந்திருக்கிறார்கள். இது ஒரு நிகழ் உதாரணமாகும். தற்போது, ஒரு சிறிய பாறையைத் தொட்டாலும், தொல்லியல் துறையைச் சேர்ந்தவர்கள் அத்தகைய நபர்களை பிடித்துவிடுவார்கள். ஆனால் போலே பாபா வளாகத்தில், 40 கோவில்களை 40 அல்லது 50 ஆண்டுகளாக சிலர் வைத்திருந்தனர்! அவர்கள் அரசியல் தலைவர்களின் ஆசியை பெற்றிருப்பார்கள். தற்போது எனக்கு கூறுங்கள், வீடுகளை இழந்தோர்கள் மோடியை விரும்புவார்களா அல்லது புகழ்வார்களா? ஆனால் மோடி தனது புகழை உயர்த்துவதற்கு அல்லது பாரத மாதாவின் நல்வாழ்விற்கு உழைக்க வேண்டுமா? மக்கள் அவரை புகழ வேண்டும் என மோடி உழைப்பதில்லை. நாட்டின் புகழை உயர்த்துவதற்காகவே மோடி உழைக்கிறார். தற்போது இந்த கோவில்கள் பாதுகாக்கப்பட்டு, புனரமைக்கப்பட்டுள்ளன. ஆனால், எத்தகைய அரசியல் விளையாடியுள்ளது என்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.
நண்பர்களே,
அரசியல் விளையாடும் அதே நபர்கள் தான், தொல்லியல் துறை உதவியுடன் உலகத்தின் முன்பாக வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளையும் ஏற்க மறுக்கிறார்கள். தங்களது சுயநலங்களுக்காக, அத்தகைய பண்டைய பாரம்பரியம் மற்றும் சடங்குகளைப் பாதுகாக்க கவலைப்படாதவர்கள் இதே நபர்கள் தான். இது போன்ற பல்வேறு உதாரணங்கள் உள்ளன. எனது நோய்டா சகோதர, சகோதரிகளே! இது உங்களுக்கும் தொடர்பானதாகும். நான் உங்களுக்கு கூற விரும்புகிறேன். அதனை கேட்க நீங்கள் விரும்புவீர்களா? நீங்கள் கேட்கும் நிலையில் இருந்தால், நானும் உங்களுக்கு கூறும் நிலையில் இருக்கிறேன்.
தங்களைப் புகழ்பவர்களுக்கும், ஆதரவாகயிருப்பவர்களும் பரிசாக தொல்லியல் கட்டங்களுக்கு அருகாமையில் பங்களாக்கள் மற்றும் பண்ணை வீடுகளை கட்டிக் கொள்ள முந்தைய அரசுகள் எவ்வாறு அனுமதியளித்துள்ளது என்பதை பல்வேறு உதாரணங்கள் மூலமாக நீங்கள் கண்டறியலாம். இவ்வாறொல்லாம் நிகழ்ந்திருக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள்தானே? புதுதில்லியிலேயே அத்தகைய பல்வேறு நிகழ்வுகள் உள்ளன. ஊடகத் துறையில் உள்ள எனது நண்பர்கள் சுற்றி பார்த்து இது குறித்து புலனாய்வு செய்தால், உண்மை வெளிவரும். நீங்கள் திரையில் காண்பிக்கிறீர்களோ இல்லையோ, நீங்கள் பத்திரிக்கையில் அச்சடிக்கிறீர்களோ இல்லையோ, அது வேறு பிரச்சினை. அது உங்கள் கட்டாயமாக இருக்கலாம், ஆனால், உண்மையைக் கண்டறிய முடியும். அத்தகைய சிறப்பு ஏற்பாடுகள் யாருக்காக செய்யப்பட்டது என்பதை நீங்கள் கண்டறிய முயல வேண்டும்.
நண்பர்களே,
அத்தகைய மனப்பான்மையை முந்தைய அரசுகள் கொண்டிருந்ததால், தொல்லியல் போன்ற முக்கிய பிரச்சினைகளில் அவர்கள் முக்கியத்துவம் அளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறானதாகும். தீன் தயாள் அவர்களின் நோக்கை பின்பற்றி, இந்த நிறுவனம் நமது கடந்த காலத்தை தற்போதைய மற்றும் எதிர்காலத்துடன் இணைக்கும் முக்கிய பணியை மேற்கொள்ளும் என நான் நம்புகிறேன். நாட்டின் வளர்ச்சிக்கான பொருளாதார மற்றும் சமூகப் பார்வை கொண்ட தீன்தயாள் உபத்யாயாவிற்காக, உங்களது வளாகத்தில் உன்னத வேலை மேற்கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
நண்பர்களே,
முந்தைய அரசுகள் எவ்வாறு பணியாற்றின என்பதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். மக்கள்தொகையில் பாதிபேர் சமையல் எரிவாயு இணைப்பு கிடைக்கப் பெறாத மற்றும் பாதிபேர் வங்கிக் கணக்குகள் இல்லாத நிலை இருந்தது. பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கழிப்பறைகளைக் கொண்டிருக்கவில்லை. பல்வேறு திட்டங்கள் உருவாக்கி முற்றுப்பெறாமல் விட்டுசென்றனர். அதனால், இந்தியா சுதந்திரம் பெற்ற அதே காலத்தில் சுதந்திரம் பெற்று, இந்தியாவுடன் வளர்ச்சிப் பயணத்தை துவக்கிய மற்ற நாடுகளுக்கு பின்னால் இந்தியா இடம் பெற்றது.
சகோதர, சகோதரிகளே,
உங்களது பிரதான சேவகனாகப் பணியாற்ற எனக்கு நீங்கள் வாய்ப்பு அளித்த 2014-ம் ஆண்டிற்கு பின்பாக, நாம் ‘அனைவரும் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி’ என்ற மந்திரத்துடன் முன்னோக்கி நடைபோடுகிறோம்.
நண்பர்களே,
எங்களது அரசு ஊழல் கலாச்சாரத்திற்கு எதிராக கடுமையான கரம் கொண்டு போரிட்டு வருவதுடன், சாதாரண மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்களை மட்டுமே உருவாக்கி வருகிறது. ஆகையால், ஊழல் புரிபவர்கள் அனைவருக்கும் இன்று, மோடியுடன் பிரச்சினை உள்ளது. அத்தகைய நபர்கள் இந்தக் காவலாளியை தூற்றும் போட்டியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் காலையிலேயே, ஒரு நபர் மோடியை நோக்கி 15 அவதூறு கூறினால், மற்றவர் 16 அவதூறு கூறவேண்டும் என முடிவு செய்கிறார்கள். அத்தகைய அவதூறுகள் வாக்குகளைப் பெற உதவும் என அவர்கள் நம்பினார்கள். மேலும், மோடியை எதிர்க்க வேண்டும் என்ற பெயரில், தேசத்திற்கு எதிராக செயல்பட துவங்கும் அளவிற்கு அவர்கள் கீழான நிலைக்குச் சென்றனர்.
நண்பர்களே,
இன்று இந்தியா, புதிய கலாச்சாரம் மற்றும் புதிய கொள்கைப் பாதையில் நடைபோடுகிறது. உரி தாக்குதலுக்குப் பின்பாக, இந்தியா தீவிரவாதிகளுக்கு புரியும் மொழியான துல்லிய தாக்குதல் மூலம் பாடம் புகட்டியது. நீங்களே கூறுங்கள், நான் எடுத்தது சரியான நடவடிக்கையா, இல்லையா? நான் அதை செய்திருக்கக் கூடாதா? அரசு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் ஏற்பீர்களா? காவலாளி தூங்கினால் நீங்கள் ஏற்பீர்களா? ஜாக்கிரதையுடன், விழிப்புடன் இருக்கும் காவலாளி உங்களுக்கு தேவையா இல்லையா? தேசத்திற்கு வெற்றி அளிக்கக்கூடிய காவலாளி உங்களுக்கு வேண்டுமா, இல்லையா?
சகோதர, சகோதரிகளே,
உரி தாக்குதலுக்குப் பின்பாக அவர்கள் சாட்சியைக் கேட்கின்றனர்! புல்வாமா தாக்குதலுக்கு பின்பாக, பல்லாண்டுகளாக செய்யமுடியாத பணியை நமது வீரர்கள் செய்துள்ளனர். நமது தைரியமிக்க வீரர்கள் பயங்கரவாதிகளை அவர்களது வீடுகளிலேயே அடித்து நொறுக்கினர். பயங்கரவாதிகள் இத்தகைய தாக்குதலைப் இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவர்கள் மோடி கடந்த முறை நடத்திய துல்லிய தாக்குதலை போன்றே இம்முறையும் நிகழ்த்துவார் என நினைத்தார்கள். ஆகையால் அவர்கள் பீரங்கிகளையும், பிறவற்றையும் எல்லையும் நிறுத்தினார்கள். எல்லையில் அனைத்து விதமான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்தார்கள், ஆனால் நாம் வான்வழியாக சென்றோம். வேடிக்கையைப் பாருங்கள் – நாங்கள் அமைதியாக ஏற்பாடுகளை செய்தோம். அது பின்னிரவு 3.30 மணியாகும். மக்களை ஏன் எழுப்ப வேண்டும்?
ஆனால் பின்னிரவு 3.30 மணிக்கு நடத்தப்பட்ட அத்தகைய முக்கிய நிகழ்வினால், பாகிஸ்தானுக்கு தூக்கம் பறிபோனது. நாம் அமைதியாக இருந்தோம். ‘நாம் அமைதியாக கவனிப்போம்’ – என நாங்கள் நினைத்தோம். ஆனால் பாகிஸ்தான் பயந்து அதிகாலை 5 மணி முதலே – ‘மோடி எங்களைத் தாக்கிவிட்டார்! மோடி எங்களைத் தாக்கிவிட்டார்’ என ட்வீட்டரில் பதிவிடத் துவங்கினர். உலகத்திற்கு நாங்கள் எந்த செய்தியும் அளிக்கவில்லை. அவர்களாகவே இது குறித்து உலகத்திற்கு தெரிவித்தார்கள்.
துல்லியத் தாக்குதலின்போது, இந்த முறை புதிய முறையை பின்பற்றியதை நாட்டிற்கு நாங்கள் அறிவித்தோம். அவர்கள் அழத்துவங்கினார்கள். இந்தியா மீது தொடர் தாக்குதலையும், மறைமுக போர்களையும் நடத்தலாம், இந்தியா அமைதியாக இருக்கும் என அவர்கள் நினைத்திருந்தனர். நாட்டின் எதிரிகளிடம், இந்தியா குறித்த இத்தகைய உருவத்தை ஏற்படுத்தியதற்கு முந்தைய அரசுகளே பொறுப்பாகும். எதிரிகள் பழக்கப்படுத்திக்கொள்ளும் அளவிற்கு அத்தகைய மனப்பான்மையை ‘ரிமோட் மூலம் செயல்படும்’ அரசாங்கங்கள் கொண்டிருந்தன.
நண்பர்களே,
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 26/11-ல், அதாவது 26.11.2008 அன்று மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியதை இந்தியா ஒருபோது மறக்காது. நாம் அதை மறப்போமா? அத்தகைய சூழ்நிலையில் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவசியமான தேவை இருந்ததா இல்லையா? உலகம் நமக்கு ஆதரவாக இருந்திருக்குமா இல்லையா? அதற்கு மனஉறுதி தேவை நண்பர்களே! பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் இருந்தன. அந்த ஆதாரங்கள் அனைத்தும் அவர்களைக் குற்றவாளியாகக் காட்டியது.
ஆனால் இந்தியா என்ன செய்தது? அது பதிலுக்கு எவ்வாறு தாக்குதல் நடத்தியது? அந்த நேரத்தில், நமது இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை அனைத்தும் பழி தீர்ப்பதற்காக தயாராக இருந்தது என்ற தகவல் நமக்கு கிடைத்தது.
நமது பாதுகாப்புப் படைகளின் இரத்தம் கொதித்தது? ஆனால் தில்லி குளுமையான பாதத்தைக் கொண்டிருந்தது. நமது பாதுகாப்புப் படைகளுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. அவர்களது கைகளும், கால்களும் கட்டப்பட்டிருந்தன. அத்தகைய கட்டுக்களுடன் பயங்கரவாதிகளுடன் நாம் போரிட முடியுமா? மனஉளைச்சலுடன் உள்ள வீரர்களை பயங்கரவாதிகளை தாக்கக் கூறினால், அவர்களால் அது இயலுமா? இந்த வழியில்தான் நாட்டைப் பாதுகாக்க வேண்டுமா? நாட்டின் எதிரிகளிடம் நாம் மென்மையாக இருக்க வேண்டுமா?
நண்பர்களே,
இதன் காரணமாகத் தான், மும்பை தாக்குதலுக்கு பின்பாகவும் நாடெங்கிலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றன. 2010-ம் ஆண்டு புனாவில் பேக்கரி ஒன்றில் நடைபெற்ற குண்டுவெடிப்பை நினைவு கூறுங்கள். அதே ஆண்டு, வாரணாசியில் உள்ள படித்துறை ஒன்றிலும் குண்டு வெடித்தது. 2011-ம் ஆண்டு, மீண்டும் மும்பையில், ஓப்பரா ஹவுஸ், சவேரி பஜார் மற்றும் தாதரில் குண்டு வெடிப்புகள் நடைபெற்றன. அதே ஆண்டு தில்லி உயர்நீதி மன்றத்தின் வெளியேயும் குண்டுகள் வெடித்தன.
அதே போன்று 2013-ம் ஆண்டு, ஹைதராபாத்தில் நெரிசல் மிகுந்த சந்தை ஒன்றில் குண்டு வெடித்தது. ஒன்றுக்கு பின் மற்றொன்றாக குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து, பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லபட்டும், காயமும் அடைந்தனர். இத்தகைய பயங்கரவாத தாக்குதல்களும் எல்லையை தாண்டிய இணைப்பினைக் கொண்டிருந்தது. ஆனால் முந்தைய அரசு என்ன செய்தது? அவர்கள் தங்கள் கொள்கையை ஒருபோதும் மாற்றிக் கொள்ளவே இல்லை. அவர்கள் தங்களது உள்துறை அமைச்சர்களை மட்டும் மாற்றிக் கொண்டிருந்தனர். கொள்கை மாற வேண்டுமா அல்லது அமைச்சர் மாற வேண்டுமா?
நண்பர்களே,
முந்தைய அரசு தனது சக்தியை வெளிப்படுத்தி, பயங்கரவாதிகளுக்கு அவர்களது மொழியிலேயே தக்க பதிலடி அளித்திருந்தால், இன்று பயங்கரவாதம் இந்த பெருமளவிற்கு வளர்ந்திருக்காது. 2016-ம் ஆண்டின் துல்லிய தாக்குதல் மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரி வான்தாக்குதலுக்கு பின்பாக, இது பழைய இந்தியா இல்லை என்பதை பயங்கரவாதிகள் உணர்ந்திருப்பார்கள்.
இந்தியா எடுத்த நடவடிக்கைக்குப் பின்பாக, அனைவரும் பயமுற்றனர். இந்தியாவின் பாதுகாப்புப் படைகள் மற்றும் வீரர்கள் தங்களது பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் நாட்டின் குடிமக்களாக, விழிப்புடன் இருப்பது நமது கடமையாகும். நாட்டை பிளவுபடுத்தவும், இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்த முயற்சிக்கும் எத்தகைய சக்தியையும் நாம் முறியடிக்க வேண்டும். அத்தகைய நபர்களை நாம் கண்காணிக்க வேண்டும்.
சகோதர, சகோதரிகளே,
மற்றொன்றின் பொருளின் மீதும் நாட்டு மக்கள் கவனம் செலுத்த வேண்டும். இன்று, ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள், தங்களை பெருந்தலைவர்களாகக் கருதுபவர்கள் நாட்டில் உள்ளனர். எதிரிகளுக்கு அதிகாரமளிக்கும் வகையில் அவர்கள் பேசி வருகின்றனர். சர்ச்சைக்குரிய அறிக்கைகளை அவர்கள் வெளியிடுகிறார்கள். இந்திய வீரர்களின் வீரத்தின் மீது கேள்வி எழுப்புகிறார்கள், அதனை பாகிஸ்தான் கொண்டாடுகிறது. இத்தகைய மக்களுக்கு சரியான வழியை மக்கள் காட்ட வேண்டுமா, இல்லையா? அவர்களுக்கு சரியான திசையை காட்டுவீர்களா?
சகோதர, சகோதரிகளே,
அவர்கள் எப்படிபட்டவர்கள்? அவர்களைக் கண்டுகொள்ளுங்கள். இந்த ‘துண்டாடும்’ குழுவை நீங்களை கண்டறிய வேண்டும். பாகிஸ்தான் தாமாகவே ஒரு அறிக்கையை வெளியிடுகிறது; துவக்கத்தில் இந்திய படைகள் தங்களது எல்லைக்கு நுழைந்து அவர்களைத் தாக்கியதாக ட்வீட்டரில் பதிவு செய்தது. இது தான் அவர்களது அறிக்கை. ஆனால் முற்பகல் 7-8 மணிக்குள், காலையில், நமது நாட்டில் உள்ள சில முட்டாள்கள் – பால்கோட் எங்குள்ளது? என்பன போன்று பேச ஆரம்பித்தனர். இதனை நீங்கள் கண்டிருப்பீர்கள். இது தொலைக்காட்சியில் வந்தது. யூடுயூபிலும் நீங்கள் காணலாம். இணைய செய்தித்தாள்களிலும் உள்ளன. சம்பவம் நடைபெற்ற 3-4 மணி நேரங்களுக்குள்ளாக இவை நிகழ்ந்தன.
‘நாங்கள் தாக்குதலுக்கு உள்ளானோம். மோடி வந்தார், எங்களை தாக்கிவிட்டு திரும்பி சென்றார்!’ - என பாகிஸ்தான் கூறிக் கொண்டிருந்தபோது, இவர்கள் காலை 7-8 மணிக்குள்ளாக ‘பால்கோட் இந்தியாவில் உள்ளதா, பாகிஸ்தானில் உள்ளதா?’ ‘பால்கோட் இந்தியாவின் எல்லையில் உள்ளதா?’ ‘பால்கோட் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரத்தில் உள்ளதா அல்லது நமது காஷ்மீர் அருகாமையில் உள்ளதா?’ என கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். புலனாய்வு நடந்து கொண்டும் மற்றும் பாகிஸ்தான் கதறிக் கொண்டும் இருந்தபோது, இங்கு இவர்கள் அவர்களுக்கு உதவ முயற்சித்தனர். இங்குள்ள இத்தகையவர்கள் நாட்டை தவறாக வழிநடத்தவும் தயாராக இருந்தனர். மூன்று மணி நேரத்திற்கு பின்பாக, மோடி அங்கு சென்று திரும்பினார் என்று உறுதி செய்யப்பட்ட பின்பாகவே, அவர்கள் மௌனமானார்கள். இல்லையெனில் 4-5 மணி நேரங்கள் இதே கேள்விகளை அவர்கள் எழுப்பிக் கொண்டிருந்திருப்பார்கள்.
இன்னும் என்ன! இந்திய இராணுவம் இதைக் கூறுகிறது; பாகிஸ்தான் அழுகிறது; இந்தியர்களின் மனதில் ஏதேனும் சந்தேகம் இருக்குமா? நரம்புகளில் இந்திய இரத்தம் ஓடுபவர்களின் மனதில் சந்தேகம் இருக்குமா? ‘பாரத் மாதா கி ஜே’ எனக் கூறும் மனிதர் சந்தேகிப்பரா? சந்தேகப்படும் அத்தகைய நபர்கள் யார்? அத்தகைய நபர்களை நீங்கள் நம்புவீர்களா?
ஆகையால்தான், 2014-ம் ஆண்டு முதல் புதிய இந்தியாவிற்கான அடித்தளத்தை வலுவாக்க நாங்கள் தொடர்ந்து உழைத்து வருகிறோம் என சகோதர, சகோதரிகளிடம் நான் கூறி வருகிறேன். நாட்டின் தேவைகளை நிறைவேற்றவும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அளிக்கவும் நான் உழைத்து வருகிறேன். தற்போது, மக்களின் உணர்வினை நிறைவேற்ற வேண்டிய நேரம். கடந்த 5 ஆண்டுகளாக புதிய இந்தியாவிற்கான அடித்தளமிட்டு வந்ததுடன், வருங்காலத்தில் அதன் மீது புகழ்மிக்க இந்தியாவை கட்டுவோம். வெற்றிகரமான, தகுதியான மற்றும் பாதுகாப்பான அத்தகைய இந்தியாவை நாங்கள் உருவாக்குவோம்.
நண்பர்களே,
புதிய இந்தியாவின் சக்தியை உலகம் கண்டுவருகிறது; கொள்கைகள் மற்றும் பணிக்கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டு வருகிறது; இதற்கு பின்பாக உள்ளது யார்? நீங்கள் அதன் பின்பாக உள்ளீர்கள், 125 கோடி இந்தியர்களின் சக்தியும், உங்களின் ஆசிகளுமே! உங்களின் ஆசி எனக்கு எப்போதும் உண்டு என்ற நம்பிக்கையுடனும், உணர்வுடனும், உங்கள் அனைவருக்கும் எனது ஆழ்மனதிலிருந்து வாழ்த்து கூறுகிறேன். நன்றி! என்னோடு கூறுங்கள் –
பாரத் மாதா கீ ஜே!
பாரத் மாதா கீ ஜே!
பாரத் மாதா கீ ஜே!
உங்கள் கைகளை வானை நோக்கி உயர்த்தி, உரக்கக் கூறுங்கள் –
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
மிக்க நன்றி.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1574933)
வருகையாளர் எண்ணிக்கை : 651