உள்துறை அமைச்சகம்

ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணம்

Posted On: 12 JUN 2019 7:52PM by PIB Chennai

வேலைகளுக்கான நியமனம், பதவி உயர்வு மற்றும் தொழிற்படிப்புகளில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு பெறலாம்

ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு (திருத்த) மசோதா, 2019-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக வளர்ச்சித் திட்டங்களைப் பெறக் கூடிய கடைக்கோடி மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு (திருத்த) மசோதா, 2019-க்கு ஒப்புதல் வழங்குவதற்கான தடைகள் நீக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் கூட்டத் தொடரில், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்.

“அனைவரும் ஒன்றிணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம்” என்பதில் உறுதியாக இருக்கும் மக்கள் நலன் சார்ந்த அரசு என்ற பிரதமர் மோடியின் லட்சிய நோக்கை பிரதிபலிப்பதாக அமைச்சரவை முடிவு அமைந்திருக்கிறது.

பயன்கள்:

ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதில் இந்த நடவடிக்கை முக்கிய பங்கு வகிக்கும்.

அவர்கள் இப்போது, நேரடி நியமனம், பதவி உயர்வு மற்றும் பல்வேறு தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு பெறலாம்.

விளைவுகள்:

ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு சட்டம் 2004-ஐ திருத்தி வெளியிடப்பட்ட  ``ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்த) அவசரச் சட்டம் 2019'' க்கு மாற்றாக இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. உண்மையான எல்லைக் கட்டுப்பாடு கோடு (ALoC) பகுதியில் வசிப்பவர்களைப் போல, இடஒதுக்கீடு பெறும் வரம்பில் சர்வதேச எல்லைப் பகுதியில் வசிப்பவர்களும் இதில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

பின்னணி:

ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் வாழும் மக்கள், ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு சட்டம் 2004 மற்றும் விதிகள் 2005-ன் வரம்புக்குள் கொண்டு வரப்படாமல் இருந்தனர். நேரடி நியமனம், பதவி உயர்வுகள் பல்வேறு தொழிற்படிப்புகளில், உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் வாழ்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு அதன் மூலம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், சர்வதேச எல்லைப் பகுதியில் வாழ்பவர்களுக்கு நீண்ட காலமாக இந்தப் பயன்கள் கிடைக்காமல் இருந்தது.

எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவும் சூழ்நிலைகளால், சர்வதேச எல்லைப் பகுதியில் வாழும் மக்கள் சமூக, பொருளாதார மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். எல்லைக்கு அப்பால் இருந்து அடிக்கடி தாக்குதல் நடைபெறுவதால் இந்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். நீண்ட காலமாக கல்வி நிலையங்கள் மூடிக் கிடப்பதால், அவர்களுடைய கல்வி மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளது.

எனவே உண்மையான எல்லைக் கட்டுப்பாடு கோடு (ALoC) பகுதியில் வாழ்பவர்களுக்கு வழங்குவதைப் போல, சர்வதேச எல்லைப் பகுதியில் வாழ்பவர்களுக்கும் இடஒதுக்கீட்டுப் பயன்களை அளிக்க வேண்டும் என்பது நியாயமானது என்று கருதப்பட்டது.

குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது மாநில சட்டமன்றத்துக்கான அதிகாரம் நாடாளுமன்றத்தின் பொறுப்பில் உள்ளது. எனவே ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்த) அவசரச் சட்டம் 2019க்கு பதிலாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

*****



(Release ID: 1574269) Visitor Counter : 181


Read this release in: English , Telugu , Kannada