பாதுகாப்பு அமைச்சகம்

கடற்படை தலைமை தளபதியாக அட்மிரல் கரம்பீர் சிங் பதவியேற்பு

Posted On: 31 MAY 2019 12:02PM by PIB Chennai

இந்திய கடற்படையின் 24-வது தலைமை தளபதியாக அட்மிரல் கரம்பீர் சிங் இன்று (31.05.2019) பதவியேற்றுக் கொண்டார்.

புனே அருகே கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய ராணுவப் பயிற்சி மையத்தில் பயின்றவரான அட்மிரல் கரம்பீர் சிங், 1980 ஆம் ஆண்டு இந்திய கடற்படை பணியில் சேர்ந்து, 1981 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விமானியாக பணியாற்றத் தொடங்கினார். சேடக் மற்றும் கமோவ் ரக ஹெலிகாப்டர்களை வெகு தொலைவுக்கு இயக்கி பயிற்சி பெற்றுள்ளார். அத்துடன் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பட்டம் பெற்றிருப்பதுடன் மும்பையில் உள்ள கடற்படை போர் பயிற்சி கல்லூரியிலும் பயின்றிருப்பதுடன் இவ்விரு நிறுவனங்களின் நிர்வாக பொறுப்பையும் வகித்துள்ளார்.

சுமார் 39 ஆண்டு காலத்திற்கும் மேலாக கடற்படையில் பணியாற்றியுள்ள அவர், இந்திய கடலோர காவல் படை கப்பலான சந்த்பீபி, ஏவுகணை தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விஜய்துர்க், மற்றும் ஐஎன்எஸ் ராணா, ஐஎன்எஸ் தில்லி போன்ற ஏவுகணை அழிப்பு கப்பல்களிலும் பணியாற்றியுள்ளார். கடற்படையின் மேற்கு பிராந்திய பொறுப்பு அதிகாரியாகவும் இவர் பணியாற்றியுள்ளார். இது தவிர கடற்படை தலைமையகத்திலும், கடற்படையின் விமானப் பிரிவு இணை இயக்குனராகவும், மும்பையில் உள்ள கடற்படை விமான தளத்தின் பொறுப்பு அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார்.

கடற்படையின் விமான பணியாளர்கள் தர நிர்ணயம் மற்றும் வகைப்பாடு வாரியத்தின் உறுப்பினராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

கொடி அதிகாரி நிலைக்கு பதவி உயர்வு பெற்ற பிறகு, கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதியாக நியமிக்கப்பட்டார். இது தவிர அந்தமான் நிகோபார் தீவில் படைகளின் ஒருங்கிணைந்த படைப்பிரிவு தளபதி மற்றும் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கான கடற்படையின் கொடி அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார்.

வைஸ் அட்மிரல் நிலைக்கு பதவி உயர்வு பெற்ற பிறகு, கடல் பறவை (Sea bird) திட்டத்தின் தலைமை இயக்குனராகவும், கார்வாரில் கடற்படையின் விரிவாக்க மற்றும் அதிநவீன தளத்தை உருவாக்குவதற்கான கட்டமைப்பு மேம்பாட்டு பிரிவின் பொறுப்பு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். பாதுகாப்பு அமைச்சகத்தில், கடற்படைக்கான உதவி தலைமை தளபதியாகவும் அதன் பிறகு, துணை தலைமை தளபதியாகவும் பணிபுரிந்துள்ளார். விசாகப்பட்டினத்தில் கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதியாகவும் பணியாற்றியுள்ள அட்மிரல் கரம்பீர் சிங் இன்று (31.05.2019) கடற்படையின் தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

சைக்கிள் ஓட்டுதல், ஓட்டப்பந்தயம், நீச்சல் மற்றும் கோல்ஃப் விளையாட்டுக்களிலும் இவர் மிகுந்த ஆர்வம் கொண்டவர் ஆவார்.


(Release ID: 1572901) Visitor Counter : 171