பிரதமர் அலுவலகம்
ஜான்சியில் பாதுகாப்புத் தொழில் வழித்தடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் துவக்கி வைத்தார்
Posted On:
15 FEB 2019 7:09PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று ஜான்சி நகருக்கு வருகை தந்தார். ஜான்சியில் பாதுகாப்புத் தொழில் வழித்தடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் துவக்கி வைத்தார்.
அங்கு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், “நமது அண்டை நாட்டின் நோக்கங்களுக்கு இந்திய மக்கள் தக்க பதிலடி தருவார்கள். உலகின் அனைத்து முக்கிய சக்திகளும், நம்முடன் நிற்கின்றன, ஆதரவளிக்கின்றன. அவர்கள் சோகமாக மட்டுமல்ல கோபமாகவும் இருக்கிறார்கள் என்று, நான் பெற்ற தகவல்களிலிருந்து புரிந்துகொண்டேன். ஒவ்வொருவரும் தீவிரவாதத்திற்கு முடிவு கட்ட விரும்புகிறார்கள்”.
நமது துணிச்சல் மிக்க வீரர்கள் தமது இன்னுயிரை தியாகம் செய்திருக்கிறார்கள் என்றும், அவர்களது தியாகம் வீணாகப் போகாது என்றும் குறிப்பிட்ட பிரதமர், புல்வாமா தாக்குதலில் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்தார். “இது புதிய இந்தியா என்பதை நமது அண்டை நாடு மறந்துவிட்டது. பாகிஸ்தான் திருவோடு ஏந்தி அலைந்து திரிகிறது. ஆனால் உலகத்தினரிடமிருந்து அதற்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை” என்று பிரதமர் கூறினார்.
பாதுகாப்பு தொழில் வழித்தடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர், இந்த வழித்தடத்தில் உள்ள ஜான்சி, ஆக்ரா பிரிவு இப்பிராந்திய இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்று தெரிவித்தார். இந்த பிராந்தியத்தில் உள்ள பணியாளர்கள் திறன் மேம்பாட்டையும் பெறுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், இளைஞர்கள் அவர்கள் சொந்த ஊருக்கு அருகிலேயே பொருளீட்டலாம் என்றும் வேறு பகுதிக்கு இடம் பெயரத் தேவையில்லை என்றும் கூறினார். பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியா தற்சார்படைய, இந்த பாதுகாப்பு தொழில் வழித்தடம் உதவும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
புந்தேல்கண்ட் பிராந்தியத்தின் ஊரகப் பகுதிகளுக்கு, குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இது வெறும் குழாய் மட்டுமல்ல, வறட்சி பாதித்த பிராந்தியத்தின் உயிர் நாடி என்று அவர் விவரித்தார். தொலைதூரப் பகுதிகளிலிருந்து குடிநீரை சுமந்து வரும் நமது தாய்மார்கள், மற்றும் சகோதரிகளின் சிரமங்கள் தவிர்க்கப்படும் என்றும் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் இணைப்பு வழியாக குடிநீர் வழங்கப்படும் என்றும் திரு மோடி கூறினார்.
அம்ருத் திட்டத்தின் கீழ், ஜான்சி நகர குடிநீர் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஜான்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக பெக்வா நதியிலிருந்து நீரை எடுக்கும் ரூ.600 கோடி மதிப்பிலான திட்டமும், செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
425 கி.மீ நீளமுள்ள ஜான்சி – மணிக்பூர் மற்றும் பீம்சென் – கைரார் ரயில்வே தடங்களை இரட்டை ரயில்பாதையாக மாற்றும் திட்டத்திற்கும், ஜான்சியில் ரயில்பெட்டி சீரமைப்பு கூடத்திற்கும் பிரதமர், இந்த நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டினார்.
297 கி.மீ. நீளமுள்ள ஜான்சி – கைரார் ரயில் தடத்தை மின்மயமாக்கும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, புந்தேல்கண்ட் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இட்டுச் செல்லும். இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், புந்தேல்கண்ட் பிராந்தியம், குஜராத்தில் உள்ள கட்ச் பகுதி போல, வளர்ச்சியடையும் என்று பிரதமர் வாழ்த்தினார்.
மேற்கு – வடக்கு பிராந்தியங்கள் இடையிலான மின் விநியோகத்தை வலுப்படுத்தும் திட்டமும் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதிக்கு தடையற்ற மின்விநியோகம் அளிப்பதை உறுதி செய்யும். இந்த பிராந்தியத்தின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும்.
பஹரி அணைக்கட்டை நவீனமாக்கும் திட்டம் இந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது மற்றுமொரு சிறப்பு அம்சமாகும். இந்த அணையிலிருந்து நீர் கசிவதைக் குறைத்து விவசாயிகள் கூடுதல் நீரைப் பெற இத்திட்டம் உதவும்.
பிரதமரின் வேளாண் வெகுமதி நிதித் திட்டத்தின் கீழ், சுமார் ரூ.7.5 லட்சம் கோடி தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும் என்று பிரதமர் கூறினார். இதைப் போல கல்வி உதவித்தொகை, மானியங்கள் போன்றவற்றை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தியதால் ஒரு லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
-------
(Release ID: 1574929)